வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தணும்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 45 Second

‘‘நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பலர் பலவிதமாகத்தான் சொல்வாங்க. அதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால், நம்மால் வாழ்க்கையை வாழவே முடியாது. அதனால் எனக்கு பிடித்தமான தொழிலை மன நிறைவோடு செய்து வருகிறேன்’’ என்கிறார் சென்னை ராயபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரி மணிகண்டன்.‘‘நான் பக்கா சென்னை பொண்ணு. பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். +2 முடிச்சிட்டு தொலைதூர வழியில் கல்விப் படிப்பை படிச்சேன். படிப்பு முடிச்சிட்டு பல இடங்களில் வேலைப் பார்த்தேன்.

ஆனால் எல்லா வேலையும் அதிக பட்சம் இரண்டு மாசம் தான். அதற்கு மேல் அங்கு வேலை செய்ய மாட்டேன். என்னோட அம்மா நான் வேலையை விட்டுவிட்டேன்னு சொன்னதும் என்னை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு வேலை சரியா போக மாட்டேன்கிறன்னு சொல்லிட்டே இருப்பாங்க. ஆனாலும் எனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய பிடிக்கவில்லை. தனியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதனால் தையல் கலையை கற்றுக் கொண்டேன். சுடிதர், பிளவுஸ் என தைத்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். நல்ல வருமானமும் கிடைச்சது. இதற்கிடையில் எனக்கு திருமணம் நிச்சயமானது. என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். திருமணம் முதல் குழந்தை பிறந்த பிறகும் நான் தையல் தொழிலை செய்து வந்தேன். கடந்த இரண்டு வருடமாக என்னால் தொடர்ந்து தையல் தொழிலில் ஈடுபடமுடியவில்லை. ஒன்று கொரோனா பாதிப்பு இரண்டாவது நான் மீண்டும் கருவுற்றிருந்தேன். குழந்தை பிறந்து இரண்டு குழந்தைகள் என்பதால், இருவரையும் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.

அதே சமயம் வீட்டில் சும்மா இருக்கவும் பிடிக்கவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்’’ என்றவர் தன் கணவரின் ஊக்குவிப்பு காரணமாக ‘அவிஷா ஷோம் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் தள்ளுவண்டியில் உணவுக் கடையை ஆரம்பித்துள்ளார்.‘‘நான் நல்லா சமைப்பேன். யுடியூப்பில் ஏதாவது பார்த்து புதுசா சமைச்சு பார்ப்பேன். சில நாட்கள் யுடியூப்பிலும், நான் சமைக்கும் உணவுகள் குறித்த வீடியோவை பதிவு செய்து வந்தேன். எனக்கு சமையல் மேல் இருக்கும் ஆர்வத்தை பார்த்த என் கணவர் தான் சிறிய அளிவில் ஒரு கடை ஆரம்பிக்கலாமேன்னு கேட்டார். எனக்கும் அது சரின்னு பட்டது. எல்லாவற்றையும் விட வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளலாம். செய்து பார்ப்போம்ன்னு டிரை செய்தேன். அப்படி உணவு கடை ஆரம்பிக்கும் பட்சத்தில், எல்லாரும் சாப்பிடக்கூடிய குறைந்த விலையில் தரமான சுவையில் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாங்க ரொம்ப வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. நடுத்தர குடும்பம் தான். ஒருவருக்கு சாப்பாடு என்பது எவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு தெரியும். இங்கு பல ஓட்டல்கள் இருந்தாலும், பெரிய பிராண்டெட் ஓட்டல்களில் மட்டும் தான் தரமான உணவு சாப்பிட முடியும். அதே சமயம் அந்த ஓட்டலுக்கு எத்தனை பேரால் போக முடியும். மேலும் பலர் உணவில் சுவையை கூட்ட வேண்டும் என்பதற்காக அஜினோமோட்டோ சேர்க்கிறார்கள்.

