உயிர் உருவாகும் அற்புதம்!(மருத்துவம்)

Read Time:14 Minute, 51 Second

உலகத்தில் அதிகம் பிரமிப்பூட்டும் விஷயம் எது என்று கேட்டால், ‘ஜனனம்’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். அதில் நிகழும் அறிவியல் அதிசயங்களை விரிவாகத் தெரிந்துகொண்டால் அந்த பிரமிப்பு இன்னும் பலமடங்கு அதிகமாகிவிடும்.ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் ஜனனம்! ஒரு நூற்பாலையில் பஞ்சைப் போட்டால், அது நூலாக வெளிவருவதற்குப் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து பணி செய்வதைப்போல, புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் பல்வேறு உறுப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை.

ஆணும் பெண்ணும் இணையும்போது, கலவியின் உச்சத்தில் ஆணிடமிருந்து வெளியேறும் ‘விந்து’ எனும் உயிர்த்திரவம் சுரப்பதுதான் இந்தச்செயல்களில் முதன்மையானது. பெண்ணின் சினைப்பையில் மாதம் ஒரு சினைமுட்டை வெளியேறி, ஆணின் விந்தணுவுக்காகக் காத்திருக்கும் விஷயம் அடுத்த செயல்முறை. ஒவ்வொரு கலவியின்போதும் ஆணிடமிருந்து வெளியேறும் உயிர்த்திரவத்தில் சுமார் 200 மில்லியன் உயிரணுக்கள் இருக்க, ஒரேயொரு உயிரணு மட்டும் கருப்பையின் உச்சிவரை நீந்திச்சென்று, ‘ஃபெலோப்பியன் டியூப்’ எனும் கருக்குழாயில் காத்திருக்கும் சினைமுட்டையுடன் கலந்து, கரு உருவாகும் அதிசயம் அடுத்த கட்டம்.

இப்படி உருவான ஒரு கரு, கருப்பைக்கு வந்து, சமத்தாக அமர்ந்து, சிசுவாக வளர்ந்து, குழந்தையாக இந்த பூமிக்கு வருவது கடைசி கட்ட அதிசயம். இத்தனை அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கைகொடுத்து உதவும் பல்வேறு ஜனன உறுப்புகளை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது இங்கே அவசியமாகிறது.ஆண் உறுப்பு எனும் அதிசயம்: விரிந்து சுருங்கும் தன்மையுடைய மெல்லிய தசைகளும் ஏராளமான ரத்தக்குழாய்களும் உள்ளடக்கிய ஆண் உறுப்பு பாலுணர்வு நிறைந்திருக்கும்போது ரத்தம் பாய்வதால் விறைப்படைகிறது: உறவுக்குப் பின் பாலுணர்வு குறைந்ததும், இந்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்துவிடுவதால், பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது.

இந்த உறுப்பின் மத்தியப் பாதைக்குச் சிறுநீர்க்குழாய்(Urethra) என்று பெயர். இது சிறுநீர்ப்பையில் இருந்து வருகிறது. இதன் ஆரம்பப் பகுதியில் விந்து ஏற்றக்குழாய்கள் இணைந்திருக்கும். இது சுமாராக 15 வயது வரை சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகிறது. அதற்குப் பிறகு விந்துவை வெளியேற்றும் பாதையாகவும் மாறிவிடுகிறது. சிறுநீர் வெளியேறும்போது சிறுநீரும், விந்து வெளியேறும்போது விந்துவும் மட்டுமே வெளியேறும்படியான ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது உடலியல் அதிசயங்களில் ஒரு ஸ்பெஷாலிட்டி.

விதைப்பை : ஆணுறுப்பை ஒட்டிக் கீழ்ப்புறமாக ஒரு விதைப்பை(Scrotum) தொங்குகிறது. இதனுள்ளே இரண்டு விதைகள்(Testicles) உள்ளன. ஆண் பருவ வயதை அடைந்ததும் விந்தணுக்கள் உற்பத்தியாவது இங்கு தான். ஆண்மையின் அடையாளமான மீசை வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்வதும் இவைதான். வெப்பம், குளிர் போன்ற தட்பவெப்பநிலைகளிலிருந்து விதைகளைக் காப்பது விதைப்பையின் முக்கிய வேலை.விதைப்பையின் இரண்டு பக்கத்திலும் உள்ள விதைகளின் மேல் தளத்தில் தலா ஒரு விந்தணுக்குழாய் (Epididymis) உள்ளது. இவற்றிலிருந்து கயிறு போன்ற விந்துக்குழாய்கள் (Vasdeferens) அடிவயிற்றை நோக்கிப் புறப்படுகின்றன. இவை ‘புராஸ்டேட்’ (Prostate) எனும் ஆண்மை உறுப்பில் உள்ள விந்து ஏற்றக்குழாயில்(Ejaculatory duct) முடிகின்றன.

