சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)

Read Time:21 Minute, 10 Second

வாழ்க்கையில் கடந்து வந்த பாதையைவிட நடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம். நிகழ்கால சேமிப்பு வருங்கால வனப்புக்கு அடித்தளம் என்றால், நிகழ்காலக் கடனுதவி வருங்கால உயர்விற்கு படித்தளமாகும். வளமான வாழ்க்கைக்கு வங்கி வழங்கும் கடன்கள் பெருமளவு உதவுகின்றன. வங்கி நம்மைக் கடனாளியாக மாற்றும் நிலை எப்படி ஏற்படுகின்றது என்பதற்கு வாழ்க்கைச் சூழல்கள் பலவற்றை நாம் குறிப்பிடலாம். குறிப்பாக மாத வருமானத்தில் உள்ளவர்கள் உடனே ஒரு வீடு வாங்கவேண்டும் / கட்டவேண்டும் என்றால் அதற்குத் தேவைப்படும் பல லட்சம் / கோடி ரூபாய் எப்படிக் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் ஈட்டும் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து அந்த சேமிப்பு ஒரு பெருந்தொகையானவுடன் வீடு வாங்கலாம் என்றால் அதற்கு எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அப்படிப் பொறுமையாகத் திட்டமிட்டுச் சேமித்தாலும் இடையில் வரும் அவசிய செலவுகள் அந்தச் சேமிப்பைத் தின்றுவிடுவது பலரது குடும்பங்களில் நாம் காணும் காட்சியாகும். சேமிப்பைத் தொடாமலேயே பலவருடங்கள் பொறுமையாக இருந்து ஒரு கட்டத்தில் வீடு வாங்கலாமென்றால் பண வீக்கத்தினால் வீட்டின் விலையும் கணிசமாக அதிகரித்து விடுகிறது.

அன்று ஒரு கிரவுண்ட் ரூபாய் 2 லட்சம் என்றவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிலம் ரூபாய் 20 லட்சம் என்கின்றனர். நமது பதினைந்து ஆண்டுகால சேமிப்பு அதில் 60 சதவிகிதம் கூட இல்லை. தைரியமாக நீரில் இறங்கி நீச்சல் பழகுபவர்கள்போல நாமும் கடன் வாங்கினால் என்ன? இவ்வாறு நமக்கு ஒரு எண்ணம் வருகின்றபோது அதற்கு செயல்வடிவம் வழங்கத்தான் வங்கிகள் நாம் பல ஆண்டுகள் தவணைமுறையில் திருப்பச் செலுத்தும் வகையில் கடனுதவித் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

தனிநபர், தனியார் நிறுவனங்கள், பொ து உடைமை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் வசதிகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன் கடன்பெறுவதற்கான தகுதி, செலுத்த வேண்டிய ஆவணங்கள் பற்றி பார்க்கலாம்.

தனிநபர் கடன் பெற தேவையான ஆவணங்கள்
1.புகைப்பட அடையாள அட்டை
2.இருப்பிடச் சான்று (Residence Proof)
3.பான் கார்டு (அ ) படிவம் எண் 60 / 61

பூர்த்தி செய்வதற்கான விவரங்கள்

4.தனிநபர் புகைப்படம் (Passport -size  Photo) (சில வங்கிகளில் போட்டோ பதியும் வசதி உள்ளது)

5.ஐ.டி.ஆர் (ITR ) – கடந்த இரண்டு ஆண்டுகளின் வருமானக் கணக்கீட்டு அறிக்கை  

6. வங்கிக்  கணக்கின் ஆறுமாதகால அறிக்கை

7.சிபில் (CIBIL) மதிப்பெண் / குறியீடு – கடன்பெறத் தகுதியுடையதாக இருப்பது      

8.எந்த நோக்கத்திற்காகக் கடன் தேவையோ அது சட்டரீதியில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது

9.சொத்துக்கள் மற்றும் ஏற்கனவே கடன்கள் பெற்ற பட்டியல் (Assets  & Liabilities  Statement)

10.கடனுக்காக அடமானம் / பிணையமாக பதியவேண்டிய சொத்து / பொறுப்புறுதியாளர் (Guarantor)  விவரம்

11.பிற கடனாளிக்குப்  பொறுப்புறுதியாளராக (Guarantor) இருந்தால் அதன் விவரம்  

12.கூட்டுக் கடனாளி (Co-borrower) உண்டெனில் அவருக்குமான மேற்பட்டியலிட்ட விவரங்கள் தனித்தனியாக.

