நம் விரல்கள் மீண்டும் பேனாவினை பிடிக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 36 Second

“இந்த தொழிலில் எனக்கு வருமானம் வருகிறது என்பதெல்லாம் தாண்டி எல்லோரும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பதற்காகவே இதை நான் வடிவமைத்து வருகிறேன். இதை பயன்படுத்தும் போது, கண்டிப்பாக ஒருவரின் வாழ்வில் ஏற்படும் நேர்மறையான மாற்றம் தான் நான் எனக்காக பார்க்கும் வெற்றி’’ என்கிறார் சென்னையை சேர்ந்த பிளானர் வடிவமைப்பாளர் சோனி.‘‘ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் நாம் முதலில் யோசிப்பது அந்தாண்டுக்கான டைரி.

அதில் ஒரு சிலர் தங்களின் அன்றாட நிகழ்வுகளை எழுதி வைக்கலாம். சிலர் தினசரி செலவு கணக்கினை குறித்துவைப்பார்கள். சிலர் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாட்கள் மற்றும் திருமண நாட்களை நினைவுப்படுத்தி எழுதி வைப்பார்கள். எப்போது எல்லாருடைய விரல்களும் மொபைல் திரையினை வருட ஆரம்பித்ததோ… இதெல்லாம் மறந்தேவிட்டோம் என்று தான் சொல்லணும். என்னைப் பொறுத்தவரை மீண்டும் பேனாக்களை பிடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்’’ என்று தன்னைப் பற்றியும் தான் வடிமைக்கும் பிளானர் குறித்தும் பேசத் துவங்கினார் சோனி.

‘‘நான் கேரளாவில் பிறந்திருந்தாலும் பள்ளிப்படிப்பு, கல்லூரி எல்லாம் சென்னையில் தான். மேற்படிப்பிற்காக கனடா சென்றேன். அங்கு ஐந்து ஆண்டுகள். என் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவர் தான் இப்போது என் வாழ்க்கையிலும் ேசர்ந்து பயணித்து வருகிறார். இருவரும் கனடாவில் தான் இருந்தோம். ஆனால் என்னமோ ஃபாரின் மோகம் எங்களுக்கு ஏற்படவில்லை என்பதால், சென்னைக்கே திரும்பிட்டோம். இங்கு கொஞ்ச காலம் ஐ.டியில் பணியாற்றினேன். குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், வேலையை விட்டுவிட்டேன். வீடு, குடும்பம், குழந்தைகள்ன்னு பத்து ஆண்டுகள் ஓடின.

இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் டிஜிட்டல் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. நானும் எல்லோரும் போலவே யூ டியூபில் வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதில் தான் பிளானர் என்கிற விஷயம் பற்றி தெரிந்து கொண்டேன். டைரியின் அழகான வெர்சன் தான் பிளானர். நம்மூரில் ஸ்டேஷ்னரி கடைகளில் பிளானர்கள் இருக்கும். ஆனால் டைரியை பயன்படுத்துவது போல், மக்கள் பிளானரை பயன்படுத்துவதில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

பிளானரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. பயன்பாடு ஒரு பக்கம் என்றால், இதனை வடிவமைப்பவர்களும் மிகவும் குறைவு. குறிப்பாக ஒரு சில ஓவியர்கள் தான் இந்த பிளானரை வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் ஓவியங்களின் தழுவலோடு வெளியிடுகிறார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகளில் பிளானரை வடிவமைப்பதற்காகவே நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. அது போல் ஏன் நாமும் இங்கு கொண்டு வர கூடாது என யோசனை எனக்குள் வந்தது.