புராஸ்டேட் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் சுரப்பி. இது சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. இதன் நடுவில் சிறுநீர்ப்பையில் இருந்து கிளம்பும் சிறுநீர்க்குழாய் செல்கிறது. விந்து ஏற்றக்குழாய்கள் இரண்டும் இந்தச் சிறுநீர்க்குழாயில் இணைந்து ஒன்றாகி, சிறுநீர் வெளித்துவாரத்தில் முடிகிறது.உயிரணுவின் பயணம் : விதைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் ஒன்று சேர்ந்து அணி அணியாக விந்தணு குழாய்க்கு வந்து சேரும். பாலுறவின்போது வெளியேறுவதற்காக இவை இங்கு காத்திருக்கும். பாலுறவின்போது ஏற்படும் தசை இறுக்கங்களால், இவை அடிவயிற்றை நோக்கி, விந்து ஏற்றக்குழாய்க்கு உந்தப்படுகின்றன. சிறுநீர்ப்பைக்குப் பின்னால் விந்துக்கிடங்கு(Seminal vesicle) உள்ளது. விந்தணுக்கள் முதலில் விந்துக்கிடங்கு சுரப்போடும், பிறகு புராஸ்டேட் சுரப்போடும் கலந்து விந்து திரவமாக(Semen) மாறி, விந்து ஏற்றக்குழாய் வழியாக சிறுநீர்க்குழாயை அடைந்து, சிறுநீர் வெளித்துவாரத்தில்(Urethral orifice) வெளியேறுகிறது.

சிறுநீர்ப்பையின் அடியிலுள்ள சுருக்குத் தசைகள் பாலுறவின்போது இறுகுவதால், சிறுநீர்ப்பைக்கும் சிறுநீர்க் குழாயோடு விந்து ஏற்றக்குழாய்கள் இணையும் இடத்துக்கும் இடையில் உள்ள பாதை அடைத்துக்கொள்கிறது. இதன் பலனால், விந்து வெளியேறும்பொழுது அதனுடன் சிறுநீர் கலப்பது தடுக்கப்படுகிறது. அதுபோலவே, விந்து சிறுநீர்ப்பைக்குள் பின்னோக்கிச் செல்வதும் தடுக்கப்படுகிறது.

பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம்

:1. கருப்பை(Uterus):

பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறத்தில் மேற்புறம் பருத்தும், கீழ்ப்பகுதி சிறுத்தும் இருக்கும் முக்கிய உறுப்பு இது. கடுமையான தசைகளால் அமைந்த இந்த ‘வீட்டில்’தான் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கும் கரு, முழுக்குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம் நடக்கிறது. விரிவாகச் சொன்னால், கருப்பைக் குழி(Uterine cavity) என்று அழைக்கப்படும் இதன் உட்பரப்பு முக்கோண வடிவத்தில் இருக்கிறது. அதில் மெல்லிய சவ்வுப் படலம் (Endometrium) இருக்கிறது. இதில்தான் கரு புதைந்து வளர்கிறது. கருத்தரிக்காதபோது, இந்தச் சவ்வு விரிசல்விட்டு விலகி, கசியும்ரத்தத்துடன் கலந்து மாதவிடாயாக வெளியேறுகிறது.

2. கருப்பை வாய் (Cervix):

கருப்பைக்கான உள்வாசல் இது; கருப்பையையும் ஐனனப் பாதையையும் இணைக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருபோல இங்கே சுரக்கும் ஒருவிததிரவம், பெண்களுக்குப் பாலுறவின் மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தவும், ஆணின் விந்தணுக்கள் வழுக்கிக்கொண்டு கருப்பைக்கு உள்ளே பாய்ந்து செல்லவும் வசதி செய்து தருகிறது.

