படைப்பாற்றல் இருந்தால் கட்டிடத்துறையில் சாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 51 Second

‘‘படைப்பாற்றல் திறன் இருந்தால் பொறியியல் மாணவர்கள் அதிகம் சாதிக்கலாம்’’ என்கிறார் கட்டிடக்கலை பேராசிரியை ஹரிணி. ‘‘எங்களுடையது நடுத்தர குடும்பம். அம்மா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அப்பா சிறுதொழில் முனைவர். நானும் என் தங்கையும் பள்ளிப் பருவம் முழுவதையும் அரசு உதவி பெரும் பள்ளியில் தான் படித்தோம். அப்ப நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அம்மா, அப்பா இருவரும் தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட வேலையில் இருந்தாலும், அந்த வருமானம் போதுமானதாக இல்லை. அதனால இருவரும் ஒரு சிறிய அளவில் உணவகம் ஆரம்பிக்கலாம்னு திட்டமிட்டு அதை நிறைவேற்றினர்.

அந்த உணவகத்தில் இருந்து வந்த வருமானம் எங்களின் பள்ளிப் படிப்பிற்கு மிகவும் உதவியாக இருந்தது. அம்மா வேலை முடிந்து வந்ததும் கடைக்கு தேவையான உணவுகளை தயார் செய்வாங்க. நானும் என் தங்கையும் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் உணவகத்திற்கு வந்திடுவோம். அங்கு சின்ன சின்ன வேலைகளை செய்வோம். அதனால் சிறுவயதில் இருந்தே வாழ்வில் கஷ்ட, நஷ்டங்கள், பணம், நேரத்தின் அருமை புரிந்து தான் வளர்ந்தேன். அது தான் எனக்கும் என் தங்கைக்கும் எதிர்காலத்தில் ஒரு தன்னம்பிக்கை பாலமாக அமைந்தது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் 11 ம் வகுப்பு முதல் இளங்கலை பட்டம் வரை படிப்பதற்கான அரசு உதவித்தொகை கிடைத்தது. அதை நான் மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்த நினைத்தேன்.

அதாவது எனக்கு படிக்க உதவித் ெதாகை கிடைக்கிறது என்று அலட்சியமாக இல்லாமல் நன்றாக படித்து ஒரு நிலையான வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் படித்தேன். மேலும் எனக்கு சிறுவயதில் இருந்தே கட்டிடக்கலை வடிவமைப்பில ஆர்வம் இருந்தது. எனவே கட்டிடக்கலை துறையில் இணைந்து இளங்கலை படித்தேன். கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பதால், என்னுடைய கவனம் சிதறாமல் படிப்பில் மட்டுமே போக்கஸ் செய்து படிச்சேன். என்னுடன் தங்கி இருக்கும் சக தோழிகள் விடுமுறை நாட்களில் விடுதியில் இல்லாமல், எங்காவது சென்று வருவார்கள்.

ஆனால் என் குடும்ப நிலையை நினைத்து பார்க்கும் போது எனக்கு அவர்களை போல் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. காரணம் எங்களின் வளர்ச்சிக்காக ஊரில் என் பெற்றோர் படும் கஷ்டத்தையும் எங்களின் ஏழ்மை நிலையையும் பற்றிய சிந்தனையாகவே இருக்கும். பல நாட்கள் அதை நினைத்து அழுதும் இருக்கேன். ஆனால் அந்த சிந்தனைகள்தான் ஒழுக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும், விடா முயற்சிகளுக்கும் விதையாக அமைந்தது’’ என்றவர் படிப்பு முடித்த கையோடு தனியார் நிறுவனத்தில் கட்டிட வடிவமைப்பாளராக பணிக்கு ேசர்ந்துள்ளார்.

‘‘படிப்பு முடிச்சதும் வேலை… அடுத்து கல்யாணம் என்பதுதான் ஒவ்ெவாரு பெண்களின் வாழ்க்கை முறை என நியமிக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாழ்க்கையும் அதில் விதிவிலக்கல்ல. எனக்கும் எங்க வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். நான் கட்டிட துறையை சார்ந்து இருப்பதால், என் கணவரும் அதே துறையை சார்ந்தவராக அமைந்தார். திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என்பதால் பல பெண்கள் தங்களின் வேலையினை விட வேண்டிய சூழல் ஏற்படும். ஒரு சிலர் கணவர் சொந்த தொழில் செய்து வந்தால் அதில் இணைவர். சிலர் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். என் கணவரும் நானும் கட்டிட வடிவமைப்பு வல்லுநர்கள் என்பதால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், எங்களுக்கு என சொந்தமாக தொழில் செய்ய விரும்பினோம்.