கூட்டு நிறுவனங்கள் கடன் பெற தேவையான ஆவணங்கள்

1.கூட்டு நிறுவன ஒப்பந்தம் (Partnership Deed)

2.பங்குதாரர்களின் (Partners) புகைப்பட அடையாள அட்டை

3.பங்குதாரர்களின் இருப்பிடச் சான்று (Residence Proof)

4.பங்குதாரர்களின் பான் அட்டை (PAN  Card )

5.பங்குதாரர்களின் புகைப்படம் (Passport -size  Photo) (சில வங்கிகளில் போட்டோ பதியும் வசதி உள்ளது)

6.வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் பெயர் இல்லாமல் இருப்பது

7.நிறுவனத்தை பதிவு (Registration) செய்ததற்கான சான்று

8.நிறுவனத்தின் பான் அட்டை (PAN  Card )

9.வர்த்தக உரிமம் / வணிகப் பதிவு / வணிக வரிச் சான்றிதழ் (Trade  License / Establishment / Sales  Tax Registration)

10.நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட லாப / நட்ட இரண்டு ஆண்டுகளுக்கான கணக்கு (Profit  & Loss Account)

11.நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கை (Balance  Sheet)

12.எந்த நோக்கத்திற்காகக் கடன் தேவையோ அது சட்டரீதியில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது

13.சொத்துக்கள் மற்றும் ஏற்கனவே கடன்கள் பெற்ற பட்டியல் (Assets  & Liabilities  Statement)

14.கடனுக்காக அடமானம் (Mortgage) / பிணையமாக பதியவேண்டிய சொத்து / பொறுப்புறுதியாளர் விவரம்

15. பிற கடனாளிக்கு / நிறுவனத்திற்குப்  பொறுப்புறுதியாளராக (Guarantor) இருந்தால் அதன் விவரம்  
தனியார் நிறுவனங்கள் கடன் பெற தேவையான ஆவணங்கள்

பொது உடைமை நிறுவனம் பொதுமக்களுக்குப்  பத்திரங்கள் வழங்குவதன் மூலம் எளிதாக நிதி திரட்ட முடியும். ஆனால் தனியார் நிறுவனம் நிதி திரட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல.  நிறுவனத்தைத் துவக்கிய தனியார் முதலீட்டாளர்களும், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்குத் தெரிந்தவர்களும் நிதி ஆதாரம் வழங்கலாம்.  கம்பெனிச் சட்டத்தின்படி கடன் பத்திரங்களை தனியாருக்கு வெளியிடுவதின்மூலம் நிதி பெறலாம். தனியார் கம்பெனியின் நிதிநிலை, லாபமீட்டும் விகிதம், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான உற்பத்தி / வணிகத் திட்டங்கள் / மதிப்பீடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து காலக் கடனாகவோ (Term  Loan) அல்லது செயல்பாட்டுக் கடனாகவோ (Working Capital) வங்கிகள் கடன் வழங்குகின்றன.

1.கம்பெனி நிறுவிய பதிவுச் சான்றிதழ் (Certificate of  Incorporation)  

2.கம்பெனியின் அமைப்புவிதிக் குறிப்பிதழ் (Memorandum of  Association)

3.கம்பெனியின் செயல்முறை விதிக் குறிப்பிதழ் (Articles  of  Association)

4.கம்பெனியின் நிர்வாகக் குழுத் தீர்மானம் (Board  Resolution)

5.கம்பெனியின் பான் அட்டை (PAN  Card )

6.கம்பெனியின் ஆறுமாத வங்கிக்கணக்கு விவர அறிக்கை (Bank  Statement)

