IVF சந்தேகங்கள்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 28 Second

குழந்தையின்மை பிரச்னைக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சையான IVF முறை தற்போது வேகமாகப் பிரபலமாகி வருகிறது. அதேநேரத்தில் ஐ.வி.எஃப் பற்றி பல்வேறு சந்தேகங்களும் பொதுமக்களிடையே இருக்கின்றன. செயற்கை கருத்தரிப்பு நிபுணர் கிருத்திகா தேவி இதுகுறித்த சந்தேகங்களுக்கு இங்கே விளக்கமளிக்கிறார்.

இன்றைய தலைமுறையினர் திருமண வயதை தள்ளிப்போடுவதால், வயது ஏற, ஏற கருமுட்டை மற்றும் உயிரணுக்கள் உற்பத்தி குறைகிறது. பொதுவாக உடல் உழைப்பற்ற வேலை, உடல் பருமன், தவறான உணவுப்பழக்கம் மற்றும் அதீத செல்போன் உபயோகம்  போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பாக ஆண்களிடம் உள்ள மது, புகை, போதைப் பழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன.

பெண்களுக்கு PCOD, கருக்குழாய் அடைப்பு, கருப்பை நீர்க்கட்டிகள் காரணமாகின்றன. சமீபத்திய தரவின்படி, இருபாலரிடத்திலும் மன அழுத்தம் மிகப்பெரிய பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. தொழில்ரீதியாகப் பார்த்தால் சமையல் வேலை செய்பவர்கள், வெப்பக்கலன்கள் மற்றும் கதிர்வீச்சு வெளிப்படக்கூடிய எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள், வாகன ஓட்டுநர்களுக்கும் கருவுறாமை பிரச்னை அதிகமாக இருக்கலாம்.

மற்றுமொரு முக்கியமான காரணம் மோசமான உணவுப்பழக்கம். உணவில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், பீட்சா, நூடுல்ஸ், பாக்கெட் உணவுகள் மற்றும் உலோக கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவை உயிரணுக்கள், கருமுட்டை உற்பத்தியை பாதிக்கக் கூடியவை. இதைத் தவிர புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் கருவுறாமை நிலை ஏற்படுகிறது.

குழந்தை இல்லாத தம்பதிகளில் ஆண்களின் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறதா?

குழந்தையின்மை குறைபாடு என்று வருகிறபோது தம்பதிகளில் ஆண், பெண் இருவரையுமே பரிசோதிக்க வேண்டும். ஆணைப் பொறுத்தவரையில் உயிரணு எண்ணிக்கையை சோதிக்க வேண்டும். இருவருக்கும் பிரச்னை இருக்கக்கூடும் எனும்போது பெண்ணை மட்டும் குற்றம் சொல்லும் போக்கு மாறி வருவது பாராட்டுக்குரியது.

கருவுறாமைப் பிரச்னைக்கும் IVF சிகிச்சை மட்டுமே தீர்வா?

கண்டிப்பாக இல்லை. ஒவ்வொருவருக்கும் கருவுறாமைக்கான சிகிச்சை மாறுபடும். மருத்துவர்கள் எடுக்கும் கடைசி ஆயுதம்தான் IVF. பெண்ணிற்கு PCOS, ஃபைப்ராய்டு, கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்றும், ஆணுக்கு உயிரணு உற்பத்தி குறைபாடு இருக்கிறதா என்றும் சோதித்துப்பார்த்து, அதற்கான சிகிச்சையை அளித்து, அதில் பயனில்லை எனும் போதுதான் இறுதியாக IVF சிகிச்சைக்கு பரிந்துரைப்போம்.

வயது வரம்புகள் ஏதேனும் இருக்கிறதா?

எந்த வயதில் வேண்டுமானாலும் IVF சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தன்னுடைய சொந்த உயிரணு, கருமுட்டையில்தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். இத்தகைய விருப்பம் உள்ளவர்கள் 40 வயதுக்கு முன் சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

திருமணத்திற்குப்பின் எத்தனை ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்?

எந்தப் பிரச்னையும் இல்லா விட்டாலும், திருமணம் முடிந்தவுடனே தம்பதிகள் ஆலோசனைக்குச் செல்வது நல்லது. இருவரையும் உடனே பரிசோதனை செய்து, பிரச்னை இருக்கும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாக சிகிச்சையை ஆரம்பிக்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது.

இன்னும் சொல்லப்போனால், திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே இருவரும் கவுன்சிலிங் எடுத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் முழுமையான தாம்பத்தியத்திற்கு தயாராவார்கள். குறைந்தபட்சம் 6 மாதங்களும், அதிகபட்சம் ஒரு வருடம் வரை கர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம். சமீபகாலமாக 30 வயதிற்குமேல்தான் திருமணமே செய்து கொள்கிறார்கள் எனும்போது குழந்தைப்பிறப்பை தள்ளிப்போடுவது நல்ல விஷயம் கிடையாது.

