அன்பிற்கு இணை அன்பே!(மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 28 Second

மணக்க மணக்க வெண்பொங்கலும், சுண்டலும் இரண்டு தொன்னைகளில் வாங்கிக் கொண்டு அந்த பெருமாள் கோவிலில் ஒரு இடம் பார்த்து அமர்ந்தாள் மல்லிகா. மார்கழி மாதக் காலையில் பெருமாளை தரிசிக்க வந்தவர் கூட்டம், சலசலப்பு, ஒலிப்பெருக்கியில் இனிமையாய் ஒலிக்கும் மனதை வருடும் திருப்பாவை வரிகள், துளசியின் மணம், கூடவே பிரசாதத்தின் நெய் வாசம் – மல்லிகா இவை அனைத்தையும் உள்வாங்கி அமர்ந்திருந்தாள்.

மல்லிகா வீட்டு வேலைப் பார்க்கும் நாற்பது வயது பெண்மணி. வழக்கமாய் காலை ஆறரை மணிக்கே கோமதி வீட்டில் ஆஜராகி விடுவாள். கோமதியும், சங்கரனும் வேலைக்கு செல்பவர்கள். ஒரே மகன். கல்யாணமாகி பக்கத்து ஊரில் அவர்கள் இருவருக்கும் வேலை என்பதால் மனைவியுடன் அங்கு வசிக்கிறான்.  கோமதி வீட்டில் எட்டு மணிவரை வேலைகளை மளமளவென்று முடித்துவிட்டு, அதே தெருவிலுள்ள பர்வதம் வீட்டிற்கு போவாள் மல்லிகா. அவர்களும் வேலைக்கு செல்பவர்கள். அவர்களுக்கு ஒன்பதரை மணிவரை வேலை செய்து கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு போய்விடுவாள். மறுபடியும் மாலை இரு வீட்டிற்கும் சென்று காலையில் விட்டுப் போன வேலைகளை முடித்து தந்துவிட்டு வருவாள்.

பர்வதத்தின் பெண் கல்யாணமாகி வெளிநாட்டில் இருக்கிறாள். மகன் இரண்டு வருடங்கள் முன்புதான் திருமணம் முடிந்து வெளியூரில் அவர்கள் இருவருக்கும் வேலையென்பதால் மனைவியுடன் வெளியூரில் வசிக்கிறான். இன்று சனிக்கிழமை. விடுமுறை. பர்வதமும், கோபாலும் மகனைப் பார்க்க சென்று விட்டனர். திங்கள் கிழமை விடிகாலையில் தான் வருவார்கள். கோமதி வீடு மட்டும் தான் இன்று வேலைக்குப் போகனும். அரைமணி லேட்டானால் ஒன்றும் சொல்ல மாட்டார். பர்வதம் வீட்டு நேரத்தையும் சேர்த்து இங்கேயே செய்து விடலாம் என்றெண்ணி பெருமாளை தரிசிக்க வந்து விட்டாள்.

தரிசனம் முடிந்தது. பிரசாதத்தை கோமதியம்மா வீட்டிற்கு போய் சேர்ந்து சாப்பிடலாம் என்று எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.ஏழு மணிக்கு கோமதி வீட்டிற்குள் மணக்கும் வெண்பொங்கல், துளசி இலைகளுடன் நுழைந்தாள். ‘‘என்ன மல்லிகா, உன் வீட்டுப் பக்கம் இன்று சூரியன் அரைமணிநேரம் பர்மிஷன் எடுத்து லேட்டாக உதித்ததா ”  என்றாள் கோமதி. ‘‘அம்மா, இல்லைங்கம்மா, சனி, ஞாயிறு இல்லையா, பர்வதம்மா மகனைப் பார்க்க வழக்கம் போல் போய்ட்டாங்க. அதான் கோவிலுக்குப் போய் பெருமாளை பார்த்துட்டு வந்தேன். நீங்க ஆபீஸ் கிளம்பற வரைக்கும் வேலை செய்றேன்மா” என்ற மல்லிகா பிரசாதத்தைக் கொடுத்தாள்.

