வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 40 Second

நதியை கடந்தபின் சாலை இரண்டாகப் பிரிந்தது. அந்த சாலையில் நான் இதுவரை பயணம் செய்யாத பாதையில் தொடர்ந்தேன்” என்ற வரிகள் நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது இந்நாள்வரை நாம் அறியாத பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

லாக்கர் பயன்பாடு

பொதுவாக பாதுகாப்புப் பெட்டகம் என்னும் லாக்கரில் விலையுயர்ந்த பொருட்களை வைக்கிறோம். லாக்கரினுள் காற்றோட்டம் இருக்காது. வெள்ளிப் பாத்திரங்கள் கருத்துப் போகலாம். நகையில் பதிந்துள்ள கற்கள் மங்கலாகலாம். அந்தப் பொருட்கள் நிறம் மாறாமல் அதாவது மங்கலாகி விடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதற்கான வழிமுறைகளைக் காண்போம்.  

*லாக்கரில் வெள்ளிப் பாத்திரங்களை வைப்பதற்குமுன் அவற்றை வெள்ளைத் துணியால் சுற்றி அதன்பிறகு வைக்க வேண்டும்.

*அதேபோல் நகைகளை மெல்லிய வெண்மையான காகிதத்தினுள் அதாவது பட்டர் பேப்பரில் (Butter Paper) வைத்தபின் அதனை நகைப் பெட்டியில் வைத்து பிறகு லாக்கரில் பாதுகாப்பாக வைக்கவேண்டும்.  

*சாட்டின் (Satin) துணியில் சுற்றி வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் நகையில் உள்ள கற்கள் மங்கலாகிவிடும்.

*எல்லாவற்றையும் விட லாக்கருக்குள் என்ன பொருட்களை வைக்கிறோம் என்பதை நாம் ஒரு புத்தகத்தில் குறித்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் நம் வீட்டில் உள்ளவர்களிடமும் லாக்கர் எண், வங்கியின் முகவரி, அதில் வைத்துள்ள பொருட்கள், பத்திரங்கள் ஆகியவை குறித்து தெரிவிப்பது நல்லது.  
 
*சொத்துப் பத்திரங்கள், பிற பாதுகாக்கவேண்டிய ஆவணங்களை துணிப்பைகளிலோ அல்லது காகித உறைகளிலோ தனித்தனியாக வைக்கவேண்டும். கரையான் அரித்த காகிதங்களை வைக்கக்கூடாது. நமது கண்ணுக்குத் தெரியாமல் அந்த ‘செல்’ உயிரினம் லாக்கரினுள் சென்றுவிட்டால் ஆவணங்களைத் தின்றுவிடும்.

*எளிதில் தீப்பற்றக்கூடிய  பெட்ரோல், டீசல், கெரசின், தீப்பெட்டி, லைட்டர், பர்ப்யூம்கள் போன்றவற்றை லாக்கரில் வைக்கக் கூடாது. கெட்டுப்போகும், அழுகும் உணவுப்பொருட்களை லாக்கரில் வைக்க வேண்டாம்.

லாக்கரில் உள்ள பூட்டின் அமைப்பானது அங்கீகரிக்கப்பட்ட வங்கி அலுவலர் முதலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தின் அனைத்து லாக்கர்களுக்குமாக அவர் வைத்துள்ள ஒரு சாவியைப் பயன்படுத்தி அதன்பிறகு நம் லாக்கருக்காக வங்கி நமக்கு வழங்கியுள்ள சாவியைப் போட்டுத் திறந்தால்தான் லாக்கரின் கதவைத் திறக்க
முடியும் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

லாக்கர் அறைக்குள் நாம் சென்று நமது லாக்கரைத் திறந்து பொருட்களை / ஆவணங்களை எடுத்து அல்லது வைத்தபிறகு நமது பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டோமா என்று உறுதி செய்துகொண்டபின் கதவைப் பூட்டவேண்டும். பூட்டிய பிறகு எதையோ உள்ளே வைக்கவோ அல்லது உள்ளிருந்து எடுக்கவோ மறந்து விட்டோமென்று மீண்டும் திறக்கவேண்டும் என்றால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அலுவலர் தனது சாவியால் கதவைத் திறந்த பிறகு தான் நாம் மறுபடியும் லாக்கரைத் திறக்கமுடியும்.  

