மகா நடிகை சாவித்திரியின் பிரதிபிம்பம் வாணிஸ்ரீ!! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 4 Second

60 – 70களில் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் தனக்கேயுரிய தனி பாணியாக அவர் வரித்துக்கொண்ட ஸ்பெஷல் சேலை கட்டும் பாணி, அதற்கேற்ற மாட்சிங் பிளவுஸ், அதிலும் அந்தத் தனித்துவமான முழங்கையைத் தாண்டிய நீளமான கை வைத்த ரவிக்கை, வளையல், பொட்டு, பூ என எல்லாம் ஒரே நிறத்தில் அணிவது என்ற ’புதுமை’யையும் புகுத்தியவர். அதை இயக்குநர்கள், காஸ்ட்யூம் டிசைனர் உட்பட அனைவரையும் ஏற்க வைத்தவர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்த விதம்விதமான ஹேர் ஸ்டைல், விமானப் பணிப்பெண்ணை நினைவுறுத்தும் அழகான கொண்டைகள் என்று பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களையும் அது பற்றிப் பேச வைத்தவர்.

அதிலும் குறிப்பாக புடவை கட்டும் அழகு, அவரது கம்பீரமான தோற்றம், தொனி பற்றி கதாநாயக நடிகர்கள் சிலரே வியந்து பேசியிருக்கிறார்கள். இந்த அலங்காரங்கள் அனைத்தையும் கடந்து தன் அற்புதமான நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர்; நடிகையர் திலகம் சாவித்திரியின் நடிப்புக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர் நடிகை வாணிஸ்ரீ . ஆந்திரப் பிரதேசம் நெல்லூரில் வெங்கடாசல மூர்த்தி, ராதா ராணி தம்பதியரின் இரண்டாவது மகளாக 1948, ஆகஸ்ட் 3ஆம் தேதி பிறந்தவர் ரத்னகுமாரி. அதுதான் வாணிஸ்ரீயின் இயற்பெயர். மிக இளம் வயதிலேயே தந்தையார் காச நோய்க்கு ஆட்பட்டார்.

தன் மகள்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பது அவரது இறுதி விருப்பம். ஆம், மிக விரைவில் அவர் அந்த நோய்க்குப் பலியானார். விவசாயம் சார்ந்த குடும்பம் என்பதால், நிறைய ஆடுகளை வளர்த்துப் பால் பீய்ச்சி விற்று மகள்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்பி ஆந்திர மகிளசபா பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார் தாயார். ரத்னகுமாரிக்கு படிப்பை விட அங்கு கற்பிக்கப்பட்டு வந்த கலைகளின் மீது நாட்டம் மிகுந்திருந்ததால், படிப்புடன் சேர்த்து பரத நாட்டியத்தையும் முனைப்புடன் கற்றார்.

தேடி வந்து அழைத்த திரையுலக வாய்ப்பு 13 வயதை எட்டிய நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுவிழா கலை நிகழ்ச்சியில் நடனமாடினார் ரத்னகுமாரி. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் நாகையா மற்றும் கன்னடத் திரைப்பட இயக்குநர் ஹுனசூரு கிருஷ்ணமூர்த்தி இருவரும் மேடையில் நடனமாடிய பெண்ணைப் பார்த்து அதிசயித்துப் போனார்கள். நடிகை சாவித்திரியை நினைவூட்டும் தோற்றத்துடன் அற்புதமாக நடனமாடிய அந்தக் கருப்பு வைரத்தை அழைத்துப் பாராட்டியதுடன், ‘நாங்கள் அடுத்துத் தயாரிக்கவிருக்கும் கன்னடப் படத்தில் நடிக்க விருப்பமா?’ என்றும் கேட்க எதிர்பாராமல் வந்த இந்த அழைப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சிப்பெருக்கில் எவருடைய சம்மதத்தையும் கேட்க வேண்டுமென்று தோன்றாமல் உடனே அந்த அழைப்பை ஏற்று சம்மதமும் சொல்லிவிட்டார் ரத்னகுமாரி. அதன் பின்னரே அம்மாவின் எதிர்ப்பைச் சமாளித்து அவருடைய சம்மதத்தையும் பெற்றுள்ளார். இப்படித்தான் அவரே எதிர்பாராமல் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதன்முதலாக ரத்னகுமாரியைத் தேடி வந்தது.

