சின்ன கோடு அருகே… பெரிய கோடு வரைந்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:21 Minute, 19 Second

ஆல்வேஸ் பிஸியென இயங்குபவர் சசிரேகா. சிலருக்கு பின்னால் மட்டும் வலிகள் நிறைந்த வாழ்க்கையிருக்கும். பார்த்தால் தெரியாது. அப்படியான வலியைக் கடப்பவள் நான் என பேசத் தொடங்கியவர், பெண்கள் விரும்புகிற ஆடைகள் மற்றும் ப்ளவுஸ்களை டிசைனிங் செய்து கனகச்சிதமாக தைத்துத் தரும் பொட்டிக் ஒன்றை ‘பெங்களூர் டிசைனர்’ என்கிற பெயரில் சென்னை முகப்பேரில் இயக்கி வருகிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர் பெங்களூரு. எப்பவும் கிரியேட்டிவாக எதையாவது செய்துகொண்டே இருப்பேன். பள்ளி கல்லூரி படிப்பை முடித்ததும் கிடைத்த இடைவெளியில் டெய்லரிங், எம்ப்ராய்டரிங் எனக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்குத் தெரியாது, இதில்தான் நான் வாழ்க்கையை ஜெயிக்கப்போகிறேன் என’’ என்றவர் மேலே தொடர்ந்தார். ‘‘என் குடும்பம் ரொம்பவே ஆர்த்தோடெக்ஸ். நில்லுன்னா நில்லு உட்காருன்னா உட்காரு என அப்பா சொல்வதுதான் எல்லாமும்.

எனக்கான உடைகள்கூட அப்பாவின் தேர்வாகத்தான் இருந்தது. 19 வயதில் எனக்குத் திருமணம். திருமணம் செய்து கொடுத்தது வேலூர் மாவட்டம் வாணியம்பாடி. கூட்டுக் குடும்பத்தில் நார்மலான வாழ்க்கையில் முதலில் பையன் பிறந்தபோது எனக்கு வயது 21. பிறகு மகள் பிறந்தாள். என் மாமனார் வெல்ல மண்டி பிஸினஸில் இருந்ததால் கணவரும் அதையே பார்த்துக்கொண்டார். கேரிங்ன்னா என்னன்னே தெரியாத ஒரு மனிதர் என் கணவர். ஆனால் கெட்டவரும் இல்லை. அன்பை வெளிப்படுத்த மாட்டார். அவ்வளவே. திருமண வாழ்க்கை எனக்கு முழுமையாக ஏமாற்றத்தையே தந்தது. குழந்தைகள் மட்டுமே வாழ்க்கையாகிப் போனார்கள்.

இந்த நிலையில், 2007ல் திடீரென என் கணவரின் உடல் எடை குறைந்து, தோற்றம் பார்க்கவே வித்தியாசமானது. எல்லா மருத்துவப் பரிசோதனைகளையும் எடுத்ததில் சிறுநீரகம் இரண்டும் செயலிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அப்போது வயது 34. எனக்கு 32. கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலை. வாணியம்பாடியில் பெரிய அளவில் மருத்துவ வசதியின்மையால், பெங்களூருவில் இருந்த என் பெற்றோர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்கத் தொடங்கினேன்.

சிறுநீரக மோசடி நிகழ்வுகள் பெரிய அளவில் இந்தியாவில் பூம் ஆன நேரமது. கிட்னி டோனர்ஸ் ரிலேட்டிவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருந்ததில், அவர் குடும்பமும் சரி என் குடும்பமும் சரி கிட்னியை தானமாகக் கொடுக்கும் நிலையில் இல்லை. அப்போது என் மகள் முதல் வகுப்பிலும், மகன் 6ம் வகுப்பும் படிக்கிறார்கள். குழந்தைகளை வாணியம்பாடியிலே விட்டுவிட்டு அவரின் மருத்துவத்துக்காக பெங்களூருக்கும் வாணியம்பாடிக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் மருத்துவம் சார்ந்து அப்பா வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கவேண்டிய நிலையும் வந்தது. திருமணத்திற்கு பின் பெண்ணுக்கு தொடர்ந்து அம்மா வீட்டில் இருப்பது பெரும் துயரம். அதுவும் உடல்நலம் சரியில்லாத கணவரோடு இருப்பது எனக்கு வலியாக இருந்தது. குழந்தைகளும் என்னைப் பிரிந்து தனிமையில் வாடத் தொடங்கினர். உளவியலாய் என் மகனை இது பாதிக்க, அவனை வேலூர் பள்ளி ஒன்றில் விடுதியில் சேர்த்தேன். மகள் சின்னவள் என்பதால் என்னோடு பெங்களூரில் வைத்துக்கொண்டேன்.

