விதவிதமான காபி, டீ வகைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 12 Second

எந்தக் காலத்திலும் காபி, டீ இரண்டு பானங்களுமே மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றன. காலையில் காபி இல்லாமல் பொழுதே விடியாது என்றால், சாயங்காலம் டீ இல்லாமல் மாலைப் பொழுது போகாது. இதமான குளிருக்கு காபி, டீ அருந்தினால் அதன் சுவையே தனிதான். அதேபோல் கோடையில் ஐஸ் காபி, டீ அருந்தினால் எப்படி இருக்கும்? இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு சுவையுடன் காபி, டீ பானங்கள் தயாராகின்றன. அவற்றை நமது வீடுகளிலேயே தயாரித்து நாமும் ருசித்துப் பருகி நமது விருந்தினர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் திருப்திப்படுத்த சுவையான காபி.. டீக்களை தோழியருக்காக வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் ராஜகுமாரி.

கேப்பச்சீனோ

தேவையானவை:

இன்ஸ்டன்ட் காபி பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்,
பால் – 1 கப்,
மேலே தூவுவதற்கு – இன்ஸ்டன்ட் காபி பவுடர் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பவுலில் இன்ஸ்டன்ட் காபிபவுடர், சர்க்கரை இரண்டையும் போட்டு ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும். காபி பவுடரும், சர்க்கரையும் சேர்ந்து நுரை மாதிரி வந்ததும் ஒரு ஸ்பூன் தண்ணீரையும் சேர்த்துக் கலந்து மீண்டும் நன்றாக அடிக்கவும். க்ரீம் பதம் வந்ததும் நிறுத்தி விடவும். பாலை நன்றாகக் காய்ச்சி, ஒரு கப்பில் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையைப் போட்டு அதன் மேலே பாலை ஊற்றி மேலே சிறிதளவு காபி பொடியினை தூவி கேப்பச்சீனோவைச் சுவைக்கலாம்.

சாக்லேட் காபி

தேவையானவை :

திக்கான பால்- 1 கப்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன்,
டயரி மில்க் சாக்லேட் துருவியது – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

டயரி மில்க் சாக்லேட்டைத் துருவலில், 1 டீஸ்பூன் துருவலை மேலே தூவுவதற்கு தனியே எடுத்து வைக்கவும். ஒரு கப்பில் இன்ஸ்டன்ட் காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சேர்த்து 1 ஸ்பூன் தண்ணீரையும் சேர்த்து 5 நிமிடம் வரை க்ரீம் பதம் வரும் வரை அடிக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் சூடானதும் சாக்லேட் துருவலையும் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும். ஒரு டம்ளரில் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையைப் போட்டு மேலே கொதித்த சாக்லேட் பாலை ஊற்றி ஸ்பூனால் கலக்கி விடவும். மேலே தூவுவதற்குக் கொடுத்த துருவலையும் தூவி சாக்லேட் காபியை சுவைக்கவும்.

கும்பகோணம் டிகிரி காபி

தேவையானவை :

திக்கான பால் – 1 கப்,
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்,
வறுத்து அரைத்த காபி பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

தரமான காபிக் கொட்டையை வாங்கி காபித்தூள் அரைக்கும் கடையில் கொடுத்து அரைத்து, விருப்பப்பட்டால் சிறிதளவு சிக்கரியும் கலந்து வைத்துக் கொள்ளவும். காபி பில்டரில் 3 டேபிள் ஸ்பூன் அரைத்து வைத்துள்ள காபி பவுடர் போட்டு அதன் மேலே தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஊற்றவும். டிகாஷன் இறங்குவதற்குள் பாலை தண்ணீர் ஊற்றாமல் பாத்திரத்தில் ஊற்றி பொங்கும் வரை காய்ச்சி இறக்கவும். டம்ளரில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை போட்டு இறங்கிய டிகாஷனை  ஊற்றி கொதித்த பாலை அதில் சேர்த்து டபராவில் நன்றாக நுரை வரும் வரை ஆற்றி சூடாகப் பருகவும்.

க்ரீம் கோல்ட் காபி

தேவையானவை :

பால்- 1 கப்,
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்.
ஏலக்காய் நசுக்கியது – 1,
பட்டை – 1 சிறியதுண்டு,
டீத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
கோக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்,
டார்க் சாக்லேட் (அ) கேட்பரி சாக்லேட் – 1 துண்டு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ¼ கப் நீர் ஊற்றி ஏலக்காய், பட்டை, சர்க்கரை, டீத்தூள் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும். வடிகட்டிய டீ டிகாஷனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் பால் ஊற்றி ஒரு கொதிவிட்டு கோக்கோ பவுடர் சேர்த்து டார்க் சாக்லேட்டை அதில் போட்டு சாக்லேட் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி கப்புகளில் ஊற்றினால் சாக்லேட் டீ தயார்.

சுக்கு மல்லி காபி

தேவையானவை :

சுக்கு- 2 துண்டு,
தனியா- ¼ கப்,
மிளகு,
சீரகம்- தலா 1 டீஸ்பூன்,
கிராம்பு,
ஏலக்காய்- தலா 2,
கருப்பட்டி (அ) பனைவெல்லம் – ருசிக்கு ஏற்றவாறு,
பால் – ½ கப்.