ஹுனசூரு கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு, எழுத்து மற்றும் தயாரிப்பு இயக்கத்தில், கன்னடம் தெரியாவிட்டாலும் வசனங்களை தெலுங்கில் எழுதி மனப்பாடம் செய்து பேசி படத்தின் நாயகியாக நடித்தார். 1964 ஆம் ஆண்டில் வெளியான ‘வீர சங்கல்பா’ கன்னடத் திரைப்படத்தின் மூலம் ரத்னகுமாரியின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. குமாரி என்ற பெயரில்தான் அவர் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் தாய்மொழியான தெலுங்கிலும் ரத்னகுமாரி எனவே அறியப்பட்டார். தெலுங்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறிய வேடங்களே அவருக்கு வாய்த்தன. கிடைத்த வாய்ப்புகளும் நகைச்சுவை நடிகையாக, நாயகனின் தங்கையாக சற்றே முன்னேறி இரண்டாவது நாயகியாக என்று அமைந்தன.

வாணிஸ்ரீ உருவானார்… வாய்ப்பு தட்டிப் போனது…

இந்நிலையில் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், நடிகர் எஸ்.வி.ரங்காராவ் இணைந்து ஸ்ரீவாணி பிலிம்ஸ் என்ற பெயரில் தெலுங்கில் கூட்டுத் தயாரிப்பாகப் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். அந்தப் படத்தில் நடிப்பதற்காக ரத்னகுமாரிக்கு அழைப்பு வந்தது. எஸ்.வி.ரங்காராவ், ரத்னகுமாரி என்ற பெயரை மாற்றித் தங்கள் பட நிறுவனத்தின் பெயரிலேயே வாணிஸ்ரீ என்று பெயர் சூட்டினார். அந்தப் பெயரே இறுதிவரை திரையுலகில் நிலைத்தது. ஆனால், அந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் வாணிஸ்ரீக்கு கிடைக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

சிரிக்கும்போது மேல்வரிசைப் பற்களில் ஒரு தெற்றுப்பல் இருப்பதைப் பார்த்து அதை நீக்கி விட்டு வருமாறு மெய்யப்பச் செட்டியார் சொல்லவே வாணிஸ்ரீ இப்படத்திலிருந்து விலக நேர்ந்தது. பின்னாளில் தன்னுடைய பிரபலமான ‘பக்த பிரகலாதா’ (தமிழ், தெலுங்கு), ‘உயர்ந்த மனிதன்’ போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை வாணிஸ்ரீக்கு வழங்கினார் ஏ.வி.எம்.
என்பதும் கூடுதல் சிறப்பு.

தமிழில் ஆரம்ப காலத்தில் நடித்த பெரும்பாலான படங்களில் இரண்டு நாயகியரில் ஒருவராகவே நடித்துள்ளார் வாணிஸ்ரீ. 1970 வரை இந்த நிலை தொடர்ந்தது என்றாலும் தனித்தன்மை வாய்ந்த தன் நடிப்பாற்றலால் தென்னிந்திய மொழிகளின் டாப் ஸ்டார் நாயகியாகக் கொண்டாடப்பட்டார். சற்றே பூசினாற் போலிருந்த உடல் வாகு, நடிகையர் திலகம் சாவித்திரியை நினைவூட்டும் முகத்தோற்றம் இவையெல்லாம் சேர்ந்து அனைவராலும் ஜூனியர் சாவித்திரியாகவே பார்க்கப்பட்டார் வாணிஸ்ரீ. ஆனால், அப்படி ஒரு சாயல் தனக்கு வந்து விடக்கூடாது என்பதில் உறுதி எடுத்துக்கொண்டு, உடல் எடையை வெகுவாகக் குறைத்து ‘ஸ்லிம் பியூட்டி’யாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

இயக்குநர்களின் நாயகியாக ஜொலித்தவர்…

தமிழின் மிகப்பெரும் வெற்றிப் படங்களான ‘கை கொடுத்த தெய்வம்’ தெலுங்கில் ‘மறப்புராணி கதா’ என மாறியபோது சாவித்திரி ஏற்று நடித்த வெகுளிப்பெண் கோகிலா வேடத்தை ஏற்று அதற்கு நியாயம் செய்தவர். அதுவரை தெலுங்குப் படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தவருக்கு இந்தப் படம்தான் பிரதான நாயகியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. அதேபோல் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவருடைய புகழ் பெற்ற நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்’ தெலுங்கில் ‘சுக துக்காலு’ என்று தயாரானபோது பாலசந்தரே அதை இயக்கினார். ஜெயலலிதா ஏற்று நடித்த நாயகி வேடத்தை ஏற்றுச் சிறப்பாகச் செய்தார் வாணி. இவ்விரு படங்களுமே 1967ல் வெளியாயின. அவரது நடிப்புத் திறனால் ஈர்க்கப்பட்ட கே.பாலசந்தர் ‘தாமரை நெஞ்சம்’, ‘நான்கு சுவர்கள்’, ‘வெள்ளி விழா’ போன்ற படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பளித்துள்ளார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘தபால்காரன் தங்கை’, ‘ஆதி பராசக்தி’, ‘குலமா குணமா?’ படங்களில் நடித்துள்ளார்.கன்னடத்தின் புகழ் பெற்ற இயக்குநரான புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ‘டீச்சரம்மா’, தெலுங்கில் ‘இத்தரு அம்மாயிலு’ அதன் தமிழ் வடிவம் ‘இருளும் ஒளியும்’ என பல படங்களில் நடித்துள்ளார் வாணிஸ்ரீ.

