அம்மா-குழந்தைகளுக்கான ஸ்பெஷல் பயணங்கள்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 57 Second

கோவிட் சமயத்தில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை ஹோம்-ஸ்கூலிங். அதாவது குழந்தைகளுக்கு வீட்டிலேயே அவர்களுக்கு ஏற்ற பாட அட்டவணையை தயாரித்து ஒரு மாற்று கற்றல் முறையை பெற்றோர்கள் பின்பற்றி வருகின்றனர். அப்படி ஹோம் ஸ்கூலிங் செய்யும் இரண்டு அம்மாக்கள், வீட்டில் பாடம் கற்பதை தாண்டி பயணங்களின் மூலம் அனுபவ ரீதியான கற்றலையும் ஊக்குவிக்க இந்த ட்ரிப்ஸ்டர் பட்டீஸ் (Tripster Buddies) எனும் பயணக் குழுவை உருவாக்கியுள்ளனர்.

லக்‌ஷனா ஷ்ரவன் முதலில் இந்த அமைப்பை உருவாக்கி இரண்டு பயணங்களை மேற்கொண்டதும், அவரது தோழி துர்கேஷ் நந்தினியும் இந்த அமைப்பில் இணைந்து கொண்டார். லக்‌ஷனா ஷ்ரவன், துர்கேஷ் நந்தினி இருவரும் நண்பர்கள். இருவருமே தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே ஹோம்-ஸ்கூலிங் செய்து வருகின்றனர். இந்த ஹோம்-ஸ்கூலிங்கை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ரோட்-ஸ்கூலிங் எனும் புதிய முயற்சியை இவர்கள் கையில் எடுத்துள்ளனர். குழந்தைகளுக்கு முழுமையான ஒரு கல்வியையும், அனுபவத்தையும் புத்துணர்ச்சியையும் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ட்ரிப்ஸ்டர் பட்டீஸ் அமைப்பை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த ட்ரிப்ஸ்டர் பட்டீஸ் அம்மாவும்-குழந்தைகளும் மட்டுமே பங்கு பெறும் பயணங்களாகும். உங்கள் குழந்தையோடு, உங்கள் குழந்தைக்காக பயணிக்கும் போது… தனித்திறமைகள், பழக்க வழக்கங்கள், நல்ல குணங்கள் போன்ற பல பண்புகளை அவர்கள் பெறுகிறார்கள் என்பது இந்த ேதாழியரின் கூற்று. லக்‌ஷனா ஷ்ரவன், சேலத்தை சேர்ந்தவர், திருமணத்திற்கு பின் பெங்களூரில் செட்டிலாகி இப்போது அங்கு தான் வசித்து வருகிறார். ‘‘சின்ன வயசுல இருந்தே எனக்கு ட்ராவல் போக பிடிக்கும். என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும் போதே நாங்கள் இருவரும் தனியாக பயணிக்க ஆரம்பித்துவிட்டோம். பெரிய சாகச பயணங்கள் எல்லாம் போக மாட்டோம். என் உறவினர்கள் தங்கியிருக்கும் ஊர்களுக்கு செல்வோம்.

அங்கு அவர்கள் வீட்டிலேயே தங்கி, அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்வோம். ஏரி, நீர் வீழ்ச்சி, வயல்களுக்கு அங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் செல்வோம். அந்த ஊரின் உணவு, அந்த ஊரின் மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துகொள்வோம். அந்த ஊரில் என்ன உணவு கிடைக்கிறதோ என் மகன் அதை சாப்பிட பழகிக் கொண்டான். இலக்கியம், மொழி, கணிதம், அறிவியல், தாவரவியல், விலங்கியல் என எல்லாமே தனித்தனி பாடங்கள் இல்லை. இது எல்லாம் சேர்ந்ததுதான் இயற்கை என்பது இது போன்ற பயணங்களில்தான் எனக்கு தெரிந்தது. இதனை அனுபவ ரீதியாக மட்டுமே கற்க முடியும். ஒருவர் சொல்லிக்கொடுத்தோ இல்லை பாட புத்தகங்களின் வழியாகவோ இதை தெரிந்து கொள்ள முடியாது என்பது எனக்கு புரிந்தது.

