ஆண் குழந்தை ரகசியம்!!(மருத்துவம்)

Read Time:12 Minute, 36 Second

கருக்குழாயில் சினைமுட்டையும் விந்தணுவும் இணைவதைக் கருத்தரித்தல் என்கிறோம். இது ஆரம்பத்தில் கடுகு சைஸில் ஒரே ஒரு செல்லாகத்தான் இருக்கும். இதற்கு இணையணு என்று பெயர்.இதில் அப்பா, அம்மா இரண்டு பேரின் குணங்களைக் குழந்தைக்குக் கொடுக்கிற மரபணுக்கள் அடங்கிய குரோமோசோம்கள் இருக்கும். இவை பற்றி அடுத்த பாராக்களில் சொல்கிறேன். இப்போது இணையணுவின் பயணத்தைப் பார்ப்போம்.கருக்குழாயின் உட்புறம் இருக்கும் நுண்ணிய மயிர்க்கால்கள் ‘ஆம்புலா’ (Ampulla) பகுதியிலிருந்து இணையணுவைக் கருப்பைக்குத் தள்ளிக்கொண்டே போகின்றன. அப்போது இணையணு அதிக வேகத்தில் செல்கிறது. அதேசமயம் அதற்குள்ளே செல்கள் பிரியத் தொடங்குகின்றன.

கரு உருவான 30 மணி நேரத்தில் அது இரண்டு செல்களாகப் பிரிந்துவிடும். அடுத்த 12 மணி நேரம் கழித்து நான்காகப் பிரிந்து மிளகு சைஸுக்கு வளர்ந்துவிடும். அடுத்தநாளில் இரண்டிரண்டு மடங்காகப் பிரியப் பிரிய மொத்தம் 16 செல்களாகப் பிரிந்து, பார்ப்பதற்கு மல்பெரி மாதிரி ஆகிவிடும்.இதற்குக் கருக்கோள் என்று பெயர். மூன்றாம் நாளில் இது கருக்குழாயிலிருந்து கருப்பைக்குள் நுழைகிறது. நான்காம் நாளில் இதனுள் 16-லிருந்து 64 செல்கள் வரை வளர்ந்திருக்கும். நான்காவது, ஐந்தாவது நாட்களில் இது சுயமாகவே கருப்பையில் நீந்திக்கொண்டிருக்கும். அதற்குள் கருப்பையின் உட்சவ்வு இதற்கான இடத்தைத் தயார் செய்து, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்.

இப்போது கருக்கோளைச் சூழ்ந்திருக்கும் மியூக்கஸ் எனும் சளித்திரவம் இதன் உட்புறம் நுழைந்து, அங்குள்ள செல்களை உட்பகுதி, வெளிப்பகுதி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. இந்த நிலையில் உள்ள கருவைக் கருநீர்க்கோளம் என்கிறோம்.கரு உருவான 6-வது நாளில், புகுந்த வீட்டில் நுழையும் புதுப்பெண்போல, கருப்பையில் இது பதியத் தொடங்கும். அப்போது சிறிய நெல்லிக்காய் சைஸுக்கு அது வளர்ந்திருக்கும். 10 அல்லது 11-ம் நாளில் இந்தப் பதியும் பணி நிறைவடையும். இதன் விளைவாக, கர்ப்பிணிக்கு மாதவிடாய் நின்றுவிடும்.அடுத்து கருநீர்க்கோளத்தின் உட்பகுதி செல்கள் வளர்கருவாகவும்(Embryo), வெளிப்பகுதி செல்கள் சூலுறையாகவும் (Trophoblast) வளர்கின்றன. இந்தச் சூலுறையிலிருந்து நச்சுக்கொடி(Placenta) உருவாகிறது.