இதனால் உணவு மதியம் சாப்பிட்டாலும் அது செரிக்கவே ரொம்ப சிரமமாக இருக்கிறது. இதெல்லாம் இல்லாமல் தரமான உணவினை கொடுக்க வேண்டும்ன்னு நினைச்சேன். என்னுடைய கடையில் எல்லா சாப்பாடும் 20 ரூபாய் மட்டும் தான். அதற்கு காரணம் எங்க ஏரியாவில் இருந்த ஆட்டோ டிரைவர். மத்தவங்க 20 ரூபாய் சொன்னா இவர் 15 ரூபாய் தான் கேட்பார். அதாவது ஒவ்வொரு சவாரிக்கும் குறைந்த பட்சம் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் குறைத்துதான் வாங்குவார். அவர் இப்போது இல்லை, என்றாலும் எங்க ஏரியாவில் உள்ள அனைவரின் மனதிலும் நிறைந்திருக்கார். அவரைப்போல் நானும் என் கடை மூலமாக எல்லாருடைய மனதிலும் நிறைந்திருக்க வேண்டும்ன்னு விரும்பினேன்.

அதனால் தான் என்னுடைய உணவினை 20 ரூபாய்க்கு கொடுக்கிறேன். பலர் ரூ.20க்கு இப்படி ரோட்டில் நின்று வியாபாரம் செய்யணுமானு கேட்டாங்க. எங்க வீட்டில் அம்மாக்கூட முதலில் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் நான் தான் பிடிவாதமாக செய்து பார்க்கலாம்ன்னு இருந்தேன். எங்க வீட்டுக்கு அருகாமையில் மெயின் ரோட்டில் ஒரு பள்ளி வாசலில் தான் கடையை போட்டேன். பொதுவா புதிதாக கடை போடும் போது, ஏற்கனவே அங்கு வியாபாரம் செய்பவர்கள் பிரச்னை செய்வார்கள். நாங்க அந்த ஏரியாவில் 40 வருஷத்திற்கு மேல் இருப்பதால், எல்லாருக்கும் எங்களை தெரியும். அதனால் நான் கடை போட்டுக் கொள்ளட்டுமான்னு கேட்ட போது மற்ற கடைக்காரர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களின் சப்போர்ட்டால் எந்த பிரச்னையும் இல்லாமல் கடையை நடத்தி வருகிறேன்.

ஆரம்பத்தில் இதற்காக நான் பெரிய அளவில் இன்வெஸ்ட் எல்லாம் செய்யல. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தான் உணவினை தயாரிச்சேன். பிறகு வீட்டில் இருந்த மேஜையில் தான் சமைத்த உணவுகளை வைத்து பரிமாறினேன். நான் புளிசாதம், தக்காளி சாதம், புதினா சாதம் போன்ற கலவை சாதம் மட்டுமே கொடுப்பதால், முதல் நாள் ஒரு கிலோ அரிசி மட்டும் வடித்து புளிசாதம் மற்றும் தக்காளி சாதம் செய்து கொண்டு வந்தேன். பலர் கடையை பார்த்து அப்படியே கடந்து சென்றார்கள்.

சிலர் சாப்பிட்டு பார்த்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு சிலர் சாப்பிடலாமா வேண்டாமான்னு சிந்தனையில் கடந்தார்கள். அதனால் அப்படி போகிறவர்களிடம் நானே சாப்பிட வாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சேன். முதலில் படிச்சிட்டு சாப்பிட வரச்சொல்லி ரோட்டில் நின்று அழைப்பது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. பிறகு இதுவும் தொழில் தான். யாரையும் ஏமாத்தல, சொந்தக் காலில் நின்று நான் தொழில் செய்யும் போது ஏன் கவுரவக்குறைச்சலா நினைக்கணும்ன்னு மேலும் உத்வேகத்தோடு உழைத்தேன். அதற்கான பலன், ஒரு கிலோ சாப்பாடு மட்டுமே செய்து வந்த நான் இப்போது தினமும் ஐந்து கிலோவாக செய்கிறேன்’’ என்றவர் காலை எட்டு மணிக்கெல்லாம் கடையினை திறந்துவிடுகிறார்.