பயணங்கள் மகிழ்ச்சியை தாண்டி, நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பெரிய பாடங்களை கற்றுக்கொடுப்பது எனக்கு புரிந்தது. பயணங்கள் வாயிலாக கற்கப்படும் கல்வி நம் உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருக்கும். உணர்ச்சிகளின் வழியே இந்த கல்வியை அவர்கள் முழுவதுமாக அறிந்துக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தை எல்லாம் என்னுடைய மற்ற ஹோம்-ஸ்கூலிங் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொண்டேன், அவர்கள் ஏன் எங்களை அழைக்கவில்லை. அடுத்த முறை எங்களையும் அழைக்க வேண்டும் என்றனர். அப்போதுதான் இத்தனை பேர் ஆர்வமாக இருக்கும் போது, இதை முறையான ஒரு கல்விப் பயணமாகவும் அனுபவ பயணமாகவும் உருவாக்க வேண்டும் என நானும் நந்தினியும் முடிவு செய்தோம்.

2019ல் முதல் முறையாக பெங்களூரிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் முருகுமலா, கைவாரா எனும் இரண்டு சிறிய கிராமங்களுக்கு சென்றோம். இந்த இரண்டு கிராமங்களுமே பட்டுப்புழு வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டு வரும் மக்கள் வசிக்கும் இடங்களாகும். குழந்தைகளுக்கு செரிகல்சர் பற்றிய விவரங்களை நேரடியாக கற்பிக்க அவர்களை அங்கு அழைத்துச் சென்றோம். குழந்தைகள் பட்டுப் புழுக்கள் எப்படி அந்த மல்பெரி கூடுகளில் இருந்து பட்டை கொடுக்கின்றன எனும் முழு செயல்முறையையும் படிப்படியாக பார்த்தனர். கடைசியாக பட்டுப்புழு கூடுகளை அப்படியே உப்புத் தண்ணீரிலும், கொதிக்கும் நீரிலும் போட்டு பட்டெடுப்பதையும் பார்த்தனர்.

இதையெல்லாம் பார்த்த குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். சிலர் பட்டுப்புழுக்களில் இருந்து பட்டு எடுக்கும் அந்த முறையை மட்டுமே பார்த்தனர், சிலர் அந்த பட்டு புழுக்கள் உயிரிழப்பதை பார்த்து வருந்தினர். ஒவ்வொரு குழந்தையின் சிந்திக்கும் முறையே எங்களை ஆச்சரியப்படுத்தியது. பல அம்மாக்களுக்கு அவர்கள் குழந்தையை முழுமையாக புரிந்து கொள்ள இது போன்ற பயணங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

ஒரு முறை விலங்குகளை கையில் பிடித்து தொட்டுப்பார்க்கும் ஒரு பண்ணைக்கு சென்றோம். குழந்தைகள் எலியில் தொடங்கி ஆடு, மாடு என அனைத்து விலங்குகளுடனும் விளையாடினர். அந்த பண்ணையில் இருப்பவர்கள் அனைவருமே எல்லா விலங்குகளையும் அன்பாக பார்த்துக்கொள்பவர்கள். இது போல விலங்குகளிடம் அன்பு காட்டும் மனிதர்களை நான் எங்குமே பார்க்க முடியாது. குழந்தைகள் அந்த விலங்குகளையும் அன்பான மனிதர்களையும் பார்த்து மனதளவில் பல மாற்றங்களை சந்தித்ததை நாங்கள் எங்கள் கண்கூடாக பார்த்தோம். விசாகப்பட்டினத்தில் கடற்படை போர் கப்பலை நேரடியாக பார்த்து ரசித்தனர். இது போல ஒவ்வொரு பயணமும் குழந்தைகளின் சிந்தனையை மாற்றக்கூடிய பயணங்களாகத்தான் இருக்கும்.

2019ல் ஆரம்பித்த இந்த பயணம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் இது வரை சுமார் 9 பயணங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். பொதுவாக ஒரு பயணத்தை ஒருங்கிணைக்கும் போது அதில் பத்து அம்மாக்களும் அவர்களின் குழந்தைகளும் இருப்பது போல பார்த்துக்கொள்வோம்.

குழந்தைகளுக்காக அந்த இடத்தில் இருக்கும் ஸ்பெஷல் உணவுகளை சமைத்துக் கொடுக்க அங்கிருக்கும் சமையற் கலைஞர்களையே தேர்வு செய்வோம். குழந்தைகளுக்கு உணவு ரொம்ப முக்கியம். சில சமயம் அவர்களுக்கு ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளாது. அதனால் உள்ளூர் சமையல் கலைஞர்களிடமிருந்து வீட்டு உணவுகளை கொடுக்க நானும் நந்தினியும் ஏற்பாடு செய்தோம். அது தவிர, எல்லோரும் சேர்ந்து தங்கி, ஒரே அறையில் அனைவரும் தூங்கும் டார்ம் ஸ்டைல் ஹோட்டல்களையே தேர்வு செய்வோம். அப்போது தான் ஒருவருக்கு ஒருவர் எந்த நேரத்திலும் உதவியாக இருக்க முடியும்.

