முக்கியம்…முதல் 3 மாதங்கள்!(மருத்துவம்)

Read Time:13 Minute, 5 Second

‘பத்து மாதம் உன்னை சுமந்து பெத்தேன்’ என்று அம்மாக்கள் பெருமையாகக் கூறுவதைக் கேட்டிருப்போம். இது ஒரு பேச்சுக்குத்தான்; உண்மையில் இந்த 10 மாதம் ஒரு குழந்தையை அம்மா சுமப்பதில்லை.கருப்பை ஒரு கருவைச் சுமப்பது மொத்தம் ஒன்பது மாதமும் ஒரு வாரமும்தான். இது கூட கடைசியாக மாதவிடாய்வந்த முதல்நாளிலிருந்து எண்ணப்படும் கணக்கு. இந்த ஒன்பது மாதங்களை மூன்று மூன்று மாதங்களாகப் பிரித்துக் கொள்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பருவத்தை டிரைமெஸ்டர் (Trimester) என்ற பெயரால் குறிப்பிடுவார்கள்.

முதல் மூன்று மாதங்கள் வரை முதல் டிரைமெஸ்டர், நான்காவது மாதத்திலிருந்து ஆறாம் மாதம் வரை ‘இரண்டாவது டிரைமெஸ்டர்’, ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை ‘மூன்றாவது டிரைமெஸ்டர்’ என்று இந்த காலகட்டத்தைப் பிரிக்கலாம்.இதில் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. கரு உருவாகி, கருப்பையில் நிலைக்கத் தொடங்கும் காலம் இது. மசக்கைதான் இந்த டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகளை அதிகம் படுத்தி எடுக்கும். அதை எப்படிச் சமாளிப்பது என்பதைசென்ற இதழில் பார்த்துவிட்டோம்.

அடுத்து, இந்தக் காலகட்டத்தில் கருப்பையில் கருவானது ரொம்பவும் ஆழமாக வேரூன்றி வளரத் தொடங்காத காரணத்தால், கரு கலைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். அதற்கு இடம் தந்துவிடாமல், உருவான கருவைப் பத்திரப்படுத்திப் பாதுகாப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தொற்றுநோய் கவனம்!

முதல் டிரைமெஸ்டரில் சளி, இருமல் ஏற்படாமல் உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, மாசுபட்ட காற்று, நீர்மூலமாக நோய்க்கிருமிகள் பரவும். எனவே, சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்லக்கூடாது.மக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்கம், சந்தை, மால்கள் போன்ற இடங்களுக்குப் போவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். கூட்டமான இடங்களில் மற்றவர்கள் மூச்சுக்காற்று மூலம் நோய்க்கிருமிகள் மிக எளிதாகப் பரவ வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கவே இந்த யோசனை.சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுதல் டிரைமெஸ்டரில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அப்போது சிறுநீரை அடக்கக்கூடாது. சிறுநீர்ப்பாதைத் தொற்று வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். உடல் சுத்தம் பேணுவதால் இதைத் தடுக்கலாம். அசுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்தக்கூடாது.முக்கியமாக, பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தால், கழிப்பறையில் தண்ணீர் அதிகம் ஊற்றிக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

வளர்ப்புப் பிராணிகளிடமும் கவனம்!

தாய்மையின் முதல் மூன்று மாதங்களில் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதையும் பராமரிப்பதையும் தவிர்ப்பது நல்லது.செல்லப்பிராணிகளைத் தொடும்போதோ, குளிப்பாட்டும்போதோ அவற்றிலிருந்து கிருமிகள் பரவி, கர்ப்பிணிக்குக் காய்ச்சல், தும்மல், சரும ஒவ்வாமை நோய்கள் போன்றவை வந்தால், அது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். வயிற்றுப் பிரச்னைகள் வராமலிருக்க…முதலாம் டிரைமெஸ்டரில் கர்ப்பிணியின் வயிற்றில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது.

சுத்தமான இடத்தில், சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும். வெளியிடங்களிலும் ஹோட்டல்களிலும் அடிக்கடி சாப்பிட்டால், உணவு நஞ்சாகி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற கோளாறுகள் ஏற்படும். இவை கர்ப்பிணியின் உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடும். கர்ப்பிணிக்குப் போதிய அளவு நீர்ச்சத்து எப்போதும் இருக்க வேண்டியது முக்கியம். எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளே பாதுகாப்பானவை.

பயணம் தவிர்!

முதல் டிரைமெஸ்டரின்போது, தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குண்டும்குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும்போது ஏற்படும் அதீத குலுங்கல்கள், வேகத்தடைகளில் தூக்கிப்போடுவது, மலை ஏற்றப்பயணங்களில் திடீர்திடீரென உடல்சாய்வது போன்றவை கர்ப்பிணியின் கருப்பையைப் பாதிக்கும். அப்போது கருகலையும் ஆபத்து நேரும்.பொதுவாக கவனிக்க வேண்டியவைமுதல் டிரைமெஸ்டரில் உடல் சோர்வாக இருப்பது இயற்கை. தேவைப்படும்போதெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நீண்டநேரம் நின்றுகொண்டு வேலைசெய்பவர்கள், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்கவேண்டும். இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் இந்த முதல் டிரைமெஸ்டரில் மட்டுமாவது பணிநேரத்தை மாற்றிக்கொள்வது நல்லது. கம்ப்யூட்டர் முன் நீண்டநேரம் அமர்வது நல்லது இல்லை. சேரில் நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்கிறவர்கள், சிறிய இடைவெளிகளில் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வர வேண்டும். சோர்வு ஏற்படுத்தக்கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடாது. உடலையும் மனத்தையும் தேவையில்லாமல் வருத்திக்கொள்ளக் கூடாது.