வாரக்கடைசி நாட்களில் இது வழக்கமாகிவிட்டதால் கோமதியும் ‘‘சரி சரி, தெரிந்தது தானே, இந்தா காபி,  குடிச்சிட்டுபோய் வேலைகளைப் பாரு” என்று எளிதாகச் சொல்லி தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.   மல்லிகாவிற்கு கோமதி வீடு மிகவும் பிடிக்கும். கோமதியும், சங்கரனும் மிகவும் நல்லவர்கள். அன்பானவர்கள். அவளை தங்கள் வீட்டில் ஒருத்திப் போல் தான் நடத்துவார்கள். ‘‘மல்லிகா, அதான் இவ்வளவு நேரம் எல்லா வேலையும் முடித்து விட்டாயே, இன்னைக்கு சாயந்திரம் வர வேண்டாம். உன் குழந்தைகளுடன் இருந்துக்கோ. டி.வி. பார். ஓய்வு எடுத்துக்கோ. நாளைக்கு காலையில் வந்தால் போதும்” என்றாள் கோமதி வீட்டைப் பூட்டிக்கொண்டே.

‘‘சரிங்கம்மா” என்று சந்தோஷத்துடன் கிளம்பினாள் மல்லிகா. விடியற்காலையில் கோவிலுக்கு சென்று வந்தாலே அன்று ஒரு விசேஷமான புத்துணர்ச்சி தான். அதை உணர்ந்து ரசித்தபடி நடந்தாள் மல்லிகா.அடுத்த மாதத்தில் ஒரு நாள். ‘‘ஏங்க, வீட்டு சாமான் லிஸ்ட் ரெடி. உங்களுக்கு என்ன வாங்கனும் சொல்லுங்க. சேர்த்திடறேன். வெயில் ஏறுவதற்கு முன் போய் சாமான்கள் வாங்கிட்டு வந்திடலாம் ” என்று குரல் கொடுத்தாள் கோமதி. சங்கரனும்,‘‘எனக்கென்னம்மா, என் டூத் பேஸ்ட், சோப் எல்லாம் நீயே சேர்த்திருப்பாய்.  இந்த மாசம் அடிஷனலா ஒரு புது செருப்பும், ஹெல்மெட்டும் வாங்கனும். பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி, இரண்டுமேவா அல்லது மாதத்திற்கு ஒரு அயிட்டமாக வாங்குவதா என்று நீயே சேர்த்துக்கொள்” என்றவாறு  டிஃபன் சாப்பிட அமர்ந்தார்.

அன்று அரசு விடுமுறையாதலால் இருவரும் கடைக்கு செல்லும் பிளான் வைத்திருந்தனர். மல்லிகாவும் வேலை முடித்துக் கிளம்ப, இவர்களும் கிளம்பினர். வழக்கமாக செல்லும் கடைகளுக்கு போய் லிஸ்ட் போட்ட பொருட்களை வாங்கி முடித்தனர். ‘‘ஏங்க,  உங்களுக்கு புது செருப்பு கூடவே ஹெல்மெட்டும் வாங்கியாச்சு. பேரனுக்கும் அடுத்த வாரம் வரப்போகிற பர்த்டேக்கு டிரஸ், ஷூ வாங்கியாச்சு. அப்பாடா, வேலை முடிந்தது, கிளம்பலாமா, இல்லாட்டி வேறு எதுவும் உங்களுக்கு வாங்கனுமா” என்று கேட்டுக்கொண்டே டிரைவர் உதவியுடன் வாங்கிய பொருட்களை காருக்குள் வைத்தாள்.