7.தணிக்கை செய்யப்பட்ட லாப / நட்ட இரண்டு ஆண்டுகளுக்கான கணக்கு

8.தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கை

9.எந்த நோக்கத்திற்காகக் கடன் தேவையோ அது சட்டரீதியில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது

10.கம்பெனியின் சொத்துக்கள் மற்றும் ஏற்கனவே கடன்கள் பெற்ற பட்டியல்

11.கம்பெனி இயக்குனர்களின் பெயர்பட்டியல் – முகவரி, தொழில் நிலைக்  குறிப்புடன்

12.கம்பெனி இயக்குனர்களின் அடையாள மற்றும் இருப்பிடச் சான்று

13.கம்பெனி இயக்குனர்களின் புகைப்படம்

14.வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் பெயர் இல்லாமல் இருப்பது

15.கடனுக்காக அடமானம் / பிணையமாக பதியவேண்டிய சொத்து விவரம்

16.பிற கடனாளிக்கு / நிறுவனத்திற்குப் பொறுப்புறுதியாளராக இருந்தால் அதன் விவரம்  

பொது உடைமை நிறுவனங்கள் கடன் பெற தேவையான ஆவணங்கள்

தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களுடன் வணிகம் தொடங்கியதற்கான சான்றிதழ் ஆவணங்களின் முக்கியத்துவம்.

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களை வழங்கினால்தான் வங்கியிடமிருந்து கடன்பெற முடியும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அனைத்து வங்கிகளில் உள்ள கடன் கணக்குகளும் ஒருவரின் ஆதார் மற்றும் பான் அட்டை எண்களின் மூலம் இணைக்கப்படுகின்றன. நிறுவனங்களை பொறுத்தவரை அதன் பதிவாளர் அலுவலகக் குறிப்பில் கடன்கள் குறித்த விவரங்களை கடன்பெற்ற நாளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட வரம்புள்ள நாளுக்குள் பதிவு செய்யப்படும். இதனால் கடன் வழங்கல் மற்றும் கடன் கண்காணிப்பு என்பது வங்கிகளுக்கு ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல ஆகிவிட்டது. ஒவ்வொரு தேவையையும் நாம் பூர்த்தி செய்ய வங்கிகளிடமிருந்து என்னென்ன கடன் பெறலாம் மற்றும் அதற்கான ஆவணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

* பான் அட்டையினை ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகள் மூலம் இரண்டு அல்லது அதற்குமேல் பான் அட்டை பெறுவது சட்டப்படி குற்றமாகும். நமது பான் எண்கள் மற்றும்  ஆதார் எண்களை நமது வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதனால் வங்கிகளின் மூலம் நாம் பெறும் பயன்கள் அதிகரிப்பதோடு நமது கணக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.  ஒருமுறை உடைகள் வாங்கும் கடைக்கே நாம் நமது தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியைத் தருகின்றோம் என்னும்போது வாழ்நாள் முழுவதும் நமக்காகப் பயன்படும், நம்மை வளமாக்கும் வங்கியில் நமது பான் மற்றும் ஆதார் அடையாள எண்களைப் பதிவு செய்வது அவசியம்.

*வாடிக்கையாளரின் புகைப்படத்தினை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். வயதின் ஏற்றத்தினால் முகத்தில் ஏற்படும் மாற்றம் இதற்குக் காரணம்.

*ஆறுமாத கால வங்கி அறிக்கை நாம் ஈட்டும் மொத்த வருமானம் மற்றும் வேறு வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் பெற்றிருக்கும் கடன் மற்றும் அதற்கு செலுத்தும் மாத தவணை குறித்து அறிந்துகொள்ளலாம்.

