வெள்ளைப்படுதல் (Leucorrhoea) !! (மருத்துவம்)

Read Time:18 Minute, 7 Second

வெள்ளைப்படுவது பெண்களுக்கான ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்பட்டாலும் இது பல சந்தர்ப்பங்களில் ஒரு நோயாகவோ அல்லது பிற நோய்களின் அறிகுறியாகவோ இருக்கலாம் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெள்ளைப்படுவதால் உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் கரைந்து விடும் என்றும், உடல் உஷ்ணம் அதிகமாக உள்ளவர்களுக்கு எப்பொழுதும் வெள்ளைப்படும் என்றும் பல ஆதாரமற்ற நம்பிக்கைகள் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கிறது.
Advertisement
Powered By Powered by – Dinakaran x eReleGo

இந்தப் பிரச்னை குறித்து பெரும்பாலானவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் பல பெண்கள் இப்பிரச்சனையை சகித்துக் கொண்டு மருத்துவரிடம் செல்வதற்கு கூச்சப்பட்டு இதைப் பற்றி வெளியில் பேசாமலே இருந்து விடுகிறார்கள். ஒருவேளை இது மிகவும் அதிகமான பின் மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்துகொள்ளலாம் என்று அலட்சியம் காட்டினால் அதற்குள் இது பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும் வாய்ப்புள்ளது. இதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னரும் பூரணமாக குணம் பெற பல மாதங்கள் கூட ஆகலாம்.

பெண்களின் பிறப்புறுப்பு எப்பொழுதும் ஈரப்பசையோடு வழவழப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பூப்படையும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாறுதலால் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் திரவ உற்பத்தியை வெள்ளைப்படுதல் என்று நாம் சாதாரணமாக அழைக்கிறோம். இது பெண்களின் முதல் மாதவிடாய் தொடங்கும் முன் பருவமடைதலின் முதல்
அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

பொதுவாக கருப்பை வாயிலில் (Cervix) இருந்து நிறமற்ற, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவமானது இயற்கையாகச் சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்த அந்தத் திரவம் நோய்க் கிருமிகளை வெளியேற்றவும், இறந்த செல்களை வெளியேற்றவும், தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பைப் பாதுகாக்கவும், பெண்ணுறுப்பின் கார அமிலத்தன்மையை நிலைப்படுத்தவும் உதவுகிறது.

இது லேசான பிசுபிசுப்புத் தன்மை கொண்டு துர்நாற்றம் ஏதும் இல்லாமல் பூப்படையும் காலத்திலும், மாதவிடாய்க்கு இரண்டு நாட்கள் முன்னும் பின்னும், உடலுறவின் உணர்ச்சியை அடைந்த நிலையிலும், பாலூட்டும் காலங்களிலும், சினைப்பையிலிருந்து சினை முட்டை வெளியேறும் நாட்களிலும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இயல்பாகவே சிறிதளவு வருமானால் இதை இயற்கையான நிகழ்வாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலைகளில் முறையான மாதவிடாய் சுழற்சியும் நிகழும்.

ஆனால் பிசுபிசுப்பு தன்மை அதிகமாகி, வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் சிறிது மஞ்சள், பச்சை, சிவப்பு நிறம் கலந்த தன்மையுடன் தயிர் போன்று கெட்டியாகவும், சில நேரங்களில் நூல் தன்மை அடைந்து, அளவிற்கதிகமாக, துர்நாற்றம், அரிப்பு, தோல் சிவத்தல், எரிச்சல் உண்டாகி, நாள் முழுவதும் நீடித்தும் மற்றும் உடல் அசதி, சோர்வு, பலவீனம், கீழ் முதுகு வலி ஆகியவை சேர்ந்து வருமானால் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்களின் இனப்பெருக்க காலத்திலேயே இது அதிகமாக தோன்றினாலும் மாதவிடாய் முழுவதுமாய் நின்ற பிறகும் கூட இது நோயாக ஏற்பட வாய்ப்புண்டு என்பதை நாம் மனதில் வைக்கவேண்டும்.