வங்கியில் பணமாக எவ்வளவு செலுத்தலாம் நமது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கலாம்  என்னும் கேள்வி பணமிருப்பவர்களிடம் மின்னுகிறது. நமது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இருக்கலாம்.

10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவருடைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டாலோ, செலவு செய்யப்பட்டாலோ, அந்தக் கணக்கின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கணக்கினை நிர்வகிக்கும் வங்கியின் மூலம் பெற்று கணக்கு வைத்துள்ள நபர் உரிய வருமானவரி செலுத்தியுள்ளாரா என்றும் அவரது வருமானவரிக் கணக்கினைத் தாக்கல் செய்துள்ளாரா என்று மதிப்பீடு செய்யும். மேலும் கணக்கின் சேமிப்பிற்காக வங்கியிடமிருந்து சேமிப்பாளர் பெறும் வட்டித்தொகைக்காக  உரிய வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்று வருமான வரித்துறை ஆராயலாம்.  ரூ 10 லட்சத்திற்கு மேல் பணத்தாளாக வங்கியில் கணக்கில் செலுத்தினாலோ அல்லது கணக்கிலிருந்து பணத்தாளாக எடுத்தாலோ அந்த வருவாயின் அல்லது செலவினத்தின் விவரத்தை கடிதம் மூலம் வங்கிக்குத் தெரிவிக்கவேண்டும்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் பணமாக எடுத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் (2%) வங்கி வரி பிடித்தம் செய்து வருமானவரி அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டும். (Section  194N)  ஒருவர் இரண்டு வங்கிகளிலும் ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் கணக்கு வைத்திருந்தால் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக ரூ.20 லட்சம் என்ற உச்சவரம்பு கணக்கிடப்படும். ஒவ்வொரு அலுவலகத்திலும் தனித்தனியாக ரூ.20 லட்சம் பணமாக ஒரு வருடத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு வரிப்பிடித்தம் இல்லை. வருமானவரிச் சட்டத்தின்படி ரூ.20000/- த்திற்கும் மேல் உள்ள செலவுகள் காசோலை மூலமாகவோ பணத்தாள் வழங்காத பரிவர்த்தனையாகத்தான் செய்யவேண்டும்.  ஒரு வங்கிக்  கிளையில் நாம் வைத்துள்ள கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தலாம், எவ்வளவு பணம் ஒருநாளைக்கு எடுக்கலாம் என்பதும், ஏ.டி.எம் என்னும் தானியங்கி இயந்திரம் மூலம் ஒருநாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம், பணம் வைப்பு இயந்திரத்தின் (Cash  Deposit  Machine) மூலம் எவ்வளவு பணம் ஒருநாளைக்கு கணக்கில் செலுத்தலாம் என்பதும் துல்லியமாக நாம் தெரிந்துகொள்ள அந்தந்த வங்கிக் கிளையை அணுகிக் கேட்கவேண்டும். ஒவ்வொரு வங்கியும் இதற்கான விதிகளை தனித்தனியாக வகுத்துள்ளன.  ஒரு வங்கியின் கிளையில் கணக்கு வைத்துக்கொண்டு வேறு வங்கியின் ஏ.டி.எம்மில் நாம் பணம் எடுப்பதற்கான கட்டணமும் அந்தந்த வங்கியே நிர்ணயிக்கின்றன. 

சேமிப்புக் கணக்குக்கு வரி உண்டா?

சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வருமான வரி கிடையாது. ஆனால் வருமான வரி விதி எண் 80 TTA வின்படி சேமிப்புக்கணக்கில் நாம் இருப்பு வைத்துள்ள பணத்திற்குக் கிடைக்கும் வட்டி ஒரு வருடத்திற்கு ரூ. 10000/- த்திற்கும் அதிகமாக இருந்தால் அதற்கு வருமான வரி அட்டவணைப்படி வரி செலுத்தவேண்டும்.  வங்கி சேமிப்பு கணக்கில், ரூ. 2,50,000 உள்ளது என்றால் ஒரு ஆண்டுக்குப் பெறும் வட்டி, வட்டி விகிதம் 4% என்றால், ரூ.10000/-.  இந்த வட்டிக்கு வரி கட்டத் தேவையில்லை.  சேமிப்புக் கணக்கில் ரூ.300000/- உள்ளது எனில் ரூ.12,000/- வட்டியாக வங்கி வரவு வைப்பதால், ரூ.10000/- த்திற்கு வரிவிலக்கு போக ரூ.2000/- த்திற்கு வருமானவரி செலுத்தவேண்டும்.

வருமானத்தில் இந்த 2,000/- ரூபாய் சேர்க்கப்பட்டு வருமான வரி வரம்புக்கு ஏற்றவாறு  வரி விதிக்கப்படும்.  ஒருவர் எத்தனை சேமிப்புக் கணக்குகள் வேண்டுமானாலும் துவக்கலாம். அனைத்தும் ஒரே வருமான வரி எண்ணுடன்தான் இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படும்போது அனைத்து சேமிப்புக் கணக்குகளிலிருந்து பெறும் மொத்த வட்டி ரூ.10000/-த்தைத் தாண்டினால் ரூ.10000/- த்திற்குமேல் உள்ள வட்டி வருமானத்திற்கு வரி செலுத்தவேண்டும்.  

சிலர் சேமிப்புக்கணக்கில் அதிக பணம் இருக்கவேண்டாம். அவ்வாறு பணம் சேரும்போது சேமிப்புக் கணக்கைவிட அதிக வட்டிதரும் நிலைவைப்புக் கணக்கில் மாற்றவேண்டும் என்பர்.  சேமிப்புக் கணக்கில் குறைந்த பட்சமாக ரூ.25000 இருந்தால் போதும். அதற்குமேல் சேரும் தொகையை ரூபாய் ஆயிரத்தின் மடங்குகளில் நிலைவைப்புக்  கணக்கில் தானாகவே மாற்றும் வசதி (Flexi  Deposit) சில வங்கிகளில் உள்ளது. இதன் மூலம் நாம் பெறுகின்ற வட்டி வருவாய் அதிகரிக்கும். இத்தகைய கணக்கு வைத்திருந்தால் வங்கிகள் இலவச கடனட்டை, காப்புறுதி  ஆகிய  சலுகைகளை வழங்குகின்றன.

வருமான வரித்துறை அடையாள எண் (PAN)

ஒரு நபர் வங்கிக் கணக்கு அல்லது பிற பரிவர்த்தனைத் தடங்களின் மூலம் பிறரிடமிருந்து பெறும் பணம் அல்லது பிறருக்கு வழங்கும் பணம் மற்றும் அவரின் வருமானம் ஆகியவற்றை வருமான வரித்துறை கண்காணிக்கவும், வரி செலுத்த, அதிகமாகச் செலுத்திய வரியை சில அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளின்படி திரும்பப்பெறல், வரித்துறையுடன் தகவல் தொடர்பு ஆகியவற்றுக்கு வருமான வரி அடையாள எண் அட்டை என்னும் பான்கார்டு தேவைப்படுகிறது.

வங்கியில் கணக்குத் துவக்க வருமான வரித்துறை வழங்கிய அடையாள எண் அட்டை (PAN  Card) அவசியம் தேவை. வருமான வரித்துறையிடமிருந்து அடையாள எண் பெறாதவர்கள் படிவம் 60 (Form 60) அல்லது படிவம் 61ஐ (Form 61) பூர்த்தி செய்து வங்கியிடம் வழங்கவேண்டும். படிவம் 60 வருமான வரித்துறை வழங்கும் அடையாள எண் இல்லாதவர்களுக்கு என்னும்போது படிவம் 61 என்பது விவசாயத்திலிருந்து வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமானது. விவசாய வருமானத்திற்கு வரி கிடையாது.