சில சமயம் பயணம் மேற்கொள்ளும் போது, ஒரு குழந்தைக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அதிக நேரம் செலவழிப்பதில் ஆர்வம் இருக்கும். அந்த குழந்தையையும் பெற்றோரையும் நேரமாகிறது என்று தொல்லை செய்யாமல், அந்த குழந்தையின் போக்கில் அவர்களைவிட்டு விடுவோம். குழந்தை அந்த இடத்தில் விளையாடி தனக்கு தெரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பதை அறிந்து கொண்டு அங்கிருந்து வரலாம்.

பொதுவாக இது போல குழந்தைகளுடன் அம்மாக்கள் மட்டும் பயணிப்பது, குழந்தைக்கும்-அம்மாவுக்கும் இருக்கும் இணக்கத்தை அதிகரிக்க உதவும். ஒரு பெற்றோராக உங்களை நீங்கள் அறிந்து கொள்ளவும், உங்கள் குழந்தையை அறிந்து கொள்ளவும் இந்தப் பயணம் நிறைய வாய்ப்பினை ஏற்படுத்தி தரும். ஒரே சிந்தனை கொண்ட அம்மாக்களுடன் பயணிப்பதும் உங்களுக்கு நிறைய தகவல்களை கொடுக்கும். எங்கள் பயணத்தில் உங்கள் குழந்தையை நீங்கள் மட்டும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை.

அனைத்து அம்மாக்களுமே குழுவில் இருக்கும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்புண்டு. முன்பின் தெரியாதவர்கள் கூட ஒன்றாக பயணிக்கும் போது, அவர்கள் அம்மா என்ற ஒரே புள்ளியில் இணைந்து வாழ்நாள் நண்பர்களாக மாறுகின்றனர். இங்கு யாருமே தனி நபர் கிடையாது. நமக்கு உதவி செய்யவும், ஆதரவு கொடுக்கவும் இங்கு பல பேர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் இந்த பெற்றோரின் மனதில் உருவாகுகிறது. குழந்தைகளும் ஒரு நாள் இரவு அனைவருடனும் ஒன்றாக தூங்கிய பின், மறு நாளில் இருந்து மற்ற குழந்தைகளுடனும் பெற்றோர்களுடனும் நன்றாக பேசி பழக ஆரம்பித்துவிடுவார்கள்.

உங்களுடைய பயணத்தில், வெறும் நல்ல அனுபவங்களை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என முன்கூட்டியே அதற்கேற்ற மனநிலையில் செல்ல வேண்டாம். நீங்கள் எவ்வளவு திட்டங்கள் போட்டு, உங்கள் பயணத்தை ஏற்பாடு செய்தாலும், அதில் எதிர்பாராத சில கெட்ட அனுபவங்களையும் சந்திக்க நேரலாம். எதுவாக இருந்தாலுமே பெற்றோர்கள் அதை சரியாக கையாளும் போது தான், குழந்தைக்கும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையை சந்திக்கும் தைரியம் வரும்.

இந்த அனுபவத்தை நீங்களும் உங்கள் குழந்தையும் சேர்ந்து சந்திக்க போகிறீர்கள். பொதுவாக நான் ஏற்பாடு செய்யும் பயணங்களின் முழு விவரங்களையும் பெற்றோருக்கு சொல்லிவிடுவேன். அவர்கள், குழந்தைக்கு இந்தப் பயணம் பிடிக்குமா? இது சரியாக வருமா என பார்த்து முடிவெடுக்க வேண்டும். 3-4 மாதங்கள் முழுமையான ஆய்வுக்கு பின்னரே ஒரு இடத்தை நாங்கள் தேர்வு செய்வோம். காலநிலை, தங்குமிடம், உணவு என பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பயணங்கள் ஒருங்கிணைக்கப்படும்” என்கிறார் லக்‌ஷனா ஷ்ரவன். தங்களின் பயணத்தில் விருப்பமுள்ள அம்மாக்கள் Tripster Buddies பக்கத்தை பின் தொடர்ந்து இணையலாம் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பெண்களும் பணியாற்றும் விமான தொழிற்சாலை! (மகளிர் பக்கம்)