கவனம்… க்ரியாட்டினின்… டீடெய்ல் ரிப்போர்ட்! (மருத்துவம்)

Read Time:11 Minute, 29 Second

ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர்ப் பரிசோதனையில் உடலில் உள்ள க்ரியாட்டினின் அளவு எவ்வளவு என்பதை மருத்துவர் கவனிப்பார். அது என்ன க்ரியாட்டினின் விளக்கமாகப் பார்க்கலாம்.

கிரியாட்டினின்  

நாம் அன்றாடம் செய்யும் வேலைகள், தசைகளின் இயக்கம் மிக முக்கியமானது. அந்த இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல், தசைகளிலிருந்து பெறப்படும் போது உருவாகும் வேதிப்பொருள்தான் கிரியாட்டினின். சிறுநீரகம் மட்டுமே அளவுக்கு அதிகமான கிரியாட்டினைச் சுத்தப்படுத்துகிறது. எனவே, சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு அல்லது நோய் ஏற்பட்டால் ரத்தத்தில் கிரியாட்டினின் மூலமாகத் தெரியப்படுத்துகிறது. உடலில் நீர் சேர்ந்துவிடுதல் சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிப்படைதல் போன்றவை கிரியாட்டினின் அதிகரிப்பால் ஏற்படுகிறது என்பதையும், அந்த கிரியாட்டினின் என்ற வேதிப்பொருளை, சரியான உணவுமுறை மூலமாகவே கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

காரணிகள்

புரத உணவுகளின் செரிமானமடைந்த இறுதிப் பொருட்களே இந்த கிரியாட்டினின் என்பதால், மீன், முட்டை, கொழுப்புடன் கூடிய மாமிசம், பருப்பு வகைகள் போன்றவை தினசரி உணவில் அதிகரிக்கும் போது, இவை உருவாக்கும் கிரியாட்டினின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அதிக உப்பு சேர்த்த உணவுகள், வேதிப் பொருட்கள் சேர்த்துப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கிரியாட்டினின் மருந்துகள் மற்றும் மருந்துணவுகள், நீண்ட கால நோய்களுக்கான மருந்துகள் போன்றவை ரத்தத்தில் கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும்
தன்மையுடையவை.

ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு

ஒருவரின் வயது, பாலினம், உடல் எடை அல்லது உடலின் தன்மைக்கு ஏற்ப இந்த கிரியாட்டினின் அளவும் மாறுபடுகிறது. ஆண்களின் சராசரி  ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு 0-7 முதல் 1.3 மி.கி ஃடெ.லி வரையிலும், பெண்களின் சராசரி கிரியாட்டினின் அளவு 0.6 முதல் 1.1 மி.கி ஃ டெ.லி அளவிலும் இருக்க வேண்டும். உடல் எடை அளவைப் பொருத்தே கிரியாட்டினின் அளவும் இருக்கிறது என்பதால், ஒருவருக்கு உடலின் தசை அளவு அதிகமாக இருக்கும் நிலையில் அதிலிருந்து வெளிப்படும் கிரியாட்டினின் அளவும் அவரின் ரத்தத்தில் அதிகரிக்கும்.
துவக்கத்தில் லேசாக அதிகரிக்கும்போது, எவ்வித அறிகுறியையும் காண்பிக்காத கிரியாட்டினின் திடீரென்று அதிகமாகி சிறுநீரகத்தையும் சேர்த்தே சில நேரங்களில் பாதித்துவிடுகிறது. பெரும்பாலும் வயதானவர்களுக்கே இந்நிலை ஏற்படுகிறது. கடுமையாக பாதிப்படைந்த சிறுநீரகம், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் முறையே 2.0 மி.கி  மற்றும் 5.0 மி.கி கிரியாட்டினின் அளவைக் கொடுக்கிறது.

கிரியாட்டினின் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகள்

ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு அதிகரித்திருப்பதை கால் கைகளில் வீக்கம், மயக்கம் ஏற்படுதல், தொடர்ச்சியான சோர்வு நிலை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், குமட்டல் அல்லது குமட்டலுடன் வாந்தி, பசியின்மை, தோலில் அரிப்பு, முதுகு வலி, இரத்தத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் வாயிலாக அறிந்துகொள்வதுடன், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனையும் செய்தும் தெரிந்துகொள்ளலாம்.

ஆண்களைவிட பெண்களுக்கு சற்று குறைந்த சதவிகிதத்திலேயே இந்த பாதிப்பு ஏற்படும் என்றாலும், கட்டுப்பாட்டிற்குள் இல்லாத உடல் எடை மற்றும்  சர்க்கரை நோயால் அதிகரிக்கும் கிரியாட்டினின், கால் அல்லது கை மூட்டுகள் மற்றும் மென்மையான எலும்புத் திசுக்கள் இருக்கும் இடங்களில் தேங்கி, வீக்கத்தையும் வலியையும் ஏற்படுத்திவிடும். இவ்வாறான அறிகுறி ஏற்பட்டாலும் குறிப்பாகப் பெண்கள் கிரியாட்டினின் அளவைப் பரிசோதிக்க வேண்டும்.