அப்பாவால்தான் அம்மா என்னை கைவிட்டுட்டார் என என் மகன் நினைக்கத் தொடங்கி, விடுதியிலும் அவன் ஒட்டவில்லை. ஒரு பக்கம் குழந்தைகள் மறுபக்கம் இவரென இரண்டு பக்கமும் வாழ்க்கை என்னை கயிறு போட்டு இழுத்தது. நான் தலைகீழாய் புரட்டிப்போடப்பட்டேன். அவர் உடல் நிலையும் மோசமானது. அவரை நான் சரிசெய்துவிட்டால், குழந்தைகளைக் கொஞ்சமாவது கவனிக்கலாம் என நினைத்து, என் பெற்றோருக்குத் தெரியாமலே துணிந்து ஒரு முடிவை எடுத்தேன். ஆம். சின்ன கோடு அருகே பெரிய கோடு போட்டேன். அதாவது என் வீட்டில் யாரின் அனுமதியும் நான் பெறவில்லை. அவருடையது ஏபி பாஸிட்டிவ் ரத்தம். அந்த வகை ரத்தத்திற்கு எந்த குரூப் ரத்தம் உடையவரும் சிறுநீரகத்தை தானம் செய்யலாம். டிஸ்யூஸ் மட்டும் மேட்சாக வேண்டும்.

முடிவுடன் சென்னை மியாட் நோக்கி அவரோடு பயணித்தேன். எனக்கும் அவருக்கும் மேட்சிங் பார்த்ததே பெரிய பிராஸஸாக 20 நாட்களுக்கு மேல் சென்றது. அதற்கு மட்டுமே இரண்டு லட்சங்களுக்கு செலவானது. என் கிட்னி அவருக்கு மேட்சிங் என்கிற செய்தி கிடைக்கவே, தாமதிக்காமல் கடகடவென அடுத்தடுத்த வேலைகளில் இறங்கினேன். செய்தி அறிந்த அப்பாவுக்கு இதில் அதிர்ச்சி. கடுமையாக என்னைத் திட்டினார். ஆனால் நான் உறுதியாய் நின்றேன்.

அது ஒரு பெயின்ஃபுல் சர்ஜரி. ஆனால் வெற்றிகரமாய் முடிந்தது. சர்ஜரி முடிந்து எனக்கு வயிற்றில் இருந்து இடுப்புவரை ‘யு’ வடிவில் 31 தையலும், அவருக்கு 21 தையலும் போடப்பட்டது. டயாலிஸ் மருந்து மாத்திரை என போஸ்ட் சர்ஜரி அதைவிட பிரச்சனைக்குறியதாகவே இருந்தது.மருத்துவம் சென்னையில் நடந்ததால், குழந்தைகளையும் சென்னையில் உள்ள பள்ளிக்கு மாற்றினேன். என் ஒன்றுவிட்ட சகோதரியின் குடும்பம் என் குழந்தைகளின் படிப்பு, வீடு, வாடகை என உடன் இருந்து கவனித்துக் கொண்டார்கள்.

பொருளாதார ரீதியாக மாமனார் எனக்கு நிறையவே உதவினார். சேமிப்பு, சொத்து என கரைய ஆரம்பித்த நிலையில், தகப்பன் ஸ்தானத்தில் தூணாக நின்ற மாமனாருக்கும் வயிற்றில் கேன்சர் வந்து உடல்நலம் குன்றி சட்டென இறந்து போனார். ‘நீ ரொம்பவே போராடுறம்மா, உன்னை ஒரு வாட்ச்மேன் மாதிரி கிட்ட இருந்து பார்த்துப்பேன்’னு சொன்னவர் திடீர்னு இல்லை. மேலே ஏறினால் பாம்பு. கீழே இறங்கினால் சிறுத்தை கதைதான் என்னுது. கணவர் நோயாளி. மாமனாரும் இறந்துவிட்டார். கடன்காரர்கள் யார் யாரோ வரிசையாக வீடுதேடி வந்தனர். கண்களில் கண்ணீர் வருவதே நின்று போனது. மருத்துவம், குழந்தைகள் படிப்பு, வாடகை என வாழ்க்கை சூறாவளியாய் சுழற்ற, அப்பா திட்டினாலும் எனக்கு பக்கபலமாய் நின்றார். அவர் உதவுகிறார் என்பதற்காக என்னால் உட்கார்ந்து சாப்பிடவும் முடியவில்லை.