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் சுக்கினை தனியே வறுத்து நசுக்கி வைக்கவும். பிறகு அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் எல்லாவற்றையும் வறுக்கவும். நசுக்கிய சுக்குடன் வறுத்த அனைத்தையும் சேர்த்து (நீர் விடாமல்) மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தேவைப்படும் போது 1 கப் நீரினைக் கொதிக்க வைத்து அரைத்த பவுடரில் 2 ஸ்பூன் போட்டு நன்கு கொதித்ததும், வடிகட்டி கருப்பட்டி (அ) பனைவெல்லம் சேர்த்து பாலைச் சூடு செய்து அதில் சேர்த்துப் பருகவும். இந்த சுக்கு மல்லி காபி மருத்துவ குணங்கள் கொண்டது. மொத்தமாகப் பொடியினைத் தயார் செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக் கொண்டு தேவைப்படும் போது கொதிநீரில் சேர்த்து வடிகட்டி பால், வெல்லம் சேர்த்துப் பருகலாம். பால் இல்லாத சமயங்களில் பால் சேர்க்காமலும் பருகலாம்.

லெமன் டீ

தேவையானவை :

ஏலக்காய் – 2,
பட்டை – 2 சிறிய மெல்லிய துண்டு,
லவங்கம்- 2,
தேன்- 1 டீஸ்பூன்,
இஞ்சி- 1 சிறிய துண்டு,
புதினா இலைகள்- 2,
எலுமிச்சம் பழம் – ½ மூடி,
தேயிலை – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

1 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். பட்டை, ஏலம், லவங்கம் மூன்றையும் நசுக்கிப் பிறகு இஞ்சியையும் சேர்த்து நசுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து ஒரு கொதி விடவும். தேயிலையையும் சேர்த்து இரண்டு கொதிவிட்டு வடிகட்டவும். அதனை ஒரு கப்பில் ஊற்றி அதில் மேலும் ¼ கப் வெந்நீர் ஊற்றிக் கலந்து எலுமிச்சை சாறு பிழிந்து தேன் கலந்து புதினா இலைகள் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விட்டுப் பருகவும். லெமன் டீ தயார்.

க்ரீன் டீ

தேவையானவை:

க்ரீன் டீ சாஷே பாக்கெட் – 2,
தேன் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்.

செய்முறை:

1 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் க்ரீன் டீ பாக்கெட்டை அப்படியே போடவும். நிறம் மாறியதும் பாக்கெட்டுகளை எடுத்து விட்டு இறக்கி தேன், எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கிப் பருகவும்.

மசாலா டீ

தேவையானவை:

திக்கான பால் – 1 கப்,
சுக்குப் பொடி- ½ டீஸ்பூன்,
ஏலப்பொடி – ½ டீஸ்பூன்,
தேயிலை, – 2 டேபிள் ஸ்பூன்,
நாட்டுச்சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்,
டஸ்ட் டீ – 1 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ¼ கப் நீர் ஊற்றி நாட்டுச் சர்க்கரையை போட்டு ஒரு கொதி வந்ததும் ஏலப்பொடி, சுக்குப் பொடி போட்டு ஒரு கொதி விட்டு தேயிலை மற்றும் டஸ்ட் டீ இரண்டையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடவும். இது கொதிக்கும் போதே வேறு ஒரு பாத்திரத்தில் பாலைக் கொதிக்கவிடவும். மசாலா பொருட்களுடன் சேர்ந்து டீ நன்கு கொதித்தவுடன் பாலை சேர்த்துக் கலக்கி கப்புகளில் ஊற்றிப் பருகவும். (ஏலப்பொடி, சுக்குப்பொடி சேர்க்க விரும்பாதவர்கள் அவற்றை சேர்க்காமல் சாதாரண டீயாகப் பருகலாம்.

இன்ஸ்டன்ட் மசாலா டீ ப்ரீமிக்ஸ்

தேவையானவை :

பால் பவுடர் – ½ கப்,
சர்க்கரை- ¼ கப்,
க்ரீன் டீத்தூள்- 1 டேபிள் ஸ்பூன்,
தேயிலை – 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்- 2,
சுக்குபொடி- 1 டீஸ்பூன்,
கிராம்பு- 3,
மிளகு- ½ டீஸ்பூன்.

செய்முறை:

(பால் பவுடரை தனியே எடுத்து வைத்துக் கொண்டு) மற்ற அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து இறுதியில் பால்பவுடரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி அனைத்தையும் நன்றாகக் கலந்து விட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து 2 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட் மசாலா டீ ப்ரீமிக்ஸ் சேர்த்துக் கொதிக்க வைத்து பொங்கியதும் இறக்கி வடிகட்டி கப்புகளில் ஊற்றிச் சுவைக்கவும். குறிப்பு: பால் இல்லாத நேரங்களிலும் இந்த ப்ரீமிக்ஸ் இருந்தால் அதை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். எங்கேயாவது வெளியில் செல்லும் போது ப்ளாஸ்க்கில் வெந்நீர் மட்டும் எடுத்துச் சென்றால் இந்த ப்ரீமிக்ஸ் சேர்த்துக் கலந்து வடிகட்டி குடிக்கலாம்.

சாக்லேட் டீ

தேவையானவை:

பால்- 1 கப்,
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்.
ஏலக்காய் நசுக்கியது – 1,
பட்டை – 1 சிறியதுண்டு,
டீத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
கோக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்,
டார்க் சாக்லேட் (அ) கேட்பரி சாக்லேட் – 1 துண்டு.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ¼ கப் நீர் ஊற்றி ஏலக்காய், பட்டை, சர்க்கரை, டீத்தூள் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும். வடிகட்டிய டீ டிகாஷனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் பால் ஊற்றி ஒரு கொதிவிட்டு கோக்கோ பவுடர் சேர்த்து டார்க் சாக்லேட்டை அதில் போட்டு சாக்லேட் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி கப்புகளில் ஊற்றினால் சாக்லேட் டீ தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post சுவையான கொத்தவரை! (மகளிர் பக்கம்)