அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 43 Second

தாயின் வயிற்றில் ஒற்றை ‘செல்’லாக வளர ஆரம்பிக்கும் கருவானது, உருவம் எடுக்கும் பருவ காலம் முதல் மூன்று கர்ப்ப மாதங்கள். இந்த முதல் டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும்? தெரிந்துகொள்வோமா?

கருப்பையின் மெத்தென்ற பரப்பில் பதிந்துகொண்ட கருவின் வெளிப்புற செல்கள் மெதுவாக வேர்கள் போலக் கிளைவிட்டு வளரத் தொடங்கும். அப்படி வளர்ந்துகொண்டே சென்று, நச்சுக்கொடி(Placenta) வழியாக அம்மாவின் கருப்பையில் இருக்கும் ரத்தக்குழாய்களோடு இணைந்து, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற வழியை உண்டாக்குகின்றன. இந்த இணைப்பைத்தான் ‘தொப்புள் கொடி’ என்கிறோம்.

கருவின் உட்புற செல்கள் மூன்றுவிதமாகப் பிரிகின்றன. முதலாவது ரக செல்கள்(Ectoderm) மூளை மற்றும் நரம்பு மண்டலமாகவும், தோல், கண், நகம் போன்ற உறுப்புகளாகவும் மாறுகின்றன. இரண்டாவது ரகமானது (Mesoderm) ரத்தக்குழாய், தசை, எலும்பு என்று நமக்கு உருவம் தரும் உறுப்புகளாகவும் இதயம் என்ற உயிர்தரும் உறுப்பாகவும் மாறுகின்றன.

மூன்றாவது ரக செல்கள் (Endoderm) வயிறு, குடல். நுரையீரல், தைராய்டு போன்ற உறுப்புகளாக உருமாறுகின்றன. கருப்பையில் குழந்தை வளர்வதை இப்படிப் பொதுவாகச் சொல்லிவிட்டாலும், வாராவாரம் அதன் வளர்ச்சியைப் பின்தொடர்ந்தால் இன்னும் சுவாரஸ்யம்கூடும்.

இதயத்துடிப்பு ஆரம்பம்!’இந்த மாதம் ‘நாள்’ தப்பி ஒரு வாரம் கூடுதலா ஆச்சே! ஒருவேளை அம்மாவாகப் போகிறோமோ?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கருப்பையில் ‘வால் முளைத்த சிசு’ உருவாக ஆரம்பித்துவிடுகிறது. அப்போது முதுகுத்தண்டு, மூளை மற்றும் இதயம் அதில் உருவாகியிருக்கும். சிசுவுக்கான ரத்த ஓட்டம் கூட ஆரம்பித்திருக்கும்.

சிசுவுக்கு உண்மையிலேயே உயிர் உண்டாகிற வாரம் ஆறாவது வாரம்தான். அதாவது, இதயம் துடிக்கத் தொடங்கும் வாரம் இது. இந்த வாரத்தில் பூ முதலில் மொட்டுவிடுவதைப்போல, சிசுவின் மேடேறிய இடங்களில் கை, கால்களுக்கான ‘மொட்டுகள்’ தோன்றும். உருட்டி வைத்த சப்பாத்தி மாவுபோலிருக்கும் முகத்தில் கண், காது மற்றும் வாய் தோன்றத் தொடங்கும்.

இச்சமயத்தில் முகத்தின் பக்கவாட்டில்தான் கண்கள் இருக்கும்.ஏழாவது வாரத்தில் மொட்டுகளாக இருந்த சிசுவின் பகுதிகள் கை, கால்களாகவும், தலையின் இரண்டு பக்கமும் இருந்த குழிகள் காதுகளாகவும் உருமாறும் அதிசயம் நடக்கிறது.

இந்த நேரத்தில் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது. சரியாகச் சொன்னால், நிமிடத்துக்கு 150 முறை துடிக்கிறது. இச்சமயத்தில்தான் குடல், கணையம் போன்றவை வளர ஆரம்பிக்கின்றன. கண் லென்ஸ்களும் நாசித் துவாரங்களும் தோன்றுகின்றன.

