மதுரையை கலக்கும் ஹோட்டல் ஜல்லிக்கட்டு! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 7 Second

எங்கள் வீட்டு குடும்ப நிகழ்ச்சி, திருவிழான்னு எங்க போனாலும் நான்தான் சமைக்கணும்னு ஆசைப்படுவேன். 8ம் வகுப்புவரைதான் படிச்சுருக்கேன். 12 வயதில் சமைக்க ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ஹாபியா மாறிடுச்சு எனப் பேச ஆரம்பித்தார் மதுரை சின்ன சொக்கிகுளத்தில் இயங்கி வரும் ஹோட்டல் ஜல்லிக்கட்டின் உரிமையாளர் ஜெயக்கொடி. சுருக்கமாக ஜெயா. சமைப்பது என் ரத்தத்தில் ஊறிய விசயம், வெறி என்றவர், உணவகம் நடத்தணுங்கிறது என்னோட பலநாள் கனவு. மக்களுக்கும் என் சமையலின் ருசிய கொண்டு போயி சேர்க்கணும்னு நினைத்தேன். அந்தக் கனவை என் கணவரிடத்தில் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேன்.

உன் ஆசையை நான் நிறைவேத்துறேன், நீ ஆரம்பின்னு பக்கபலமா நின்னார். எப்பவுமே என் சமையலை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு ஒவ்வொன்னப் பத்தியும் சரியா கணிச்சு சொல்லுறது அவர்தான். சிலநேரம் உணவில் உப்பு கொஞ்சம் தூக்கலா இருந்தாக்கூட அடுத்த முறை இதை சரி பண்ணிக்கம்மான்னு பக்குவமா சொல்லுவார். அவர் டிவிஎஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியில் இருக்கிறார். அவரோட சப்போர்ட்ல ஹோட்டல் ஆரம்பிச்சு இதோ ஒரு வருடத்திற்கு மேல ஆச்சு. ‘எங்க வீட்டுல அம்மா கையால மனைவி கையால சாப்பிடுற அதே சுவை இருக்குன்னு’ மக்கள் என்னை நிறையவே பாராட்டுறாங்க. இந்த பாராட்டெல்லாம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. என் வாழ்க்கை முழுமை அடைந்த திருப்தி எனக்கு இப்ப இருக்கு என்கிறார் ஜெயா.

எல்லாப் பெண்களும்தான் சமைக்கிறார்கள். ஆனால் ஹோட்டல் நடத்தும் தைரியம் எப்படி வந்தது என்ற நம் கேள்விக்கு? எனக்கு திருமணம் ஆகி 26 வருஷம் ஆச்சு. எங்க குலதெய்வம் கோயிலில் 6 மாதத்திற்கு ஒருக்கா ரெட்டக் கெடா வெட்டுவோம். 100 பேரையாவது சாப்பிடக் கூப்பிடுவோம். 100 பேர் சாப்பாட்டுக்கும் மசாலாபொடி நானே ஒத்த ஆளா ரெடி பண்ணுவேன். அதிகாலை 4 மணிக்கே பொங்கல் வச்சு.. கடாய் வெட்டி.. மதியம் 12 மணிக்கெல்லாம் விருந்து கொடுத்துருவேன்.

26 வருஷமா வருஷத்துக்கு 2 தடவை இதையே திரும்ப திரும்ப செய்ய செய்ய எனக்குள்ள பயங்கர தன்னம்பிக்கை வந்திருச்சு. அப்புறம் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள் என நாற்பது ஐம்பது பேரை சாப்பிட விருந்துக்கு அழைச்சுருவேன். என் வீட்டுக்கு வந்த யாரையும் நான் சாப்பிடாமல் அனுப்புனதே இல்லை. வாரத்துக்கு முப்பது நாற்பது பேராவது என் வீட்டில் விருந்து சாப்பிடுவாங்க. எல்லா மசாலாப் பொருளும் எப்பவும் என்கிட்ட கைவசம் இருக்கும். அதனால் டக்கு டக்குன்னு சமைச்சு முடிச்சுருவேன்.

