தாய்ப்பாலில் செயின், கம்மல், மோதிரம்!(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 53 Second

ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் முதன் முதலில் கர்ப்பம் தரிப்பது என்பது மறக்க முடியாத தருணம். ஒன்பது மாதம் கருவை சுமந்து, அந்த கரு குழந்தையாக பிறந்தவுடன் தன் மார்போட அணைத்து பாலூட்டும் அந்த நிமிடங்களை எந்த ஒரு பெண்ணாலும் மறக்கவே முடியாது. அதிலும் முதல் குழந்தை என்றால் அந்த குழந்தையின் தொப்புள்கொடி முதல் தொட்டில், பால் சங்கு, கொலுசு, காப்பு என அனைத்தையும் அவர்களின் மகிழ்ச்சியின் அடையாளமாக சேகரித்து வைத்திருப்பார்கள்.

காலம் மாற மாற அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் விதம் மாறிப்போனது. குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் வளர்ச்சியினை ஸ்கேன் செய்து அதை ஒரு ஆல்பமாக வடிவமைப்பது என்று ஆரம்பித்து அம்மாக்கள் கருவுற்று இருக்கும் போது போட்டோஷூட் செய்வது, குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையுடன் சேர்ந்து நியூபார்ன் போட்டோஷூட் செய்வது என்பது இப்போது டிரண்டாகி வருகிறது. ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு உலகளவில் பிரபலமாகி இருப்பது, தாய்ப்பால் நகைகள். தாய்ப்பாலில் நகையா என்று நம் மனதில் எழும் கேள்விக்கு விடை அளித்தார் லண்டனில் இருந்து சஃபியா.

‘‘நம்முடைய ரத்தத்தை பாலாக மாற்றி குழந்தையின் உடல் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமாக இருப்பது தாய்ப்பால் தான். அவ்வளவு சக்திக் கொண்ட அந்த தாய்ப்பாலினை பெண்கள் தங்களின் குழந்தையின் மற்றொரு நினைவாக ஏதாவது ஒரு முறையில் சேகரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அந்த விருப்பத்தை என்னால் பூர்த்தி செய்ய முடிந்துள்ளது என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது’’ என்கிறார் மூன்று குழந்தைகளுக்கு தாயான சஃபியா.

இவர் தன் கணவருடன் இணைந்து ‘மெஜந்தா ஃபிளவர்ஸ்’ என்ற பெயரில் பூக்கள் சார்ந்த தொழில் செய்து வருகிறார். அதாவது நம் வாழ்வில் நடைபெறும் சிறப்பு தருணங்களில் பயன்படுத்தப்பட்ட பூக்களை ரேசின் கொண்டு அழகான பரிசாக மாற்றி அமைத்து தருகிறார். அதாவது காதலன் அல்லது கணவன் தன் காதலி அல்லது மனைவிக்கு பரிசாக கொடுக்கும் பூங்கொத்தை பதப்படுத்தி அதை அழகான பரிசுப் பொருட்களாக கொடுப்பது.

‘‘நானும் என் கணவரும் ‘மெஜந்தா ஃபிளவர்ஸ்’ நிறுவனத்தை 2019ம் ஆண்டு தான் ஆரம்பித்தோம். இன்று வரை நாலாயிரத்திற்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களை செய்துள்ளோம். அந்த சமயத்தில் தாய்ப்பாலைக் கொண்டு நகைகள் செய்ய முடியும் என்பதைக் குறித்த கட்டுரையை படிச்சேன். எனக்கும் என் கணவருக்கும் எங்களின் தொழிலை மேலும் விரிவுப்படுத்த அது ஒரு நல்ல ஐடியாவா தோணுச்சு. மேலும் அது கொரோனா காலம் என்பதால், எங்களுக்கு இது குறித்து ஆய்வு செய்ய நிறைய நேரம் இருந்தது. தாய்ப்பால்… திரவ வடிவமானது. அதை எவ்வாறு கடினமாக மாற்ற வேண்டும் என்று எங்களுக்கு முதலில் புரியவில்லை.

காரணம் தாய்ப்பால் எளிதில் கெட்டுப்போய்விடும். அதை திரவ வடிவமாக கொடுத்தால், அதில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் ஏதும் பாதிப்பு ஏற்படலாம். மேலும் அதை கெட்டியான பொருளாக கொடுத்தால் தான் செயினில் டாலராகவோ, கம்மலாகவோ அல்லது ேமாதிரமாக அழகுபடுத்த முடியும். பல ஆய்வுக்கு பிறகு பாலில் உள்ள திரவத்தன்மையை நீக்கிவிட்டால் கெட்டியான பொருளாக மாறிடும் என்பது புரிந்தது.

அதன் பின் அதனை ரேசின் கொண்டு அழகான நகையாக வடிவமைக்க ஆரம்பிச்சேன். இதன் மூலம் நகைகள் அதிக நாட்கள் தன் பொலிவை இழக்காமல் இருக்கும். சுமார் 30 மில்லி லிட்டர் தாய்ப்பால் இருந்தால் போதும், அதை கொண்டு அழகான நகையாக மாற்றி அமைக்க முடியும். இதில் செயின் பெண்டென்ட், மோதிரம், கம்மல், பிரேஸ்லெட் என்று நாம் விரும்பும் அழகிய நகைகளை வடிவமைக்க முடியும்’’ என்றவர் விரும்பும் தாய்மார்கள் தங்களின் தாய்ப்பாலினை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பதையும் விளக்குகிறார்.

‘‘தங்கள் தாய்ப்பால் கொண்டு நகை வடிவமைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாய்ப்பாலினை எடுத்து ஒரு பிளாஸ்டிக் குடுவையில் வைத்து எங்களுக்கு அனுப்பிவிடவேண்டும். அது எங்கள் கைக்கு கிடைத்ததும், ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு அதை பதப்படுத்திவிடுவோம். இந்த நிகழ்வில் தாய்ப்பாலில் உள்ள ஈரப்பதம் நீக்கப்பட்டு அவை கெட்டியாக மாறிடும். பிறகு அதில் ரேசின் கலந்து விரும்பும் வடிவத்தில் நகையாக வடிவமைச்சு தருவோம். தற்போது சிறிய பெண்டென்ட் மோதிரத்தில் கற்களாக பதித்து வடிவமைச்சு வருகிறோம். எங்களின் அடுத்த கட்டம் இதில் நெக்லெஸ் போன்ற பெரிய நகைகளையும் வடிவமைக்க வேண்டும் என்பது’’ என்கிறார் சஃபியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வயிற்று கடுப்பை குணப்படுத்தும்!! (மருத்துவம்)
Next post பெஸ்ட் ஃபுட் புகைப்பட கலைஞர்னு பெயர் எடுக்கணும்!(மகளிர் பக்கம்)