அதனால், எங்களுக்காக சொந்தமாக ஒரு அலுவலகம் அமைத்து, அலுவலக நேரம் போக அதில் சுயமாக செயல்பட முற்பட்டோம். சிறு சிறு வீடு வடிவமைப்பதில் தொடங்கி எங்களது ஆலோசனை மற்றும் பணிகள் இன்று அடுக்கு மாடி கட்டிடங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், சமூக கூடங்கள், அலுவலகங்கள் என்று விரிந்து வளர்ந்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கான காரணம் எந்த ஒரு தொழிலிலும் வரும் சிக்கல்களையும், சவால்களையும், இன்னல்களையும் சாமர்த்தியமாக கையாண்டு வருவதால்தான்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் அவளின் அப்பா தான் ரோல் மாடல். எனக்கும் அப்படித்தான். என்னுடைய அப்பா என் திறமைக்கு என்றுமே மதிப்பு கொடுப்பவராகவே இருந்தார். அதே சமயம் அப்பாவிற்கு அடுத்து என்று பார்த்தால், என் கணவர்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறார். ஒரு சிலருக்குத் தான் தந்தையை போல் கணவரும் அமைவாங்க. அப்படி கணவரும்
என் திறமையை அங்கீகரித்து, திருமணமாகி பத்து வருடங்களுக்கு பிறகு என்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் முதுகலை படிக்க வைத்து ஊக்குவித்தார். முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கத்துடன் வீட்டுக்கு வந்தேன். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டயக்கல்வியை பயின்று கொண்டிருக்கிறேன். கல்வியின் பயன் பிறர் அறியாமையை நீக்குவது என்று உணர்ந்தேன்.

அதனால் நான் பார்த்து வந்த கட்டிட நிறுவன வேலையை விட்டுவிட்டு சென்னை ஆவடியில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலை பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன்’’ என்று கூறும் ஹரிணி கட்டிடக் கலைப்பற்றி விவரித்தார். ‘‘ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதை விட ஆசிரியராக பணிபுரியும் போது தான் கட்டிடக்கலையின் உன்னதம் எனக்கு புரிய ஆரம்பிச்சது. இந்த துறை முடிவில்லாதது.

காலத்திற்கு ஏற்ப வளர்ந்து வரும் துறையாகவே கருதப்படுகிறது. உயர்ந்து நிற்கும் கற்கோவில்கள், கோட்டைகள், சங்ககால வடிவமைப்புகள், பாரம்பரிய வீடுகள், ஊர் அமைப்புகள் இன்றும் நம் முன்னோர்களின் நாகரிக வாழ்க்கை முறைகளை கண்ணெதிரே கொண்டு வந்து காட்டுகிறது. நாகரிகம் வளர கட்டிடக்கலையும் வளர்ந்தது. தற்போது தொழில்நுட்பத்தின் துணையோடு எந்த ஒரு வடிவிலும் கட்டிட அமைப்பையும் கொண்டு வர முடியும். செயற்கை நுண்ணறிவை கொண்டு ஒரு கட்டிடத்தில் மனிதனுக்கான தேவைகளை இயக்க முடியும். எந்த ஒரு தொழில்நுட்பம் இல்லாத நம் கோயில் கோபுரங்கள், கோட்டைகளை கண்டு இன்றும் வியந்து வருகின்றனர்.

இந்த துறையை தேர்வு செய்ய விரும்புபவர்கள் +2 வகுப்பு முடிச்சதும், இதற்கான நுழைவுத்தேர்வு எழுதி இளங்கலை கட்டிடக்கலை படிக்கலாம். கடினமானது தான் என்றாலும், ஆர்வத்துடன் படித்தால் எதுவுமே எளிதாகும். பலவகையான கட்டிடங்கள் வடிவமைப்பது, நுட்பமான, நேர்த்தியான வரைபடங்கள் வரைவது, பொருள்கள் வடிவமைப்பது, மின்னிலக்க மாதிரிகள் வடிவமைப்பது போன்றவற்றில் கைதேர்ந்தவராகலாம். இப்படிப்பு ஒருவரை படைப்பு சிந்தனையாளராக உருவாக்குகிறது.இத்துறையில் பயின்றவர்களுக்கு பொறியியல், மின்னிலக்கத் தொழில்நுட்பவியல், நுண்கருவியியல், ஒலியியல், சமூகவியல், நகர்ப்புற வடிவமைப்பு, இயற்கை வடிவமைப்பு, மானுடவியல், உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளில் பணி செய்ய வாய்ப்புகள் வளர்ந்து கொண்டே வருகிறது.

நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தொழில் நுட்பத்தின் துணையோடு செயல்பட இந்த துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக பொறியியல் மாணர்களுக்கு சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்பவர்கள் என்றுதான் கூறுவார்கள். ஆனால் இந்த துறையில் பொறியியல் அறிவுடன் கிரியேட்டிவ் நாலேஜும் இருந்தால் சாதிக்க முடியும்’’ என்று கூறும் ஹரிணி ‘சிங்கப்பெண் 2022’ விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆக்டிவிட்டி கிட் உருவாக்கிய 18 வயது மாணவி! (மகளிர் பக்கம்)
Next post பூஜா ஹெக்டே… ஃபிட்னெஸ் சீக்ரெட்!(மருத்துவம்)