மணப்பெண்களின் மனங்கவர்ந்த பட்டு நூல் வளையல்கள்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 7 Second

ஸ்ரீ தேவி, கோவையில் பிறந்தவர். தற்போது திருமணமாகி ஈரோட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். மணப்பெண்கள் அணியும் ப்ரைடல் வளையல்களில் பட்டு நூலை வைத்து அதில் குந்தன், முத்து எல்லாம் சேர்த்து மணமக்களின் பெயர்கள், புகைப்படம் என டிசைனர் வளையல்களை தயாரித்து வருகிறார். ‘‘நான் பொறியியல் பட்டதாரி. எனக்கு ஃபேஷன் டிசைனிங் கற்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது.

ஆனால் வீட்டில் பொறியியல் படித்தால் தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என என்னை எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்க சேர்த்துவிட்டார்கள். இருந்தாலும் எம்பிராய்டரி, ஆரி, மேக்கப் என ஏதாவது ஒரு கலையையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் எப்போதும் என் மனதில் இருந்து வந்தது. அதை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைக்கவே இல்லை.

திருமணமாகி மூன்றே மாதத்தில் கர்ப்பமும் ஆனேன். அதே சமயம் என் கணவரின் அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். எனக்கு அது மிகுந்த வேதனையை தந்தது. கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் நான் மன அழுத்தத்தில் இருப்பதை கவனித்த என் கணவர் என்னை ஓவியம் வரையச் சொல்லி ஊக்குவித்தார். அப்போதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய ஆர்வம் கலை பக்கம் திரும்பியது. ஆனாலும் குழந்தை பிறந்ததும் அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது. அதே நேரம் மீண்டும் என் மாமனார் உடல்நிலைக் குறைவால் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் ஆரம்பிக்க அவரும் காலமானார்’’ என்றவர் அதன் பிறகு தன் கணவருடன் இணைந்து அவருடைய தொழிலில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார்.

‘‘நான் பட்டு நூலில் வளையல்களை செய்வேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. என்னுடைய அண்ணாவுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. எனது அண்ணிக்காக வளையல் வாங்கலாம் என்று நினைத்து பட்டு நூலில் வளையல்கள் தயாரிப்பவரிடம் கேட்ட போது, அவர்கள் மிகவும் அதிகமான விலையை சொன்னார்கள். அதனால் இதை நாங்களே செய்யலாம் என்று ஒரு ஐநூறு ரூபாய்க்கு முதலில் சில பொருட்களை வாங்கி யுடியூப் பார்த்து எனக்கு பிடித்த டிசைனில் வளையல்கள் செய்தேன்.

அது என்னுடைய அண்ணிக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அந்த ஐநூறு ரூபாயில், எனக்கு, என் அம்மாவிற்கு, அண்ணிக்கும் சேர்த்தே என்னால் வளையல்கள் செய்ய முடிந்தது. சிறிய தொகை முதலீடு செய்தே 1500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை என்னால் செய்ய முடியும் என்பதே எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் என் வீட்டில் எனக்காக செய்து வைத்திருந்த என்னுடைய வளையல்களைப் பார்த்து, பக்கத்து வீட்டில் சின்ன குழந்தைக்கு வளையல் செய்து கொடுக்க சொன்னார்கள்.

நான் அதை ஒரு குறைந்தபட்ச விலையில் முதல் முறையாக விற்பனை செய்தேன். அவர்களிடமிருந்து வந்த விமர்சனம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர்கள் சொல்லும்படியே சில மாற்றங்கள் செய்து மேலும் சில வளையல்கள் தயாரித்து என் உறவினர்களிடம் எல்லாம் கொடுத்தேன். அவர்களிடமிருந்து எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என் கணவரும் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து, அதிகம் சிரமப்படாமல், கிடைக்கும் நேரத்தில் உன் மன நிறைவுக்காக இந்த வேலையை செய். பணத்திற்காக செய்ய வேண்டாம் என்றார்.

எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காக ஆரம்பித்து நாளடைவில் நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது. 2018ல் இருந்து முறையாக பட்டு நூல் வளையல்கள் செய்ய ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் தான், இந்த பட்டு வளையல்களும் கொஞ்சம் கொஞ்சமாக ட்ரெண்டில் வர ஆரம்பித்ததால், மக்கள் இதை என்னிடம் விரும்பி வாங்க ஆரம்பித்தனர். ப்ரைடல் வளையல்கள் எப்போதுமே நல்ல வரவேற்பை பெற்று வந்ததால், என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி மணப்பெண்ணிற்கான ப்ரைடல் வளையல்களை செய்ய ஆரம்பித்தேன்.

வளையல் மட்டுமில்லாமல், பட்டு நூலில் ஜிமிக்கி, நெக்லஸ் போன்ற நகைகளையும் செய்ய கற்றுக்கொண்டேன். என்னுடைய கணவர் ஏற்கனவே ப்ளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், அவரே அழகாக என்னுடைய பொருட்களை பேக் செய்து அதை பத்திரமாக அனுப்பி விடுவார். கோயம்புத்தூரில் ஒரு ஸ்டால் அமைத்து என்னுடைய வளையல்களை டிஸ்ப்ளேவில் வைத்தேன். ஆனால் அதற்கு பெரிதாக எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை.

