முதுமையில் பென்ஷன்!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 2 Second

அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களின் குடும்பத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் இதுவே அரசு மற்றும் அமைப்பு சாரா துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஓய்வு காலத்திற்கு பிறகு பென்ஷன் என்பது கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் எஞ்சிய காலத்தினை கவனத்தில் கொண்டு இந்திய அரசால் 2015ம் ஆண்டு அமைக்கப்பட்டதுதான் அடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana).

இந்த திட்டத்தின் கீழ் உள்ள வரைமுறைகள் மற்றும் அதில் உள்ள அம்சங்கள் குறித்து பலருக்கு தெரிவதில்லை. அது பற்றி தெரிந்து கொள்ளலாம். அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்கள், 60 வயதுக்குப் பின் மாதம் ரூ. 1000 – 5000 வரை ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டம். 18 வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இணையலாம்.

இணைவது உங்கள் சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தர வேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு எண்ணை (PRAN Number) வழங்கும். அந்த எண்ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ப்ரான் எண் தான் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்று கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ. 1000 தொடங்கி அதிக பட்சமாக ரூ. 5000 வரை ஒருவர் பென்ஷன் தொகையினை குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், அதற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதே போல் ஒவ்வொரு தவணை செலுத்தும் போதும் அதற்கான ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ
அனுப்பப்படும்.

பணம் செலுத்தும் முறை திட்டத்தில் இணைந்த பின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம். அதாவது நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை எடுக்கப்பட்டு நம் ப்ரான் கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டத்தில் இணையும் போது எந்த தேதியில் பணம் செலுத்துகிறோமோ ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் பணம் ஆட்டோடெபிட் செய்யப்படும். உதாரணமாக, ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8 ஆம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும். வருடத்துக்கு ஒரு முறை அதாவது ஏப்ரல் மாதம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைத்துக் கொள்ளலாம்.

பணம் கட்டாவிட்டால்!

இந்தத் திட்டத்தில் சேர்ந்த பின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். ரூ.1 முதல் ரூ.100க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ. 101 முதல் ரூ. 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ. 501 முதல் ரூ.1000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்படுவார்கள். இத்திட்டத்தை வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85% அரசு பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே வழங்கப்படும். ஒரு வேளை உறுதி செய்யப்பட்ட தொகையை விட குறைந்தளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும். திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பின் இறந்துவிட்டால், அவரது இறப்பு சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் அட்டை விவரங்கள், வாரிசுதாரரின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்ப்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவிடம் (PFRDA) அனுப்பி, சரி பார்த்து பென்ஷன் தொகையை வழங்கும். ஒரு வேளை 60 வயதுக்கு முன் இறந்தால் அல்லது நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்தத் தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும் தான் வழங்கும்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரிய பென்ஷன் தொகை கிடைக்கும். அவருக்குப் பின் அவர் குறிப்பிடப்பட்டு இருக்கும் முதல் வாரிசுதாரர் இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். அவரும் இறந்து விட்டால், இரண்டாவது வாரிசுதாரருக்கு உறுதி செய்யப்பட்டு இருக்கும் மொத்த தொகையும் வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30 ஆவது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ. 577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ. 1000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61ஆவது வயதிலிருந்து மாதம் ரூ. 5000 கிடைக்கும். சேகர், தன் 71ஆவது வயதில் இறந்து விடுகிறார். ஆக, சேகருக்கு 61-71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5000 கிடைத்திருக்கும். சேகர் இத்திட்டத்தில் இணையும் போது வாரிசுதாரராக தன் மனைவியை குறிப்பிட்டிருப்பதால், சேகர் இறந்த பின், மனைவி உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5000 கிடைக்கும். மனைவி தன் மகனை இரண்டாவது வாரிசுதாரராக நியமித்திருப்பார். அவர் இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது கட்டாயம் வாரிசுதாரரை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, வாரிசுதாரர் இறந்து விட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு வாரிசுதாரரை நியvமித்துக் கொள்ளலாம். மேலும் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், மொத்த தொகையினை பெறும் போது, ஒருவரின் ப்ரான் கணக்கு எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்கு தான் பெற முடியும். தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நன்றி குங்குமம் தோழி!! (மகளிர் பக்கம்)
Next post நீரிழிவு நோய்க்கு ஏற்ற காய்கறிகள்!! (மருத்துவம்)