தமிழிலும் ஆங்கிலம் கற்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 5 Second

வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது. தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதில்லை. வெற்றுப் புலம்பல்கள் வெற்றியைத் தருவதில்லை. எல்லாப் பிரச்னைகளுக்கான தீர்வும் நம்மிடமே இருக்கிறது. சில நேரங்களில் உடனடியாக தீர்வுகள் கிடைத்து விடும். பல நேரங்களில் தீர்வுக்கான காலம் தள்ளிச் செல்லலாம்.

அதுவரை பொறுமை காக்கவேண்டும். அவ்வாறு காத்திருந்து தனக்காக மட்டுமில்லாமல் மற்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்து வருகிறார் மலர் டீச்சர். இவர் ஸ்போக்கன் இங்கிலீஷினை தமிழில் நேரடியாகவும், யூடியூப் மூலமாகவும் கற்றுத் தருகிறார். “ஏதாவது ஒரு விஷயத்தில் நம்மை நாம் நம்ப வேண்டும்” என்கிற தன்னம்பிக்கை வாக்கியத்தோடு தனது கதையினை தோழியரோடு பகிர்கிறார் மலர்.

‘‘நான் பிறந்தது மதுரை. வளர்ந்தது ராஜபாளையம். ஸ்டேட் போர்டு ஆங்கில வழியில் தான் கல்வி பயின்றேன். பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் கல்லூரியில் சேரப்போகிறேன் என்ற கனவில் இருந்ேதன். ஆனால் திடீரென்று ஏற்பட்ட குடும்ப சூழல் காரணமாக அப்பாவால் என்னை படிக்க வைக்க முடியவில்லை. தாத்தாவிடம் பண உதவி கேட்ட போது, ‘பொண்ண எதுக்கு படிக்க வச்சு தேவையில்லாத செலவு செய்ற, கல்யாணம் பண்ணி கொடுத்துடு’னு சொல்லிட்டார்.

நான் படிக்கணும்னு சொல்லி கேட்காமல் அப்பாவும் திருமண ஏற்பாட்டினை உடனே செய்ய ஆரம்பிச்சார். இதற்கிடையில் நான் கல்லூரிக்கு போகாததால், என் தோழியின் அம்மா ஆரம்ப பள்ளியில் டீச்சராக என்னை சேர்த்துவிட்டாங்க. வேலைக்கு சேர்ந்த ஆறே மாசத்தில் திருமணமும் முடிந்தது. என் குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவியை செய்யணும், அதனால் வேலையை விடமாட்டேன்னு என் வருங்கால கணவரிடம் சொல்ல, அவரும் சம்மதிக்க திருமணம் இனிதே முடிந்தது.

ஒரு வருடத்தில் எங்களுக்கு மகனும் பிறந்தான். பள்ளியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போதே தொலை தூர கல்வியில் படிக்க, என் தலைமை ஆசிரியர் உதவி செய்தாங்க. மாலையில் டியூஷனும் எடுப்பேன். ஆனால் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால், ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, மாலை நேர டியுஷன் மட்டும் ெதாடர்ந்து வந்தேன். இந்த நேரத்தில் தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி மையம் எங்க ஊரில் புதிதாக ஆரம்பித்திருந்தாங்க. அங்கு பகுதி நேர வேலை கிடைச்சது. வகுப்பின் உரிமையாளர் வேறு ஊர் என்பதால், என்னை அந்த பயிற்சி மையத்தை பார்த்துக் கொள்ள சொன்னார். நானும் என் தங்கையும் சேர்ந்து பார்த்துக் கொண்டோம்.

நான் பயிற்சி எடுக்கும் முறை அவருக்கு பிடித்திருந்ததால், என்னை மையத்தில் ஒரு பார்ட்னராகவும் நியமித்தார். நானும் என் நகையை அடமானம் வச்சு ஒரு தொகையை ெகாடுத்து பார்ட்னராக இணைந்தேன். அவரோ ‘இப்போது மாத சம்பளம் வாங்கிக் கொள்ளுங்க. ஒரு வருடம் கழித்து வந்த லாபத்தை பிரித்துக் கொள்ளலாம்’ என்றார். தெரிந்தவர் என்பதால், அவர் பேச்சை நம்பினேன். எங்க பயிற்சி மையம் ராஜபாளையம் மட்டுமில்லாமல் சென்னை மற்றும் சிவகாசியிலும் கிளை இருந்தது.

ஒரு வருடம் கழித்து லாபத்தில் பங்கு கேட்டபோது, ‘இந்த சென்டர் தவிர மற்ற சென்டர்கள் பெரிய லாபம் ஈட்டவில்லை. எனவே பங்கு பிரிப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று அதிர்ச்சியை தூக்கிப் போட்டார். இந்த பெரும் ஏமாற்றத்திற்கு பிறகு அங்கு வேலை செய்ய மனமில்லாமல் விலகிவிட்டேன்’’ என்றவரை தேடி சுமார் 50 மாணவர்கள் இவரிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று வந்துள்ளனர்.