சுய மருத்துவம் வேண்டாம்!

சளி, காய்ச்சல் போன்ற சாதாரணப் பிரச்னைகளுக்காக மகப்பேறு மருத்துவர் அல்லாமல், பொது மருத்துவரிடம் ஆலோசனை கேட்க நேர்ந்தால், தாய்மை அடைந்திருப்பதைக் கட்டாயம் சொல்லிவிட வேண்டும்.அப்போதுதான் அதற்கேற்ப மருந்துகளை மருத்துவர் எழுதித் தர முடியும். கர்ப்பிணிகள் சுயமாக மருந்து, மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் அது கருவில் வளரும் சிசுவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.அடிவயிற்றில் வலி, ரத்தக்கசிவு அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்றோ, வாயுவலி என்றோ தாங்களாக முடிவு செய்துகொண்டு அலட்சியமாக இருக்கக்கூடாது. கர்ப்பம் தொடங்கியது முதல் பிரசவம் வரைக்கும் ஒரே மருத்துவரைப் பார்ப்பது மிக நல்லது.

கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

உடல் எடை

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு பெண்ணின் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா (சரியான பி.எம்.ஐ.(BMI)) என்று தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் கர்ப்பம் தரிக்கும் நிலையில் உள்ள பெண்கள் பலரும் அதிக உடல் எடையுடன்தான் இருக்கின்றனர். இதுவே பல நேரங்களில் கர்ப்பம் தரிப்பதற்குத் தடையாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.மேலும் இவர்களுக்கு கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதனால் கர்ப்பிணிக்கு மட்டுமன்றி கருவில் வளரும் சிசுவுக்கும் பிரச்னைகள் உண்டாகும். சுகப்பிரசவம் ஆக முடியாமல் சிசேரியன் மூலம் குழந்தையைப் பிரசவிக்க நேரிடலாம்.

ஆகவே, அதிக உடல் எடை என்றால் சரியான உணவுமுறை மற்றும் தேவையான உடற்பயிற்சிகள்மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டியது கட்டாயம். கர்ப்பிணிக்கு உடல் எடை குறைவாக இருந்தாலும் கருவில் வளரும் சிசுவுக்குப் பிரச்னை ஏற்படலாம். இவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு இருக்கலாம்.இதன் விளைவாக இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும்போதே எடை குறைவாக இருக்கலாம்; பிற்காலத்திலும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு, ஊட்டச்சத்துக் குறைவு போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையான உணவுகளைச் சாப்பிட்டு, கர்ப்பகாலம் முழுவதும் சரியான உடல் எடையைப் பேண வேண்டும்.
உணவுமுறை

கர்ப்பிணி சாப்பிடும் உணவில்தான் தாய், சேய் இருவரின் நலமும் இருக்கிறது. சமச்சீரான உணவு முக்கியம். சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு 1800லிருந்து 2000 கலோரிகள் தரும் உணவு தேவை. கர்ப்பகாலத்தில் கூடுதலாக 350 கலோரி தேவைப்படும்.
அதிக அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அடங்கிய முழுதானியங்கள், பருப்புகள், பயறுகள், பழங்கள், நட்ஸ், காய்கறிகள், இரும்புச்சத்து மிகுந்த பேரீச்சை, கீரைகள் என உணவுகளைத் திட்டமிட்டுச் சாப்பிட வேண்டும். பால், தயிர் சாப்பிட்டால் கால்சியம் கிடைத்துவிடும். இத்துடன் நாளொன்றுக்கு 30 நிமிட நடைப்பயிற்சி அவசியம்.

கொழுப்பு மிகுந்த, எண்ணெய் உணவுகளையும் துரித உணவுகளையும் நொறுக்குத்தீனிகளையும் தவிர்ப்பது நல்லது. ஃபோலிக் அமிலம் முக்கியம் கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபோலிக் அமிலம் மாத்திரையை சாப்பிட ஆரம்பிக்கலாம். கருச்சிதைவைத் தடுப்பதற்கும், சிசுவின் உடலில் எந்தக் குறையும் இல்லாமல் வளர்வதற்கும் கர்ப்பம் ஆரம்பித்த தினத்திலிருந்தே ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம். குறிப்பாக, குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டுவட வளர்ச்சிக்கு இந்தச் சத்து தேவை. தினமும் 400 மைக்ரோகிராம் அளவுக்கு இது தேவை. ஈரல் இறைச்சி, பச்சைக்காய்கறிகள், கீரைகள், பயறுகள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றில் இது அதிகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பனிக்கால டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது!! (அவ்வப்போது கிளாமர்)