திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:13 Minute, 56 Second

காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய் மனம் கரைந்து… நீராகி… நீரில் தீப்பிடித்து காமம் கரைமீறும். இரு மனங்களுக்குள்ளும் காமம் நடத்தும் காதல் வேட்டையில் அனைத்து நம்பிக்கைகளும் விரும்பிச் சாகும்.

இதெல்லாம் அரசின் சட்டப்படி 18 வயதுக்கு மேல்தான் நடக்கிறதா? இப்போதெல்லாம் 8-ம் வகுப்பிலேயே காதலிப்பதாகச் சொல்கிறார்கள். பள்ளிக் காலத்திலேயே பாய் ஃப்ரண்டுடன் டேட்டிங் செல்வது இப்போது பரவலாகி வருகிறது. பள்ளிப் பருவத்திலேயே பாலியல் உறவு கொண்டுவிடுகிற நிகழ்வுகளும் நடக்கிறது. திருமணத்துக்கு முன்பு இப்படி ஏற்படும் பாலியல் உறவு சரியானதுதானா?

திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆண் / பெண் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் மகளிர் மருத்துவர் கல்பனா சம்பத்.

‘‘வளர் இளம் பருவத்தில் ஆர்வம் மிகுதியால் பாலுறவு கொள்வதால் அவர்கள் நிகழ்காலம் பாழாவதுடன் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எல்லா ஆபத்துக்களையும் தெரிந்தே திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது. வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் மறைமுகமாக சில விஷயங்கள் நடப்பதை நம்மால் மறுக்க முடியாது.

திருமணத்துக்குப் பின் கணவனும் மனைவியுமாக செக்ஸ் வைத்துக் கொள்வது மறு உற்பத்திக்கானது. இது சமூகம் அங்கீகரித்திருக்கும் உறவு. இதுவே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது. ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது நம் கலாச்சாரத்துக்கு எதிரானது. திருமணத்துக்கு முன்பாக பதின் பருவத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. அந்தக் காலகட்டத்தில் உடல் முதிர்ச்சி,  மன முதிர்ச்சி இரண்டுமே குறைவாக இருக்கும்.

18 வயதுக்கு முன்பாக திருமணம் என்ற உறவுக்கு முன் வைத்துக் கொண்ட உடலுறவினால் குழந்தை உருவானால், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு அந்தப் பெண் புகார் தரும் பட்சத்தில் இதற்குக் காரணமான ஆண் சட்டப்படி தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இந்த சூழலில் நடக்கும் உடலுறவு இருவரின் மன ஒப்புதலுடன் நடந்தாலும் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயம் நிம்மதியைத் தகர்க்கும்.

நம் ஊரில் பெண்களின் கன்னித்தன்மை என்ற விஷயம் கலாச்சார ரீதியாக மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. திருமணத்துக்கு முன்பாக உடலுறவு கொள்ளும்போது கன்னிச்சவ்வு கிழிந்து ரத்தம் வெளியேறும். இது பெண்ணுக்கு ரணம் ஏற்படுத்தும். இது தனது திருமண வாழ்வை பாதிக்குமோ என்ற எண்ணம் பெண்ணை திருமண காலம் வரை வாட்டும்.

பதின் பருவத்தில் உடலுறவு கொள்வது மன வளர்ச்சியை பாதிக்கும். உடலுறவின்போது ஏற்படும் நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கும் என்பதாலும், பாதுகாப்பின்றி உடலுறவு கொள்வதாலும் எச்.ஐ.வி. பால்வினை நோய், சிறுநீரகத் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவில் திருமணத்துக்கு முன்பாக உடலுறவு தவறில்லை எனும் எண்ணம் அதிகம் உள்ளது.

‘அவரைத்தானே திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்’ என்ற எண்ணத்தில் பெண்கள் இதனை அனுமதிக்கின்றனர். பள்ளி அல்லது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பெண் உடலுறவினால் கர்ப்பம் அடையும்போது அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற ஒரு நிஜ சம்பவத்தில், கர்ப்பமான பெண் தன் காதலனை உடனடியாகத் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து குழந்தைகளும் பிறந்தன. அந்தப் பெண்ணுக்கு ஆஸ்துமா பிரச்னையும் இருந்தது. அவள் கணவன் மனைவியை கவனிப்பதில்லை. காதல் திருமணம் என்பதால் இருவரது பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு உதவவில்லை. கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலை பார்க்கவும் முடியாமல், உதவிக்கும் ஆளின்றி அந்தப் பெண் இப்போது தவித்து வருகிறார். திருமணத்துக்கு முன் செக்ஸ் என்பது எந்த ஆபத்திலும் கொண்டு போய் விடலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ஆணுக்கும் இது வேறுவிதமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்த முடியாது. இதனால் அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பலரும் இதையே கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இதனால் சமூகத்தில் நன்மதிப்புக் குறைவதுடன் வேலையில்  புரமோஷன் போன்றவையும் பாதிக்கப்படலாம்.

திருமணத்துக்கு முன்பாக உடலுறவு கொள்வதால் உடலில் ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படுகிறது. இது ஆண் – பெண் உடல் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்ணின் உடல் எடை கூடுதல், இடுப்பு பகுதி விரிவடைதல் இருக்கும். அங்கீகரிக்கப்படாத இந்த உடலுறவால் உண்டாகும் மன உளைச்சலால் முகம் பொலிவிழக்கும். விரைவில் பெண்கள் முதிர்ச்சியான தோற்றத்தை எட்டுவார்கள்.