‘‘ஒரு நாள் காலையில் பார்த்தால் என் வீட்டு வாசலில் 50 மாணவர்கள் நின்றிருந்தார்கள். எனக்கு எதுவுமே புரியல. பிறகு தான் தெரிந்தது, நான் பயிற்சி மையத்தை விட்டு விலகியதால், அங்கு வேறு பயிற்சியாளர் சொல்லிக் கொடுப்பது புரியாமல் என்னை தேடி வந்துள்ளனர் என்று. ஆங்கில மொழியை புத்தகம் பார்த்து கற்றுக் கொள்ள முடியாது. அதையும் தாண்டி நான் நிறைய சிம்பிளான விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். எங்கள் பகுதி கிராமங்கள் நிறைந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணியிலிருந்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லிக் கொடுப்பேன்.

ஆங்கிலத்தை அந்த மொழியில் தான் சொல்லித் தர வேண்டும் என்றில்லை, தமிழில் கூட சொல்லித் தரலாம். அப்படி சொல்லித் தரும் போது அவர்களுக்கு எளிதாக புரியும். இப்படித்தான் நான் என்னிடம் பயிற்சி எடுத்த மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்தேன். அப்படி பயிற்சி எடுத்து பழகியவர்களுக்கு மற்ற பயிற்சியாளர் எடுப்பது புரியவில்லை. நான் எவ்வளவு சொல்லியும், ‘வீட்டின் மொட்டை மாடியில் கூட சொல்லிக் கொடுங்க. நாங்கள் கீழே உட்கார்ந்து கத்துக்கிறோம்’ என்றார்கள்.

என்னிடம் அப்போது போதிய பணவசதி இல்லாததால், பயிற்சி எடுக்க வந்த மாணவர்களில் கொஞ்சம் வசதி படைத்தவர்களே சென்டருக்கான இடம் மற்றும் வகுப்புக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கினார்கள். இப்போது ராஜபாளையத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் எங்க சென்டர் இயங்கி வருகிறது. எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. இதற்கிடையில் என் கணவர் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, வேறு எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தார்.

அவரின் முழுநேர வேலையே எனக்கு வரும் வாய்ப்புகளை முடக்குவதும், என்னை மட்டம் தட்டி பேசுவதாக இருந்தது. சென்டரின் வளர்ச்சியைப் பார்த்து என்னை பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு எடுக்க அழைத்தார்கள். என் கணவரோ ‘அதெல்லாம் அவசியமில்லை’ன்னு சொல்லிட்டார். இதற்கிடையில் அவருக்கு இருதய பிரச்னை ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. நான் கஷ்டப்பட்டு சேமித்த பணமெல்லாம் மருத்துவ செலவுக்கே போனது. சிகிச்சைக்கு பிறகும் அவர் மாறவில்லை. அதனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி தைரியமாக ஒரு முடிவு எடுத்தேன். என் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சென்னைக்கு வந்துட்டேன்’’ என்றவர் அதன் பிறகு சென்னையிலும் ஒரு மையத்தை துவங்கியுள்ளார்.

மருத்துவ செலவிற்காக கையில் இருந்த காசெல்லாம் கரைந்துவிட்ட நிலையில் மிண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டுமா? என்ற சிந்தனையில் இருந்த போது தான், என்னிடம் பயிற்சி எடுத்த தற்போது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் என்னை சந்திக்க வந்திருந்தார். வெளி ஊர்களில் நல்ல வேலையில் இருக்கும், என்னிடம் பயின்ற மாணவர்கள் ஊருக்கு வரும் போது எல்லாம் என்னை வந்து பார்ப்பார்கள்.

அப்படி வந்த அந்த ஐ.டி மாணவன் தான் எனக்கு யூடியூப் சேனல் குறித்து அறிமுகம் செய்தான். நான் வகுப்பில் எடுப்பதை அப்படியே வீடியோ எடுத்து ஒரு சேனலா எப்படி மாற்றி அமைக்கலாம்ன்னு சொல்லிக் கொடுத்தது மட்டுமில்லாமல் யூடியூப் அக்கவுன்டும் திறந்து கொடுத்தான். யோசனை நல்லா இருந்தது. எனக்கு தெரிந்த கல்யாண வீடியோகிராபரின் உதவியோடு 2017-ல் இருந்து வீடியோக்கள் அப்ளோடு செய்ய ஆரம்பித்தேன்.

இந்த சமயத்தில் என் மற்றொரு மாணவர் துபாயிலிருந்து வந்திருந்தார். அவரிடம் சேனல் பற்றி சொன்ன போது, ‘மூன்று மாதத்தில் 1000 சப்ஸ்கிரபர்ஸ் வந்திருக்காங்க. மானிடைஸ் பண்ணிட்டீங்ளா’னு கேட்டார். ‘அதெல்லாம் தெரியாதே’ என்றேன். ‘மானிடைஸ் பண்ணாதான் இதிலிருந்து பணம் வரும்’ என்று சொல்லி, எனது வங்கிக் கணக்கினை அதனுடன் இணைத்து, வருமானம் வரும்படி செய்து கொடுத்தார். இதில் வந்த வருமானத்தைக் கொண்டு தான் சென்னையில் ஒரு பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன்.