தையல் மெஷின் ஒன்றை வாங்கி அருகாமையில் இருப்பவர்களுக்கு தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அப்பாவுடையது பெங்களூரில் டெக்ஸ்டைல் பிஸினஸ் என்பதால், அவரிடமிருந்து மெட்டீரியல்களை வாங்கி அலுவலகம் அலுவலகமாக, அபார்ட்மென்ட் அபார்ட்மென்டாக, ஐ.டி கம்பெனி ஐ.டி. கம்பெனிகளாக ஏறி இறங்கியதில் பெரிதாக ரீச் இல்லை. சுமைகளை தூக்கியதில் எனது உடல் நலம் பாதித்தது. இந்த நிலையில் கணவருக்கு நான் தானமாய் கொடுத்த கிட்னி 5 ஆண்டுகள் மட்டுமே வேலை செய்தது. மீண்டும் உடல் நலம் பாதித்து கோமாவுக்கு அவர் சென்றார். திரும்பவும் 25 நாள் ஹாஸ்பிடல் வாழ்க்கை. ரத்தத்தின் அளவு (heamoglobin) அவருக்கு குறையும்போதெல்லாம் டயாலிஸிஸ் செய்ய ஆரம்பித்தோம். ஒரு முறை செய்ய 5 ஆயிரம் ஆகும். வாரத்தில் இரண்டு முறை. மாசத்துக்கு 8 முறை செய்ய வேண்டும்.

மருந்து, மாத்திரை, ஊசி, டயாலிஸிஸ் என மாதம் 50 ஆயிரம் அவருக்கு மட்டுமே செலவானது. நம்மால எழுந்து வர முடியுமா ஜெயிக்க முடியுமா என்ற கேள்வி என்னை துரத்திக்கொண்டே இருந்தது. ஆனாலும் வெறியோடு இயங்கவும், முன்னேறவும் அடியெடுத்து வைக்கத் தொடங்கினேன்.2009ல் அப்பாவின் உதவியில் பெங்களூரு டிசைனர் என்கிற பெயரில் கடை ஒன்றை சென்னை முகப்பேரில் தொடங்கினேன். மெட்டீரியல் விற்பனையோடு தையல் வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் கஸ்டமர் சாட்டிஸ்பேக்ஷன் எனக்கு கிடைக்கவில்லை. அதிலும் பல அவமானங்களை சந்திச்சேன். நிறைய கஸ்டமர் என்னைத் திட்டியிருக்கிறார்கள். முகத்தின்மேல் ஆடைகளை தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

நிறைய தவறுகள் நடந்திருக்கு. நிறைய பிரச்சனைகள் வந்தன. சரியான நேரத்திற்கு டெலிவரி கொடுக்கனும் என்பதற்காக இரவு 1 மணிக்கெல்லாம் கொண்டுபோய் கொடுத்துருக்கேன். கஸ்டமரின் திருப்தி அத்தனை ஈஸியாக எனக்குக் கிடைக்கவில்லை. மெஷினைக் கையோடு எடுத்துச் சென்று கஸ்டமர்கள் போட்டுப்பார்த்து சரிசெய்து கொடுத்து வந்த அனுபவங்களும் உண்டு. அடிபட அடிபட பல பரிமாணங்கள் கிடைத்தது. ஒவ்வொரு அடியும் அனுபவங்களையும், முதிர்ச்சியையும் தந்தது. அப்படியே அருகாமையில் உள்ள பள்ளி, நர்ஸிங் கல்லூரி யுனிஃபார்ம்களை மொத்ததமாக ஆர்டர் எடுத்து ஆள்வைத்து தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த டெய்லர்களையும் ஹயர் செய்து தைக்கக் கொடுத்து வாங்கி டெலிவரி செய்தேன். தொழில் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க, ஒரு மெஷின் இரண்டானது. என் வேலையில் திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். கடையை கொஞ்சமாக விரிவுப்படுத்தினேன்.