அசைவத்தில், தேங்காய் பால் எடுத்து சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது என்னோட ஸ்பெஷல். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, நாட்டுக்கோழி வறுவல், நாட்டுக்கோழி பெப்பர் ஃப்ரை, கோலா உருண்டை, மீன் குழம்பு, மீன் வறுவல், நண்டு, எறால்ன்னு அசைவத்தில் எதையும் விடுறதில்லை. எல்லா அயிட்டமும் எனக்கு அத்துப்படி. கலப்படம் இல்லாத தரமான சாப்பாடை கொடுக்கணும்னு நினைப்பதால், மஞ்சள் பொடியில் தொடங்கி அத்தனை மசாலா பொடிகளையும் என் மேற்பார்வையில் வீட்டில் நானேதான் சேர்த்து அரைக்கிறேன். செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய் சமையல்தான் என்னுது. அதேபோல் சமைப்பதற்கு நான் மாஸ்டர் வைத்துக்கொள்வதும் கிடையாது. எல்லாத்தையும் நானே முன்நின்று செய்வேன்.

அரைக்க, காய் நறுக்க, கிண்டன்னு ஹெல்பர் மட்டுமே வச்சுருக்கேன். மசாலாப் பொடிகளை என் கையாலதான் அள்ளிப்போடுவேன். அளந்து போடுறது, ஸ்பூன்ல அள்ளிப் போடுறதெல்லாம் எனக்கு சுத்தமாக வராது. எதுவா இருந்தாலும் கண்ணால பார்த்து கையலா விரலை தடவி போடுறதுதான். என் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது கை முறை சமையல்தான். கையில மூன்று விரல் புடிச்சு போடுறதுதான் எனக்கு அளவு. அதில்தான் சுவை அப்படியே அள்ளும். எல்லா அளவும் அக்யூரட்டா இருக்கும்.

அது 200 பேரா இருந்தாலும் சரி 300 பேராக இருந்தாலும் சரி. ஒரு நாளைக்கு 500 பேரை அசால்டா சமாளிப்பேன். 1000ம் பேருனாலும் ஒத்த ஆளா நின்னு சமைச்சுருவேன். சாப்புட்டு முடிச்சவுங்க டேபிளுக்கு சென்று ஒவ்வொருத்தரிடமும் சுவை எப்படி இருக்குன்னு கேட்கும்போது, அவர்கள் முகத்தில் சாப்பிட்ட ஒரு திருப்தி தெரியும். அது எனக்கு அத்தனை உற்சாகத்தை தரும் என்றவரிடம், ஒரே வேலைய திரும்பத் திரும்ப செய்யும்போது அழுப்பு தட்டுமே என்ற நம் கேள்விக்கு? அலுப்பா விருந்துக்கு நான் கடாவே உறிப்பேன் என்கிறார் அசால்டாக இடுப்பில் ஒரு பக்கமாக தூக்கி சொறுகிய சேலையோடு.

உணவகத்திற்கு பெயர் ஜல்லிக்குட்டுன்னு இருக்கே ஏன் என்றதற்கு? ஜல்லிக்கட்டு, மதுரையில் பாரம்பரிய வீர விளையாட்டு. அதை நினைவூட்டதான் இந்த பெயரை வைத்தோம். உணவகத்திற்குள்ளும், மதுரையின் பாரம்பரியத்தை உணர்த்தும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம், தெப்பத் திருவிழா, மீனாட்சி திருகல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், மதுரையில் உள்ள கீழ்பாலம், மேம்பாலம் என எல்லாத்தையும் புகைப்படமாக்கி ஆங்காங்கே மாட்டி வைத்துள்ளோம்.

