மழைக்கு சுவையான துவையல் வகைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 3 Second

சாதம், குழம்பு, கூட்டு எல்லாம் இருந்தாலும், துவையலும் இடம் பெற்றால் சாப்பாடு கூடுதல் சுவையுடன் இருக்கும். இந்த துவையல் வகைகள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் கலவை சாதமான எலுமிச்சை சாதம், புளி சாதம் அல்லது தேங்காய் சாதத்திற்கும் சுவையாக இருக்கும். அனைத்தும் உடலுக்கு நல்லது மற்றும் வயிற்றுக்கும் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கொடுக்கலாம். இந்த சுவையான துவையல்களை தோழிகளுக்காக விருந்து படைத்துள்ளார் சமையல் கலைஞர் வளர்மதி.

தேங்காய் துவையல்

தேவையானவை:

துருவிய தேங்காய் – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
பூண்டு – 2 பற்கள்,
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:


கடாயில் சிறிது எண்ணை சேர்த்து. தேங்காய், பச்ைச மிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய் நன்கு அரைபட்டதும், பூண்டு பற்களை கடைசியாக சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். மழைக்காலத்தில் சூடான சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.

எள் மாங்காய் துவையல்

தேவையானவை:

எள் – ½ கப்,
மாங்காய்த் துண்டுகள் – 1/2 கப்,
காய்ந்த மிளகாய் – 3,
பூண்டு பற்கள் – 2,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய் வறுத்து பிறகு மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். சுவையான எள் மாங்காய் துவையல் உளுந்தப்பருப்பு சாதத்திற்கு சிறந்த காம்பினேஷன்.

எள் துவையல்

தேவையானவை:

எள் – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 3, பூண்டு – 3 பற்கள்,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
புளி – நெல்லிக்காய் அளவு.

செய்முறை:

கடாயில் எள்ளை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். பிறகு அதே கடாயில் தேங்காய், மிளகாய், உப்பு, புளி சேர்த்து லேசாக வதக்கி ஆறவைத்து முதலில் அதனை தனியே அரைக்கவும், பின்னர் அதனுடன் எள் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும். எல்லா சாத வகைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

வேர்க்கடலை துவையல்

தேவையானவை:


வேர்க்கடலை – 1 கப்,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
பூண்டு – 2 பற்கள்,
உப்பு – தேவைக்கு,
காய்ந்த மிளகாய் – 4.

செய்முறை:


கடாயில் வேர்க்கடலையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு  தேங்காய் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி, அதனுடன் பூண்டு மற்றும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும். எலுமிச்சை சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

பீட்ரூட் துவையல்

தேவையானவை:

பீட்ரூட் துருவல் – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 3,
மிளகு – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கு,
புளி – நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பீட்ரூட் துருவலைச்  சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் வதக்கி வைத்துள்ள பீட்ரூட்டுடன் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். சாம்பார் அல்லது எலுமிச்சை சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

கொத்தமல்லித்தழை துவையல்

தேவையானவை:

கொத்தமல்லித்தழை – 100 கிராம்,
தேங்காய்த்துருவல் – ¼ கப்,
பச்சை மிளகாய்  – 3,
புளி – நெல்லிக்காய் அளவு,
பூண்டு – 3 பற்கள்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். பிறகு கடாயில் கொத்தமல்லி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், புளி, பூண்டு அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பிறகு ஆறியதும், அரைக்கவும். தேவைப்பட்டால் உளுத்தம் பருப்பை வறுத்து பிறகு இதனுடன் சேர்த்து அரைக்கலாம்.

சின்ன வெங்காயத் துவையல்

தேவையானவை:


சின்ன (சாம்பார்) வெங்காயம் – 1 கப் (உரித்தது),
காய்ந்த மிளகாய் – 3,
பூண்டு – 3 பற்கள்,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் வதங்கிய வெங்காயத்துடன் காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் அரைக்கவும். தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

பூண்டு துவையல்

தேவையானவை:

காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு உரித்தது – ½ கப்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு,
புளி – நெல்லிக்காய் அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பின்னர் காய்ந்த மிளகாய், உப்பு, புளி சேர்த்து வதக்கவும். ஆறியதும் அரைக்கவும். பூண்டு ஆரோக்கியத்தை சிறப்பாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இட்லிக்கு சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை துவையல்

தேவையானவை:

கறிவேப்பிலை – 1½ கப்,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
பூண்டு – 3 பற்கள்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு,
புளி – நெல்லிக்காய் அளவு.

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள், துருவிய தேங்காய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் எல்லாப் பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். இதனுடன் தேவைப்பட்டால் உளுந்தை வறுத்து சேர்த்து அரைக்கலாம். சிறிதளவு கொத்தமல்லியும் உடன் சேர்த்து வதக்கி அரைத்தால் வாசனையாக இருக்கும். தோசை, இட்லிக்கு சுவையாக இருக்கும்.

பருப்பு துவையல்

தேவையானவை:

கடலைப்பருப்பு – ½ கப்,
காய்ந்த மிளகாய் – 3,
பூண்டு – 2 பற்கள்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் தேவையான – அளவு,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் வறுத்தப் பொருட்களுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியாக பூண்டை சேர்த்து ஒன்று இரண்டாக அரைக்க வேண்டும். மழைக்காலத்தில் சூடான ரசம் சாதத்திற்கு இந்த துவையல் பெஸ்ட் காம்பினேஷன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)
Next post கல்யாணத்துக்கு ரெடியா?!(அவ்வப்போது கிளாமர்)