பொருட்களை வைத்துவிட்டு பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்துவிட்டு சங்கரனுக்கும் கொடுத்தாள். இரண்டு கார் தள்ளி பர்வதமும், கோபாலும் அவர்கள் வண்டியில் பொருட்களை வைத்துவிட்டு நிமிர்கையில் இவர்களை பார்த்துவிட்டு இவர்களை நோக்கி வந்தனர். கோமதியும் கவனித்து விட்டாள். அவர்களை பார்த்து பேசி வெகுநாளாயிற்று.                                         
                                                                             
‘‘ பார்த்து ரொம்ப நாளாச்சு பர்வதம், எப்படி இருக்கீங்க ? மகள், மகன் குடும்பத்தினர் எப்படி இருக்காங்க?’’ என்றாள் கோமதி. பர்வதமும் பரஸ்பரம் கோமதி குடும்பத்தை விசாரித்தாள்.
‘‘ வழக்கமாக மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை லீவில் வீட்டுக்கு தேவையான சாமான் வாங்கிவிடுவோம். இந்த வாரம் இடையில் இந்த லீவ் வந்ததால் கிளம்பிவந்து விட்டோம்” என்றாள் கோமதி.நான்கு பேரும் பேசிக்கொண்டே, காஃபி சாப்பிடலாமா என்று கேட்டு, முடிவெடுத்தனர். கோமதி டிரைவரிடம் ‘‘சார் கையில் இருக்கும் பையை வாங்கி வண்டிக்குள் வைத்துவிட்டு
நீங்கள் இருவரும் கூட காஃபி சாப்பிட வாங்க” என்றாள் இரு வீட்டு டிரைவர்களிடமும்.

‘‘ஏன் கோமதி, நீ மகனைப் பார்க்க போகலையா? நான் சனி, ஞாயிறு தான் போய் வந்தேன். என்ன சொல்ல, கல்யாணமாகி  இரண்டு வருஷம் ஆச்சு.எல்லோருக்கும் பதில் சொல்லி மாளவில்லை. என் மகனும் , மருமகளும் வேலை, வேலை என்று ஓடுகிறார்களே தவிர , இதுவரை ஒரு புழு பூச்சியைக் காணோம். டாக்டரையாவது பாருங்கன்னு சொன்னா மருமகள் என் மகனிடம் கண்ணீர் சிந்துகிறாள். மகனும் என்னிடம் கோபித்துக்கொள்கிறான்” என்று புலம்பினாள் பர்வதம்.

பர்வதம், மல்லிகாவிடமும் இப்படி புலம்புவது உண்டாம். மல்லிகா கோமதியிடம் அவ்வப்போது சொல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் கோமதி மனதில் சில எண்ணங்கள் ஓடும். ஆனால் மல்லிகாவிடம் காட்டிக்கொண்டதில்லை. இப்பொழுதும் அந்த எண்ணமே ஓடியது அவளுள்.‘‘பர்வதம், நாங்கள் போன வாரம் போய் பார்த்துவிட்டு வந்தோம். எப்பொழுதுமே மாதத்திற்கு ஒரு முறை தான் பார்க்க போவோம். நீங்கள் பாவம், சிரமம் பார்க்காமல் வாராவாரம் போகிறீர்கள்.” கோமதியின் பதிலைக் கேட்டு பர்வதம், கோமதிக்கு மிக நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து ரகசியம் சொல்வது போல் சொன்னாள், ‘‘நமக்கு இருப்பதோ ஒரே மகன்.

உன்னையும் சேர்த்துத்தான் சொல்றேன் கோமதி. எனக்கு என்னதான் மகள் ஒருத்தி இருந்தாலும் , அவள் என்றைக்கிருந்தாலும் வேற்று வீட்டிற்கு உரிமையாகி விட்டவள்.  இருக்கும் நம் ஒரே மகன்கள், வேலை காரணமாக வெளியூரில் தனிக்குடித்தனம் இருக்கிறார்கள். அதற்காக விட்டுவிட முடியுமா? விட்டோமானால்,அவனை அவன் மனைவி அவள் வீட்டுப் பக்கம் மாற்றிவிடுவாள்.
நாம் போகவில்லை என்றால், அவர்கள் அடிக்கடி வந்து, நம் மகன்களை அவர்கள் வீட்டுப் பக்கம் முழுதாக மாற்றிவிடுவார்கள். அதான் நாங்கள் எல்லா சனி, ஞாயிறும் அங்கு ஆஜராகிவிடுவோம்”  என்றாள் ஏதோ தங்கப்பதக்கம் வென்றதன் ரகசியம் சொல்வதுபோல்.

