வானவில் சந்தை!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 16 Second

மோட்டார் வாகனக் காப்பீடு – சில குறிப்புகள்

இந்திய அரசாங்கத்தின் 2015 அறிக்கை ஒன்று நாளொன்றுக்கு 1374 பேர் விபத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் அதில் 400 பேர் இறந்து  போகிறார்கள் என்றும் சொல்கிறது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் வாகனத்தில் இல்லாத மூன்றாம் நபர்களே.  சாலைகளில் நடந்து செல்பவர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் போன்றோர். இது போல பாதிக்கப்படும் மூன்றாம் நபர்களின் உடலுக்கோ  உடமைக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து நிதி இழப்பீடு கிடைப்பதற்கு பாதிக்கப்பட்ட நபர்களோ அவரது  குடும்பத்தாரோ வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கிறது. இதில் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனம் காப்பீடே  செய்யப்படாமல் இருந்தால் எந்த நிவாரணமும் கிடைக்காது. இதனாலேயே மூன்றாம் நபர் காப்பீடு வாகனங்களுக்கு கட்டாயம் என்று  மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிறது.

இந்தியாவில் ஓடும் 40-50%  வாகனங்கள் காப்பீடு செய்யப்படாமலேதான் சாலைகளில் விரைகின்றன. செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து,  கார்களுக்கு மூன்று வருடங்களும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஐந்து வருடங்களும், மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என்று சுப்ரீம்  கோர்ட் ஆணையிட்டிருக்கிறது. இது வாகனங்களின் ஆரம்ப விலையைக் கூட்டினாலும், ஒரு வகையில் தேவைதான். ஏனென்றால், வாகனக்  காப்பீடு மட்டும் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்படவில்லையென்றால், பெரும்பாலானோர் காப்பீடே செய்ய மாட்டார்கள். ஒரு வருடக்  காப்பீட்டுத் தொகை குறைவுதானென்றாலும் பலரும் மறதியினாலோ அல்லது அலட்சியத்தினாலோ செய்யாமல் விடுவது இங்கு இயல்பு.  இந்த புதிய சட்டம் அதை விலக்குகிறது. ஆனால் பிரச்னை அதில் இல்லை. வாகன விற்பனையாளர் ஆரம்ப விலையைக் குறைக்க  எண்ணி, முதல் வருடத்தைத் தவிர்த்து அடுத்த மூன்று வருடங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டை மட்டுமே செய்கின்றனர். இது ஒவ்வொரு  வருடமும் பொறுப்பாக முழுமையான காப்பீடு செய்பவர்களையும் சோம்பலில் தள்ளிவிடும்.

முழுமையான காப்பீடு (Comprehensive Insurance) என்பது வாகனத்திற்கு ஆகும் பாதிப்பையும் (own damage), மூன்றாம் நபர்  காப்பீட்டையும் (Third Party Insurance) உள்ளடக்கியது. மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் வைத்திருந்தால், வாகனத்திற்கு ஏற்படும்  பாதிப்புகளுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது. அதுவும் வாகனத்தின் ஆரம்ப வருடங்களில் அதன் சந்தை மதிப்பு அதிகம் இருக்கும். வாகனம்  முழுமையாக சேதமடைந்தாலோ அல்லது திருடு போனாலோ இழப்பு பெரிதாக இருக்கும். வாகனம் வாங்குவோர் மிகவும் கவனமாக  முழுமையான காப்பீடு செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு விற்பனையில் விற்பவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டுமோ, அதற்குச் சமமாக வாங்குபவருக்கும் வேண்டும். அதுவும் நிதிப்  பொருட்களை வாங்கும்போது. உள் விசயங்கள் தெரியாது என்பது சரியான ஒரு காரணம் அல்ல. ஐந்து லட்சத்திற்கு கார் வாங்கும்போது  கேட்கும் கேள்விகளில் சிறிதளவாவது ஒரு ஐந்து லட்சத்தை முதலீடு செய்யும் போது கேட்பதில்லை. அதிலும் காப்பீடு எடுப்பதை  ஒப்பிட்டால் முதலீடு செய்யும் போதுள்ள கவனம் பரவாயில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதே பலரும் கடைபிடிப்பது.  காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம்.

* காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணி பற்றி. கடந்த பதினைந்தாண்டுகளில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு  நிறுவனங்கள் தோன்றியுள்ளன. சில மறைந்துமுள்ளன. பொதுவாக காப்பீட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய தொழில் பின்புலம்  உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். நிதிச் சேவை சாராத தொழில்காரர்களும் காப்பீட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார்கள். இதற்காக  இந்நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார்கள். பெரும்பாலான தனியார் காப்பீட்டு  நிறுவனங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பங்காளி இருக்கிறார் (TATA – AIGயில் AIG போல). நிதி ஆலோசகரிடம் இந்த காப்பீட்டு  நிறுவனங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

*  கோரிக்கைத் தீர்வுகள் (Claims Settlement). காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைத்தீர்வு வரலாறு அதைப் பற்றிய பல உண்மைகளைச்  சொல்லும்.  எவ்வளவு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன? நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் சதவிகிதம் போன்றவை  முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. காப்பீடு விற்பவரிடம் தகவல்கள் இல்லையென்றால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம்  ஆலோசனை கேட்கலாம்.

*  காப்பீடு என்பது வாடிக்கை யாளருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் ஒரு பக்கம் (நிறுவனம்) நல்ல  தெளிவோடும் மறு பக்கம் (வாடிக்கையாளர்) தெளிவில்லாமலும் ஒப்பந்தம் செய்வது நல்லதில்லை. அதுவும் வாடிக்கையாளருக்கு.  விண்ணப்பப்படிவம் முழுவதையும் படித்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பின்பு, தானே நிரப்புதல் நலம். விற்பவர் நீட்டிய இடத்தில்  கையெழுத்து போடுவது வாடிக்கையாளருக்கு நல்லதல்ல.

*  காப்பீட்டுப் பத்திரம் (Policy) வந்த பிறகு அதிலுள்ள விசயங்கள் முழுவதையும் படித்துத் தெளிவது முக்கியம். நீங்கள் நினைத்தபடியே  ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீங்கள் தான். புரியாத விசயங்களை நிதி ஆலோசகரிடம் கேட்பது நலம். உங்களுக்குத்  தேவைப்படாத ஒன்றுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.

*  கோரிக்கை நேரத்தில் செய்ய வேண்டியது பற்றி. இதைப் பற்றி கோரிக்கை எழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரது  நினைப்பு. என்ன ஒரு அபத்தம். ஒரு விபத்து என்று வைத்துக் கொண்டால் நாமே கோரிக்கை எழுப்பும் நிலையில் இருக்க மாட்டோம். நமது  குடும்ப உறுப்பினர்களிடம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன்பே தெளிவாகப் புரிய வைத்து விட வேண்டும். அதற்கு  முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.                            

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post ஆடி ஷாப்பிங்!! (மகளிர் பக்கம்)