இதுபோன்ற உறவின் காரணமாக பெண்ணுக்கு பிறப்புறுப்பு பகுதியில் நோய்த்தொற்று மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். திருமணத்துக்கு முன்பாக பதின் பருவத்தில் உடலுறவு கொள்பவர்கள் பெரும்பாலும் ஆணுறை பயன்படுத்துவதில்லை. இதனால் கரு உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். திருமணத்துக்கு முன்பாக கரு உருவாகி அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கருக்கலைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

திருமணத்துக்கு முன் உருவாகும் கருவைக் கலைக்க முறையான மருத்துவரிடம் செல்லாமல் மறைமுகமாக கருவைக் கலைக்கச் செல்வதும் பெண்ணுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும். கருக்கலைப்பின் போது கருப்பை முழுமையாக சுத்தம் செய்யப்படாமல் விட்டால் அதுவும் பிரச்னையை ஏற்படுத்தும். அதேபோல திருமணத்துக்கு முன்பாக உடலுறவு வைத்துக் கொள்பவர்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதும் பரவலாகி வருகிறது.

இதுபோல மாத்திரைகள் எடுப்பதால் தலைவலி, தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நரம்புப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது உடலுறவின் பின் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்துக்கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றனர். இதுவும் சில சமயங்களில் பெண்ணுக்கு  பிரச்னையை ஏற்படுத்தக் கூடும். திருமணத்துக்குப் பின் தாம்பத்யம் மற்றும் குழந்தைப் பேற்றிலும் இது சிக்கலையே உண்டாக்கும்.

போதைப் பழக்கம், போர்னோ படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ள ஆண்கள் செக்சுவல் விஷயங்களில் காட்டும் அதிக ஆர்வத்தில் திருமணத்துக்கு முன்பே இதுபோன்ற உறவுகள் வைத்துக் கொள்வதுண்டு. திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்வதால் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணத்துக்குப் பின் தன்னை நம்பி வந்த பார்ட்னரை இந்த நோய் தொற்றிக் கொள்ளலாம். திருமணத்துக்குப் பின் சில ஆண்கள் தன் மனைவியைத் தொடாமல் தவிர்க்கவும் இதுபோன்ற உறவுகள் காரணமாகிறது.

காமம் என்பது மிகவும் இனிமையான ஓர் அனுபவம். அந்த மகிழ்ச்சியை அவசர கதியில் அனுபவிக்க ஆசைப்பட்டு அவதியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதை இளம்தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். திருமணத்துக்குப் பின்பு காமத்தைத் தொடங்குவதும், தொடர்வதும்தான் முழுமையான ஆனந்தத்தையும் ஆத்மதிருப்தியையும் தரும். எனவே, திருமணத்துக்கு முன்பான செக்ஸ் உறவைத் தவிர்ப்பதே எல்லா விதங்களிலும் நல்லது’’.

ஆர்வம் ஏன் அதிகரிக்கிறது?

*முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திருமணத்துக்கு முன்பான செக்ஸ் நடவடிக்கைகளில் இருபாலரும் ஆர்வமாக இருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் ஆரம்பித்த இந்த கலாசாரம் இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

*பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் மீதான கவனிப்பும் கண்காணிப்பும் குறைந்துள்ளது. உயர்கல்விக்காக இளம் வயது பெண்களும் ஆண்களும் தங்கள் குடும்பங்களை விட்டுத் தனியாக வாழ்கின்றனர். இவர்கள் வேலைக்கு சென்றபின் தனியாக வாழும் சூழலும் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

*மிகச் சிறு வயதில் பூப்பெய்துதல் மற்றும் காலம் கடந்து திருமணம் செய்வதும் அதிகரித்துள்ளது. 10 வயதுக்குள்ளாக பருவம் அடைந்து விடுகின்றனர். படிப்பை  முடித்து வேலைக்கு சென்று, குடும்பக் கடமைகள் முடித்து திருமணம் செய்து கொள்வதற்கான வயதும் 30-க்கும் மேல் ஆகிவிட்டது.

*தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் உடலுறவு பற்றி சிறுவயதிலேயே தெரிந்து கொள்கின்றனர். பல்வேறு பாலியல் உபகரணங்களும் இணையதளத் திலேயே கிடைக்கிறது. செக்ஸை அனுபவிப்பதற்கான அனைத்து கடைகளும் எப்போதும் திறந்திருப்பதால் திருமணம் வரை காத்திருக்கும் மனக்கட்டுப்பாடு உடைந்து வருகிறது.

*வேலைக்குச் செல்லும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதும், தனது காலில் நிற்பதும் அவர்களது சுய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சிங்கிளாக வாழும் பெண்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். இதேபோல திருமணம் தாமதம் ஆகும்     ஆண்களும் திருமணத்துக்கு முன்பான செக்ஸ் பழக்கத்தை மேற்கொள்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடையே…இடையிடையே…!!(அவ்வப்போது கிளாமர்)
Next post இருமல் நிவாரணி வெற்றிலை!! (மருத்துவம்)