பெண்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் ஆரி டிசைன்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 25 Second

இப்போது 23 வயதாகும் ஜனனி, தன்னுடைய 11 வயதில் இருந்தே டெய்லரிங் மற்றும் ஆரி வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் மதுரை முத்தமிழ் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான இளம் தொழில்முனைவோர் என்ற விருதையும் இவர் வென்றுள்ளார். பெண்களுக்கு ஒரே வாரத்தில் ஆரி கலையை கற்றுக்கொடுக்கும் இவர்தான் இப்போது இந்த துறையின் மோஸ்ட் வாண்டட் ஆரி கலைஞர்.

கும்பகோணத்தை சேர்ந்தவர் ஜனனி. ஆறாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடைய உடைகளை தானே தைத்துக் கொள்வார். எட்டாம் வகுப்பு கோடை விடுமுறையில்தான் எம்ப்ராய்டரி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். ‘‘ஆரம்பத்தில் என்னுடைய அம்மாவுக்குதான் இந்த டெய்லரிங் செய்வதில் எல்லாம் ஆர்வம் இருந்தது. அவர் தன்னுடைய சின்ன வயதில் என் பாட்டி தாத்தாவிடம் டெய்லரிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய போது, என் தாத்தா பாட்டியால் என் அம்மாவை டெய்லரிங் வகுப்பிற்கு அனுப்ப முடியவில்லை.

அதனால் தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன் மகளுக்கு கிடைக்க வேண்டும் என ஆர்வமாக என் அம்மாதான் இந்த வகுப்புகளில் எல்லாம் என்னை சேர்த்துவிட்டார். அது வரைக்கும் எனக்கு அதில் ஆர்வமோ விருப்பமோ இருக்கவில்லை. அம்மா சேர்த்துவிட்டாங்கன்னு தான் பயிற்சி பெற்றேன். அதன் பிறகு எனக்கான உடைகளை நானே வடிவமைக்க ஆரம்பித்தேன். இதைப் பார்த்து பலரும் அசந்து போய், ‘‘இவ்ளோ சின்ன வயசுல, இதை நீயா உருவாக்கின” என்று கேட்கும் போது தான், என்னுடைய திறமை எனக்கே தெரிய வந்தது. ஆரி வேலைப்பாட்டில் ஆர்வம் அதிகரித்தது.

மற்றவர்கள் பெருமையாக பேச வேண்டும், என்னை மீண்டும் பாராட்ட வேண்டும் என்பதற்காக கடின உழைப்பு செலுத்தி அந்த சின்ன வயதிலேயே ப்ளவுஸ்களில் ஆரி வேலைப்பாடுகளை செய்ய கற்றுக்கொண்டேன். இப்படியே முதலில் எனக்கு ஆரம்பித்து, பின் எனக்கு தெரிந்தவர்களுக்கும் ஆரி ப்ளவுஸ் செய்து கொடுத்தேன். எல்லாம் நல்லபடியாக இருந்தது. அப்போது தான் இரண்டாண்டுகளுக்கு முன், என் அப்பா திடீரென உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். அது வரை எங்களுடைய வீடு எங்கள் அப்பா சொல்லியதைக் கேட்டுதான் வாழ்ந்து வந்தோம். திடீரென அவர் இறந்து போனது எங்களுக்கு தனியாக எப்படி வாழ்க்கையை நடத்துவது என்றே தெரியவில்லை.

அது நாள் வரை நான் ஆரி வேலை செய்து சம்பாதித்தாலும், பணத்திற்காக அதை செய்தது கிடையாது. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்வேன். ஆனால் அப்பா இறந்த பின், எங்களுக்கு வருமானமே இல்லை. இது வரை நான் சம்பாதித்த பணத்தையும் என் அம்மாவிடம்தான் கொடுத்து வைத்திருந்தேன். குடும்பத்தை நடத்த வருமானம் தேவைப்பட்டது. அப்போது தான் முறையான ஆரி வகுப்புகளையும், ஆரி வேலையையும் ஆரம்பித்து அந்த வேலைக்கு தகுந்த ஊதியத்தையும் பெற ஆரம்பித்தேன்.

இந்த ஆரி வேலை உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்ததைக் காட்டிலும், என் குடும்பத்திற்கு வருமானத்தை கொண்டு வந்து கொடுத்தது. அது வரைக்கும், என்னிடம் துணிகள் தைத்துக் கொண்டு போய், இதோ நிகழ்ச்சி முடிந்ததும் பணம் கொடுக்கிறேன் என்று போனவர்கள், திரும்பி வராத கதைகள் எல்லாம் நிறைய இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் நியாயமான விலையை நிர்ணயித்து முறையாக இந்த தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். பாராட்டுகள் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், குடும்பத்தை நடத்த உண்மையில் பணம் தான் தேவை என புரிந்தது.

நான் வகுப்புகள் நடத்த ஆரம்பித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய ஊரில் எனக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. பல பெண்கள் என்னிடம் ஆரி வேலைப்பாட்டினை கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். என்னை விட வயதில் மூத்த பெண்கள், கணவரை இழந்து தனியாக வாழும் பெண்கள், குழந்தைகளின் பள்ளி கட்டணத்திற்கு ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் என பலதரப்பட்டவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அன்று வரை இந்த வேலையில் அருமையும் சிறப்பும் தெரியாமல் விளையாட்டாக அம்மாவிற்காக மட்டுமே செய்து வந்தேன்.

