ஒரு கிராமத்து மாடலின் கதை!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 58 Second

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் நந்தினி. இன்று நமக்கு பிடித்த பல பிரபலங்கள் கிராமங்களிலிருந்து வந்தவர்களே என்றாலும். அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டே சாதித்து புகழ் பெற்றவர்கள் இங்கு குறைவு தான். அந்த வரிசையில் நந்தினி தன் கிராமத்திலேயே வசித்துக்கொண்டு பிரபல மாடலாகவும் திகழ்கிறார்.

‘‘டிப்ளமோ முடித்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். அப்போது பட்டமளிப்பு விழாக்களை ஒருங்கினைக்கும் வேலை எங்கள் நிறுவனத்திடம் வந்தது. அதில் குறிப்பாக, சினிமா துறைகளில் இருக்கும் பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக விழாக்களுக்கு அழைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அழைத்த பிரபலங்களின் கைகளிலேயே எனக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் விருதுகளும் கிடைத்தது.

இந்த வேலையில் இருந்து சினிமா பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில், எனக்கும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. சினிமா துறையில் வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம். அதிலும் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று யாரிடமாவது சொன்னால், உன்னால் முடியாது என்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். முதலில், யாருமே நம் ஆசையை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். நாம் சொல்வது முட்டாள்தனமாக மட்டுமே அவர்களுக்கு தெரிந்தது.

அப்போதுதான் இந்த மாடலிங் சினிமாவுக்குள் நுழைய ஒரு சின்ன சாவியாக கிடைத்தது. என்னுடைய சொந்த தயாரிப்பில் இரண்டு ஆல்பங்களில் நடித்து வெளியிட்டேன். அதில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல நிறுவனங்களுடன் சேர்ந்து விளம்பர போட்டோ ஷூட் செய்தேன். இந்தியாவின் முக்கிய அழகு நிலைய நிறுவனத்திற்கு ப்ராண்ட் மாடலாக மாறினேன். ஆடை நிறுவனங்கள், அழகு சாதன நிறுவனங்களுக்கு மாடலாக அறிமுகமாகினேன். பிரபல அழகு நிலையங்களின் ப்ராண்ட் மாடலாக அறிமுகமாகி மாடலிங் துறையில் எனக்கான அடையாளத்தை அழுத்தமாக பதித்தேன்.

சினிமாவில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் போதே, 2019ல் தென்னிந்திய பெண் சாதனையாளர்கள் விருதுகளில், எனக்கு அவுட்சாண்டிங் ஆர்டிஸ்ட் எனும் விருதைக் கொடுத்தனர். 2020ல் தேசிய அளவிலான பெண் சாதனையாளர்கள் விருதுகளில், எனக்கு சிறந்த கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது. 2021ல் சர்வதேச பல்கலைக்கழகம் எனக்கு முனைவர் பட்டத்தை வழங்கி கவுரவித்தது.

சினிமாவிற்காக மாடலிங் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும், மாடலாக பணி செய்வதே எனக்கு நல்ல மனநிறைவை கொடுத்தது. கிராமத்திலிருந்துதான் அனைத்து மாடலிங் வேலைகளையும் செய்து வருகிறேன். பொதுவாகவே மாடலிங், சினிமா போன்ற வாய்ப்புகளுக்கு அனைவருமே சென்னையை நோக்கிதான் பயணிப்பார்கள். என்னையும் பலர் நீ ஏன் சென்னையில் போய் செட்டிலாகக் கூடாது என்றார்கள். ஆனால் எனக்கு நான் பிறந்து வளர்ந்த இடத்திலேயே, எனக்கு நன்கு அறிமுகமான மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அதனால், நகரத்தை நோக்கிச் செல்லாமல் என் கிராமத்தில் இருந்தபடியே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தேன். இன்று சென்னையில் இருக்கும் மாடல்கள் கூட, என்னிடம் வாய்ப்புகள் இருந்தால் சொல்ல சொல்கிறார்கள். ஆனால் இந்த அடையாளத்தை உருவாக்க நான் பல தடைகளை கடக்க வேண்டி இருந்தது. என் அம்மாவும் குடும்பமும் எனக்கு முழு ஆதரவு கொடுத்தாலும், என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் எனக்கு பயங்கர எதிர்ப்பு இருந்து வந்தது. அவர்களின் எதிர்ப்புகளையே என் ஊன்றுகோலாக மாற்றி ஒரே வருடத்தில் மாடலிங் துறையில் வளர்ந்தேன். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையுமே பயன்படுத்திக்கொண்டேன். வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது. நாம்தான் அதை உருவாக்க வேண்டும். அதனால் என்னுடைய சொந்த தயாரிப்பில், திறமையான கலைஞர்களுடன் சேர்ந்து திரைப்படம் உருவாக்க முடிவு செய்துள்ளேன்.

ஊரிலிருந்து வரும் மாடல்களுக்கு எப்போதுமே மரியாதைக் குறைவுதான். வட இந்தியா அல்லது நகரங்களைச் சேர்ந்த மாடல்களுக்கு இங்கு மதிப்பு கொஞ்சம் அதிகமாகவே கிடைக்கும். மாடலிங்கில் பொதுவாக உயரமான பெண்களைத்தான் தேர்வு செய்வார்கள். என்னுடைய மாடலிங் படங்களைப் பார்த்து, ஒரு போட்டோ ஷூட்டிற்கான அழைப்பு வந்திருந்தது. அங்கு சென்ற போது, என் முன்னாடியே இந்த மாடலின் உயரம் குறைவா இருக்கே, ஸ்கூல் போற குழந்தைய மாடல்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டீங்க என்று சிரித்தனர். ஆனால் மேக்கப் போட்டு முடித்து கேமரா முன் நின்றதும் என்னுடைய உயரம் ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று வரை அவர்கள் நிறுவனத்திற்கான பிராண்ட் மாடல் நான் தான். இப்படி மாடலிங் துறையில், நம் முன்னாடியே நம் உருவத்தை பற்றி பேசுவார்கள். ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு மனம் தளரக்கூடாது. கேமரா முன் நாம் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அனைவருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் சில நண்பர்கள்தான் பொழுதுபோக்கைத்தாண்டி நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்து அதற்கான வழிகாட்டியாக இருப்பார்கள். என்னுடைய தோழி உமாவும் நான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று என் வழிகாட்டியாக இருந்து வருகிறாள். டிப்ளமோ முடித்து வீட்டில் சும்மா இருந்த என்னை, உன் திறமைகளை வீணாக்காதே எனக் கூறி வேலையில் சேர சொன்னாள்.

அந்த வேலையில் எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து மாடலிங் செய்ய விரும்புவதாக அவளிடம் சொன்னதும், எனக்கு முழு ஆதரவைக் கொடுத்தாள். இப்போது புதியதாக வீடும், காரும் வாங்கியிருக்கிறேன். நகரத்து பெண்கள் மட்டுமே மாடலிங் போன்ற பெரிய கனவுகளை காணவேண்டும் என்றில்லை. குக்கிராமத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற பெண்களாலும் அவர்கள் கிராமத்தில் இருந்தபடியே எதையும் சாதிக்க முடியும்” என்கிறார் நந்தினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!(மகளிர் பக்கம்)
Next post செல்லுலாய்ட் பெண்கள்-94!!(மகளிர் பக்கம்)