குரங்கு அம்மை அலெர்ட்! (மருத்துவம்)

Read Time:8 Minute, 20 Second

குரங்கு அம்மை எனச் சொல்லப்படும் மங்க்கி பாக்ஸ் வைரஸ் தற்போது அதிகளவிலும் கொஞ்சம் பயத்தோடும் பேசப்பட்டுவருகிறது. கொரோனா அச்சமே இன்னும் முடிந்தபாடில்லை தற்போது செய்திகளில் புதுப்புது நோய்கள் தலைப்புச் செய்தியாக வந்து நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.  மாசசூசெட்ஸ் சுகாதார அதிகாரிகளும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும், சமீபத்தில் கனடாவுக்குப் பயணம் செய்த ஒரு நோயாளிக்கு குரங்கு அம்மை இருப்பதாக உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து பிரிட்டன் ஒன்றியத்திலும் ஐரோப்பாவிலும் குரங்கு அம்மை பாதிப்புகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளன.

அதென்ன குரங்கு அம்மை. குரங்குக்கும் இதற்கும் தொடர்புகள் உள்ளதா? இதற்குச் சிகிச்சைகள் இருக்கிறதா? உயிர்கொல்லி நோயா? போன்ற பல சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், பொதுநல மருத்துவர், அஸ்வின் கருப்பன்.“இது புதிய வைரஸ் அல்ல. ஏற்கனவே இருக்கக்கூடிய பொதுவான வைரஸ். இதை ஜுனாட்டிக் வைரஸ் என்று சொல்வார்கள். குரங்கில் இருந்து மனிதனுக்குத் தாவப்பட்ட ஒரு வைரஸ்.

இது பொதுவாக விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவப்பட்ட வைரஸே தவிர மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவுவது என்பது மிகவும் குறைவுதான். இந்த வைரஸின் தாக்கம், இதன் தொற்று மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. யாரும் இதைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. மற்ற வைரஸ்களைப் போலவே மூக்கு வழியாகச் சளி வருவது, கைகளில் கொப்புளம் கொப்புளமாக வருவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால், இதெல்லாம் ஆபத்தான தொந்தரவுகள் அல்ல.

குரங்கு அம்மை மனிதனுக்கு மனிதன் கொரோனா வைரஸ் போல் பரவுமா?

அம்மை கொப்புளங்களில் இருந்து வெளி வருகின்ற நீர்த்துளிகள் வெளியே தெறித்துப் பரவினால் அதிலிருந்து மற்றவருக்குப் பரவும் வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இப்போது, உலகளவில் இந்த வைரஸ் பாதித்தவர்கள் குறைவு என்பதால், மேலும் அதிகப் பேருக்கு பரவ வாய்ப்புகள் குறைவு. வேறு என்ன பாதிப்புகள் வரும் எனப் பார்த்தோமானால், கழுத்தில் நெறி கட்டுவது, உடலில் ஆங்காங்கே நெறி கட்டியிருக்க வாய்ப்புகள் உண்டு. எப்போதும் போல அம்மைக்கு வருகின்ற அறிகுறிகள் போலவே பெரிது பெரிதாகக் கொப்புளங்கள் ஏற்படலாம். காய்ச்சலும் வரலாம். 2-4 வாரங்கள் இந்த வைரஸின் பாதிப்பு இருந்துவிட்டு தானாகவே சரியாகிவிடும். எனினும், மனிதனுக்கு மனிதன் பரவும் தன்மை மிக மிகக் குறைவு, அரிது எனச் சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் சமூகப் பரவல் மூலம் பரவ வாய்ப்பில்லை.

என்ன சிகிச்சை?

முன்பு இந்த ஸ்மால் பாக்ஸ் வராமல் இருக்க, தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். தற்போது, சில நாடுகளில் போடுவதில்லை. ஆதலால், இது போன்ற அம்மை மீண்டும் வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸால் பெரும்பாலான நோயாளிகளுக்குப் பெரிய பிரச்சனைகள், தொந்தரவுகள் எதுவும் வராது என்பதால் எந்தச் சிகிச்சையும் இல்லாமலே தானாகவே சரியாகிவிடும்.

