வாழ்க்கை+வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 27 Second

வங்கிகளில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் நமது உரையாடலுடன் கலந்து நம்மோடு உலவுவது மகிழ்ச்சிதான். ஆனாலும் சில சொற்களின் பொருளைத் தெரிந்து கொள்ளாமல் நகர்வது படகு மற்றும் துடுப்புடன் கற்பனைக் கடலில் பயணிப்பதாகும். வாழ்க்கைப் பயணப் பாதையில் பல சொற்களின் பொருளைப் படித்து வந்த நாம் அவ்வப்போது கடந்து செல்லும் காற்றைச் சுவாசித்து அதன் வாசத்தை வாசித்துக் கற்கலாம். வறண்ட வாழ்க்கையில் நமக்கு வசதி தரும் சோலைதான் காசோலை (Cheque). காசோலை குறித்து மேலும் சில பதிவுகள். திறந்த காசோலை (Open Cheque)காசோலையின் மேல் குறுக்கே இரண்டு கோடுகள் வரையாமல் இருந்தால் அதுவே திறந்த காசோலையாகும்.

இந்தக் காசோலை எவரின் பெயரில் வழங்கப்பட்டுள்ளதோ அவர் அதனை வங்கியில் வழங்கிப் பணம் பெறலாம் அல்லது அதில் எழுதியுள்ள தொகையை அவரது  கணக்கில் வரவு வைக்கச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட சிறிய தொகைக்கு மட்டுமே இத்தகைய திறந்த காசோலைகள் வழங்கலாம். காசோலையைப் பெற்றபின் அதற்குரியவராக அதன்மேல் இடது மேல் பக்கம் இரண்டு கோடுகள் வரைந்தால் அதை அவரது கணக்கில் மூலம்தான் வரவு வைத்துப் பெற்றுக்கொள்ளமுடியும். இவ்வாறு செய்வது காசோலையில் எழுதப்பட்ட பணத்தின் பாதுகாப்புக்கு நல்லது. ஏந்துபவர்க்குரிய (Bearer) காசோலை மற்றும் ஏந்துபவரின் கட்டளைக்

குரிய (Order) காசோலை

ஏந்துபவர்க்குரிய காசோலை… எவர் அந்த காசோலையை வைத்துள்ளாரோ அவர் அதில் குறிப்பிட்டுள்ள தொகையினை நேரடியாக வங்கிக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். இதற்கு காசோலையில் குறிப்பிட்டுள்ள நபர் தங்களின் அடையாளத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த காசோலை பாதுகாப்பற்றது என்பதால், தவறான நபரிடம் சிக்கினால், பணத்தை இழக்க வாய்ப்புள்ளது.

ஏந்துபவரின் கட்டளைக்குரிய காசோலை அதாவது ‘ஆர்டர்’ (Pay to ……or Order ) காசோலை மூலம் பணம் பெற வேண்டும் என்றால், அந்த காசோலையில் குறிப்பிட்டுள்ளவரின் அடையாளத்தை உறுதி செய்த பிறகு தான் அவரின் கணக்கிலோ அல்லது நேரடியாக பணத்தினை வங்கி மூலமாக பெற முடியும். காசோலையில் ‘பேரர்’ ‘Bearer’ என்ற வார்த்தையை அடித்து ‘Order’ என்று எழுதினால் காசோலை வழங்கியவர் அந்த திருத்தத்தின் அருகில் காசோலையில் கையெழுத்து போடத் தேவையில்லை. அதே ‘Order’ என்று ஏற்கனவே எழுதிய வார்த்தையை ‘Bearer’ என்று எழுதினால் அது காசோலைத் திருத்தமாகும் (Material Alteration). அதற்கு காசோலையை வழங்கியவரின் கையெழுத்து தேவை.

