நியூஸ் பைட்ஸ்: ஸ்பெயினில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 38 Second

மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் உணர்வு பூங்கா

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘தி சென்சரி பார்க்’ எனப்படும் உணர்வு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் செலவில் சுமார் 1,368 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளும் பெரியவர்களும் பாதுகாப்பாக விளையாடி பொழுதைக் கழிக்க முடியும். வீல்-சேரிலேயே விளையாடக் கூடிய ஊஞ்சல் முதல் குழந்தைகள் கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளாமல் இருக்க சிறப்பு தொழில்நுட்பம் மூலம் பூங்காவின் விளையாட்டு சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெப்ப அலைகள் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்

காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்ப அலைகள் மனிதர்களின் மன அமைதியை பாதித்து அவர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கும் என காலநிலை மாற்றத்தின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மன நலம் பாதிக்கப்படுவதுடன், இது மனிதர்களிடையே தற்கொலை எண்ணத்தைக் கூட தூண்டலாம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பிரேசில் ஒலிம்பிக், இரண்டு தங்கம் வென்ற ஜெர்லின்

மதுரையைச் சேர்ந்த 15 வயது ஜெர்லின் அனிகா, பிரேசிலில் நடைபெற்று வரும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்ற இவர், கலப்பு இரட்டையர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த  அபினவ் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி மலேசியா நாட்டைச் சேர்ந்த கலப்பு இரட்டையர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.

ஸ்பெயினில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை

ஐரோப்பிய நாடுகளிலேயே முதல் முறையாக ஸ்பெயினில் பெண்களுக்கு மாதம் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிப்பதாக அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. இந்த விடுமுறையை மாதவிடாய் நாட்களில் அதீத வலியை சந்திக்கும் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் ஸ்மார்ட் அங்கன்வாடி

கேரளாவில், திருவனந்தபுரத்தில் முதல் முறையாக ‘‘ஸ்மார்ட்” அங்கன்வாடியை அம்மாநில சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திறந்து வைத்தார். குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆரோக்கியமாக வளர்க்கும் நோக்கத்தில் இவை வண்ண அலங்காரங்கள், அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தோட்டத்தில் அழகான மலர்களும், பட்டாம்பூச்சிகளும் நிரப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் மேலும் இதே போல 155 ‘‘ஸ்மார்ட்” அங்கன்வாடிகளை கேரள அரசு உருவாக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கைம்பெண்களுக்கு நடக்கும் மூடநம்பிக்கை சடங்குகளுக்கு தடை!

மகாராஷ்டிராவில் கோலாப்பூர் எனும் கிராமத்தில், கணவரை இழந்த பெண்கள் துரதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர்கள் எனும் மூடநம்பிக்கையை ஒழிக்க, அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் சடங்குகளுக்கும் பழக்கங்களுக்கும் தடை விதித்துள்ளது. கணவனை இழந்ததும் இனி அந்த கிராமத்தில் யாரும் பெண்களை பொட்டு வைக்கக் கூடாது, வண்ண உடைகளை அணியக் கூடாது, சுப நிகழ்ச்சிக்கு வரக் கூடாது என தடுக்க முடியாது. இந்த கொரோனா சமயத்தில் திடீரென பல பெண்களும் கணவரை இழந்ததால், இந்த பழக்கங்கள் மூலம் அவர்களை மேலும் காயப்படுத்த வேண்டாம் என அந்த கிராம தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அர்த்தமுள்ள பெயர்தான்!! (மருத்துவம்)
Next post வாழ்க்கை + வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)