இந்தியாவில் இனப்பெருக்க வயதுள்ள பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பெண்களுக்கு இந்த வெள்ளைப் படுதல் பிரச்னை இருப்பதாகவும் அதில் திருமணமானவர்களுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும், சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள பெண்களிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மேலை நாடுகளில் இந் நோய் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்கள்

* தனிப்பட்ட சுகாதாரமின்மை (Personal hygiene)
* ஹார்மோன் தொந்தரவுகள்
* பாக்டீரியா தொற்றுகள்
* ஈஸ்ட் தொற்றுகள்
* சுகாதார ஸ்ப்ரேக்கள் மற்றும் வாசனை சோப்புகளை அதிகமாக பயன்படுத்துதல்.
* கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துதல்,
* ஆண்டிபயாடிக் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை முறை தவறி பயன்படுத்துதல்.

பிற நோய்களின் அறிகுறியாக வெள்ளைப்படுதல் வருவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை மற்றும் கருப்பை வாய் நீர் கட்டிகள், கருப்பை மற்றும் கருப்பை வாயில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகள், கடுமையான மலச்சிக்கல், கருப்பை பின்னோக்கி சரிவு (Retroverted Uterus), கருப்பையானது முன்னோக்கி இறங்குதல் (Uterine prolapse) ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும். மேலும் நீரிழிவு, ரத்த சோகை நோய்கள், பால்வினை நோய்கள் (ட்ரைகோமோனஸ் (Trichomonas), கோனோகாக்கல் (Gonoccal), க்ளாமிடிஸ் நோய்தாக்கம்) ஆகியவையும் பிற காரணங்களாக பார்க்கப்படுகிறது.

வெள்ளைப்படுதலை கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள்

முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிற பிரச்சனைகள் ஏற்படலாம். பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சிறுநீர்ப்பாதையும் பிறப்புறுப்பும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஏற்படும் தொற்று மற்ற இடத்துக்கு வேகமாகப் பரவும். நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட வெள்ளைப்படுதல் நோய் ஒரு நாள்பட்ட அல்லது கடுமையான தொற்றுநோயாக மாறும். எனவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

வெள்ளைப்படுதலினால் ஏற்படும் பிற சிக்கல்கள்

* தன்னிச்சையான கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு
* குறைப்பிரசவம், எண்டோ மெட்ரியோசிஸ்
* கர்ப்பப்பை வாய் அரிப்பு
* ஃபெலோபியன் குழாயின் அடைப்பு
* கர்ப்ப காலத்தில் சிக்கல்கள்

ஆயுர்வேத சிகிச்சை

வெள்ளைப்படுதல் நோயாக மாறும் நேரத்தில் ஆயுர்வேத சிகிச்சைகள் ஒரு முழுமையான நிரந்தரமான தீர்வினை அளிக்கின்றது என்றால் மிகையாகாது. வெள்ளைப்படுதல் நோய்க்கு ஆயுர்வேதத்தில், வர்த்தி, தூபனம், பிரக்ஷாலனம், பிச்சு, கிஷார கர்மம் மற்றும் உள்மருந்துகள் ஆகியவை நல்ல பலனைத் தருகின்றன.

வர்த்தி

யோனி வர்த்தி என்பது ஆயுர்வேதத்தில் ஒரு பிரசித்திபெற்ற சிகிச்சையாக வெள்ளைப்படுதலுக்கு பார்க்கப்படுகிறது. இது ஆங்கில மருத்துவத்தில் (Localized Drug Delivery கலைஸ்டு டிரக் டெலிவரி) எனும் அடிப்படையில் நேராக பிறப்புறுப்பினுள் வேலை செய்கின்றது. அத்தகைய யோனி வர்த்தி செய்வதற்கு அதிமதுரம், வெள்ளோத்தி மரப்பட்டை, வேம்பின் பட்டை, திரிபலா சூரணம், படிகாரம் ஆகியவற்றை பொடித்து தேனுடன் சேர்த்து தயாரித்து பிறப்புறுப்பில் மாதவிடாய் ஏற்பட்டதற்கு 8 முதல் 10 நாட்களுக்கு பிறகு தொடர்ந்து பயன்படுத்தி வர முற்றிலுமாக வெள்ளைப்படுதல் குணமாக வாய்ப்புண்டு.