காசோலை / உறுதிப்பத்திரத்தில் திருத்தம் (Material Alteration in Cheque / Promissory Note) காசோலை / உறுதிப்பத்திரத்தில் திருத்தம் என்பது அதில் ஏற்கனவே எழுதியதை அடித்துத் திருத்தி அதன் சட்டப்பூர்வ வணிகத் தன்மையை மாற்றி எழுதுவதாகும். தேதி, தொகை – எழுத்தில் மற்றும் எண்ணில் ஆகிய அனைத்தையும் அல்லது ஏதாவது ஒன்றை காசோலையில் மாற்றி எழுதுவதும், தேதி, வழங்கவேண்டிய தொகை, நேரம், இடம், வட்டிவிகிதம் ஆகிய அனைத்தையும் அல்லது ஏதாவது ஒன்றை உறுதிப்பத்திரத்தில் மாற்றி எழுதுவதும் இத்தகைய திருத்தமாக கொள்ளப்படும். இந்த திருத்தங்கள் காசோலை அல்லது உறுதிப்பத்திரத்தை எழுதி வழங்கியவரால் கையொப்பமிட்டு அங்கீகரிக்கப்பட்டால்தான் செல்லுபடியாகும். காசோலையின் மூலம் பணம் பெறவேண்டியவர் இத்தகைய திருத்தங்களை செய்யக்கூடாது.  

ஒருவர் காசோலையை எழுதி கையொப்பமிட்டு பணம் பெறவேண்டியவருக்கு வழங்கிவிட்டார். ஆனால் காசோலை வழங்கியவர் இறந்துவிட்டார். பணம் பெறவேண்டியவரும் அந்த காசோலையை வங்கியில் செலுத்தவில்லை. அவர் இறந்துவிட்டார் என்ற விபரம் வங்கிக்குத் தெரிவிக்கப்பட்டது என்றால் அந்தக் காசோலை செல்லுபடியாகாது. கணக்கு வைத்திருப்பவர் வாரிசுதாரர் நியமனம் செய்யவில்லை மற்றும் உயில் (Will) எழுதவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்கும் சிலருக்காக உடனே வழங்கும் பதிவு பின்வருமாறு:

நீதிமன்றம் வழங்கும் வாரிசுச் சான்றிதழ்  (Succession  Certificate) நீதிமன்றம் அல்லது தகுதிவாய்ந்த அதிகார வரம்பின் முத்திரையிடப்பட்டு வழங்கப்பட்ட வாரிசுச் சான்றிதழ் (Succession  Certificate) இறந்தவருக்குச் சொந்தமான கடன்கள் மற்றும் பத்திரங்களை சேகரித்துக்  கையாள ஒரு அங்கீகரிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுவதாகும்.

இறந்தவர் உயில் (Will) எழுதி வைக்காமல் இருந்தால் இத்தகைய சான்றிதழை நீதிமன்றம் மூலம் உரிமை கோருபவர் சட்டரீதியாகப் பெறவேண்டும். இந்தச் சான்றிதழை ஒரு நீதிமன்றத்தில் பெற்றால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இது செல்லுபடியாகும். வாரிசுதாரர் நியமனமில்லாத (No Nominee Accounts) கணக்குகளை வைத்திருப்பவர் இறந்து விட்டால் அந்தக் கணக்கிலிருக்கும் பணத்தை வட்டியுடன் பெறுவதற்கு இந்த வாரிசுச் சான்றிதழ் தகுந்த ஆவணமாகும்.