அப்பாவிற்கு பின், குடும்பத்தின் வருமானத்திற்காக செய்தேன். ஆனால், இத்தனை பெண்களிடம் பேசிய பின், என்னுடைய இந்த திறமை எவ்வளவு பெரிய வரம் என்று புரிந்தது. பல பெண்களை தூக்கிவிட இந்த தொழில் எவ்வளவு உதவியாய் இருக்கும் என்பதும் எனக்கு புரிந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து பல பெண்களுக்கு குறைந்த விலையில் ஆரி வேலைப்பாட்டுக்கு பயிற்சி கொடுத்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பயிற்சி கொடுத்த மாணவர்கள் பலர், சொந்தமாக ஆரி ஸ்டுடியோ ஆரம்பித்துள்ளனர். சிலர் ஒன்றாக சேர்ந்து வேலை செய்கின்றனர். தங்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்டிக்கொள்ள இந்த ஆரி வேலைப்பாடு அவர்களுக்கு உதவியாய் இருக்கிறது.

என் அப்பா, என் பள்ளிக்கு நேர் எதிரே ஒரு ஸ்டேஷ்னரி கடையை வைத்திருந்தார். நான் காலை எழுந்ததும் நேராக என் அப்பாவுடன் கடையில் உட்கார்ந்து அவருக்கு உதவியாய் இருப்பேன், ஸ்கூல் பெல் அடித்ததும் பள்ளிக்குச் சென்று, ஸ்கூல் முடிந்ததும் நேராக மீண்டும் அப்பாவின் கடைக்கு வந்து இரவு கடையை மூடும் வரை அங்கேயே தான் இருப்பேன். இன்று பலரும் என்னைத் தேடி, என்னிடம் தான் ஆரி பயில வேண்டும் என்று வருகிறார்கள்.

கொரோனா சமயத்தில் பல ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வந்தேன். ஆனால் இப்போது பலரும் தங்களுடைய ஊருக்கே வந்து என்னை சொல்லிக் கொடுக்க முடியுமா என்று கேட்டனர். அதனால், நான் அவர்களிடம், உங்க ஊரில் ஒரு பத்து மாணவர்கள் ஒன்றாக சேர்ந்தால், நிச்சயம் அவர்களுடைய இடத்திற்கு நானே போய் வகுப்புகள் எடுப்பதாக சொல்லி இருந்தேன். அதே போல இப்போது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊர் என பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. இது வரை எட்டு மாவட்டங்களில் இருக்கும் இடங்களுக்கு சென்று வகுப்புகள் எடுத்துள்ளேன். ஆரம்பத்தில் என்னுடைய ஊரிலிருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் இருக்கும் இடங்களை தேர்வு செய்து என்னுடைய ஸ்கூட்டியிலேயே போய்ட்டு வருவேன். ஆனால் இப்போது தொலைவான இடங்களுக்கும் சென்று அங்கேயே தங்கி வகுப்புகள் எடுக்கிறேன்.

நான் அளிக்கும் ஒரு வார பயிற்சியில், ஏழாவது நாள் நிச்சயம் என்னுடைய மாணவர்கள் ஒரு ப்ளவுசில் ஆரி வேலை செய்துவிடுவார்கள். பொதுவாக ஆரி வகுப்புகள் 15 ஆயிரத்திலிருந்து இருக்கும். ஆனால் நான் மெட்டீரியலுடன் சேர்த்தே 5,000 ரூபாயிலிருந்து வகுப்புகளை வடிவமைத்து இருப்பதால் எனக்கு நடுத்தர மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னுடைய 13 வயதில் இருந்து ஆரி வேலை செய்து வருவதால், எனக்கென தனி நுட்பங்களை நான் கற்றுள்ளேன்.

குறிப்பிட்ட தையல்களை மட்டுமே போட்டு ஆரி வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று என் மாணவர்களுக்கு எளிதாக கற்றுக்கொடுக்கிறேன்.  ஆரி க்ரியேடிவ்ஸ் கும்பகோணம் (sri_aari_creatives_kumbakonam) என்ற பெயரில் இப்போது என்னுடைய ஆரி வேலைகளையும், வகுப்புகளையும் எடுத்து வருகிறேன்” என்கிறார்லங்கா, மலேசியா, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் இருந்தும் இந்தியாவில் வெஸ்ட் பெங்காலில் இருந்தும் ஆன்லைனில் மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். அதே போல எந்த டிசைனில் ஆரி ப்ளவுஸ் வேண்டும் என்பதை வாட்ஸ்-அப்பில் தெரிவித்து மெட்டீரியலை கொரியர் செய்தால், நேரடியாகவே ஆரி வொர்க் ப்ளவுசை இவர் உங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்துவிடுவார். யுடியூபில் K Town Aari Creatives என்ற பெயரிலும் சில முக்கியமான ஆரி வேலை நுணுக்கங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சோடாமாவு சேர்க்காத ஆப்பம் முடக்கத்தான் காரப் பணியாரம் வாழைப்பூ வடை,செம்பருத்தி பால்!(மகளிர் பக்கம்)
Next post மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எப்போ? யாருக்கு? எப்படி? (மருத்துவம்)