12 வயதில் பேக்கரி தொழில்முனைவோர்!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 34 Second

12 வயது வினுஷா, ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ஆனால் வினுஷா அவளுடைய பத்து வயதிலேயே தன்னுடைய சுய தொழிலை ஆரம்பித்து, தமிழ்நாட்டின் இளம் தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறாள். ‘‘நான் ரொம்ப சின்ன பொண்ணா இருக்கும் போதே நிறைய பேக்கிங் வீடியோஸ் பார்ப்பேன். எனக்கு கேக், சாக்லெட் ரொம்ப பிடிக்கும். அதனால் அதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவேன். அதிலும் கப்கேக்ஸ் ரொம்பவே பிடிக்கும். அப்ப எனக்கு ஒன்பது வயசு இருக்கும்.

என் அம்மாவின் பிறந்த நாளுக்கு நானே கேக் செய்யலாம்ன்னு நினைச்சேன். முதல் முறையாக ஒரு கேக்கை தயாரித்தேன். அதற்கு என் தோழியும் எனக்கு உதவி செய்தார். கேக்கும் நன்றாக வந்ததால், அன்று முதல் எனக்கு பேக்கிங் மீதான ஆர்வம் அதிகமானது. இதை கவனித்த என் அம்மாவும் அப்பாவும் என்னை ஒரு ஹோம் பேக்கரிடம் முறையாக பேக்கிங் கற்க சேர்த்துவிட்டார்கள். அங்கு தான் அடிப்படையான பேக்கிங் முறைகளை எல்லாம் கற்றுக்கொண்டேன். எல்லா பயிற்சியும் அங்கு எடுத்துக் கொண்ட பிறகு வீட்டில் பேக்கிங் செய்யாமல், இதனை தொழில் ரீதியாக அணுக நினைச்சேன். அதனால் இன்டர்ன்ஷிப் போக முடிவு செய்தேன்.

பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை அணுகினேன். ஆனால் அவங்க எல்லோரும் நான் ரொம்ப சின்ன பொண்ணு என்பதால் இவ்வளவு சின்ன பொண்ணை வேலைக்கு வைக்கக் கூடாதுன்னு சொல்லி எனக்கு ட்ரெயினிங் கொடுக்க மறுத்துட்டாங்க. ஆனாலும் நான் என்னுடைய முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து நட்சத்திர ஓட்டல்களை அணுகி வந்தேன். அந்த சமயத்தில் தான் சவேரா ஓட்டலின் நிறுவனரான நீனா ரெட்டி அவர்களை சந்தித்து என் விருப்பத்தை சொன்னேன். என் ஆர்வத்தைப் பார்த்து அவர்களின் ஓட்டலில் இன்டர்ன்ஷிப் செய்ய எனக்கு அனுமதி கொடுத்தாங்க.

அங்கு கேக், ப்ரவுனிஸ், பைஸ் (pie) எல்லாம் செய்ய கற்றுக்கொண்டேன். மேலும் ஒரு பெரிய ஓட்டலில் பேக்கிங் கலைஞர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை அருகில் இருந்து பார்த்த வாய்ப்பே எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. அவர்களிடமிருந்து சிறிய சிறிய நுணுக்கங்களையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டேன். அங்கு கற்றுக் கொண்ட பிறகு ஒரு பிரபல பேக்கரியிலும் பேஸ்ட்ரிகள் எப்படி செய்வது என்பதையும் கற்றுக்கொண்டேன்’’ என்றவர் 2019ம் ஆண்டு Fourseasonspastry என்ற பெயரில் கப்கேக்ஸ் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

‘‘என்னுடைய ஆர்வத்தை பார்த்த என் பெற்றோர் ஒரு முறை என்னை தொழில்முனைவோர் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அது வரை தொழில்முனைவோர் என்ற பெயரினை நான் கேள்விப்பட்டதே இல்லை. மேலும் அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற பிறகு தான் எனக்கு சுயமாக ஒரு தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என் பெற்றோரிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவர்கள் முறையாக பதிவு செய்து ஆரம்பிக்க எனக்கு ஆலோசனை கொடுத்தார்கள்.

அப்படித்தான் Fourseasonspastry உருவானது. Four Seasons என்றால், நான்கு கால பருவங்களை குறிக்கும். கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் மற்றும் வசந்த காலத்தை குறிக்கும் கப் கேக்குகளை நான் தயாரிப்பது தான் என் ஸ்ெபஷல்” என்கிறார் வினுஷா.