*கடன்பெறத் தகுதி மதிப்பெண் (CIBIL Score) 750 மற்றும் அதற்குமேல் இருந்தால் வங்கிக்கடன் பெறுவது எளிது. கடன்பெற விண்ணப்பிக்கும் முன்பே நமது கடன்பெறத்  தகுதி மதிப்பெண் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நாம் ஏற்கனவே முழுவதும் செலுத்தியிருந்த கடன் சிபில் அட்டவணையில் நிலுவையில் இருந்தால் அந்தக் கடன் வழங்கிய நிறுவனம் மூலம் இணையத்தின் வழியில் முடித்த கடனை சிபில் பட்டியலிலிருந்து நீக்கி நமது சிபில் மதிப்பெண்ணை உயர்த்த முடியும். வங்கியில் தனிநபர் கடன் பெறும் போது அவசியமாக இதை செய்யவேண்டும். பெரும்பாலானோருக்கு கடன் அட்டைகளின் நிலுவைத்தொகை மூலம் சிபில் மதிப்பெண் குறைகிறது. கடன் அட்டையின் நிலுவைத்தொகையை வட்டியுடன் சேர்த்து முழுவதும் செலுத்தியதும், சிபில் மதிப்பெண்ணை சரிசெய்வது அவசியம்.

கடனாக பெறும் தொகையினை அந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தாமல் வேறு வகையில் பயன்படுத்தினால் வங்கி கடன்பெற்றவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும். எனவேதான் வங்கியாளர் நாம் கடன்பெறும் நோக்கத்தினை எழுத்துப்பூர்வமாக கேட்கின்றார். தனிநபர் கடன் தவிர மற்ற கடன்களை வங்கி வழங்கியவுடன் கடனாளி பெற்ற கடனின் பயன்பாட்டை ஆய்வு செய்ய வங்கிக்கு உரிமையுண்டு.

வீடு கட்டக் கடன் பெற்றால் ஒவ்வொரு கட்டுமான நிலையிலும் வங்கி அலுவலர் நேரில் வந்து ஆய்வு செய்வர். அதேபோல வணிக செயல்பாட்டு மூலதனக் கடன் பெற்றிருந்தால் வணிகம் அல்லது தொழிற்சாலையில் உள்ள சரக்கு இருப்பினையும் அதன் மதிப்பினையும் வங்கி  அலுவலர் ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை நேரில் வந்து ஆய்வு செய்வர். இயந்திரங்கள், தளவாடங்கள், வாகனங்கள் ஆகியன வாங்கக் கடன் பெற்றிருந்தால் அவற்றை வாங்கியவுடன் வங்கி அலுவலர் நேரில் வந்து ஆய்வு செய்வர். மேலும் இவற்றுக்கான காப்பீடும் செய்யப்பட்டு அதற்குரிய ப்ரீமியத் தொகை கடனாளரிடமிருந்து வங்கியால் வசூலிக்கப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திற்குச் செலுத்தப்படுகிறது. நிறுவனம் வழங்கும் காப்பீடு ஆவணத்தின் நகல் கடனாளிக்கு வழங்கப்படும்.

கல்விக்கடன் பெறுவதற்கு கடன் தொகை ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் வரை அதற்கான சொத்துப் பிணையம் வங்கியிடம் கடனாளி வழங்க வேண்டியதில்லை. அதேபோல வணிகம் செய்யக் கடன், தொழில் செய்யக் கடன் ஆகியவற்றுக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை எந்தச் சொத்துப் பிணையமும் தேவையில்லை. சில வங்கிகள் இதனை மேலும் உயர்த்தியுள்ளன. விவசாயம், சிறு / குறு / நடுத்தர தொழில்கள், ஏற்றுமதி ஆகிய பணிகளுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு அந்தந்த வங்கிகள் நிர்ணயிக்கும் உச்சவரம்புக் கடன்தொகை வரை சொத்து அடமானம் தேவையில்லை.  பிணையமாக வங்கியிடம் வழங்கும் சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இருக்கக் கூடாது. கடனை தனிநபராகவோ இன்னொரு நபருடன் சேர்ந்தோ வங்கியில் விண்ணப்பித்து அதற்குரிய படிவங்கள் வங்கியிடம் பெறலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாகக் கடன்பெற விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு தனிநபருக்குமான ஆவணங்களை அவரவர் கையொப்பமிட்டு வங்கியிடம் வழங்கவேண்டும். கடன் பெறுவதற்குமுன் கடன் தொகை அனுமதிக்கப்பட்டவுடன் வங்கியின் படிவமான கடன் ஒப்பந்தத்தில் கடனாளிகள் அனைவரும் ஒரேநேரத்தில் ஒன்றாக வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் முன்பு கையொப்பமிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட கடனின் நோக்கம், கடன்தொகை, அதற்குரிய வட்டி வீதம், அடமான விவரங்கள், பொறுப்புறுதி விவரங்கள், கடனைத் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணைகளின் எண்ணிக்கை மற்றும் தவணைத்தொகை, கடனுக்கான காப்பீடு விவரங்கள், கடனுக்காக கடனாளி செலுத்தவேண்டிய விளிம்புத்தொகை, கடனுக்கான செயலாக்கக் கட்டணம், இன்னபிற கடன் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பதியப்பட்ட கடிதம் ஒவ்வொரு கடனாளிக்கும் / கடன் பெறும்  நிறுவனத்திற்கும் வங்கி  தனித்தனியாக வழங்கி அதன் நகலில் ஒப்புதல் எழுத்து மூலம் பெறும்.

கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடன் மேற்சொன்ன அனைத்தும் இதற்கும் பொதுவாகப் பொருந்தும். இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கு பங்குதாரர் என்னும் கூட்டாளிகளும் தங்களது தனி உடைமையான சொத்துக்களை சேர்த்து பொறுப்பாளர்களாகின்றனர். நிறுவனம் நட்டத்தில் தொடர்ந்து இயங்கினால் அதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றவேண்டியது கூட்டாளிகளின் பொறுப்பாகும். நிறுவனம் திவாலாகும் சூழலில் நிறுவனம் பெற்ற கடனுக்கு வட்டியுடன் கூட்டாளிகள் பொறுப்பேற்க வேண்டும். கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் இந்த நிறுவனம் வங்கியிடம் கடன் பெறலாம் என்பதும். அதற்கான நோக்கம் மற்றும் அதையொட்டிய விதிமுறைகள் பதியப்பட்டிருக்க வேண்டும். மேலும் கடன் பெறுவதற்குமுன் கூட்டு நிறுவன ஒப்பந்தம் அந்தப்பகுதியில் பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டிருக்க வேண்டும்.

கம்பெனி கடன் பெறவேண்டும் என்று விண்ணப்பிப்பதற்குமுன் கம்பெனியின் நிர்வாக இயக்கக் குழு கூட்டத்தை நடத்தி குறிப்பிட்ட வங்கியில் இந்த நோக்கத்திற்காக இவ்வளவு கடன்தொகை பெறவேண்டும் என்றும் அதற்கான அடமானம் என்னவென்றும், வங்கியின் கடன் ஒப்பந்தத்திலும், இதர ஆவணங்களிலும் கம்பெனியின் சார்பில் இயக்குனர்கள் கையெழுத்திட்டு அதன் நகலை வங்கியிடம் வழங்கவேண்டும்.

கம்பெனி கடன் வாங்கலாம் என்ற அனுமதியை கம்பெனியின் அமைப்புவிதிக் குறிப்பிதழ் மற்றும் கம்பெனியின் செயல்முறை விதிக் குறிப்பிதழ் ஆகியவற்றின் உட்கூறுகள் வழங்குகின்றன. இவை நிறுவனச் சட்டம் 1956 / 2013 ல் குறிப்பிட்டுள்ள விதிகளின்படி வடிவமைத்திருக்கவேண்டும். கம்பெனி பெற்ற கடன் விவரங்கள் அதன் ஆண்டு அறிக்கையில் விவரமாக வெளியிடப் பட்டிருக்க வேண்டும்.  

வங்கியில் கடன்பெறத் தேவையான பொதுவான ஆவணங்கள் மற்றும் அதைப்பற்றிய ஒரு பருந்துப் பார்வையை நாம் செலுத்தினோம்.  இனி ஒவ்வொரு வகைக் கடனையும் நமது தேவைக்கேற்ப எவ்வாறு வங்கியிடம் பெறுவது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மார்கழி மாத சமையல்!! (மருத்துவம்)
Next post கல்லூரி மாணவிகள் முதல் மணப்பெண்கள் வரை விரும்பும் டெரக்கோட்டா நகைகள்!(மகளிர் பக்கம்)