யோனி தூபனம் (புகை)

* யோனி தூபனம் மற்றுமொரு முக்கியமான சிகிச்சையாக வெள்ளைப்படுதலில் பார்க்கப்படுகிறது. இதில் பார்லி, எள், குங்கிலியம், மஞ்சள், நெய் ஆகியவற்றை நெருப்பிலிட்டு அந்தப் புகையை பிறப்புறுப்பில் காட்டி வர பிறப்புறுப்பில் ஏற்படும் இந்த வெள்ளைப்படுதல் நோயானது முற்றிலுமாக குறைய காணலாம்.

யோனி பிச்சு

* ஆயுர்வேதத்தில் மருந்துகளை பிறப்புறுப்புக்கு வழங்கும் எளிய நடைமுறைகளில் ஒன்றாக யோனி பிச்சு அறியப்படுகிறது. வெள்ளைப்படுதலில் மிகச் சுலபமாக செய்யக்கூடிய மற்றுமொரு சிகிச்சை யோனி பிச்சு. இதில் பருத்தியை துணியில் வைத்து அதில் மருந்து தடவி நூலால் கட்டி பிறப்புறுப்பினுள் 5 முதல் 6 மணி நேரம் வரை வைக்க வெள்ளைப்படுதல் உடனடியாகக் குறைவதைக் காணலாம்.

* ஜாத்யாதி தைலம், தாதக்யாதி தைலம் மற்றும் ந்யக்ரோத கஷாயம் ஆகியவை பிச்சு சிகிச்சையில் பயன்படுத்த நல்ல பலன் தரும்.

பிரக்ஷாலனம்

* பிரக்ஷாலனம் என்பது பிறப்புறுப்பை கழுவுதலை (Douch) குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல். கஷாயங்கள் அல்லது சூர்ணங்கள் (பொடிகள்) பிறப்புறுப்பை சுத்தப்படுத்தபிரக்ஷாலனம் முறையில் பயன்படுத்தப்படுகிறது.

* பஞ்சவல்கல கஷாயம், வேம்பு இலை கஷாயம், படிகார நீர் போன்ற மருந்துகள் பிரக்ஷாலனம் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றன.

க்ஷர கர்மம்

* ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக காஸ்டிக் ஏஜெண்டுகளைப் பயன்படுத்துவது க்ஷர கர்மம் எனப்படும். கர்ப்பப்பை வாய் அரிப்புக்கான சிகிச்சையின் ஒரு சிறந்த வடிவமாக க்ஷர கர்மம் உள்ளது. க்ஷர கர்மம் பிறப்புறுப்பு மருக்கள், குணப்படுத்தாத நாள்பட்ட கர்ப்பப்பை வாய் புண்கள் மற்றும் கர்ப்பப்பை வாய் பாலிப்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உள் மருந்துகள்

* இந்த நோயில் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய கசப்பு, துவர்ப்பு சுவை உடைய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கஷாய மருந்துகளான முசளி கதிராதி கஷாயம், த்ருண பஞ்சமூல கஷாயம், திரிபலா கஷாயம், பாரங்கியாதி கஷாயம், வரனாதி கஷாயம், சுகுமார கஷாயம் ஆகியவை காலை மாலை உணவிற்கு முன் வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.

* இதர கஷாயங்களான நயக்ரோதாதி கஷாயம், வேம்பின் இலை கஷாயம், பஞ்சவல்கல கஷாயம், வெள்ளோத்தி பட்டை கஷாயம், சந்தன கஷாயம் ஆகியவை மாதவிடாய்க்கு 8 முதல் 10 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படவேண்டும்.