நடிகையர் திலகம் சாவித்திரி முதன்முதலில் தன்னுடைய தயாரிப்பு, இயக்கத்தில் 1969ல் வெளியான ‘குழந்தை உள்ளம்’ படத்தில் வாணிஸ்ரீயைத்தான் நாயகியாக நடிக்க வைத்தார். இந்தியிலிருந்து தமிழுக்கு வந்த ‘கீதா அவுர் சீதாவில் ஹேமமாலினி ஏற்ற இரட்டை வேடத்தை ‘கங்கா மங்கா’ என தெலுங்கிலும் ‘வாணி ராணி’ என தமிழிலும் ஏற்று நடித்தார். இந்தியாவெங்கும் திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்த ‘ஆராதனா’ தமிழில் ‘சிவகாமியின் செல்வன்’ என மாறியபோது ஷர்மிளா தாகுர் ஏற்ற வேடத்தையும் வாணிஸ்ரீ ஏற்றார். நர்கீஸுக்குப் பெரும் புகழையும் விருதுகளையும் பெற்றுத் தந்த ‘மதர் இந்தியா’ புண்ணியபூமி’ யானபோது அதிலும் நர்கீஸ் வேடத்தை ஏற்றுச் சிறப்பித்தவர் வாணிஸ்ரீ.

எந்த வேடத்திலும் பொருந்தியவர் 70களில் சிவாஜி கணேசன் படங்களில் தனித்த நாயகியாகப் பல படங்களில் நடித்துள்ளார். இருவரும் இணைந்து பத்து படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வசந்த மாளிகை’ இந்த ஜோடியின் வெற்றிக்குப் பெருமை சேர்த்த மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாகும். தெலுங்கின் மூல வடிவமான ‘பிரேம் நகர்’ நாகேஸ்வர ராவ் – வாணிஸ்ரீ நடிப்பில் சாதனை படைத்தது. ‘வசந்த மாளிகை’ யும் அவ்வாறே வசூலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியது.

அமைதியே வடிவான வேடங்கள் என்றாலும் அதிரடி நாயகியாக, வாயாடிப் பெண்ணாக, துறுதுறுப்பு மிக்கவராக, புராணப் பாத்திரங்கள் என எந்த வேடம் என்றாலும் நடிப்பில் வெளுத்து வாங்கினார். ’கங்கா மங்கா’, ‘இத்தரு அம்மாயிலு’, ‘செக்ரட்டரி’ அதன் தமிழ் வடிவமான ‘வாணி ராணி’, ‘இருளும் ஒளியும்’ என இரட்டை வேடங்களில் மிக அதிகமான படங்களில் நடித்தவர். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் என அப்போதைய நாயகர்கள் அனைவருடனும் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ஜக்கையா, கிருஷ்ணம் ராஜு, கிருஷ்ணா, ஷோபன் பாபு, முரளி மோகன், சந்திரமோகன் மற்றும் கன்னடத்தில் ராஜ்குமார் என முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடப் படங்களில் நடித்தபோதும் தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்துள்ளார். அந்தந்த மொழி சார்ந்தவர்கள் வாணியை தங்கள் மொழியைச் சார்ந்தவராகவே எண்ணிப் பெருமிதம் கொண்டார்கள். சிவாஜி கணேசன் அவரை ‘தமிழ் நாட்டுப் பெண்தானே’ என வினவியுள்ளார். அதேபோல கன்னட நடிகர் ராஜ்குமாரும் அவரை கன்னடப் பெண் என்று நினைத்துப் பேசியுள்ளார். அந்த அளவுக்கு வாணிஸ்ரீயின் உச்சரிப்பு எந்த மொழியானாலும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது.

1977ல் மலையாளத்தில் பிரேம் நஸீர், ஜெயபாரதி நடிப்பில் வெளியான ‘அனுக்ரகம்’ படத்தை 1978ல் இந்தியில் ‘கோண்டுரா’ என்றும் தெலுங்கில் ‘அனுக்ரகம்’ என்றும் ஒரே நேரத்தில் இயக்கினார் ஷ்யாம் பெனகல். இப்படத் தயாரிப்பிலும் இணைந்து செயல்பட்டதுடன் அனந்த நாக், ஸ்மிதா பாட்டீல் இவர்களுடன் வாணிஸ்ரீயும் இணைந்து நடித்தார்.என்றும் நினைவில் நிறுத்தும் பாடல்கள் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம் பெற்ற மூடுபனியினூடே ஆடிப் பாடும் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’…  பாடல் ஒலிக்கும்தோறும் பி.சுசீலாவுடன் இணைந்து வாணிஸ்ரீயும் நம் நினைவிலாடுவார். இந்தப் பாடலுக்கான தேசிய விருதையும் சுசீலா பெற்றார். பாடலுக்காக இந்தியாவில் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட முதல் விருதும் இதுதான்.