குழந்தை ஆணா, பெண்ணா?

எட்டாவது வாரம் ஒரு முக்கியமான வாரம். அப்போதுதான் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிக்கிற இனப்பெருக்க உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன. ஆணாக இருந்தால் விரைகளாகவும், பெண் என்றால் சினைப்பைகளாகவும் மாறுகின்றன. அப்போது கண்கள் நன்றாக உருவாகியிருக்கும். ஆனால், அவை மூடிய நிலையில்தான் இருக்கும்.

பற்கள் உருவாக ஆரம்பிக்கும். மூக்கின் நுனி தெரிய ஆரம்பிக்கும். கை, கால்கள் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கும். சிசுவானது முழங்கையை மடித்துக் கொள்ளும். சிசு முதன்முதலில் அசையத் தொடங்கும் கர்ப்ப வாரம் இது.

ஆனால் அந்த அசைவை அம்மாவால் உணர முடியாது. ஒன்பதாவது வாரத்தில் விரல்கள் நன்றாகவே வளர்ந்திருக்கும். எலும்புகளும் குருத்தெலும்புகளும் வளரத்தொடங்கும்.
சிசுவுக்குக் கிடைக்கும் புரமோஷன்!

சிசுவின் வளர்ச்சிப்படிகளில் அடுத்த முக்கியத்துவம் பத்தாவது வாரத்துக்குத்தான் உண்டு. காரணம், இப்போதுதான் ‘சிசு’ என்ற நிலையிலிருந்து ‘கருக்குழந்தை’ என்ற நிலைக்கு அது ‘புரமோஷன்’ ஆகிறது. பெரும்பாலும் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கைவிரல்கள், முழங்கால், கணுக்கால், பாதம், கால் விரல்கள் என எல்லா உறுப்புகளும் இந்த வாரத்தில் வளர்ந்திருக்கும்; ஒரு குழந்தையின் முழு வடிவம் வந்திருக்கும்.

குழந்தையின் விரல்களில் நகங்கள் மற்றும் கண்ணில் விழித்திரை(Retina) வளரும் காலம் 11-வது வாரம்.12-வது வாரத்தில் தலையில் முடி தோன்றும். மேல் தோல் வளர்ந்திருக்கும். ஒன்றோடொன்று ஒட்டி யிருந்த விரல்கள் இப்போது பிரிந்து தனித்தனியாகத் தெரியும். சிறுநீரகங்கள் செயல்படத் தொடங்கும்.13-வது வாரத்தில் குழந்தைக்குக் குரல்வளைகள் உருவாகிவிடும்.

இருபது பால்பற்களும் உருவாகி, குழந்தை பிறந்த பிறகு சரியான நேரத்தில் வெளியில் தெரிய ஈறுகளுக்குள் காத்திருக்கும். குழந்தையின் எலும்பு மஜ்ஜை, கல்லீரல் போன்றவை சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கும். முகத்தின் பக்கவாட்டில் இருந்த கண்கள்இப்போது முன்புறம் நகர்ந்து அருகருகில் காணப்படும்.

முதல் டிரைமெஸ்டர் முடியும்போது கருப்பையில் வளரும் குழந்தை எந்த சைஸில் இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குத்தான் இருக்கும்!

? கர்ப்ப காலத்தின் போது ஒவ்வொரு பெண்ணுக்கும், எல்லா காலகட்டத்திலும் அதிகம் எழுகிற கேள்விகள் இவை. மருத்துவர்கள் அதிகம் எதிர்கொள்கிற கேள்விகளும் கூட.சந்தேகம் தெளிவோம்…

கர்ப்பத்தின்போது பாலுறவு வைத்துக்கொள்ளலாமா?
கர்ப்பிணிகள் கேட்கத் தயங்கும் கேள்வி இது. கரு உருவானதிலிருந்து முதல் மூன்று மாதங்கள் வரை அது கருப்பையில் சரியான பிடிப்பின்றி இருக்கும் என்பதால், கரு கலைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதனால், இந்த நாட்களில் எப்படி நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறோமோ, அப்படித்தான் பாலுறவு வைத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறோம். அதேபோல், கடைசி மாதமான ஒன்பதாவது மாதத்திலும் பாலுறவைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

இந்த நேரத்தில் பாலுறவு வைத்துக் கொண்டால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குழந்தை பிறப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் இம்மாதிரியான ஆபத்துகளை ‘விலைக்கு’ வாங்கக்கூடாது! இங்கே குறிப்பிட்ட இந்த நான்கு மாதங்கள் தவிர மிச்சமுள்ள மாதங்களில் நிதானமான பாலுறவை வைத்துக்கொள்ளலாம். பிரச்னை இல்லை.