உடற்பயிற்சியும் கிரியாட்டினினும்

ஏறக்குறைய 95 எம் கிரியாட்டினின் எலும்பிலுள்ள தசைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. கடின உழைப்பின்போதும் அல்லது தீவிர உடற்பயிற்சியின் போதும் ஆற்றலுக்காக உடலால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே விளையாட்டு வீரர்கள் கிரியாட்டினின் மருந்துணவுகளை அவ்வப்போது எடுத்துக்கொள்வதுண்டு. இதனால், அவர்களின் உடல் தசையளவு அதிகரிக்கிறது. என்றாலும்,தொடர்ச்சியாக கிரியாட்டினின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்தாகவும் மாறிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். காரணம், தீவிர உடற் பயிற்சியாளர்களின் உடல் தசை அளவு அதிகரிக்கும்போது, எலும்பை ஒட்டியிருக்கும் தசைகளும், உள்ளுறுப்புகளின்,குறிப்பாக இதயத் தசைநார்களும் அதிகரிக்கின்றன. இதனால், இதயத்தின் செயல்பாடும், அழுத்தமும் அதிகரித்து, சில நேரங்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மரணம் ஏற்படும் பேராபத்தும் இருக்கிறது.

கிரியாட்டினின் அளவைக் குறைப்பதற்கான வழிகள்

அதிகரித்த கிரியாட்டினின் அளவைக் குறைப்பதற்கான வழிகளை, ‘தேசிய சர்க்கரை நோய், செரிமானம் மற்றும் சிறுநீரக நோய்கள் அமைப்பு’ கொடுத்திருக்கிறது. அதன்படி, ரத்தத்தின் கிரியாட்டினின் அளவு அதிகரிக்கும்போது, முதல் நிலை என்று கூறப்படும் 1.0 – 3.0 மி.கி என்ற நிலையில் தீவிரமான உணவுக் கட்டுப்பாடு எதுவும் தேவையில்லை. கிரியாட்டினின் மாத்திரைகளைத் தவிர்ப்பது, நிறைய தண்ணீர் அருந்துதல் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றைக் கடைபிடித்தாலே போதுமானது.

இரண்டாம் நிலையில், கிரியாட்டினின் அளவு 3.0 – 6.0 மி.கி வரும்போது உப்பின் அளவையும் புரத உணவுகளின் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பு சேர்த்த ஊறுகாய், கருவாடு, சோடியம் பென்சோயேட் அல்லது பை கார்பனேட் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ரெடிமேட் பழச்சாறுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். தினசரி உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பு என்னும் சோடியத்தின் அளவு ரத்தத்தில் அதிகரிப்பதால், ரத்த அழுத்தத்தின் அளவும் அதிகரிக்கிறது.

இறுதி நிலையில், 6.0 மி.கி அளவுக்கும் அதிகமாக இருக்கும்போது, புரதம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். எனவே, சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகமுள்ள கீரைகள், கடலுணவுகள், பதப்படுத்தப்பட்ட பால் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பாஸ்பரஸின் அளவு அதிகரிக்கும்போது எலும்புகளின் உறுதித்தன்மை குறையும் என்பதால் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளான கோழி இறைச்சி, ஆட்டு ஈரல், குடல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள், கடலுணவுகளின் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

தினசரி குடிக்கும் நீரின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், அதிக அளவு தண்ணீர் அருந்துதல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதுடன், இதயத்துக்கு ஆபத்தையும் வரவழைத்துவிடும் என்பதே. கிரியாட்டினின் மருந்துணவுகள் அல்லது மாத்திரைகள் அதிகளவு நீரை உறிஞ்சும் தன்மை உடையவை என்பதால், மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போதே தண்ணீருடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலும் இருக்கிறது.

மேலும், புற்றுநோய் சிகிச்சைக்காகக் கொடுக்கப்படும் கீமோதெரபி மருந்துகள், தீவிர உடற்பயிற்சி, கிரியாட்டினின் மருந்துணவுகள் போன்றவை உடனடியாக கிரியாட்டினின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை என்பதால், அந்த நோயாளிகளுக்கு அடிக்கடி கிரியாட்டினின் அளவைப் பரிசோதித்து, அதற்கேற்றவாறு தண்ணீரின் அளவு  மற்றும் உணவு முறையை மாற்றியமைக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வழுவழு கைகள்… வாளிப்பான கால்கள்…!! (மருத்துவம்)
Next post புளித்த உணவுகள்!! (மகளிர் பக்கம்)