இதுவரை 2000 கப் கேக் பேக்குகளை வினுஷா விற்றுள்ளார். இது தவிர குழந்தைகளுக்கு பேக்கிங் கிட்டையும் வினுஷா வழங்கி வருகிறார். முதல் முறையாக பேக்கிங் செய்ய விரும்புபவர்களுக்கு வினுஷா பேக்கிங் கிட்டில், கேக் செய்ய தேவையான பொருட்களுடன் கேக் எப்படி செய்வது என்ற செய்முறை விவரங்கள் அடங்கிய குறிப்பும் அந்த பேக்கிங் கிட்டில் இருக்கும். எளிதில் காலாவதியாகும் பொருட்களான முட்டை போன்றவற்றை மட்டும் வாடிக்கையாளர்கள் வெளியில் வாங்கிக் கொள்ளவேண்டும்.

இந்த பேக்கிங் கிட்டுகளில் கப்-கேக், பிலாண்டி (வெனிலா ப்ரவுனி) மற்றும் குக்கீஸ் செய்வதற்கான பொருட்களும் செய்முறை விளக்கமும் இருக்கும். இந்த கிட்டினை இவர் இந்தியா முழுவதும் விற்கிறார். இந்த பேக்கிங் கிட்டின் மற்றொரு சிறப்பம்சம், இதில் கேக் செய்முறையுடன், இதற்கு பின்னால் இருக்கும் அறிவியலையும் வினுஷா தன் வாடிக்கையாளர்களுடன் பகிர்கிறார். இதை எல்லாம் வினுஷாவே சுயமாக சிந்தித்து டிசைன் செய்து செயல்படுத்தியது. இதுவரை நூற்றுக்கும் அதிகமான பேக்கிங் கிட்டுகளை வினுஷா விற்பனை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்
தக்கது.

‘‘எனக்கு பேக்கிங் மற்றும் படிப்பதற்கு என இரண்டு தனிப்பட்ட அறைகளை என் பெற்றோர் எனக்காக வசதிப்படுத்தி கொடுத்திருக்காங்க. நான் கேக் தயாரித்த ஆரம்ப காலத்தில் அதை விற்பதற்காக பல நிகழ்ச்சிகளில் ஸ்டால்களை அமைத்து வந்தேன். அப்படித்தான் என்னுடைய நிறுவனத்தைப் பற்றிய விவரங்கள் மற்றவர்களுக்கு தெரிய வந்தது. ஆனால் அதற்குள் கொரோனா நோய்த் தொற்று அதிகமானதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் என்னால் இது போன்ற ஸ்டால்கள் அமைக்க முடியவில்லை.

பள்ளி வகுப்புகளும் ஆன்லைனில் மாறியதால், எனக்கு வீட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அப்போது நானும் என் பெற்றோரும் சேர்ந்து என்னுடைய நிறுவனத்திற்காக ஒரு வெப்சைட் ஆரம்பித்தோம். அப்படியே சோசியல் மீடியாவிலும் என் நிறுவனத்திற்காக அதிகாரப்பூர்வ பக்கங்களை ஆரம்பித்தேன். அதுவரை எனக்கு லேப்டாப் கூட எப்படி பயன்படுத்தணும்ன்னு தெரியாது. அம்மா, அப்பா தான் சொல்லிக் கொடுத்தாங்க. வெப்சைட்டிலும் சோசியல் மீடியாவிலும் கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்ததும் என்னை சில பள்ளியிலும் கல்லூரிகளிலும் அழைத்து, இளம் தொழில்முனைவோராக அறிமுகம் செய்து என்னுடைய அனுபவங்களை எல்லாம் மாணவர்களுடன் பகிர சொன்னார்கள். ஒரு முறை 1500 கல்லூரி மாணவர்களுக்கு முன்னால், மேடையில் நான் என்னுடைய தொழில் பற்றியும் பேக்கிங் மீதான ஆர்வம் குறித்தும் பேசினேன்.

அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது’’ என்றவர் லாக்டவுன் வரை பேக்கிங் குறித்து குழந்தைகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே நேரடி வகுப்புகளை நடத்தி வருகிறார். ‘பிறந்தநாள் விழாக்கள், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கும் நான் கேக் தயாரித்து தருகிறேன். எனக்கு இன்னும் 18 வயசு ஆகாததால், என் கம்பெனிக்கு என்னால் சட்டப்படியான உரிமையாளராக இருக்க முடியாது.

அதனால் என் நிறுவனத்துடைய மொத்த பொறுப்பினையும் என் அம்மாவும் அப்பாவும் பார்த்துக் கொள்கிறார்கள். நான் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கேன். ெபரிய அளவில் லாபம் பார்க்கவில்ைல என்றாலும் வரும் லாபம் பேக்கிங்கான பொருட்கள் வாங்க உதவியாக இருக்கும். மேலும் எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காகவும், சுய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது” என்று கூறும் வினுஷாவிற்கு எதிர்காலத்தில் கேக், குக்கீஸ் போன்ற டெசர்ட் தொழிலில் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்பதுதான் கனவு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விதைப்பை புற்றுநோய் அலர்ட்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அக்கா கடை-தொழிலாளர்களுக்காகவே நள்ளிரவு மட்டுமே இயங்கும் உணவகம்!(மகளிர் பக்கம்)