இந்த ஆலோசனை நார்மலாக கருத்தரிக்கும் பெண்களுக்கு மட்டுமே!திரும்பத்திரும்ப கரு கலைந்திருக்கும் பெண்கள், கர்ப்பம் ஆன பிறகு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும் பெண்கள் போன்றவர்கள் கர்ப்பகாலம் முழுவதும் பாலுறவைத் தவிர்ப்பது நல்லது. பிரசவத் தேதியைக் கணக்கிடுவது எப்படி?

சென்ற முறை மாதவிலக்கு தொடங்கிய நாளிலிருந்து சரியாக இரண்டு வாரங்களில் ‘கருத்தரித்தல்’ நடந்திருக்கிறது என்ற அனுமானத்தில் பிரசவத் தேதி கணக்கிடப்படுகிறது. கடைசியாக மாதவிலக்கு தொடங்கிய நாளிலிருந்து 7 நாட்களைக் கூட்டிக்கொண்டு, அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்தால் கிடைக்கும் தேதிதான் பிரசவத் தேதி.

உதாரணமாக கடைசியாக மாதவிலக்கு தொடங்கிய தேதி ஜனவரி 1 என்றால்,ஜனவரி 1 + 7 = ஜனவரி 8 3 மாதங்கள் = அக்டோபர் 8 பிரசவத்தேதி.
பொதுவாக முழு கர்ப்ப காலம் என்பது 280 நாட்கள். (40 வாரங்கள்).

கர்ப்பிணிகள் எப்படி படுப்பது நல்லது?

கர்ப்பிணிக்கு எப்படி வசதியோ அப்படியே படுக்கலாம். என்றாலும், மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்துவரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்துப்போகும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும்.

இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் இறங்கிவிடும். தலைசுற்றி, மயக்கம் வரும். இதனைத் தவிர்க்க இடதுபக்கம் ஒருக்களித்துப்படுப்பது நல்லது. இந்த நிலையில் அம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்னை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும்.

என்னென்ன தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும்?

கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஜெர்மன் தட்டம்மை கர்ப்பிணியைத் தாக்கினால், குழந்தைக்குப் பிரச்னைகள் உருவாகலாம். எனவே, இதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது, அப்படி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த மூன்று மாதங்கள்வரை கருத்தரிக்காமல் இருக்கவேண்டியதும் முக்கியம். இதுபோல் ஹெப்படைடிஸ்-ஏ, ஹெப்படைடிஸ்-பி தடுப்பூசிகள் மற்றும் ஃபுளுகாய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதும் நல்லது. இவற்றைக் கர்ப்பமானதும்கூட போட்டுக் கொள்ளலாம்.

பிரசவத்தின்போது கர்ப்பிணிக்கும் பிறக்கும் குழந்தைக்கும் டெட்டனஸ் நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள காரணத்தால், அதைத் தவிர்ப்பதற்காக டெட்டனஸ்டாக்சாய்டு அல்லது டி.டி.ஏ.பி(Tdap)தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முதல்முறையாக கர்ப்பம் ஆகும்போது, ஸ்கேன் மூலம் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனேயே முதல் தவணையாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இப்படி இரண்டாம் தவணையைப் போடத் தவறியவர்கள் பிரசவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாவது இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம். இரண்டாம் முறை கர்ப்பம் தரிக்கும்போதும் இதேபோல் இரண்டு தவணைகள் போடடுக்கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ருசியான அசைவ விருந்து!! (மகளிர் பக்கம்)
Next post ஒன்றல்ல… இரண்டு!(மருத்துவம்)