கருத்தடை தாம்பத்தியத்தைப் பாதிக்காது!(மருத்துவம்)

Read Time:5 Minute, 39 Second

ஆண்கள் மட்டும்

‘‘பூப்பெய்துதல், மாதவிடாய் அவஸ்தை, குழந்தைப்பேறு, மெனோபாஸ் என உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக எத்தனை எத்தனையோ மாற்றங்கள், சிரமங்களை தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள். அது இயற்கை விதித்த நியதியாகவும் இருக்கிறது.அத்தோடு கருத்தடை என்கிற செயற்கை அவஸ்தையையும் பெண்கள் மேல் திணிப்பது நியாயமில்லை. அந்தப் பொறுப்பை ஆண்களும் பகிர்ந்துகொள்ளலாம்’’ என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு. ஆண் கருத்தடை பற்றியும், அது பற்றி இருக்கும் தவறான மூட நம்பிக்கைகள் பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

ஆண் கருத்தடைக்கும், பெண் கருத்தடைக்கும் உள்ள வித்தியாசம் என்ன /‘‘பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது அவர்களுக்கு ரத்தப்போக்கு, வலி ஆகியவை ஏற்படும். நாளடைவில் அவர்களின் உடலும் பலவீனமடையும். ஆனால், ஆண்கள் கருத்தடையான வாசக்டமி (Vasectomy) முறையில் மயக்க மருந்து தேவையில்லை; அறுவை சிகிச்சையும் தேவையில்லை.ஊசியின் மூலம் விரைப்பையில் சிறு துளையிட்டு உயிரணுக்கள் செல்லும் குழாயை மட்டும் துண்டித்து இரண்டு பக்கமும் மூடி விடுவோம். தையல் போட வேண்டிய அவசியமும் இல்லை. இரண்டு கருவிகளைக் கொண்டு எளிதாக 10 நிமிடங்களில் இதனை செய்து முடித்துவிடலாம். 3 மணி நேரத்தில் வீட்டுக்கும் திரும்பிவிடலாம்.இது அறுவையில்லாத கருத்தடை முறை என்பதால் No Scalpel Vasectomy என்று சொல்வார்கள்.

’’கருத்த்டையால் ஆண்மை குறையுமா ?

‘‘விந்தணுவானது Seminal vesicles மற்றும் prostate gland-லிருந்து உற்பத்தியாவது. அவை இரண்டும் இந்த அறுவை சிகிச்சையில் தொடப்படுவதில்லை. ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை துண்டிக்கப்படுவது உயிரணு உருவாகி விந்தணுவோடு கலக்கும் குழாயைத்தான். ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாததற்கு காரணம், ஆண்மையை இழந்து விடுவோமோ என்ற பயம்தான்.

ஆனால், இந்த பயம் தேவையற்றது. ஆண்மைக்கும் இந்த அறுவை சிகிச்சை சம்மந்தமேயில்லை. அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு விந்து வராதோ, செக்ஸில் உச்சக்கட்டத்தை அடைய முடியாதோ, மனைவியை திருப்திப்படுத்த முடியாமல் போகுமோ என்றெல்லாம் குழப்பங்கள் இருக்கிறது. ஆனால், சிகிச்சைக்குப் பின் இல்லற வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.’’இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்…‘‘சாதாரண ஆண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது வெளியேறும் விந்தணுவில், உயிரணுக்கள் 0.5 சதவீதமும் மற்ற திரவங்கள் 99.5 சதவீதமும் இருக்கும். ஆண்களுக்கான கருத்தடையில் உயிரணுக்கள் வருவது மட்டுமே தடை செய்யப்படும் என்பதால் மற்ற திரவம் வழக்கம்போல் வெளியேறும்.’’

கருத்தடை செய்து கொண்ட பிறகு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உள்ளதா?

‘‘அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு உயிரணு செல்லும் குழாயில் ஏற்கனவே உருவான உயிரணுக்கள் இருக்கும் வாய்ப்பு உண்டு. அதனால், முதல் மூன்று மாதம் வரை தாம்பத்திய உறவின்போது ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும். அதன் பின்னர், விந்தணு பரிசோதனை ஒன்றைச் செய்து, விந்தில் உயிரணுக்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன்பின் இயற்கையான, எந்தவிதத் தடையும் அற்ற தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.’’

ஆண்கள் கருத்தடை பற்றிய மூடநம்பிக்கைகளுக்கு என்ன காரணம் ?

‘‘அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலான ஆண்மைக்குறைவு/விறைப்புத்தன்மை குறைபாடுகளுக்கு மனதளவிலான காரணங்கள்தான் அதிகம். வாசக்டெமி மூலம் இந்தக் குறைபாடுகளுக்கு வாய்ப்பே இல்லை. இதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மாதந்தோறும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று இலவசமாக ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிஃபன்!! (மகளிர் பக்கம்)