இதுதான் சிசுவைத் தாயுடன் இணைத்து, சிசு வளர்வதற்குத் தேவையான உணவையும் ஆக்ஸிஜனையும் தாயிடமிருந்து கொண்டு செல்கிறது; சிசுவின் கழிவுகளைத் தாய்க்குத் தந்துவிடுகிறது. இந்த நேரத்தில் வளர்கருவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நச்சுக்கொடி சில ஹார்மோன்களைச் சுரக்கிறது.உதாரணமாக, சினைப்பையானது சினைமுட்டைகளைத் தொடர்ந்து உருவாக்குவதைத் தடுக்க HCG (Human Chorionic Gonadotropin) எனும் ஹார்மோனை சுரக்கிறது. அதேவேளை, சிசுவின் வளர்ச்சிக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் சினைப்பையில் சுரப்பதைத் தூண்டுகிறது.12-வது நாளுக்குள் கருநீர்க்கோளத்தின் உட்புறம் வளர்கருவைச் சுற்றி ஒரு மெல்லிய சவ்வு பெண்களின் மணி பர்ஸ் வடிவில் உருவாகி பனிக்குடமாக(Amniotic cavity) மாறுகிறது. இதனுள்ளே பனிக்குட நீர் இருக்கிறது. தண்ணீரில் வளரும் தாமரைபோல் கருவானது இந்த நீரில் மிதந்தபடி வளர்கிறது.

குழந்தை ஆணா, பெண்ணா?

பெண்ணின் கருவில் உருவாகும் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிப்பதே கணவன்தான்; மனைவி அல்ல… அதைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.சாதாரணமாக உடல் செல்லின் உட்கருவில்(Nucleus) கயிறு போன்ற அமைப்பில் குரோமோசோம்கள் உள்ளன.டி.என்.ஏ.(DNA) எனும் உட்கரு அமிலம் குரோமோசோமில்தான் உள்ளது. அப்பா, அம்மாவின் குணங்களைக் குழந்தைக்குக் கொடுக்கும் மரபணு(Gene) இந்த டி.என்.ஏ.வில் உள்ளது. நம் உடல் செல் ஒன்றில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.அதாவது, ஒரு செல்லில் மொத்தம் 46 குரோமோசோம்கள். பெண்களுக்கு எப்போதுமே `எக்ஸ்’(X) குரோமோசோம்கள்தான் இருக்கும். இவை ஜோடியாக இருப்பதால் XX என்று குறிப்பிடுவோம். ஆண்களுக்கு X குரோமோசோமும் இருக்கும்; Y குரோமோசோ
மும் இருக்கும்.

ஆதலால், ஆண்களின் குரோமோசோம்களை XY என்று குறிப்பிடுவோம். இவற்றில் 22 ஜோடி உடல் செல்களைத் தீர்மானிப்பவை. அந்த 23-வது ஜோடி மட்டும் பாலினத்தைத் தீர்மானிக்கிறது. பாலினத்தைத் தீர்மானிக்கிற ஆண் குரோமோசோம் ஜோடி XY ஆகவும், அதற்கு உதவும் பெண் குரோமோசோம் ஜோடி XX ஆகவும் இருக்கும்.சினைமுட்டையிலும் விந்தணுவிலும் தலா 23 குரோமோசோம்கள்தான் இருக்கும். இவற்றில் 22 குரோமோசோம்கள் உடல் செல்களைத் தீர்மானிப்பவை. அந்த 23-வது குரோமோசோம் மட்டும் பாலினத்தைத் தீர்மானிக்கிறது.

இது பெண்ணின் சினைமுட்டையில் `எக்ஸ்’ குரோமோசோமாக இருக்கும். ஆணின் விந்துவில் ‘எக்ஸ்’ குரோமோசோம் உள்ள விந்தணுக்களும் இருக்கும். ‘ஒய்’ குரோமோசோம் உள்ள விந்தணுக்களும் இருக்கும்.கருவில் ஒரு சினைமுட்டையும் ஒரு விந்தணுவும் இணையும்போது, தலா 23 ஜோடி குரோமோசோம்கள் இணைந்து மொத்தம் 46 குரோமோசோம்கள் ஆகிவிடும். இணைந்த அன்று எந்த குரோமோசோம் உடைய விந்தணு இணைந்ததோ அதைப் பொறுத்து அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று முடிவாகிறது. ‘எக்ஸ்’ குரோமோசோம் உள்ள விந்தணு என்றால், சினைமுட்டையில் உள்ள ‘எக்ஸ்’ குரோமோசோமுடன் சேர்ந்து XX ஆகி பெண் குழந்தை உருவாகிறது.‘ஒய்’ குரோமோசோம் உள்ள விந்தணு என்றால், `எக்ஸ்’ குரோமோசோமுடன் சேர்ந்து XY ஆகி ஆண் குழந்தை உருவாகிறது. ஆக, குழந்தையை ஆணா, பெண்ணா எனத் தீர்மானிப்பது கணவன்தான்; மனைவி அல்ல! எனவே, ‘ஆண் குழந்தையைப் பெற்றுத் தரவில்லை’ என்று கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்களை இனிமேலாவது துன்புறுத்தாமல் இருந்தால், சரி.