‘‘இது ஹைவேஸ். மேலும் பக்கத்தில் பள்ளியும் இருக்கு. என் கடையில் பெரும்பாலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அருகில் உள்ள நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள் தான் சாப்பிட வருவாங்க. இவங்களுக்கு காலை வேளையில் இட்லி தோசைன்னு கொடுத்தா… அது எளிதில் செரிமான மாயிடும். மேலும் இவர்கள் மதியம் ஒரு மணிக்கெல்லாம் மணி அடிச்ச மாதிரி சாப்பிட முடியாது. சவாரி இருக்கும். அதனால் ஒரு மணி நேரம் தாமதமாகும்.

காலையில் சாப்பாடு சாப்பிட்டால், ஒரு மணி நேரம் வரை பசியை தாக்கு பிடிக்கலாம். அடுத்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என எல்லாரும் மதிய உணவினை டிஃபன் பாக்சில் கட்டி எடுத்து செல்கிறார்கள். 20 ரூபாய்க்கு திருப்தியா சாப்பிட முடியும். அதனால் தான் நான் காலை எட்டு மணிக்கெல்லாம் கடையை திறந்துவிடுவேன். தினமும் மூன்று அல்லது நான்கு வகையான சாப்பாடு இருக்கும்.

இதில் புளிசாதம், தக்காளி சாதம் தினமும் இருக்கும். மற்ற இரண்டு சாதங்கள் தினமும் மாறுபடும். அதாவது புதினா சாதம், குடைமிளகாய் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம்ன்னு மாறுபடும். சில சமயம் காலை எட்டு மணிக்கு கொண்டு வரும் உணவு பகல் பத்து மணிக்கெல்லாம் தீர்ந்துவிடும். உடனே வீட்டிற்கு சென்று மதிய உணவினை தயார் செய்து கொண்டு வந்திடுவேன். அந்த சமயத்தில் என்னுடைய பாட்டி கடையை பார்த்துக்குவாங்க.

சாப்பாட்டுடன் ஒரு பொரியல், ஊறுகாய் கண்டிப்பாக இருக்கும், விருப்பமுள்ளவர்கள் பத்து ரூபாய் கொடுத்து முட்டை மசால் வாங்கிக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு ஒரு முழு சாப்பாடு பத்தாது. அவர்களுக்கு மேலும் கொஞ்சம் சாப்பாடு வேண்டும்ன்னு கேட்பாங்க. அவங்களால அதே சமயம் முழு சாப்பாடும் சாப்பிட முடியாது. அவங்க எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுத்து திருப்தியா சாப்பிடலாம். ஒரு வேளை சாப்பாடு 30 ரூபாய்க்கு வயிறார கொடுக்கும் போது அவங்க வயிறும் நிரம்பும் எங்களின் மனசும் நிரம்பும். கலவை சாப்பாட்டிற்கு பதில் முழு சாப்பாடு கொடுக்கலாம்.

ஆனால் அதில் சாம்பார், ரசம், பொரியல்ன்னு மட்டுமில்லாமல் அசைவ உணவும் சேர்த்து கொடுத்தா தான் பலர் விரும்பி சாப்பிட வராங்க. மேலும் அந்த உணவினை 20 ரூபாய்க்கு தர முடியாது. குறைந்த பட்சம் 70 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யணும். அப்படி கொடுக்கும் போது தினமும் அவ்வளவு காசிற்கு சாப்பிட வருவார்களான்னு தெரியாது. அதனால் பட்ஜெட் ஃபிரண்ட்லியா கொடுக்க நினைச்சேன். எனக்கு பெரிய அளவில் ஓட்டல் எல்லாம் வைக்க வேண்டும் என்ற விருப்பமில்லை.

ஓட்டலுக்கான வாடகை, அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் என கொடுக்கும் அளவிற்கு எனக்கு வசதியில்லை. இப்போது நானும் என் பாட்டியும் தான் கடையைப் பார்த்துக் கொள்கிறோம். அதே சமயம் சாதாரண வண்டிக்கடை என்பதால் மழை மற்றும் வெயில் காலத்தில் கொஞ்சம் சிரமமா இருக்கு. அதனால் ஒரு சின்ன இடம் எடுத்து அங்கு இதேபோல் விற்பனை செய்யும் எண்ணம் இருக்கு’’ என்கிறார் புவனேஸ்வரி மணிகண்டன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)