(Rule 114B – வருமானவரி விதிகள், 1962). இந்தப்  படிவத்தில் ஒருவரின் பெயர், முகவரி, தொழில், வருட வருமானம், பரிவர்த்தனைத் தொகை (Transaction Amount ) ஆகியவற்றைக் குறிப்பிட்டு பணம் செலுத்தும் தேதியுடன் பணம் செலுத்துபவர் கையெழுத்திட்டு வங்கியிடம் வழங்க வேண்டும். வங்கி இந்தப்படிவத்தில் உள்ள விவரங்களை மின்னணுப் பதிவாக மாற்றி ஒவ்வொரு ஆண்டும் உரிய காலத்தில் வருமான வரித்துறைக்கு அனுப்பும்.  

வருமான வரித்துறை வழங்கும் அடையாள எண் பெறாதவர்கள் ரூ. 5 லட்சம் மற்றும் அதற்குமேல் மதிப்புள்ள நிலையான சொத்துக்களை வாங்கினாலோ விற்றாலோ (Purchase or  Sale  of  Property) படிவ எண் 60/61ஐ பூர்த்திசெய்து பதிவாளரிடம் வழங்க வேண்டும். பொதுவாக வருமானமீட்டும் ஒருவரின் வருட வருமானம் ரூ. 2,50,000/- அல்லது அதற்கு மேல் என்றால் வருமான வரித்துறை வழங்கும் அடையாள எண்ணைப் பெற்றிருக்க வேண்டும்.

அதற்கு விண்ணப்பம் செய்திருந்தால் விண்ணப்ப நகலையும், வருமான வரித்துறை அனுப்பும் ஒப்புகையையும் (Acknowledgement) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வங்கிக்கணக்கில் ஒருவர் ரூ. 50000/- மற்றும் அதற்குமேல் பணம் ஒரே நாளில் செலுத்தினால் பணம் செலுத்தப் பயன்படுத்தும் படிவத்தில்  வருமானவரி எண் (PAN) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.  பணத்தாளாக ரூ. 50000/-த்திற்கு மேல் வங்கியில் நேரடியாக செலுத்த முடியாது. அதே போல பணத்தாளாக ரூ 50000/- திற்கு மேல் நேரடியாக வங்கியில் செலுத்தி பிறர் அல்லது பிற நிறுவனக் கணக்கிற்குப் (NEFT / RTGS / IMT) பணம் அனுப்பமுடியாது.  

அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள்

இந்தியாவில் உள்ள வங்கியில் துவக்கி நடத்தும் கணக்குகளை பற்றி (Non-Resident  Accounts) பிறகு விரிவாகப் பார்க்கலாம் என்றாலும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டியது அயல்நாடு வாழும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு, வணிகம், வருமானம் உள்ளவர்கள் / இந்தியாவில் நிலையான சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் என்றால் அவர்கள் இந்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு வருமான வரித்துறையிடம் விண்ணப்பித்து அடையாள எண் (PAN Card) பெறவேண்டும்.  மேலும் அயல்நாட்டில் வாழும் இந்தியர் பயனில் உள்ள கடவுச் சீட்டின் மூலம் (Passport) ஆதார் எண்ணை அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் விண்ணப்பித்துப் பெறலாம்.