விற்பனையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அந்த சமயம் தான் என்னுடைய வளையல்களை இன்னும் கிரியேட்டிவாக நேர்த்தியாக உருவாக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். புதிய டிசைன்களில் வளையல்கள் உருவாக்க ஆரம்பித்தேன். வீட்டிலிருந்தே சுயதொழில் செய்யும் பெண்களுக்கு சமூக வலைத்தளம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, ஃபேஸ்புக்கை தாண்டி இன்ஸ்டாகிராமிலும் ‘ஸ்ரீ வலவி’ (Shrii_valavi) என்ற பெயரில் என் வீட்டுத் தொழிலை ஆன்லைனுக்கு மாற்றினேன். அதன் மூலம் பிரபல தொலைக்காட்சி நடிகர்களை தொடர்பு கொண்டு, என்னுடைய வளையல்களின் புகைப்படத்தை அனுப்பினேன்.

அவர்களுக்கு அது மிகவும் பிடித்துப் போனது. என்னிடம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க, என் வருமானம் அதிகரித்தது மட்டும் இல்லாமல், நல்ல விளம்பரமும் கிடைத்தது’’ என்றவரின் வளையல்கள் கொரோனா லாக்டவுனில் பயங்கர ஹிட்டானதாம். ‘‘கொரோனா காலத்தில் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்ததால், பலரும் ஆன்லைனில் தான் தங்கள் திருமணத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையுமே வாங்கினர். அப்படித் தான் வளையல்களுக்கு என்று பிரத்யேகமாக செயல்பட்டு வரும் என் இணைய பக்கத்தில், திருமணத்திற்கான வளையல்களை ஆர்டர் செய்தனர். அந்த ஒரு மாதம் கொரோனா லாக்டவுனில் மட்டும் நான் சுமார் 50 மணப்பெண்களுக்கு வளையல் விற்பனை செய்தேன்.

சாதாரணமாக பெரிதாக உலகமே தெரியாமல், வெளியில் கடைக்குச் சென்று எதுவும் வாங்க கூட தெரியாமல் இருந்த நான், இப்போது எனக்கான ஒரு தொழில் அமைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருவதை நினைக்கும் போது எனக்கே சந்தோஷமாக இருக்கும். என்னால் இவ்வளவு செய்ய முடியும் என்றால், திறமையான பல பெண்கள் கொஞ்சம் தைரியத்துடன் செயல்பட்டால் இன்னும் பல உயரங்களை சென்று அடையலாம் என்று தான் எனக்கு தோன்றும்.

பல இளம் பெண்கள், தங்களுக்கும் இந்த கலையை சொல்லிக் கொடுக்கும்படி ஆர்வத்துடன் வந்து கேட்டனர். ஆனால் எனக்கு அப்போது தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. வலி வருவதற்கு இரண்டு நாள் முன் வரைக் கூட வாடிக்கையாளருக்கு வளையல் செய்து கொடுத்துவிட்டுதான் ஓய்வு எடுத்தேன். என் குழந்தை இப்போது வளர்ந்துவிட்டதால், ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன்.

பல கலைஞர்கள் தங்களுடைய பொருட்களை எந்த விலையில் விற்க வேண்டும் என்றும் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் தனிப்பட்ட வகுப்பினை எடுத்து வருகிறேன். என் கணவர் பேக்கேஜிங், டெலிவரி போன்ற உதவிகளை செய்கிறார். என் தம்பி என்னுடைய பொருட்களை போட்டோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட உதவுகிறார். இந்த வளையல்களை நான் மட்டுமல்ல பலரும் செய்கிறார்கள்.

அப்படி இருந்தும் ஒரு சிலர் அதற்கான தரமான பொருட்களை எங்கு வாங்குவதுன்னு தெரிவதில்லை. அதனால் வளையல்கள் மட்டுமல்லாமல் அதனை தயாரிக்க தேவையான பொருட்களையும் இப்போது விற்பனை செய்து வருகிறேன்.இப்போது என்னுடைய லேட்டஸ்ட் ஸ்டைல் வளையலில் பெயர் எழுதுவது. இந்த டிரண்டினை நான் முதலில் ஆரம்பித்தேன். மணமகன், மணமகள் பெயரை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சின்ன சின்ன பீஸை வைத்து உருவாக்கி கொடுத்தேன். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. பின் புகைப்படங்கள் வைத்த வளையல்களையும் உருவாக்கினேன்.

சிலர் வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு மாம்-டு-பி வளையல்களை கேட்பார்கள். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவையான தீம்களில் கஸ்டமைஸ்ட் வளையல்கள் செய்கிறேன். அடுத்து குழந்தைகளுக்காக பேபி பேங்கில்ஸ் செய்ய ஆரம்பித்தேன். பொதுவாக சிறிய குழந்தைகளுக்கு பெரிய அளவில் வளையல் டிசைன்ஸ் இருக்காது. அதனால், பட்டு நூலால், செயின் வொர்க் செய்யப்பட்ட வளையல்களை குழந்தைகளுக்காக செய்தேன்” என்ற ஸ்ரீ தேவி இந்தியா முழுக்க தன் வளையல்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘பட்டு நூலால் ஆன வளையல்களுக்கென தனியாக ஒரு பொட்டிக் கடையை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. பொதுவாக அனைத்து நகைகளையும் விற்கும் கடைகள் நிறைய இருக்கும். ஆனால் பிரத்யேகமாக சில்க் பேங்கிஸ் விற்பனைக்கு மட்டுமே ஒரு பொட்டிக்கை ஆரம்பித்து அதில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ்ட் வளையல்கள் செய்து கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு வளையல் என்றாலே என்னுடைய பட்டு வளையல்கள் தான் நினைவிற்கு வரவேண்டும். அதற்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும்’’ என்றவர் அந்த இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் தண்ணீர் நிறைய அன்பு! (மகளிர் பக்கம்)
Next post பெண்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் ஆரி டிசைன்! (மகளிர் பக்கம்)