பொதுவாக நாம் வீட்டுச் செலவு கணக்கினை சாதாரண வரிகள் கொண்ட புத்தகத்தில் தான் எழுதுவோம். நானும் அப்படித்தான் எழுதி வந்தேன். ஆனா எழுதுறதோட சரி. போன மாசம் எழுதின கணக்கைக் கூட திரும்பி படிக்க மாட்டேன். என்னைப் போல் தான் பலரும் ஆண்டு ஆரம்பிக்கும் ேபாது ஆர்வமாக எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்படி இருக்கும் போது இன்ஸ்டாகிராமில் அமெரிக்கா பிளானர் அமைக்கும் நிறுவனத்தை நான்பின்தொடர்ந்து வந்தேன். அதில் வரவு, செலவு கணக்கிற்கு என தனிப்பட்ட பிளானர் ஒன்றை அமைத்திருந்தார்கள். அதைப் போல் ஒரு பிளானர் வடிவமைக்கலாம்ன்னு திட்டமிட்டேன். சுமார் ஆறு மாசம் இது குறித்த ஆய்வில் இறங்கினேன். காரணம் நம்மூரில் தேதி போட்டு தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுவதற்காக மட்டுமே இருக்கிறதே தவிர, வரவு-செலவு எழுதுவதற்காக குறிப்பிட்ட பிளானர்கள் இல்லை.

நமக்கு ஏற்றார் போல் வடிவமித்தேன். பல டிசைன்கள் அமைத்து கடைசியாக “The Rupee Budget Planner” என்று ஒரு பிளானரை வடிவமைத்தோம். இதனை டைரியில் தினமும் குறிப்பிடுவது போல் இல்லாமல், தேதிகள் இன்றி நமக்கு எப்போது வரவு-செலவு கணக்குகள் பார்க்க வேண்டுமென்று அவசியம் வருகிறதோ அப்போது பயன்படுத்தி கொள்ளும் படி வடிவமைத்து இருக்கிறோம்.

இந்த மாதம் எழுதவில்லை என்றாலும் அடுத்த மாதம் கணக்கு எழுத வேண்டும் என்றால் எழுதிக் கொள்ளலாம். நம் கணக்கு வழக்குகளை கையாள்வதற்கு எளிதாகவும் இருப்பதற்கு இந்த பிளானர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஐநூறு ஸ்டிக்கர்ஸ், பணம் வைப்பதற்காக என்வலப்ஸ் என ஒரு வருடத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்திருக்கிறோம். இதே மாதிரி மாணவர்களுக்கும் ”The Academic Planner” என்று கொடுக்கிறோம். அவர்களுக்கான பாட திட்டங்கள், நேரங்களை எவ்வாறு ஒதுக்கி தனக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது என்பதை அடக்கி வடிவமைத்திருக்கிறோம்.

பொதுவாக எல்லோருக்கும் எக்ஸல் ஷீட், மொபைலில் ஆப் என எல்லாம் இருக்கே எதற்காக எழுத வேண்டும் என்கிற கேள்வி எழலாம். ஆனால் எழுதினால் தான் நம் மனதில் நாம் செய்து கொண்டிருக்கும் செயல்கள் இன்னும் ஆழமாக பதியும். இந்த கொரோனா காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க டிஜிட்டலாகவும், வெர்ச்சுவலாகவும் போனதன் விளைவு ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்த குழந்தைகளால் வேகமாக எழுத முடியவில்லை. எழுதுவது ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால் எங்களின் நோக்கம் அனைவரும் எழுத வேண்டும் என்பதை முன்னெடுத்திருக்கிறோம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லா பணப் பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகத்தான் செயல்பட்டு வருகிறது. டெபிட் அல்லது கிரடிட் கார்டு கொண்டு தான் செலவு செய்கிறோம். ஒரு டீ சாப்பிடக்கூட கிபே செய்கிறோம். இதனால் நம்முடைய கையில் பணப் புழக்கம் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு மாதம் கட்டணம் குறித்து வரும்போது தான், அதிர்ச்சியாகிறோம். காரணம் நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவு செய்திருப்போம். ஆரம்பத்திலிருந்தே இது இதுக்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கும் போது அதிகமாக செலவு செய்யாமல் சேமிப்புக்கான வழியாகவும் இந்த பிளானர் உதவும் என்று நம்புகிறோம். அப்போது தான் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம். அந்த செலவு அவசியமா என்று யோசிக்க வைக்கும்.

