
கோவிட் பாதிப்பை கட்டுப்படுத்தும் பீட்டா க்ளுக்கான்!! (மருத்துவம்)
உலகையே ஆட்டிப்படைக்கும் கோவிட் 19 தொற்றை கையாள்வது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய விஞ்ஞானிகளும் ஜப்பானிய விஞ்ஞானிகளும் கூட்டாக ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வில் ஆரியோபஸிடியம் புள்ளுலன்ஸ் (Aureobasidium Pullulans) எனப்படும் பூஞ்சை தாவரத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து, கோவிட் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவில் குறைத்து, நோயாளிகளுக்கு ஏற்படும் மேல்பாதிப்புகளை தவிர்க்கும் என்பது தெரியவந்துள்ளது.
மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட 18 முதல் 60 வயதிற்குட்பட்ட வெவ்வேறு நோயாளிகளுக்கு பொதுநடைமுறை கோவிட் சிகிச்சையுடன் சேர்த்து இருவேறு அளவுகளில் பீட்டா க்ளுக்கான் (Beta Glucan) ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், பீட்டா க்ளுக்கான் வழங்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம், மிக விரைவாக ஏற்பட்டது. மேலும் கோவிட் நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளான மூச்சுத்திணறல், அதீத உடற்சோர்வு உள்ளிட்ட போன்றவை குறைந்து காணப்பட்டது.
இந்த பீட்டா க்ளுக்கான் ஊட்டச்சத்து கோவிட் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உடல்நிலையை மேம்படுத்தும் என்பது முதற்கட்ட ஆய்வில் நிறுவப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மருத்துவ ஆய்வுகளை கட்டுப்படுத்தும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் (Indian Council of Medical Research) ஒப்புதலுக்கு பின் நடைபெற்ற இந்த மருத்துவ சிகிச்சை ஆய்வின் முடிவுகள் மிகுந்த நம்பிக்கையளிப்பதாக அமைந்ததால், இது இந்திய கிளினிக்கல் ட்ரையல்ஸ் ரெஜிஸ்ட்ரியால் (Clinical Trials Registry – India) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஊட்டச்சத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.