ஆனால் இந்தச் சான்றிதழை மட்டும் வங்கியிடம் வழங்கி இறந்தவர் அடகு வைத்துக் கடன் பெற்ற கணக்கின் கீழ் அடமானமாக உள்ள நகைகளை பெறமுடியாது. இதனுடன் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரரின் உறவினரல்லாத தகுதியுடைய இருவர் கையொப்பமிட்டு வழங்கும் முத்திரைத்தாளில் எழுதிய இழப்பெதிர்க்காப்புப் பத்திரம் (Indemnity Bond) ஆகியவற்றை வங்கியிடம் வழங்கி வங்கியின்  ஒப்புதலுக்குப் பிறகு .நகைக்கடனுக்குரிய பணத்தைச் செலுத்தியபின் இறந்தவர் அடகு வைத்த  நகைகளை சட்டப்படி பெறுவதற்குத் தகுதியுடையவர் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு வங்கிகளில் புழங்கும் பல வார்த்தைகளுக்கு அவ்வப்போது விளக்கம் பெறும் நமக்கு நம்மை வங்கியோடு இணைக்கும் வழிகளில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். இத்தனைத் திட்டங்கள் வங்கிகளில் இருந்தாலும் ‘நம்மால் சேமிக்க முடியுமா?’ …’எப்படிச் சேமிப்பது..?, ‘ எங்கு சேமிப்பது..? ‘ எத்தனைக்  காலம் சேமிப்பது..?’ இந்தக் கேள்விகள்தான் நமது அடுத்த வேள்விகளுக்கான இடுபொருட்கள்.

வங்கிகளில் உள்ள சேமிப்புத் திட்டங்கள், பொதுவான சேவைகள் குறித்தும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்து இணையவழிச் சேவைகள், பண பரிவர்த்தனைகள், பணத்தாள்கள், வங்கிச் சேவைகளில் கையாளப்படும் சில வார்த்தைகளுக்கான விளக்கங்கள் ஆகியவற்றைப்பற்றி நாம் விரிவாக, விளக்கமான வரிகளுடன் பார்த்தோம். வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து எழுதுவதற்கு முன் சில நிகழ்காலச் சூழல்களில் நமது தேவைக்கேற்ப வங்கிச் சேவையை எவ்வாறு தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது என்பதை உதாரணங்களுடன் பார்ப்போம். இந்தச் சூழல்களை இன்றல்ல இனி வருங்காலங்களிலும்  நாம் எதிர்கொள்ளலாம்.

சேமிக்கும் சிந்தனை வங்கிகளில் எத்தனை திட்டங்கள் நாம் சேமிப்பதற்காக வந்தாலும் பணத்தை சேமிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது நாம்தான். வங்கியல்ல. வாழ்க்கையின் வளத்திற்கு வங்கிகள் உதவும் காட்சிதெரிவதற்கு ஒளி தேவை. அந்த ஒளி எங்கிருந்து வருகின்றது என்று கேட்டால் உடனே கிடைக்கும் பதில் ‘அந்த ஒளிக்கான விதை நமது சிந்தனையில்தான் ஊன்றப்படுகிறது. சேமிக்கும் சிந்தனை இல்லாமல் செயல்பட்டால் நாம் ஈட்டும் பணம் நிமிடக்கணக்கை நாம் எண்ணுவதற்குள் நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே வெளியே சென்றுவிடும். சேமிக்கும் சிந்தனையை எவ்வாறு வளர்ப்பது என்பதைப்பற்றி சிந்திப்போம்.

(1)பணத்தாள்களை, கடன் அட்டைகளைப் பார்க்கும் போதெல்லாம் ‘சேமிக்க வேண்டும், சேமிக்க வேண்டும்’ என்று ஒருமுறைக்கு இரண்டு முறைகள் மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். மனம் பணத்தை சேமிக்கத் தூண்டும்.

(2) ஒரு பொருளை வாங்கும்போது இதன் தேவை அத்தியாவசியமானதா, ஆகட்டும் பிறகு வாங்கலாமா என்று சிந்தித்து மனத்தைக் கேளுங்கள். மனம் செலவைத் தள்ளிப்போடும்.

(3) உங்களுக்கு அடுத்த வருடம் என்ன தேவை, அதற்குப் பிறகு என்ன தேவை என்று பட்டியலிடுங்கள். அந்தப்பட்டியலில் வீடு, வாகனம், இல்லத்தில் வரக்கூடிய நல்ல நிகழ்ச்சிகள், கல்விக்காக பெறக்கூடிய வாய்ப்புகள் என்று பட்டியல் பதிவாகும்போது மனதில் சேமிக்கும் சிந்தனை உதயமாகும்.