இந்த இரு பிளானர்கள் தவிர அலுவலகம் போகிறவர்களுக்கு, தினமும் தங்களுடைய வேலைகளை திட்டமிட்டு செய்பவர்களுக்காகவும் 24 மணி நேரம் டைம் ஸ்லாட் மாதிரி கொடுக்கிறோம். இதுவரை A4 அளவில் இருந்ததை, 2022-ல் A5 அளவாக குறைத்து கைக்கு அடக்கமாக கொண்டு வந்திருக்கிறோம். இந்த பிளானர் எங்களின் ‘த சாசா ஃபேக்டரி’ இணையத்திலும் கிடைக்கிறது. அடுத்த கட்டமாக அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலும் கிடைக்கும் படி திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றவர் பிளானர்கள் வடிவமைப்பதற்கான காரணத்தை பகிர்ந்தார்.

‘‘பொதுவாக இன்று பெரும்பாலானோர் கைகளில் கிரடிட் கார்டு இல்லாமல் இல்லை. காய்கறி முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் கார்டுகளில் தான் வாங்குகிறோம். ஒரு மாதம் கழித்து நம்முடைய கிரடிட் கார்டு செலவு குறித்த விவரங்களைப் பார்த்தால் தான் நாம் அந்த மாதம் செய்திருக்கும் அநாவசிய செலவு பற்றி தெரிய வரும். இவ்வளவு செலவு செய்திருக்கிறோமா என மன உளைச்சளுக்கும் ஆளாகிறோம். நானுமே கூட தினமும் எழுதுவது கிடையாது. ஒரு வாரத்தில் எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பதை பார்ப்பேன். அவ்வாறு எழுதும் போது ஒவ்வொரு செலவிற்கும் தனிப்பட்ட நிறங்களை பயன்படுத்துவேன். அதாவது, துணிகளுக்கு சிவப்பு, மளிகைக்கு பச்சை என எழுதுவேன்.

இதன் மூலம் எந்த பிரிவில் அதிகம் செலவாகி இருக்கிறது என்று தெளிவாக தெரியவரும். அதன் பிறகு நான் செலவு செய்திருக்கும் பொருள் அவசியமா என்பதை யோசிப்பேன். இதன் மூலம் அவசியமற்ற பொருட்கள் குறித்தும் அதற்காக நாம் செலவு செய்வது பற்றியும் தெரிய வந்தது. அடுத்த மாதம் அந்த பொருளுக்கான செலவினை குறைத்துக் கொள்வேன். இதன் மூலம் மாச செலவு குறித்து திட்டமிடுவது மட்டுமில்லாமல் சேமிக்கவும் முடிகிறது. என்னதான் செல்போனில் இது குறித்து குறிப்பிட்டு இருந்தாலும் அதை நாம் கவனித்து பார்ப்பதில்லை. சில சமயங்களில் தெரியாமல் அதனை டெலீட் செய்திருப்போம். அதைவிட முக்கியம், கணக்கு பார்ப்பதற்காகத்தான் போன் எடுத்திருப்போம்.

ஆனால், அதை தவிர மற்ற எல்லாம் பார்த்துவிட்டு, எதுக்காக மொபைல் எடுத்தோம் என்பதையே மறந்திடுவோம். அதே கணக்குகளை எழுதி வைத்து பார்க்கும் போது அது ஒரு எமோஷ்னல் கனக்‌ஷன். எழுதும் போது நம் மனதில் பதிந்திடும்.

உலகில் உள்ள பெரிய பெரிய ஆளுமைகள் எல்லாம் காலையில் மெடிட்டேஷன் போல் அவர்களுக்கான பிளானரை எழுதுகிறார்கள். மொபைல், கம்ப்யூட்டர் அவர்கள் பயன்படுத்தினாலும், எழுதுவதை நிறுத்துவதில்லை. வெர்ச்சுவலை விட ரியாலிட்டியில் கிடைக்கும் அனுபவம் தனித்துவமானது. அதைத்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன். புத்தாண்டு அன்று பலர் பல விஷயங்களை முன்னெடுப்பார்கள். அவர்களுக்கு இந்த பிளானர் பயனுள்ளதாக இருக்கும் என்பதை முழு நம்பிக்கையோடு சொல்கிறேன்” என்கிறார் சோனி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்னிந்தியத் திரையுலகின் லேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயலலிதா !! (மகளிர் பக்கம்)
Next post FRESH DATES!! (மருத்துவம்)