மனம் எனும் மாயலோகம்!(மருத்துவம்)

Read Time:6 Minute, 6 Second

வளரிளம் பருவத்தில் ஏற்படும் மனச்சோர்வு

சோனா எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அவளுடைய அப்பாவுக்கு வேலையில் மாற்றல் வந்ததால் அவள் குடும்பம் வேறு ஊருக்கு குடிபெயர நேர்ந்தது. பழகிய பள்ளியையும் தோழிகளையும் விட்டுப் போவதும், புது ஊரில் புதிய மொழியும் சூழலும், புதிய வகுப்பில் எல்லோரும் இயல்பாகக் கலந்து பழகுவதும் அத்தனை சுலபமாக இல்லை. இதனால், படிப்பில் அவளது கவனம் குறைந்தது, வீட்டில் எந்நேரமும் சிடுசிடுப்புடன் அதிகம் தனிமையில் இருக்க ஆரம்பித்தாள். அது பதின்ம வயது மாற்றமோ என முதலில் நினைத்திருந்த பெற்றவர்களுக்கு பிறகுதான் பிரச்சனை என்ன என தெரிய வந்ததும் திகைத்தனர்.

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் நடந்த ஒரு ஆய்வில், 15 – 24 வயது கொண்டோர், ஏழு பேருக்கு ஒருவர், அதாவது பதினான்கு சதவீதத்தினர் தாங்கள் அடிக்கடி மனச்சோர்வுக்கு ஆளாவதாகச் சொல்லி உள்ளனர். டிப்ரஷன் எந்த வயதினரையும் ஆட்கொள்ளக்கூடும் என்றாலும் இன்று வளரிளம் பருவத்தினரிடையே அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனம். இவை எல்லாம் டீன் ஏஜ்களில் ஏற்படும் வழக்கமான சில மாற்றங்கள் என நினைக்கும் பெற்றோர் மற்றும் சுற்றத்தினர் அசட்டையாக இருந்துவிடுகின்றனர் என்பதால் பதின்பருவ டிப்ரஷன் தாமதமாகவே கண்டறியப்படுகிறது.

காரணங்கள் என்ன?

*மூளையின் நியூரோட்ரான்ஸ்மிட்டர் களின் வேதியியல் மாற்றங்கள்.

*ஹார்மோன் சுரப்புகளின் ஏற்ற இறக்கங்கள்.

*பெற்றோர் அல்லது ரத்த உறவுகள் யாரேனும் மனச்சோர்வுக்கு ஆளாகி இருத்தல்.

*குழந்தைப்பருவத்தில் உடலளவில் மனத்தளவில் பாதிக்கக்கூடிய அதிர்ச்சிகள், பெற்றோரின் மரணம் அல்லது பிரிவு போன்றவை.

*தீர்வுகளையும் கையாளும் முறைகளையும் கற்க முயலாமல் எதிர்மறை சிந்தனைகளை தொடர்ந்து கொண்டிருத்தல்.

இவ்வாறு ஒன்றிணைந்த பல காரணங்களால் பதின்ம வயதிலும் வளரிளம் பருவத்திலும் மனச்சோர்வு ஏற்படக்கூடும்.

டிப்ரஷன் என்பது எந்தக் காரணங்கள் இன்றியும் ஏற்படலாம் என்றாலும், இந்த பருவத்தில் சில காரணிகள் மனச்சோர்வை தூண்டும் விதமாக அமைந்துவிடும்.

*உடலளவில் நீண்ட கால வலி அல்லது தீரா நோய்களால் பீடிக்கப்பட்டு இருத்தல்.

*மனதளவில் சுய மரியாதை இன்றி, தன்மீது அதிக விமர்சனம் கொண்ட(self criticism) எதிர்மறை எண்ணம்(pessimistic) கொண்டவராக இருப்பது.

*சக மாணவர்களால் ஏற்படும் பிரச்சனைகள், நீண்ட காலமாக பிறரால் கேலி கிண்டலுக்கு ஆளாவது, மிக குண்டாக இருப்பது, படிப்பில் பின்தங்கி இருப்பது போன்ற காரணங்களால் தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பது.

*மது, சிகரெட் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பது

*ADHD, Dyslexia போன்ற கற்றல் குறைபாடு கொண்டவராக இருத்தல்.

*பாலியல் வன்முறைக்கும் வேறு வகையான உடல்சார் கொடுமைக்கும்(sexual abuse and physical abuse) ஆளாகி இருப்பது அல்லது நிகழ்ந்தபோது சாட்சியாக பார்த்திருப்பது (witness).

*ஓரினச் சேர்க்கையாளராகவோ, இருபாலின ஈர்ப்புடையவராகவோ, திருநங்கையாகவோ இருப்பது. மேலும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத பாலியல் ஆர்வம் உடையவராக இருப்பது.

குடும்பம் சார்ந்த காரணிகள்

*பெற்றோர் அல்லது நெருங்கிய ரத்த உறவுகள் மனநோய்களால் பாதிக்கப்பட்டிருத்தல்.

*குடும்பநபர் மதுவுக்கு அடிமையாகி இருத்தல்.

*தற்கொலையால் குடும்பநபர் இறந்திருப்பது.

*நெருங்கியவரின் மரணம், பெற்றோர்களின் விவாகரத்து போன்ற மன உளைச்சல் அளிக்கும் நிகழ்வுகளை சமீபத்தில் அனுபவித்திருப்பது.

இது போன்று குடும்ப அமைப்பினால் உருவாகும் காரணிகளும் டீன்ஏஜ் பருவத்தினரின் டிப்ரஷனை ஏற்படுத்தக்கூடும்.

“நாங்களும் இந்த வயதெல்லாம் கடந்துதான வளர்ந்தோம்.. இப்படியா இருந்தோம்?!” என்ற ஒப்பீடுகள் உதவாது. மாறும் காலத்திற்கேற்ப அப்டேட்டாக இருத்தல் அவசியம். இன்றைய கல்விமுறையும் வாழ்வியல்முறையும் அவர்கள்மீது சுமத்தும் சவால்கள் எண்ணற்றவை.

அவர்களின் பேச்சில், செயல்களில், படிப்பில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் இருந்தால், உடனடியாக பிள்ளைகளின் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுங்கள். ஒருவேளை இது மனநலம் சார்ந்ததோ என்ற கவலையோ ஐயமோ ஏற்பட்டால் மனநல ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள். அவர் சரியான முறையில் ஆற்றுப்படுத்துவார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எனக்கு 130 குழந்தைகள்!(மகளிர் பக்கம்)
Next post ரத்த சோகையை ஏற்படுத்தும் கஃபின் அலெர்ட் ப்ளீஸ்! (மருத்துவம்)