
வீட்டிலேயே செய்யலாம் வெரைட்டி பாப்கார்ன்!!(மகளிர் பக்கம்)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொறிப்பது பாப்கார்ன். குறிப்பாக சினிமா தியேட்டருக்கு சென்றால், அங்கு நாம் முதலில் ஆர்டர் செய்யும் தின்பண்டம் என்றால் பாப்கார்ன் தான். இப்போது இன்ஸ்டன்ட் பார்ப்கார்ன் கடையில் கிடைத்தாலும் நாம் விரும்பும் ருசியில் வெரைட்டியாக வீட்டிலேயே செய்யலாம்.
சீஸ் பாப்கார்ன்:
பாப்கார்னை வெறும் வாணலியில் வறுக்கவும். சூடாக இருக்கும்போதே, சீஸ், உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பாப்கார்ன் மீது விட்டு, குலுக்கி, சாட் மசாலா தூவி நன்கு கிளறி இறக்கி பரிமாற சுவையாக இருக்கும்.
க்ரீன் பாப்கார்ன்:
புதினா அல்லது கொத்தமல்லியுடன் உப்பு, பச்சை மிளகாய் 1, எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து சூடான பாப்கார்னில் வெண்ணெய் போட்டு இதில் அரைத்த விழுதை போட்டு நன்கு கலக்கி இறக்கவும்.
ஸ்வீட் பாப்கார்ன்:
சர்க்கரைப் பாகில், ஏலக்காய் பொடி சேர்த்து அதில் பாப்கார்னை போட்டு நன்றாக கலந்து இறக்கவும்.
கார்லிக் பாப்கார்ன்:
பூண்டை உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் வெண்ணெய் போட்டு அரைத்த விழுதைப் போட்டு பின் பாப்கார்ன் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
சாக்லேட் பாப்கார்ன்:
சாக்லேட் துருவலை உருக்கி, அது உருகியதும் வெண்ணெய் சிறிது சேர்த்து, பின் பாப்கார்னை சேர்த்து நன்கு கலக்கவும். க்ரிஸ்பானதும் இறக்கவும்.
சிட்ரிக் பாப்கார்ன்:
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பொடிக்கவும். இதை பாப்கார்ன் மீது அப்படியே தூவி வெண்ணெய் அல்லது சீஸ் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பொடி தூவிய பாப்கார்ன்:
கறிவேப்பிலை பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, மிளகு சீரகப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஒன்றிரண்டு காம்பினேஷனாகவோ தூவி உப்பு கலந்தால் சுவைக்க நன்றாக இருக்கும்.