(4) இன்று வரும் வருமானம் இன்னும் சில வருடங்களுக்குப்பிறகு வருமா என்று சிந்தியுங்கள். மனம் சேமிக்கும் சிந்தனைக்குத் தாவும்.

(5) நமது உடல் ரீதியிலான இயக்கத்தில் நேரக்கூடிய சறுக்கல்கள் நமது உடல்நல ஆசையை மனதில் முகாமிடவைத்து சேமிக்கும் சிந்தனைக்கு முகவரி
அமைக்கும்.

(6) கொடுத்த பணத்தைத் திரும்பத் தராத அடுத்தவருக்கு மீண்டும் பணம் வழங்க வேண்டுமா என்று மனதைக் கேளுங்கள்… மனம் தயங்கி பணம் தர மறுக்கும்.

(7) நம்மிடமுள்ள  பயன்படுத்தாத துணிகளை எண்ணிப்பாருங்கள், எண்ணும் மனம் இன்னும் வேண்டுமா என்று கேட்கும்.

(8) அந்தத் திரைப்படம் மிகவும் ‘சுமார்’ ரகம் தான் என்று பிறர் சொன்னதை நினைத்துப் பாருங்கள். மனம் அகத்துக்குள்ளேயே இருந்துவிடும்.

(9) இன்னும் அதிகமாக, நேர்மையாக உழைத்து சம்பாதிக்க என்ன வழி என்று யோசியுங்கள்.  உங்களை நேசிக்க நேரம் வரும் . நிமிடங்கள் பானமாகும்.

(10) வீணாக ஆசை காட்டும் பணவிரய விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள்.

நிகழ்காலச் சேமிப்பும் நிதி நெருக்கடியும் என்றுமே தென்றல் வீசவேண்டும், என்றுமே வசந்தம் பேசவேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமல்ல. நாணயத்திற்கே இரண்டு பக்கங்கள் போல வாழ்க்கையின் ஒரு பக்கத்தில் வெயிலும் மறு பக்கத்தில் மழையும் இருப்பது இயல்பு. வருமான உயர்வு இருக்கின்றதோ இல்லையோ செலவின் உயர்வு நாட்டுக்கே இருக்கும்போது நமக்கும் இருக்கத்தானே செய்யும் செலவுகள் உயர்வும், வருமான வீழ்ச்சியும் நிதி நெருக்கடிக்குக் காரணிகளாகின்றன.

நிதி நெருக்கடியை சமாளிக்கும் வழிகள் இரண்டு. அவை கடன் வாங்குவது மற்றும் அதிக பணமீட்டுவது என்று உடனே சொல்லலாம். இதில் முக்கியமான மூன்றாவதாக உள்ள ஒன்றுதான் மிக விரைவில் நமக்குத் தீர்வு தருவதாகும். அது செலவைக் குறைப்பதாகும். குறிப்பாக ஒருவர் பணி ஓய்வு பெற்றபின் அவர் வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதிதான் ஓய்வு ஊதியமாகக் கிடைக்கும். ஓய்வூதியம் இல்லாத குடும்பத்தினர் கண்டிப்பாக சேமிப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்த, அதை ஒரு பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும். இப்படிச் செலவுகளை முறைப்படி குறைப்பதும், சேமிக்கும் சிந்தனையும்தான் முதல்படி.

எப்படிச் சேமிப்பது?

