முதலுதவி அறிவோம்!(மகளிர் பக்கம்)
”ஐயோ அம்மா வலிக்குது… விளையாடுறப்ப விழுந்துட்டேன்… முட்டியில ரத்தம் வருது!” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது? பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா… அடடா!” என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான் பல வீடுகளில் அரங்கேறும். குழந்தைகள் இருக்கும் வீடோ, பெரியவர்கள் இருக்கும் வீடோ… பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் – முதல் உதவிப் பெட்டி.
குழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும். சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.
காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது. சமீபத்தில் ‘டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டி.டி’ போட்டால் போதும்.
குழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.