தொடரும் குழந்தையின்மை… தம்பதியர்களே அலர்ட்! (மருத்துவம்)

Read Time:10 Minute, 21 Second

இருபத்தி நான்கு வயதாகும் சாந்திக்கு உடல் எடை குறைக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி எடுக்க வந்திருந்தார். திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் இன்னும் கரு நிற்கவில்லை என்பது அவரின் வருத்தம். முழுதும் பரிசோதித்து பார்த்த போது, அதிக உடல் எடை, முறையற்ற வாழ்க்கை முறை, அதீத துரித உணவுகள் உண்பது போன்ற பல காரணங்களை அறிய முடிந்தது. அதன்பின் தினமும் அவருக்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுத்து எடை குறைய வைத்து, தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்களை பரிந்துரைத்த அடுத்த இரு மாதங்களில் கரு நின்று, இப்போது ஆறு மாத கர்ப்பிணியாக நலமுடன் இருக்கிறார்.

இது மாதிரியான சிக்கல்கள் ஏதோ சாந்திக்கு மட்டுமோ, அவரைப் போன்று ஐடி துறையில் மணிக்கணக்காக வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமோ ஏற்படுவதில்லை. நம்மில், நம் வீட்டில், நம் வீட்டைச் சுற்றி பலருக்கு இன்றைய நவீன உலகில் ஏற்படுகிறது. கரு உருவாகாமல் போவதற்கு ஆண், பெண் இருவரும் காரணமாக இருக்கலாம்.எனினும், பெண்ணிற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன என்பதை இங்கே சற்று விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

குழந்தையின்மை…

மணமாகி ஓராண்டு சேர்ந்து வாழ்ந்தும் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதே குழந்தையின்மை என்று இன்றைய மகப்பேறு மருத்துவர்கள் சொல்கின்றனர்.

தரவுகள் தருவது…

*சராசரியாக நான்கு கோடி தம்பதியினர் இந்தியாவில் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.
*கிராமப்புறங்களை ஒப்பிடும்போது நகர்புறங்களில்தான் அதிக எண்ணிக்கையில் குழந்தையின்மை தம்பதியர் இருக்கிறார்கள்.
*ஆறு தம்பதியரில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றது.
*25 முதல் 29 வயதுக்கு உட்பட்ட 18% பெண்களுக்குக் குழந்தை இல்லை.

முறையாக நடக்க வேண்டியது…

*பெண்களுக்கான மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் இருக்க வேண்டும். அதாவது முப்பத்தி ஐந்து நாட்களுக்கு மேல் இல்லாமல், இருபத்தியோரு நாட்களுக்கு குறைவாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
*மாதாமாதம் சினைப்பையில் கருமுட்டை உற்பத்தியாக வேண்டும்.
*உற்பத்தியான கரு முழுதும் வளர்ந்து, தரமானதாக இருத்தல் அவசியம்.
*வளர்ந்த முட்டை சினைப்பையில் இருந்து வெளியே வந்து கருமுட்டை குழாய்க்கு வரவேண்டும். (இந்த இடத்தில்தான் முட்டை விந்தணுடன் சேர்ந்து கருவாக உருவாகி பின் அங்கிருந்து கருவறைக்கு வரும்). இந்த இயற்கை முறையில் ஏதேனும் மாற்றம், சிக்கல் நிகழ்ந்தால் கர்ப்பம் தரிக்க முடியாது.

காரணங்களும், ஆபத்துக் காரணிகளும்…

*உணவுப்பழக்கம் (அதிக துரித உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பேக்கிரி உணவுகள் சாப்பிடுவது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது).
*சத்துக் குறைபாடு (போதிய காய்கள், கனிகள் உணவுகளில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் கருமுட்டைக்கு தேவையான நுன்சத்துகள் கிடைக்காமல் போகக்கூடும்).
*பணிச்சுமை (கணக்கு இல்லாமல் அதிக நேரம் உழைப்பது, பணி சார்ந்த மன அழுத்தத்தில் இருப்பது).
*உடல் பருமன் (உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சிறு வயது முதலே அதிக எடையுடன் இருப்பது).
*குடிப்பழக்கம்
*புகைப்பழக்கம்
*தவறான வாழ்வியல் பழக்கங்கள் (அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, வெகுநேரம் மொபைல், டிவி பார்ப்பது).

*மாதவிடாய் கோளாறுகள் ( அதிக ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதாமாதம் மாதவிடாய் வராமல் இருப்பது, மாதவிடாயின்போது கட்டிகள் வெளிப்படுதல்).
*கர்ப்பப்பையின் பிறவிக்கோளாறுகள்.
*கர்ப்பப்பை வாய் அடைத்துக்கொள்வது.
*ரத்தசோகை.
*தைராய்டு.
*சர்க்கரை நோய்.
*கரு முட்டைக் குழாயில் பாதிப்பு.