அந்த மையம் ஆரம்பித்தது கூட ஒரு பெரிய கதை. சென்னையில் பயிற்சி மையத்திற்காக இடம் தேடிய போது என் நண்பர் தன்னுடைய முகநூல் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்தார். அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். அதில் பாதி இடத்தினை என்னைப் பயன்படுத்திக்க சொன்னார். அதற்கான முன் பணமாக ஒரு லட்சம் ேகட்டார். நானும் கொடுத்தேன். இரண்டு நாள் கழிச்சு அவர் பக்கத்தில் பெரிய இடம் பார்த்து இருப்பதாகவும், தன் அலுவலகத்தை அங்கு மாற்றிக் கொள்ள இருப்பதாகவும். இந்த முழு இடத்தையும் என்னையே பயன்படுத்திக் கொள்ள சொன்னார். எனக்கும் அது வசதியாக இருந்ததால் சரின்னு சொல்லிட்டேன்.

ஒரு வாரம் கழித்து அவரைத் தேடி பலர் வந்தனர். அப்போது தான் தெரிந்தது, அந்த நபர் பலரிடம் கடன் வாங்கி தலைமறைவாகிவிட்டார் என்று. இதுமட்டுமல்ல, கடன் வாங்கியவர்களிடம் எல்லாம் நானும் அவரும் பார்ட்னர் என்றும் சொல்லி இருக்கார். பணத்தைக் கொடுத்தவர்கள் என்னை தேடி வர ஆரம்பிச்சாங்க. எனக்கு எதுவுமே புரியல. இங்க நடக்கும் பிரச்னையைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், இடத்தின் உரிமையாளரிடம் சொல்ல, அவருக்கு என்னைப் பார்த்ததும் அதிர்ச்சி. ‘யாரம்மா நீ..?’ன்னு வினவ.. நான் நடந்ததை சொல்ல, அதன் பிறகு உரிமையாளர் எனக்கே அந்த இடத்தை வாடகைக்கு கொடுத்தார். அந்த சமயத்தில் நான் ரொம்பவே ெநாடிஞ்சி போயிட்டேன்.

காரணம் என் கணவர் எப்போதும், ‘நீ எந்த வேலைக்கும் லாயக்கில்லை. என்னால் தான் உனக்கு மரியாதையே’ன்னு சொல்லி குத்திக்காண்பிப்பார். இந்த நிகழ்வு, அவர் சொன்னதை உண்மையாக்கிவிட்டதேன்னு ரொம்பவே மனம் உடைஞ்சிட்டேன். தவறு எல்லாரும் செய்வது இயல்பு. இது என்னுடைய கவனக்குறைவால் ஏற்பட்டது. இதற்கு நான் மட்டுமே காரணம். அதனால் அதில் இருந்து மீண்டு வர ஆரம்பிச்சேன். வேலையில் முழு கவனம் செலுத்தினேன். அந்த சமயத்தில் சென்னையில் என்னுடைய பயிற்சி மையம் குறித்து யூடியூப்பில் விளம்பரம் செய்திருந்தேன். அதைப் பார்த்த காவலர் ஒருவர் குடும்பத்துடன் என்னைப் பார்க்க வந்தார்.

போலீஸ் வண்டியில் சீருடையில் காவலர் வந்திறங்கியதும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாரும் பயந்து உரிமையாளருக்கு சொல்ல… அவரும் பயத்துடன் வர…. அதன் பிறகு தான் அவருக்கு நான் என்ன பயிற்சி மையம் வைத்திருக்கேன் என்று தெரிய வந்தது. ‘கிராமத்திலிருந்து தனி ஆளாக துணிவோடு வந்திருக்க… நீ நல்லா பண்ணு. எந்த உதவியா இருந்தாலும் கேளு’னு சொல்லி இன்று வரை ஒரு மகள் போல என்னைப் பார்த்துக் கொள்கிறார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்போக்கன் இங்கிலீஷ் குறித்து பயிற்சி எடுக்க வருவாங்களான்னு தயக்கத்துடன் தான் இங்கு ஆரம்பிச்சேன். முதல் நாளே பத்து பேர் பயிற்சியில் சேர்ந்தாங்க. மாணவர்களின் ஊக்குவிப்பு மற்றும் பார்வையாளர்களின் பாராட்டு தான், என் வாழ்க்கையை இனிமையாக பயணிக்கவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க செய்துள்ளது’’ என்கிறார் மலர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சட்டங்கள் அறிவாய் பெண்ணே!(மகளிர் பக்கம்)
Next post பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?(அவ்வப்போது கிளாமர்)