இப்ப வருகிற இளைய தலைமுறைக்கு இதை தெரிவிக்கவே இந்த மாதிரியாக உணவகத்தை பாரம்பரிய முறையில் அலங்கரித்திருக்கிறோம். பெயர் வைத்ததில் தொடங்கி இது அனைத்துக்கும் ஐடியா செய்தது பொறியியல் படித்த என்ன மகனும், கல்லூரியில் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருக்கும் என் மகளும் என்றவர், என்னோட அக்காவையும் இப்போது என்னுடன் சமையல் செய்வதற்கு கூடவே வைத்திருக்கிறேன் என்கிறார். என்னிடம் 14 பேர் வேலைக்கு இருக்காங்க. சப்ளைக்கு மட்டுமே ஆண்கள். மற்றபடி கிச்சன் முழுக்க பெண்கள் ஆதிக்கம்தான். கடந்த 2 மாதமாக என் சாப்பாடு மக்களிடம் சூப்பரா ரீச்சாகி இருக்கு என்றவரிடம், உங்கள் வெற்றியின் மூலம், இளம் தலைமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன சொல்ல விரும்புறீங்க என்றதற்கு?

நான் படிக்கலைன்னாலும் எல்லாத்தையும் நம்பிக்கையா பண்ணுறேன். கணவனும் மனைவியும் அன்பாக வாழ்றதுக்கும், சாதிக்கிறதுக்கும் கல்வி முக்கியமில்லைதான், ஆனால், நான் இந்த வெற்றிய அடைய என் கணவரின் அணுசரனை முக்கியக் காரணமாக இருந்தது. அவர் என்னை எப்போதுமே ஊக்கப்படுத்தியும், தன்னம்பிக்கை கொடுத்தும் வருபவர். படிச்சாத்தான் நம்மால் சாதிக்க முடியும் என்கிற என் எண்ணத்தை மாற்றி, உன்னாலையும் சாதிக்க முடியும்னு அடிக்கடி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார். பேங்க் வேலையாக இருந்தாலும் சரி, என் குழந்தைகளின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பா இருந்தாலும் சரி, நான் செல்லத் தயங்கி நிற்கும்போதும், யோசிக்கும்போதும், உனக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில பேசு. உனக்குத் தெரிந்த உன்னோட தாய் மொழியப் பேச எப்பவும் தயங்காதன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்து அனுப்புவார்.

விடுமுறையில் அவர் வீட்டில் இருந்தாலும் என்னைத்தான் வெளி வேலைகளைப் பார்க்கப் போகச் சொல்லுவார். வெளி விசயங்களையும் நான் பழகிக்கொள்ள தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார் என் கணவர். நாம படிச்சாத்தான் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் அவரால்தான் என்னிடம் இருந்து விடைபெற்றது. எனக்கு என்ன தெரியுமோ, எது எனக்கு நன்றாக வருமோ அதையே சாதனையாக்க முடியுங்கிறதை அவரால்தான் நான் உணர்ந்தேன். கணவனோ மனைவியோ, ஒருத்தரை ஒருத்தர் ஆதரியுங்க, அன்பு செலுத்துங்க, ஊக்கப்படுத்துங்க.

நம்மோட சந்தோசமான வாழ்க்கைக்கு அது ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட வாழ்க்கை அமஞ்சா அது வரம். அந்த வாழ்க்கைய அமைச்சுக்கிறது கணவன்-மனைவி இருவர் கையிலும்தான் இருக்கு என்றவரிடம், உங்கள் உணவகம் இன்னும் வளர்ந்து இன்னும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு தர வாழ்த்துக்கள் என வாழ்த்தி விடைபெற்றோம். படிச்சாதான் நம்மால் சாதிக்க முடியும்என தேங்கி நிற்காமல், இது எனக்கு நல்லா வரும். அதுல நான் கெத்து காட்டுவேன் எனத் தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கும் ஜெயக்கொடிகளையும் நாம் பாராட்டியே தீரவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்குப் பிடித்தவை!2: நடிகை மற்றும் தொழிலதிபர் ஸ்ருதிகா!! (மகளிர் பக்கம்)
Next post வேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்!! (மருத்துவம்)