திருமணங்கள் முன்பு நடந்த முறை வேறு. இப்போது அதில் சினிமாத்தனங்கள் கலந்து, கமெர்ஷியல் கமாடெட்டிக்குள் பயணிப்பதால், ப்ரைடல் ப்ளவுஸ்கள் பெரிய அளவில் டிரெண்டாகத் தொடங்கிய நேரமது. இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன் துறையும் வேறொரு பரிமாணத்தில் பயணிக்க, ப்ரைடல் ப்ளவுஸ்க்கு எம்ப்ராய்டரி கேட்டு நிறைய கஸ்டமர்கள் வரத் தொடங்கினர். அதையும் அப்டேட் செய்ய வேண்டிய நிலையில், கூடவே எம்ப்ராய்டரிங்கையும் சேர்த்துக் கொண்டேன். ஆள்போட்டு அந்த வேலைகளையும் செய்யத் தொடங்கினேன்.

ஒரு மெஷின் ஒரு டைலர் என ஆரம்பித்த தொழில், நான் போட்ட எஃபெக்ட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு தளத்திற்கு என்னை கூட்டிச் சென்றது. வேலைகள் வருவது அதிகரிக்கத் தொடங்கியது. டெய்லர்களை வேலைக்கு வைப்பதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தினேன். அப்படியே மிஷின்களின் எண்ணிக்கையும் கூடியது. இப்போது 20 பேர் என்னிடத்தில் ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். டெய்லர் மட்டுமே 6. எம்ப்ராய்டரி வேலை செய்பவர்கள் 10. மாஸ்டர்கள் இருவர், ஹெல்பர் என மொத்தம் 20 பேர் சேர்ந்தது என் யூனிட். தொழில் எனக்கு ஏற்றத்தை தந்தாலும், என் வாழ்க்கை இப்பவும் அட்வென்ஷர் டிராவல்தான். அவள் ஒரு தொடர்கதை எனப் புன்னகைக்கிறார்.

ஒவ்வொரு நாளும் போராடிய நான், சரியான பாதையில்தான் பயணிக்கிறேனா, சரியாத்தான் தொழில் செய்யுறேனா எனச் சோர்ந்த நாட்களும் இருந்தது. சோர்ந்து போனால் வாழ்க்கையில மேலே வர முடியாதுதான். பெண்களுக்குன்னு ஒரு பலம் இருக்கு. மனசு வச்சா கட்டாயம் ஜெயிக்க முடியும் என்றவர், எனது குழந்தைகளைப் பொறுத்தவரை அம்மாதான் ஹீரோ எல்லாமே. என் மகனை, அவன் விருப்பப்படி ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங் படிக்க வைத்து, அவனும் பைலட்டுக்கு பயிற்சி எடுத்து, லைசென்ஸ் வாங்கியுள்ளான். இன்று அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கிறான். என் மகள் சி.ஏ. படித்து வருகிறாள் என்றவர் பெருமூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டவாறே கை குலுக்கி விடை கொடுத்தார்.

சசியின் பிஸினஸ் பக்கங்கள்…

சின்ன வயதில் இருந்தே எது செய்தாலும் பெர்ஃபெக்ட் என்பதே என் கேரக்டர். செய்யும் தொழிலை நான் பெருமையாகவே நினைக்கிறேன். இப்பவும் என் கஸ்டமர் என்னை, டெய்லர் இருக்காங்களா என்றுதான் கேட்பார்கள். அதேபோல், இன்றுவரை யாரையும் தேடிச்சென்று நான் விளம்பரப்படுத்தியதில்லை. கஷ்டமராகவே என்னைத் தேடி வருவார்கள். அதுவே என் பலமும். கஸ்டமர்கள் எனக்கு வேர்ட் ஆஃப் மவுத். சசியிடம் போங்க தைரியமாக இருக்கலாம் என்பதே என் அடையாளம்.