இரட்டைக் குழந்தைகள் எப்படி உருவாகின்றன?

கருக்குழாயில் சினைமுட்டையுடன் விந்தணு இணைந்தவுடன், எதிர்பாராதவிதமாக அந்தக் கருவானது இரண்டாக உடைந்துவிடும். இப்படி உடைந்த கருக்கள் இரண்டுமே தனித்தனியாக ஏற்கனவே சொன்னதுபோல் செல் பிரிந்து வளரும். ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக உருவாகும்.இந்த இரட்டைக் குழந்தைகள், ஜெராக்ஸ் காப்பி மாதிரி ஒன்று போலிருக்கும். ஆண் என்றால் இரண்டுமே ஆண்! பெண் என்றால் இரண்டுமே பெண்! உடல் நிறம், முடியின் நிறம், கண்ணின் நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒன்று போலிருக்கும். இதுபோன்ற இரட்டைக் குழந்தை களை ‘ஒரேமாதிரியான இரட்டைக் குழந்தைகள்’(Uniovular Twins அல்லது Identical twins) என்று அழைக்கிறோம். இப்படி ஏற்படுவது மிகவும் அரிது.சமயங்களில், கரு இரண்டாக உடையும்போது, கொஞ்சம் ஒட்டிக்கொள்வதும் உண்டு.அதன் விளைவுதான் ‘ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்’(Siamese Twins அல்லது Conjoined Twins). குழந்தை கள் எந்த அளவுக்கு ஒட்டிக்கொண்டுள்ளன என்பதைப் பொறுத்து, அந்தக் குழந்தைகளுக்குத் தனித்தனி இதயமா, ஒரே இதயமா, தனித்தனி சிறுநீரகமா, பொதுவான சிறுநீரகமா, தனித்தனி கால்களா, இரண்டே கால்களா என்று தீர்மானிக்கப்படுகின்றன.

இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஆணாகவும், இன்னொன்று பெண்ணாகவும் பிறக்கிறதே, எப்படி?

ஒரே சமயத்தில் ஒரு சினைப்பையிலிருந்து இரண்டு சினை முட்டைகள் வெளிவந்து, இரண்டும் தனித்தனியாக தனித்தனி விந்தணுவுடன் இணைந்து, இரண்டு கருக்கள் உருவாகி, இரட்டைக் குழந்தை களாகப் பிறக்கும். இந்தக் குழந்தை களிடம் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயல் காணப்படும். இரண்டு குழந்தைகளும் ஒரே பாலினமாகவும் இருக்கலாம்; வெவ்வேறு பாலினமாகவும் இருக்கலாம்.ஒரே பாலினமாக இருந்தாலும் ஒன்று சிவப்பாகவும், இன்னொன்று கருப்பாகவும் வேறுபட்டு இருக்கலாம். இப்படி ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘வேறுபட்ட இரட்டைக் குழந்தைகள்’(Binovular Twins அல்லது Non-Identical twins) என்கிறோம்.

த்தகைய இரட்டைக் குழந்தைகள் பிறப்பது இப்போது அதிகரித்து வருகிறது.
என்ன காரணம்?

குழந்தைக்காகப் பெண்கள் அதிக காலம் காத்திருக்கும்போது, வயது ஏற ஏற, அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அடுத்து, கருத்தரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரை, மருந்துகள் காரணமாகவும் இந்த வாய்ப்பு உருவாகிறது. சோதனைக் குழாய் குழந்தை போன்ற செயற்கைக் கருத்தரித்தல் முறைகளாலும் இது அதிகரிக்கிறது.பரம்பரையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், வாரிசுப் பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அடுத்த பிரசவத்திலும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு உருவாகலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மசக்கை… மகிழ்ச்சியும் அவதியும்!(மருத்துவம்)
Next post திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)