முதல் உதவி முக்கியம்!(மருத்துவம்)

Read Time:4 Minute, 37 Second

முதல் உதவி என்பது, சின்னக் காயம் பட்டவர்களுக்கு மருந்து போடுவதில் தொடங்கி, பெரிய விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் காப்பது வரை மிக  உன்னதமான விஷயம். ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கும் ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய, செய்ய வேண்டிய சிறந்த உதவி,  முதல் உதவி!

முதல் உதவி பெட்டியில் இருக்க வேண்டியவை என்னென்ன?

பஞ்சு சுருள், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஆன்டிபயாடிக் லோஷன், பேண்டேஜ் துணி, காயத்தை மூட பெரிய ட்ரெஸ்ஸிங்குகள், ஆன்டிசெப்டிக்  க்ரீம், ஒட்டக்கூடிய ப்ளாஸ்டர்கள், காயத்துக்குள் புகுந்துவிட்ட உலோக துண்டுகளை அகற்ற ஊசி, ட்வீஸர், ஒரு காலமைன் லோஷன் பாட்டில்  சுத்தமான துணித்துண்டுகள், ஒரு பாட்டில் சுத்திகரிக்கபட்ட நீர், கத்திரிக்கோல், சேப்ஃடி பின்கள் இவை அனைத்தும் கண்டிப்பாக முதல் உதவி  பெட்டியில் இருக்கவேண்டும்.

காது, மூக்கினுள் ஏதேனும் பொருளைப் போட்டுவிட்டால்:

காதுக்குள் ஏதாவது பொருள் போய்விட்டாலும், எடுக்க முயற்சிக்க வேண்டாம். குச்சி, ‘பட்ஸ்’ போன்றவற்றால் எடுக்க முயற்சித்தால், செவிப்பறை  பாதிப்படைய வாய்ப்பு உண்டு. அதனால் காது கேட்காமலே கூடப் போய்விடலாம். எனவே, உடனே காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் போய்விடுவது  நல்லது. காதுக்குள் ஏதேனும் பூச்சி போய்விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி இறந்துவிடும். பிறகு அதுவே வெளியே  வரவில்லை  எனில், டாக்டரிடம் போய் எடுத்துவிட வேண்டும்.

குழந்தைகள் விளையாடும்போது, ஏதேனும் சிறு மணிகள் அல்லது சிறு பயறுகள் போன்றவை மூக்கினுள் போய்விடக்கூடும். சில பெண்கள்  மூக்குத்தியைக் கழற்றும்போது, திருகாணி கூடப் போய்விட வாய்ப்பு உண்டு. அப்படிப் போய்விட்டால், ‘அதை எடுக்கிறேன் பேர்வழி’ என்று அந்தப்  பொருளை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி, ‘எமர்ஜென்சி’ ஆக்கிவிடாமல், உடனடியாக டாக்டரிடம் போய்விட வேண்டும். மூக்கைச் சிந்த வைக்கவும்  கூடாது.

குழந்தை ஏதேனும் பொருளை விழுங்கிவிட்டால்:

குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச்  சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது. தொண்டையில் ஏதேனும் பொருள்  சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, ‘ஹீம்லிக் மெனுவர்’  ( HEIMLICH MANEUVER) என்ற  செய்முறை இருக்கிறது. இந்த முதல்  உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம்.

இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும். ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே  எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான். எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால்,  விளைவு விபரீதம் ஆகிவிடும். இப்போது பள்ளிகளிலேயே இந்த முறை கற்றுத்தரப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தொண்டை கட்டுக்கு சுக்கு!!(மருத்துவம்)
Next post உங்க அம்மா பாவமில்ல…!! (மகளிர் பக்கம்)