மறந்து போன பாட்டி வைத்தியம்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 53 Second

உலக நாடுகள் முழுமையும் அந்தந்த நாடுகளில் இருக்கிற இனகுழுக்களுக்கான பாரம்பரிய மரபுசார் மருத்துவமுறைகள் ஆரோக்கிய வாழ்விற்கான முறைகள் இருக்கின்றன.

இன்றைய சூழலில் ஏறத்தாழ 150 நாடுகளில் உலக சுகாதார மையம் சொல்கிற வழிமுறைப்படியான விதிகளும் சட்டதிட்டங்களும் மரபு வழி மருத்துவத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை வெவ்வேறு பழங்குடியினருக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் அவர்கள் சார்ந்த வாழ்க்கைமுறை, நிலப்பரப்பு, தட்பவெட்பநிலை ஆகியவைகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ அறிவுப்பொக்கிஷம் நிறைந்திருக்கிறது.

வட்டார வழக்கு என்று சொல்லப்படுகிற நாட்டுப்புற மருத்துவம் அல்லாது ஒரு நோயைப்பற்றி விவரம், நோய்க் காரணிகள், நோயின் குறிகுணம், நோய் கணித்தல், நோய்க்கான தீர்வுமுறைகள், உணவு, வாழ்க்கைமுறை மாற்றங்கள், நோய் தடுப்புமுறைகள், மருந்துகள், அதில் பயன்படுத்தப்படும் மூலிகைகள், அந்தப் பொருட்களின் குணாதிசயங்கள் ஆகியவை உள்ளடக்கிய, செம்மைப்படுத்தப்பட்ட இரண்டு மருத்துவ முறைகள் – சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை ஆகும்.

இவை நெடுங்காலமாக செழித்து வளர்ந்து காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு இன்றைய மாறுபட்ட காலச்சூழல், வாழ்க்கைமுறை, தொழில்முறை, உணவுமுறை அவற்றினால் ஏற்படும் நோய்கள் நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. புதிதாக ஒரு வேதியல் மூலக்கூறை மருந்தாக ஆய்வுசெய்து மாற்றுகிற முறைக்கு குறைந்தபட்சம் 10 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகிறது. அதுபோலவே செலவும் பல கோடி ரூபாய்களாக இருக்கிறது. விலங்கியல் மட்டத்தில் பாதுகாப்பானது என்று கண்டுபிடிக்கப்பட்ட மூலக்கூறுகள்கூட மனிதரில் கையாளும்போது எதிர்விளைவை ஏற்படுத்துகின்றன.

போதுமான செயல்திறன் அதாவது எதிர்பார்த்த மருந்தியல் செயல்தன்மை இல்லாதிருப்பது ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது.
இவ்வளவு காலமும் பணமும் செலவழித்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள்கூட 5 முதல் 7 ஆண்டுகள் வரைதான் பயன்படுத்த முடிகிறது. அதற்குள் அதைவிட சிறந்தது எனக் கருதப்படுகிற வேறு ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், இத்தகைய புதுமருந்து கண்டுபிடித்தல் என்பது நிஜத்தில் செய்ய முடியாததாகவே இருக்கிறது.

இதற்கான தீர்வு பன்னெடுங்கால அனுபவத்தில் கிடைக்கப்பெற்ற மூலிகைகளின் மருந்துத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நவீன அறிவியலின் கூறுகளைக் கொண்டு மருந்துகளைச் செம்மைப்படுத்துவது குறைந்தகாலமும் பணச்செலவுமே ஆகும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால மரபினானே’ என்ற மொழிக்கேற்ப, பழமையானது என்பதற்காக எதுவும் சிறந்தது என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவற்றை இன்றைய காலச்சூழலுக்கு வாழ்க்கைமுறைக்கு ஏற்றாற்போல் நவீன அறிவியலுடன் இணைந்து ஆராய்ந்து, மக்கள் உடல் மற்றும் உளவியல் நலனுக்காக செயல்படுத்த வேண்டியது அவசியம்.

பாரம்பரிய அறிவை நவீன அறிவியல் அளவுகோல்களைக் கொண்டு ஆராய முடியாது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. விருப்பு வெறுப்பின்றி நாம் ஆய்வுமேற்கொண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பழையன கழிதலைப் பற்றி பேசுகிற நம் தமிழ் மரபு ‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்றும் சொல்லியிருக்கிறது.

எனவே, நாம் மூத்தவர்கள் கடைப்பிடித்து இருக்கிற வாழ்க்கைமுறைகள், ஆரோக்கிய முறைகளையும், மருத்துவ முறைகளையும் இன்றைக்கு காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் நாம் பயன்படுத்தி வந்தால் குறிப்பாக அனுபவத்தின்மூலம் பெற்ற அந்த அறிவை நாம் ஆராய்ச்சி செய்து அதைபதிவு(Documentation) செய்து பயன்படுத்தி வந்தால் அதன் பலன்களும் நன்றாகவே இருந்திருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

எந்த ஒரு மருத்துவமும் தானாக நிறைவுபெற்றதாக சொல்லக்கூடிய நிலையில் இல்லை. ஒரு மருத்துவமுறை மற்ற முறைக்கு காம்ப்ளிமெண்டரி அல்லது துணை என்று சொல்வதே உண்மை. ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கிற நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. இதனை நன்றாகப் புரிந்துகொண்டதால்தான் ஒருங்கிணைந்த மருத்துவம்(Integrated medicine) என்பது கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.

நவீன மருத்துவத்தில் அதாவது புற்று நோய்களுக்கு கதிரியக்க மருத்துவம் செய்கிறபோதுகூட அந்த கதிரியக்கத்தால் வருகிற பக்கவிளைவுகளைத் தடுப்பதற்கு வாழ்க்கை முறை, உணவுமுறைகள், சித்தமருத்துவமோ உதவுமா என்ற கேள்வி நோயாளிகளாலும் அவர்களின் குடும்பத்தினராலும் அடிக்கடி கேட்கப்படுகிறது. அதுபோல் பல்வேறு காலகட்டங்களிலும் சூழலிலும் இரண்டு மருத்துவமும் ஒன்றுக்கு ஒன்று எதிராக நினைத்துக்கொள்ளாமல் எப்படி இணைந்து செயல்படுத்த முடியும் என்று பார்க்கலாம்.

இன்றைக்கு நோயாளிகள் தாங்களாகவே மருத்துவர்களுக்குத் தகவல் சொல்லாமலேயே தனியாக இரண்டு மருத்துவத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலை மாறி நவீன மருத்து வரும் பாரம்பரிய மருத்துவரும் ஒன்றாக அமர்ந்து இதைப்பற்றி விவாதித்து குழு மனப்பான்மையுடன் நோயாளிக்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்தால் நோய்க்கு சிகிச்சை செய்கிற கால அளவும் குறையும், நோய்க்கான சிகிச்சைக்கான செலவும் குறையும். மிகச்சீக்கிரமாக நோயாளிகளும் மீண்டெழுந்து நல்வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

பிரசவத்திற்குப் பின் தருகிற பிரசவ லேகியம் என்கிற நடகாய லேகியம், நொச்சி இலையை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்தல் போன்று பல்வேறு வழிமுறைகளும் இன்றைக்கும் மக்களுக்கு நல்ல பயன்தருவதைக் கண்கூடாக உணர முடியும். அடுத்து வரும் கட்டுரைகளில் எப்படி இந்த பாரம்பரிய அறிவை நவீன மருத்துவம் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றது என்று பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு!! (மருத்துவம்)
Next post வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)