* சூர்ணங்களான படிகார சூர்ணம், திரிபலா சூர்ணம், கடுக்காய் சூர்ணம், புஷ்யனுக சூர்ணம், மாத்திரைகளான ப்ரதராந்தக லோகம், சந்திர பிரபா வடி, புனர்னவா குக்குலு , திரிபலா குக்குலு, நெய் மருந்துகளான தாடிமாதி க்ருதம், அசோக க்ருதம், சதாவரி க்ருதம், சுகுமார க்ருதம், ஆசவ, அரிஷ்ட மருந்துகளான குமாரியாசவம், அசோகாரிஷ்டம், பத்ரங்காசவம், காயகற்ப மருந்துகளான கதலி ரசாயனம், ரஜத லோஹ ரசாயனம் லேகியங்களான திராக்சாதி லேகியம், சுகுமார லேகியம் ஆகியவை தக்க மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்ள நல்ல பலனைத்தரும்.

* மேலும் நெல்லிக்காய் பொடியை தேன் மற்றும் வெல்லம் கலந்தோ, வெள்ளோத்தி பட்டை கல்கத்தை ஆலமர பட்டை கஷாயத்துடன் சேர்த்தோ, ரோகிதக கல்கத்தை தேனுடன் கலந்தோ, நாககேசர சூரணத்தை மோருடன் சேர்த்தோ, புளி விதை கல்கத்தை பாலுடன் கலந்தோ எடுக்க நல்ல பலன் தரும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்

செய்ய வேண்டியவை

* பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாக வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* வியர்வையை உறிஞ்சும் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தாமல் இருக்கும் பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

* வாசனை சோப்புகள் மற்றும் ஸ்ப்ரேக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* உடற்பயிற்சிகள், சிறுநீர் கழித்தல், குளித்தல் அல்லது நீச்சல் போன்றவற்றிற்குப் பிறகு பிறப்புறுப்பை நன்கு கழுவி உலர வைக்க வேண்டும்.

* பழைய அரிசி, பார்லி, கோதுமை, கொண்டைக்கடலை, நெய், பருப்பு, இஞ்சி, பேரீச்சம்பழம், மாதுளை, பசும்பால், கொத்தமல்லி, திராட்சை, சுரைக்காய் போன்ற உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

* சூரிய ஒளியில் நடக்க வேண்டும்.

* எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும்.

* புதிதாக தயாரிக்கப்பட்ட உணவையே உண்ண வேண்டும்..

* மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவும், மன அழுத்தம் அல்லது சோகத்தைத் தவிர்க்கவும். ஏனெனில், மனஅழுத்தமும் ஒரு காரணமாகிறது.

*மாதவிடாய் காலத்தில் 5-6 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடுகளை மாற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அது அவ்விடத்தில் தொற்றுக்களின் பெருக்கத்தை அதிகரித்து, வெள்ளைப்படுதலை அதிகரிக்கும்.

* வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளவர்கள், மைதா உணவுகள், புரோட்டீன் உணவுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளாதீர்கள். இவை
நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

செய்யக்கூடாதவை

* சிறுநீர் கழித்தல் மற்றும் குடல் இயக்கம் போன்ற இயற்கையான தூண்டுதல்களை அடக்க வேண்டாம்.

* பகலில் தூங்க வேண்டாம்.

* உளுந்து, வினிகர், வெங்காயம், ஊறுகாய், பிரிஞ்சி, புளிப்பு தயிர், எண்ணெய், பூண்டு, வெல்லம், புளிப்பு பொருட்கள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம்.

* மது அருந்த வேண்டாம்.

* இரவுகளில் விழித்திருக்கக் கூடாது.

* அதிக உடற்பயிற்சி, வேகமாக அல்லது அதிகமாக சாப்பிட வேண்டாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது? (கட்டுரை)
Next post தொடரும் குழந்தையின்மை… தம்பதியர்களே அலர்ட்! (மருத்துவம்)