இருப்பதிலே பெரிய கஸ்டம் பெண்களை திருப்திப்படுத்துவது. அதுவும் திருமண உடை விசயத்தில் அவர்களைத் திருப்திப்படுத்துவது ரொம்பவே முக்கியம். ஒரு லட்சம் கொடுத்து புடவை வாங்கினாலும் ப்ளவுஸ் சரியாய் அமைந்தால்தான் புடவைக்கே அழகு. எனவே எந்த டிசைனாக இருந்தாலும் என் மேற்பார்வையிலே நிகழும். அதற்காக நிறைய மெனக்கெடுவேன். மனநிறைவோடு வாடிக்கையாளர்கள் போகவேண்டும் என்பதில் உறுதி காட்டுவேன். இதற்காகவே கஸ்டமரிடத்தில் நேரடியாக நானே பேசி, அவர்களின் தேவைகளைத் தெரிந்துகொள்வேன். இதுதான் தொழிலில் சரியாகவும் இருக்கும். இதுவே வெற்றிக்கு முக்கியக் காரணம்.

கொஞ்சம் வளர்ந்ததும் வேலைக்கு ஆட்களைப்போட்டு ஹாயாய் சுற்றுவது எனக்கு பிடிக்காது. கஷ்டமரிடத்தில் ப்ளவுஸை வாங்குவதோடு என் வேலை முடிவதில்லை. அவர்கள் கேட்கும் நெக் ஷேப் சரியாக இருக்கிறதா என்பதை மாஸ்டர் மார்க் செய்யும்போதே கவனிப்பது, எம்ப்ராய்டரி செய்பவருடன் இணைந்து, சேலையை பேஸ் செய்து ப்ளவுஸில் அதே டிசைனை கொண்டு வருவதென என் பங்கு ஒவ்வொரு இடத்திலும் இருக்கும். அதேபோல் இதுவொரு கூட்டுக் கலைவை. ஒவ்வொருவரின் உழைப்பும், ஒவ்வொருவரின் திறமையும் இதில் முக்கியம்.

ஒவ்வொருவரையும் சார்ந்தே ஃபைனல் அவுட்புட் கிடைக்கும். நானும் இதில் டிபென்டென்ட் என்றாலும், என் மேற்பார்வையிலே ஃபைனல் ரிசல்ட் வருகிறது10 மணி நேரம் 15 மணி நேரம் கஷ்டப்பட்டு செய்த வேலை திருப்தியில்லை. நினைத்த அவுட்புட் வரவில்லை எனப் பிரித்த அனுபவங்களும் உண்டு. எத்தனையோ தவறை நானே உட்கார்ந்து பிரித்து சரி செய்துள்ளேன்.

பெரிய வேலை சின்ன வேலை என்று நான் இதில் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆளே வரவில்லை என்றாலும், நானே மெஷினில் அமர்ந்து எம்மிங் செய்வது, ஓரம் அடிப்பது, பால்ஸ் அடிப்பது, பட்டன் வைப்பது என இறங்கிவிடுவேன். தைக்கத் தேவையான மெட்டீரியல்களையும் நானே நேரில் சென்று பார்த்துப் பார்த்து வாங்குகிறேன். சின்ன விசயமும் எனக்கு இதில் மிஸ் ஆகக்கூடாது. சின்னத் தவறும் நாம் கஷ்டமரை இழப்பதற்கு வழிவகுக்கும். எவ்வளவு ஹெவியான டிசைனையும் என்னால் செய்து தர முடியும். அளவு ப்ளவுஸ் கொண்டு வந்து தரவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. திருமணம் சட்டுனு முடிவானது, இரண்டே நாளில் ப்ளவும் வேண்டும், அல்லது ஒரே நாளில் வேண்டும் என்றாலும் என்னால் சரியான நேரத்திற்கு செய்து கொடுக்க முடியும். அந்த அளவுக்கு என்னிடத்தில் மேன்பவர் உண்டு.

ஒரு யூனிட்டை உருவாக்குவது, அதுவும் கஸ்டமர் சாட்டிஸ்பைடாக உருவாக்குவது சுலபமில்லை. என்னிடத்தில் வெஸ்ட் பெங்கால், பீகார், வாரணாசி, மும்பை போன்ற மாநிலங்களில் இருந்து வந்த வடநாட்டு இளைஞர்களே பெரும்பாலும் வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து என் குடும்பமாகவே நான் பார்க்கிறேன். எனவே தங்குமிடம், உணவு தயாரிக்க கிச்சன் செட்டப் என செய்து கொடுத்துள்ளேன். நமக்கு உதவுபவர்களைக் குடும்பமாக பார்க்க நினைத்தால் வாழ்க்கை என்றும் சக்ஸஸ்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)
Next post ரஷ்யாவின் குறி உக்ரைனா? கருங்கடலா? (வீடியோ)