*வயதான பெண்களுக்கு கரு முட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்து கொண்டே போவது.
*அடிக்கடி கருக்கலைப்பு செய்துகொள்வது.
*உடல் கோளாறுகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து மாத்திரைகளும்கூட மலட்டுத்தன்மையை உருவாக்கும் என்பதால் மருத்துவர்களின் பரிந்துரையின்றி பயன்படுத்துவது தவறு.
*பிசிஓடி ( சினைப்பையில் நீர் கட்டிகள்).
*கர்ப்பப்பை நார்த்திசு கட்டிகள்.
*40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி குறையக்கூடும்.

*ஈஸ்ட்ரோஜன் இல்லாமல் LH, FSH, Prolactin போன்ற ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சிக்கு தேவைப்படும். எனவே இதில் ஏதேனும் கூடுதல், குறைதல் கோளாறுகள் இருந்தால் கருத்தரிக்க தாமதமாகும்.
*குறைந்த உடல் எடையும் அழகல்ல பல வழிகளில் இதுவும் ஆபத்துதான்.
*கருமுட்டை குழாய் அடைத்துக் கொள்ளுதல்.
*உடம்பில் ஏதேனும் காசநோய் மாதிரியான தொற்றுநோய் இருப்பதால்.
*எச்.ஐ.வி மாதிரியான பால்வினை நோய்கள் இருந்தால்.

இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்ய வேண்டியவை…

ஒரு வருடம் ஆகியும் கரு நிற்கவில்லை என்று எடுத்தவுடன் மருந்து மாத்திரைகள், கருத்தரிக்க உதவும் மருத்துவ முறைகளை எடுத்துக் கொள்வது தவறு. கணவன்-மனைவி இருவரும் கொஞ்ச காலம் வாழ்வியல் மாற்றங்களை செய்து பார்க்கவேண்டும். இப்படி பலருக்கு கரு தரித்திருக்கிறது.

*துரித உணவுகளில் சேர்க்கப்படும் சைனீஸ் உப்பு போன்ற கெமிக்கல்கள் மலட்டுத்தன்மையை உருவாக்கும் என்பதால் அவற்றை தவிர்த்தல் முக்கியம்.
*தினமும் உடற்பயிற்சி செய்வதும் நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
*நாம் உண்ணும் உணவை கூடுமானவரையில் ஆரோக்கியமான உணவாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

*ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம்தான் வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் மன அழுத்தம் உண்டாவதுடன், உடல் சோர்வு, உடல் நலக்கோளாறுகள் உண்டாகும் என்பதால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படும்.
*இயன்முறை மருத்துவர் உதவியுடன் உடல் எடையைக் குறைத்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
*குடி, புகை, போதை பழக்கம் உள்ளவர்கள் கட்டாயம் இப்பழக்கங்களை நிறுத்த வேண்டும்.

*எட்டு மணி தூக்கம் மிக அவசியமானது.
*அலுவல் வேலை முடிந்ததும் மீண்டும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பொழுதைப் போக்காமல் துறுதுறுவென்று நாள் முழுதும் உற்சாகத்துடன் இருத்தல் நல்லது.
*மாதவிடாய் கோளாறுகள் இருந்தால் முதலில் அதனை மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் சரி செய்து கொள்ளுதல் அவசியம்.
*தாமத திருமணம் புரிவோர் கருத்தரித்தலை தள்ளிப்போடக் கூடாது. அதேபோல திருமணம் ஆனது முதல் ஆறு மாதம் வரை இயற்கை வழி கர்ப்பத்திற்காக காத்திருக்கலாம். அதன்பின் கரு நிற்கவில்லை எனில் மகப்பேறு மருத்துவரை நாடுவது நல்லது என பல மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

*இன்று திருமணமான பல பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் எடை குறைவது மட்டுமின்றி கருவும் தறிக்க முடிகிறது.
*அவரவர் உடம்புக்கு தேவையான மாதிரி உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவர் பரிசோதனை செய்து பரிந்துரைத்து பின் அவற்றை கற்றும் கொடுப்பார்கள். மொத்தத்தில் உடல் ஆரோக்கியம், கருப்பை ஆரோக்கியம், தூக்கம், உணவு,  வாழ்வியல் முறை என்னும் இந்த ஐந்து வார்த்தைகளையும் மனத்தில் மந்திரம் போல பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் என்ன, நம் வீட்டிலும் மழலை சத்தம்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தொப்புள்கொடி.. நம் உயிர்க்கொடி!!(மருத்துவம்)
Next post நீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…!!(அவ்வப்போது கிளாமர்)