IVF சிகிச்சையின் வெற்றி விகிதம் என்ன?

விதையின் தரம் மற்றும் மண்ணின் தரமே ஒரு மரம் செழித்து வளர காரணமாகிறது. அதுபோல் தம்பதிகளின் உடலமைப்பைப் பொருத்தே வெற்றி விகிதம் இருக்கும். IVF சிகிச்சையின் வெற்றி ரகசியம் எந்த அளவிற்கு காலதாமதம் இல்லாமல் முன்னதாக வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது. தம்பதிகள் இருவரும் மருத்துவர்கள் சொல்லும் விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டு, எல்லாவித சிகிச்சை முறைகளையும் முயற்சி செய்துவிட்டு, இறுதியில் விந்தணுக்கள் இல்லாத நிலையில் சிகிச்சைக்கு வரும்பட்சத்தில்
வெற்றிக்கான வாய்ப்பு இல்லை.

IVF முறையில் சிசேரியன் பிரசவம் மட்டுமே சாத்தியமா?

அப்படி சொல்ல முடியாது. சாதாரணமாக மற்ற கர்ப்பிணிப் பெண்களைப்போல்தான் இவர்களும். பிரசவ நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளை வைத்துத்தான் நார்மல் டெலிவரியா, சிசேரியனா என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், IVF சிகிச்சை முறைக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் உடல்பருமன் அல்லது வேறு ஏதாவது கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுடன் இருப்பதாலும், அடிப்படையில், இவர்களுடைய பிரசவத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாமே என்ற காரணத்தினாலும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை பத்திரமாக வெளியே எடுப்பது பாதுகாப்பானது என்ற காரணமாக இருக்கலாம்.

ஒரு முறை சிகிச்சை தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சிக்கலாமா?

கண்டிப்பாக முயற்சிக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு 2 அல்லது 3-வது முறையில் கூட வெற்றி அடைந்திருக்கிறது. ஒருமுறை செய்து கொண்டு முயற்சியை கைவிட்டுவிட வேண்டியதில்லை.

IVF முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதா?

இயற்கையாக ஒரு தம்பதியருக்கு எப்படி குழந்தை பிறக்குமோ அப்படித்தான் டெஸ்ட் ட்யூப் பேபியும் இருக்கும். அவர்களுக்கு இருக்கும் மரபணுப் பிரச்னை அல்லது பரம்பரைத்தன்மையால் வரக்கூடிய குறைபாடுகள் வேண்டுமானால் வரலாம். இந்த சிகிச்சையால் எந்த பிரச்னையும் ஏற்படாது. அவரவர் மரபணுக்களே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பலருக்கும் IVF முறையில் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசக் கோளாறு வருமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதுவும் தவறு. ஆட்டிச குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு தம்பதிக்கு இருந்தால் மட்டுமே, அப்படி  பிரசவம் நிகழும்.

IVF சிகிச்சை முறை பாதுகாப்பானதா?

இப்போது சிகிச்சை மிகவும் எளிதாகிவிட்டது. பெட் ரெஸ்ட் அவசியமில்லை. ஒரு நாள்கூட மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 15 நாட்களில் முழு சிகிச்சையும் முடிந்துவிடும். கருமுட்டையை எடுப்பதற்கும் எந்தவிதமான அறுவை சிகிச்சையோ, தையல்போட வேண்டிய அவசியமோ இல்லை. ஊசி மூலம் எடுத்து விடலாம். அதற்குப்பிறகும் வழக்கம்போல அன்றாட வேலைகளைச்
செய்யலாம்.

ஐ.வி.எஃப் காஸ்ட்லியான சிகிச்சை என்கிறார்களே?

ஒரு உயிரை கருப்பை அல்லாமல் பரிசோதனைக்கூடத்தில் வைத்து வளர்க்கும்போது, கருப்பைக்கு ஈடான தட்ப வெப்பம், பிராணவாயு கிடைக்கும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு  லட்சக்கணக்கில் செலவாகும். தட்ப வெப்பத்திலோ, பிராணவாயுவிலோ சிறு மாறுபாடு இருந்தாலும் கூட கரு செத்துப்போய்விடும். அதற்கான திரவங்கள், மருந்துகள் எல்லாமே விலை அதிகமானவை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ற மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டியிருப்பதால் ஒருவருக்கொருவர் கட்டணம் மாறுபடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செயற்கை கருப்பை கண்டுபிடிச்சாச்சு!(மருத்துவம்)
Next post செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்?(அவ்வப்போது கிளாமர்)