‘இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு’, ‘திருமகள் தேடி வந்தாள்’, ‘கலைமகள் கைப்பொருளே’, ‘என் ராஜாவின் ரோஜாமுகம்’, ‘அடிப்போடீ… பைத்தியக்காரீ’ என்று ஏராளமான பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் வழக்கமாக அமைதியாகப் பாடும் சுசீலா, ‘நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்’ என்று மாறுபட்டுப் பாடியதும் குறிப்பிடத்தக்கது.  79ல் வெளியான ‘நல்லதொரு குடும்பம்’ தமிழில் வாணிஸ்ரீ நடித்த இறுதிப்படம். அவருக்குப் பின் ஜெயசுதா, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி, ராதிகா, சுஜாதா, சரிதா என அடுத்த சுற்றுக்கான இளம் நாயகிகள் பலரும் களத்தில் இறங்கியதால் வாணிஸ்ரீக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன.

1979ஆம் ஆண்டில் தங்கள் குடும்ப மருத்துவரான கருணாகரனை மணந்து கொண்டு படங்களில் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். மகள் அனுபமா, மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்திக். இருவருமே மருத்துவர்கள். உடன்பிறந்தவர்களாலேயே சொத்துக்கள் பறிபோனதால், மிகுந்த மனவலிமையுடன் 12 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் அதையெல்லாம் மீட்டார். மீண்டும் 1989ல் தெலுங்குப் படங்களில் குணச்சித்திரம், வில்லி வேடங்கள் ஏற்று நடிக்கத் தொடங்கினார்.  இரண்டாவது பிரசவத்துக்குப் பின் ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள், கடுமையான தைராய்டு பிரச்சனைகளால் உடல் மிகவும் பருத்துப் போனது.    

2020ம் ஆண்டு மகன் தூக்கத்திலிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். வயதான காலத்தில் மகன் உடன் இருப்பான் என்ற நம்பிக்கை எல்லா பெற்றோரையும் போல அவருக்கும் இருந்திருக்கும். ஆனால், புத்திர சோகத்துக்கு ஆளாவது எந்தத் தாய்க்கும் நேரக் கூடாத பெருந்துயரம். வாணிஸ்ரீ அத்துயரிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வர வேண்டும். விருதுகள் பல பெற்றிருந்தாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் மகா நடிகையாகவும் கலாபிநேத்ரியாகவும் மனத்துக்கு நெருக்கமானவராக இடம் பிடித்துள்ளார். கண்களை சுருக்கிக் கள்ளமில்லாமல் கலகலவென வாய் விட்டுச் சிரிக்கும் அந்த அழகுத்தோற்றம் மட்டுமே நம் மனங்களில் நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும்.  

வாணிஸ்ரீ நடித்த திரைப்படங்கள்

நம்ம வீட்டு லட்சுமி, காதல் படுத்தும் பாடு, காவேரி மன்னன், தங்கத் தம்பி, அபூர்வப் பிறவிகள், பக்தப் பிரஹலாதா, பவானி, காதலித்தால் போதுமா?, தாமரை நெஞ்சம், டீச்சரம்மா, கண்ணன் என் காதலன், நேர்வழி, உயர்ந்த மனிதன், மனசாட்சி, அன்னையும் பிதாவும், குழந்தை உள்ளம், கன்னிப் பெண், அத்தை மகள், ஆயிரம் பொய், நிறைகுடம், பொற்சிலை, தபால்காரன் தங்கை, சங்கம், எதிர்காலம், தலைவன், ஆதிபராசக்தி, நான்கு சுவர்கள், குலமா குணமா, இருளும் ஒளியும், வெள்ளி விழா, வசந்த மாளிகை, அவசரக் கல்யாணம், தெய்வக் குழந்தைகள், சிவகாமியின் செல்வன், வாணி ராணி, ஊருக்கு உழைப்பவன், ரோஜாவின் ராஜா, தாலியா சலங்கையா?, இளைய தலைமுறை, காஞ்சி காமாட்சி, புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம், வாழ்க்கை அலைகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நுரையீரல் நலத்தை உறுதி செய்வோம்!(மருத்துவம்)
Next post உங்கள் குழந்தை மேல் நம்பிக்கை வையுங்கள்!(மகளிர் பக்கம்)