(NEFT)  மூலம் பணம் உடனுக்குடனான மொத்த ஒப்பந்த தீர்வு பணம் அனுப்பும் முறை (RTGS) அல்லது என்இஎப்டி (NEFT) ஆகிய  எந்த வழியாகினும் முதலில் நாம் பணம் அனுப்பவேண்டியவரின் / நிறுவனத்தின் பெயர், கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், கணக்கு எண், வங்கி அடையாள எண் (IFSC) ஆகியவற்றை மிகச் சரியாக விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். அதே விண்ணப்பத்தில் நம் பெயர் / நமது நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவற்றைத் தெளிவாக குறிப்பிடவேண்டுவது மட்டுமல்லாமல் நாம் கையொப்பமிடவேண்டும்.

நாம் வழங்கும் காசோலையில் யாருக்கு / எந்த நிறுவனத்திற்குப் பணம் அனுப்ப வேண்டுமோ அவரின் / அதன் பெயர் மற்றும் கணக்கு எண்ணை குறிப்பிடவேண்டும். சரியாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 2004 மார்ச்சில் அமல்படுத்தப்பட்ட இந்த மின்னணுப் பணப் பரிமாற்றம் வங்கிகளுக்கிடையே மிகத் துரிதமாக, திறமையாகச் செயல்படுத்தப் படுகிறது.  நாம் பணம் அனுப்பியவுடன் பணம் அனுப்பவேண்டிய கணக்கிற்குச் சென்று சேர்ந்துவிட்டதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வங்கிக்  கணக்கை வேறு கிளைக்கு மாற்றுதல்

நமது பயன்பாட்டுக்காக வங்கிக்  கணக்கை அதே வங்கியின் வேறு கிளைக்கு மாற்றும் வசதி உள்ளது. கணக்கை நாம் எந்த கிளையில் இனி பயன்படுத்த விரும்புகிறோமோ அந்தக் கிளையிலேயே நமது விண்ணப்பத்தை வழங்கலாம். கணக்கினை மாற்றியவுடன் நாம் செய்யவேண்டியது என்ன?

*ஏ.டி.எம் அட்டையினை புதிய கிளையிலிருந்து பெறவேண்டும். வங்கியில் பொதுவாக நமது கணக்கு எண் மாறாது. ஆனால் எங்கெங்கு நமது வங்கிக்  கணக்கு இணைக்கப்பட்டிருக்கிறதோ (Mutual  Fund  / Share  Demat  Account / Insurance)  அங்கெல்லாம் கணக்கினை மாற்றிச் சென்றுள்ள கிளையின் விவரத்தைத் தெரிவிக்கவேண்டும். ஆதார் எண் அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். புதிய காசோலையினைப்  பெறவேண்டும்.  

*ஒவ்வொரு மாதமும் தானியங்கியாக (Standing  Instruction) சிலவற்றுக்குப் பணம் கணக்கிலிருந்து செலுத்துபவராக இருந்தால் நமது கணக்கின் வங்கிக் கிளை மாற்றத்தினை உரியவருக்கு / உரிய அலுவலகத்திற்குத்  தெரிவிக்கவேண்டும்.

“பணத்தைக் குவிப்பதற்குப் பதில் தேவைகளைக் குறைத்துக்கொள்” என்று கிராமங்களில் சொல்வார்கள். ஜெஸிகா கோக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டு கைகளும் இல்லை. ஆனால் மனதில் மிக உயர்ந்த லட்சியங்கள் குரல் கொடுத்தன. அவற்றில் ஒன்று விமானம் ஓட்ட வேண்டும் என்பது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா என்று கேட்பார்கள். ஆசைப்படலாமே, அதில் என்ன தப்பு? என கேள்வி கேட்டு சாதித்து நின்றார் ஜெஸிகா கோக்ஸ். கைகள் இல்லாத முதல் பைலட் என்ற பெருமை ஜெசிகாவிற்கு உண்டு. சாதிக்க வேண்டும் எனும் மனம் இருந்தால் மட்டும் போதுமா? பயணிக்கும் துறைகளைப்பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். அவ்வாறு நாம் அறிந்துகொள்ளும் பயணத்தை மேலும் தொடர்வோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இந்தியாவை சுற்றி வந்த சீமா பவானிகள்!(மகளிர் பக்கம்)