ஸ்மால் பாக்ஸுக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்படுகிறதோ அதுவே இதற்கும் பொருந்தும். அதிதீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுக்கலாம். சாதாரண தொந்தரவுகளுக்கு எந்தச் சிகிச்சையும் தேவையில்லை. ஆனால், இந்த அம்மை நோய்க்கு தடுப்பூசிகளும் உண்டு. மருந்துகளும் உண்டு. அதாவது ஸ்மால் பாக்ஸ் மருந்துகளை இந்த அம்மை நோய்க்கும் பயன்படுத்தலாம். இதுவரை இந்த வைரஸால் எந்த உயிர் பாதிப்பும் இல்லை என்பது மிக ஆறுதலான விஷயம்” என்கிறார் மருத்துவர்.

வரலாறு என்ன சொல்கிறது?

இது புதிய வைரஸ் அல்ல. 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (Democratic Republic of Congo (DRC)) ஸ்மால் பாக்ஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு குழந்தை தனிமைப்படுத்தப்பட்டபோது, முதன்முதலில் உறுதிப்படுத்தப்பட்டதுதான் இந்தக் குரங்கு அம்மை.

நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் எனப்படும் சிடிசி  (Centers for Disease Control and Prevention) கூறும் தகவல்கள்  என்னென்ன?

வைரஸ் உடலில் நுழைந்த பிறகு, ரத்த ஓட்டம் வழியாக உடலில் பரவுகிறது. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை அறிகுறிகள் பொதுவாகத் தோன்றாது. அதன் பிறகுதான் ஸ்மால் பாக்ஸ் போலவே தோலில் புண்கள் தோன்றுகின்றன. ஆனால், ஸ்மால் பாக்ஸைவிட இந்தக் குரங்கு அம்மை பயப்படும் அளவுக்குப் பெரிய நோய் அல்ல. அதைவிட இது குறைந்த பாதிப்புகளே தரும்.

காய்ச்சல், தலைவலி முதல் மூச்சுத் திணறல் வரை ஆரம்பத்தில் வருவது பொதுவானவை.ஒன்று முதல் 10 நாட்களுக்குப் பிறகு, கை, கால், தலை அல்லது உடற்பகுதியில் அரிப்புத் தோன்றலாம். இறுதியில் சீழ் நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறும். ஒட்டுமொத்தமாகவே, அறிகுறிகள் 2-4 வாரங்கள் வரை நீடிக்கும். அதே சமயம் தோல்புண்கள் பொதுவாக 14 முதல் 21 நாட்களுக்குள்ளே வறண்டுவிடும். குரங்கு அம்மை அரிதானது. பொதுவாகப் பெரிய ஆபத்து இல்லை. ஒரு நற்செய்தி என்னவென்றால் தற்போது புழக்கத்தில் இருக்கும் வைரஸின் வடிவம் லேசானதாகக் கருதப்படுகிறது. வீரியத்தன்மை இல்லை. அதாவது பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தாத வைரஸ்கள் இவை.

இம்வாம்யூன் (Imvamune) அல்லது இம்வானெக்ஸ் (Imvanex) எனப்படும் தடுப்பூசி, குரங்கு அம்மை மற்றும் ஸ்மால் பாக்ஸ் நோயைத் தடுக்க அமெரிக்காவில் உரிமம் பெற்றுள்ளது. சிடிசி, தற்போது ஸ்மால் பாக்ஸ் தடுப்பூசியைக் குரங்கு அம்மை வந்த நபர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறது. நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு, அதிகப் பாதிப்பு இருக்கலாம். இதனால், அவரவர் தனது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வதே சரியான தீர்வாக அமையும்.       

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!
Next post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?!(அவ்வப்போது கிளாமர்)