3. சினைப்பைகள்(Ovaries):

கருப்பையின் இரண்டு பக்கமும் இருப்பவை சினைப்பைகள். குழந்தை உருவாவதற்குத் தேவையான சினைமுட்டையை(Ovum) மாதம் ஒன்று வீதம் இடது பக்கம், வலது பக்கம் என ஒன்று மாற்றி ஒன்றாக உற்பத்தி செய்து, கருக்குழாய்க்கு அனுப்பிவைக்க வேண்டியது சினைப்பையின் வேலை. இங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்தான் பெண்களின் மார்பக வளர்ச்சியையும், பெண்மையின் வளைவு சுழிவான தோற்றங்களையும் உருவாக்கி ஆண்களை ‘ஜொள்ளு’விட வைக்கின்றன.

4. கருக்குழாய்கள்(Fallopian tubes):

கருக்குழாய்கள் கருப்பையின் இரண்டு பக்கமும் இருக்கின்றன; சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கின்றன. தலா 10 செ.மீ. நீளம் உள்ள இந்தக் குழாயின் மேல்முனையில்தான் சினைமுட்டையோடு ஆணின் விந்தணு கலந்து கரு உருவாகும் அற்புதம் நடக்கிறது.5. ஜனனப் பாதை : வஜைனா(Vagina) எனப்படும் ஜனனப் பாதைதான் கருப்பைக்கான வெளிவாசல்!

பாலுறவின்போது ஆணுறுப்பு உள்ளே சென்று விந்துவை செலுத்துவதற்கும், குழந்தை பிறப்பின்போது கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையை இந்தப் பூமிக்குத் தருவதற்கும் பயன்படும் முக்கிய வழியாக இது இருக்கிறது. இதன் நீளம் சுமாராக 8 செ.மீ. அகலம் 3 செ.மீ. இத்தனை சிறிய துளைதான் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரசவத்தின்போது அகல விரிந்து பத்து மாதம் ஆன சிசுவுக்கு வழிவிடுகிறது.

கரு உருவாவது எப்படி?

ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரை ‘சுபமுகூர்த்த நாட்கள்’! ஆம்! ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து, இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும். அதற்குள் ஆண், பெண் கலவி நடந்தால்தான்விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும்.

அதற்குத்தான் இந்த நாட்களை சுபமுகூர்த்த நாட்கள் என்று சொன்னேன்!சரி, எல்லாமே முறைப்படி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஆணின் விந்துத்திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படும். இதில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று தீர்மானித்து, அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்களைப்போல வீராவேசமாகப் புறப்பட்டு கருப்பைக்குள் நுழைவார்கள்.

கருப்பையின் உள் தூரம் 8 செ.மீ.வரை இருக்கும். நிமிடத்துக்கு சராசரியாக 2 மி.மீ.தூரம் என்ற வேகத்தில் நீந்திச் செல்வார்கள். பாதி தூரம் போனதும் பாதி வீரர்கள் களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள். இவர்கள் மட்டுமே மில்லி மீட்டரில் ஒரு பங்கு அளவே இருக்கும் சினைமுட்டையின் ‘கோட்டைக் கதவை’ மோதிப்பார்ப்பார்கள். ஆனால், ஏதாவது ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்து ‘கோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும்.

சினைமுட்டையை அதிர்ஷ்டக்கார ‘மாவீரன்’ துளைத்த மறுகணமே, முட்டி மோதும் மற்ற வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க, சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிக் கோட்டைக் கதவைத் தாழ் போட்டு மூடிக்கொள்வது இன்னொரு அதிசயம்.அந்த ‘மாவீரன்’ உயிரணுவின் வால் பகுதி சினைமுட்டையின் சவ்வுக்கு வெளியிலேயே நின்றுவிட, நீள்வட்ட தலை மட்டும் உள்ளே போகிறது. சினைமுட்டையில் நடுநாயகமாகக் காத்திருக்கும் அதன் உட்கருவான ‘இளவரசி’யின் கழுத்தில் மாவீரன் ‘மாலையிட’, ‘மாங்கல்யம் தந்துநானே’ பாடவில்லை; கெட்டிமேளம் கொட்டவில்லை. மற்றபடி எல்லாமே சொல்லிவைத்த மாதிரி நடக்கிறது.ஒரு புதிய உயிர் கருவாக உருவாகும் அற்புதம் அங்கே அரங்கேறுகிறது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தையின்மைக்கான மரபியல் காரணங்கள்!!(மருத்துவம்)