நமது வருமானமும், இன்றைய தேவைகளும், நாளைய தேவைகளும் சேமிப்பை முடிவு செய்யும். நமது மாதாந்திரச் செலவுகள் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்துபவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துபவர்கள், பள்ளி / கல்லூரி கல்விக்கட்டணம் செலுத்துபவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஆயுள் / மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் கட்டவேண்டியவர்கள் ஆகியவர்களின் செலவுகள் அவரவர் வருமான மற்றும் செலவுகளின்  வரைபடத்தை மேலும் கீழும் நகர்த்துகின்றன. ஒருவருட வருமானம், ஒரு வருட செலவு, வருமான வரி செலுத்துபவராக இருந்தால் ஒரு வருட வருமான வரி ஆகியவற்றின் அட்டவணையைத் தயார் செய்யவேண்டும்.

அதன் அடிப்படையில் சேமிக்க வேண்டிய பணம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு என்பதைத் தீர்மானிக்க முடியும். அவ்வாறு திட்டமிட்டு சேமிக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்ட பணத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஒரு பகுதியை எந்த நேரமும் அவசரமாக எடுக்கும்படி சேமிப்புக்கணக்கு அல்லது குறுகிய கால நிலைவைப்புக் கணக்கு (Short Term Fixed Deposit) ஆகியவற்றில் செலுத்த வேண்டும். இரண்டாவது பகுதியை வட்டி சற்று குறைவாக இருந்தாலும் பணத்தின் பாதுகாப்பு முக்கியம் என்ற புரிதலுடன் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் வங்கியில் நீண்டகால வைப்பாகச் சேமிக்கலாம்.

திட்டமிட்டுச் சேமிக்கும் நாளில் சில வங்கிகளின் வைப்புக்கான வட்டி விகிதங்களை சேமிக்கும் கால நிர்ணயத்தோடு அறிவது சேமிக்க வேண்டிய வங்கியையும், சேமிக்கும் பணத்திற்கான முதிர்வு காலத்தையும் தேர்ந்தெடுத்து முடிவு செய்யும். மூன்றாவது பகுதியை சற்று அதிகம் வட்டி தரும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம். சிறுநிதி வங்கிகள், சிட் பண்டுகள் ஆகியவற்றில் சேமிக்கலாம்.  இவ்வாறு சேமிக்கும்போது பாதுகாப்பாக ஒரு பகுதி பணமும், அதிக வட்டி ஈட்டக்கூடிய வகையில் ஒரு பகுதி சேமிப்பும், அவசரத் தேவைக்கு நாம் பணத்தைப் பெறக்கூடியதாக ஒரு பகுதி பணமும் அமைவதால் நாம் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெறமுடியும். இவ்வாறு பகுத்துச் சேமிக்கத் தெரிந்துகொண்டால், வங்கி வழங்கும் சேமிப்புத் திட்டங்களைத் தொகுத்துப் பயன்படுத்துவதில் நாம் நிபுணத்துவம் பெறுகின்றோம்.

வங்கியில் பணமாகத் தினமும் எவ்வளவு தொகையை நமது கணக்கில் கட்டலாம்? ஒரு வருடத்திற்கு பணமாக இவ்வளவு தொகைவரைதான் கணக்கில் செலுத்தலாம் என்றுள்ளதா? RTGS, NEFT ஆகியவற்றின் மூலம் பணம் அனுப்ப நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன? லாக்கரில் விலையுயர்ந்த பொருட்களை எவ்வாறு வீணாகாமல் வைப்பது? வெளிநாடு செல்வதற்கு எவ்வளவு நமது நாட்டு ரூபாய், அந்த நாட்டுப் பணம் எடுத்துக்கொண்டு செல்லலாம்? எப்படி சுற்றுலா அட்டை (Travel  Card) , சுற்றுலாப் பயணக் காசோலை (Travellers’ Cheque) பெறுவது என இவை போன்ற பல வினாக்கள் குறித்து தொடரும் இதழ்களில் விடை காண்போம்.  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறுகதை-பூமராங் ! (மகளிர் பக்கம்)
Next post நீரிழிவால் வரும் பாதநோய்!! (மருத்துவம்)