‘‘உன் மகனுக்கு கல்யாணமாகி நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. உனக்குப் பேரனும் இருக்கிறான். நீயேன் மாதத்திற்கு ஒரு முறை தான் போகிறாய் இதோ இங்கிருக்கிற பக்கத்து ஊருக்கு ? என்னவோ இருக்கு…. நீதான் சொல்லாமல் மறைக்கிறாய்……  என்ன, உன் மகன் மனைவியுடன் சேர்ந்துகொண்டு அவள் வீட்டுப் பக்கம் மாறிட்டானா ?? என்று வேறு பரிதாபப்
படுவது போல் வம்பாக கேட்டாள்.

கோமதிக்கு சிரிப்பு வந்தது. பர்வதத்தை பார்க்க பாவமாகவும் இருந்தது. மல்லிகா பர்வதத்தின் புலம்பலை சொல்லும் போதெல்லாம் தோன்றும் எண்ணம் மனதில் ஓடியது. தன்
மகனைப் பற்றி எகத்தாளமாய் பர்வதம் சொன்னதை வளர விட விரும்பவில்லை கோமதி.‘‘அப்படி இல்லை பர்வதம். அவர்கள் இருவரும் வேலை நிமித்தம் வெளியூரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கல்யாணமானதிலிருந்து நானும் என் கணவரும் பேசி முடிவெடுத்து, மாதத்தில் ஒரு  நாள் லீவ் போட்டுவிட்டு மகன் வீட்டுக்கு போவோம். வார நாட்களில் போவது ஏனென்றால், அவர்களும் பாவம், சிறுவயது பிள்ளைகள்.

வாரம் முழுக்க வேலைக்கு செல் வதோடு மட்டுமல்லாமல் அவர்கள் வேலைக்கு தேவையான என்னென்னவோ படிப்பு வேறு படிக்கிறார்கள். ஞாயிறு ஒரு நாள் தான் விடுமுறை. அது அவர்களுக்கு பிரத்யேகமான நாள். லேட்டாக எழுந்து , சாவாதானமாய் குளித்து, ரிலாக்ஸ்டா இருக்கும் நாள். அன்றுதான், அந்த ரிலாக்ஸ்ட் மூடில் தான் பிடித்த இடங்களுக்கு சென்று, பிடித்ததை சாப்பிட்டு, மனம் விட்டு பேச நேரம் கிடைத்து, அவர்கள் காதலை , ஒருத்தரை ஒருத்தர் அறியக் கூடிய தருணங்கள். நாங்களும் அந்த வயதில் , அத்தகைய நாட்களை கடந்து தானே வந்திருக்கிறோம். அவர்கள் தாம்பத்யம் அத்தகைய நாட்களில் அவர்களுக்கு மறக்க முடியாத அன்யோன்யத்தை தரும்.

எனவே அவர்களின் விடுமுறை நாட்களில், எங்கள் மகன் எங்களுக்கே என்று கர்சீஃப் போட்டு இடம் பிடிக்க நாங்கள் போவதில்லை. மருமகளின் வீட்டார் வந்து என் மகனை விலைக்கு வாங்கி விடுவார்களோ என்ற பயமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அவர்களின் விடுமுறை நாட்களான வாரக் கடைசியில் ஏன் வருவதில்லை, மாதத்தில் ஒரு நாள் அவர்களுக்காக லீவ் எடுத்து ஏன் வருகிறோம் என்ற காரணங்களை மகன், மருமகளுக்கு ஏற்கனவே சினேகத்துடன் விளக்கியுள்ளோம்.

எங்களின் அன்பையுணர்ந்த மருமகள் எங்களிடம் அவளின் பெற்றோர் போல் தான் அன்பாக இருப்பவள். இரண்டு வருடம் பிளான் என்று தள்ளிப் போட்டு , மூன்றாவது வருடத்தில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தைப் பெற்றுக்கொண்டனர்.  பர்வதம், நீங்கள் சொன்னதுபோல் சுற்றி உள்ளவர்கள் ஆரம்ப வருடங்களில் எங்களையும் தான் கேட்டார்கள். “அவர்கள் அடல்ட்ஸ். படித்தவர்கள். அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. அவர்களின் குடும்பம் அமைப்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு இடையில் இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க நாங்கள் பிரயத்தனப்படவில்லை”  என்று சொல்லிவிட்டோம்.

மாதத்திற்கு ஒரு முறை  நாங்கள் போகும் போது கூட , பாவம் அவர்கள் வேலை, படிப்பு என்று பிஸியாக இருப்பதால் , வீட்டிற்குத் தேவையான கோதுமை மாவு, ராகி மாவு, சாம்பார் பொடி, ரசப்பொடி, பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி என்று தேவையானவற்றை அரைத்து எடுத்துக் கொண்டு போய், அந்தந்த இடங்களில் டப்பாக்களில் நிரப்பி வைத்து விடுவோம். முடியும் நாட்களில் தேவையான இடங்களை சுத்தம் செய்து வைத்து விட்டு வருவோம்.

அவர்கள் வேலைக்கு சென்றிருப்பார்கள்.  வீட்டிற்கு வந்து பார்க்கையில் அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் நிறைவு தான் பெற்றவர்கள் நமக்குத் தேவை. நம் பிள்ளைகள் வாழத்தானே மணம் முடித்துக் கொடுத்தோம். இதில் காவல் காக்க என்ன இருக்கிறது? கொடுக்கப்படும் அன்பிற்கு,  பதிலுக்கு கிடைப்பது அன்பாக மட்டும் தான் இருக்க முடியும்.  மகனோ, மகளோ, பிள்ளைகளை வாழவிட்டு கண்குளிரப் பார்ப்பதே, நாம் வாழ்க்கையில்  இதுவரை பெற்றது, இழந்தது எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும். இந்த வயதில் நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்வோம். அவ்வளவுதான். கடவுள் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார்” என்றாள் கோமதி புன்னகையுடன்.

பர்வதம் முகத்தில், கோமதியின் கருத்தில் நூறு சதவிகிதம் அளவிற்கு ஒப்புதம் தெரியவில்லை. எனினும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார் என்பது அவர் முகத்திலுள்ள சிறிதளவு குழப்பத்தில் கவனித்தார் சங்கரன்.  ஆனால், கோபால் முழுவதும் ஆமோதித்தார். சங்கரனும் இதுபோதும் என்பது போல் கோமதியை பார்த்தார். ‘‘என்னவோ  சொல்ற போ. முயற்சி பண்றேன் கோமதி, பார்ப்போம்” சொல்லிக்கொண்டே பர்வதம் கைப்பையை எடுத்துக்கொள்ள எல்லோரும் எழுந்தனர். பர்வதத்தின் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுத்து, வருடிவிட்டாள் கோமதி. சங்கரன் வற்புறுத்தி, உரிமையுடன் பில்லுக்கு நான்தான் பணம் கொடுப்பேன் என்று ஊழியர் வைத்த பில்லுடன் வைத்தார். கோபாலும் சிறிது நேரம் தடுத்துப் பார்த்து, ‘‘சரி, உங்கள் அன்பிற்கு எங்களின் அன்பே பதில் ” என்று நட்புடன் கைகுலுக்கி  விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இணையத்தை கலக்கும் பாடகி பிரனிதி!! (மகளிர் பக்கம்)