தமிழகத்தின் செஸ் ராணி!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 19 Second

இந்தியாவிலிருந்து சென்ற செஸ் விளையாட்டு போட்டி திரும்பவும் செஸ் ஒலிம்பியாட் என்ற வடிவில் மீண்டும் வந்தது. தமிழகம் பொறுப்பெற்று நடத்திய செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து பல வீரர்கள் கலந்து கொள்ள ஒரே ஒரு வீராங்கனையாக கலந்து கொண்டவர் வைஷாலி. இளம் வயது செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவிற்கு விளையாட சொல்லிக் கொடுத்ததும் இவர்தான். தற்போது இருவரும் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர்களாக பல இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெண்கல பதக்கத்தை வென்று தங்கப்பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வைஷாலியிடம் பேசிய போது…

‘‘எனக்கு சொந்த ஊர் சென்னைதான். அப்பாக்கு பேங்குல வேலை. சின்ன வயசுல நான் அதிகமா டி.வி பார்க்கிறேன்னு வீட்டில் என்னை டிராயிங் மற்றும் செஸ் கிளாஸ்ல சேத்து விட்டாங்க. அப்ப நான் ஒன்னாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவுடன் செஸ் விளையாட்டு பயிற்சிக்கு ேபாயிடுவேன். அதை முடிச்சிட்டு டிராயிங் கிளாசுக்கு போவேன். எனக்கு என்னவோ டிராயிங்கை விட செஸ் விளையாட்டு மேல ஆர்வம் அதிகமாச்சி.

அதனால டிராயிங் கிளாஸ் கட் பண்ணிட்டு செஸ் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். நாள் முழுக்க செஸ் போர்ட், காய்களை எப்படி நகர்த்தலாம்ன்னு பத்தின நினைப்பு மட்டுமே இருக்கும். பயிற்சி நன்கு எடுத்த பிறகு 2007ல முதன் முதலாக போட்டியில் கலந்து கொண்டேன். அதில் வெற்றியும் ெபற்றேன். அதன் பிறகு பல செஸ் போட்டிகளில் பங்கு பெற ஆரம்பிச்சேன்.

நான் வீட்டுலயும் பிராக்டீஸ் எடுக்க ஆரம்பிச்சேன். அந்த நேரத்தில் தான் என் தம்பி பிரக்ஞானந்தா நான் பிராக்டீஸ் பண்றதை பார்த்துக் கொண்டே இருப்பான். ஒரு நாள் தனக்கும் சொல்லிக் கொடுக்க கேட்டான். நானும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். நாளாக நாளாக நல்லா கத்துக்க ஆரம்பிச்சான். நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு விளையாட ஆரம்பிச்சோம். இருவருமே செஸ் போட்டிகளில் பங்கு பெற ஆரம்பிச்சோம்.

எனக்கு செஸ்ல பிடிச்சதுன்னா அதன் தொடக்க ஆட்ட முறை. அதை சிஸிலியன்ஸ் என்று சொல்வார்கள். வெள்ளை காயின்களை வைத்து இருப்பவர்கள் தான் முதலில் ஆட்டத்தை தொடங்க வேண்டும். முதலில் ஆட்டத்தை தொடங்குவதால் எதிராளியை நம்முடைய நகர்வுகளுக்கு ஏற்றாற் போல் ஆட வைக்க முடியும். இந்த முறையில்தான் ஏராளமான சுவாரஸ்யமான நகர்வுகளுக்கும் நிலைகளுக்கும் வழி இருக்கிறது’’ என்றவர் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்பதை விவரிக்கிறார்.

‘‘நேஷனல் லெவல் செஸ் போட்டி நடந்தது. அந்த போட்டியில 7 மாநிலங்களை சேர்ந்த செஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டாங்க. அதில் நானும் பங்கு பெற்றேன். மூன்றாவது இடத்தை பிடித்தேன். அதனால் எனக்கு இந்தியா அளவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சர்வதேச அளவிலும் விளையாட ஆரம்பிச்சேன். வெளிநாடுகள்ல நடக்கிற போட்டியில என்னோட அம்மாதான் என் கூட வருவாங்க. தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடி ஜெயித்த பிறகு தான் கொஞ்ச கொஞ்சமா இந்த போட்டியில் என்னையும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. ஒரு முறை ‘பெண்களுக்கான சர்வதேச கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வாங்கினேன். அளவில்லாத சந்தோஷம்.

இப்படி இருக்கும் போது தான் நம்ம நாட்டுல அதுவும் நம்ம சென்னையில செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறதா அறிவிப்பு வந்தது. என்னோட நீண்ட நாள் கனவு செஸ் ஒலிம்பியாட்ல விளையாடனும் அப்படிங்கிறது. அது இங்க நடந்த செஸ் ஒலிம்பியாட்ல சாத்தியமாச்சு. தமிழ்நாடு அளவில செஸ் ஒலிம்பியாட் போட்டியில கலந்துக்க தேர்வான ஒரே பொண்ணு நான் தான். வெளிநாடுகள்ல அதிகமா போட்டிகள்ல கலந்துகிட்டதால எனக்கு பயமில்லை. ஆனா ஒரே சிந்தனை மட்டும் தான். இந்த தடவ செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் இந்திய அணி ஜெயிக்கனும்ன்னு நினைச்சேன். அதனால நல்லா பிராக்டீஸ் பண்ணேன். டீம் டீமா பிரிச்சு விட்டாங்க. அதுல நான் ஏ டீம்ல இருந்தேன்.

எங்க டீமுக்கு மொத்தம் 11 ரவுண்டு. நல்லாவே பர்பாம் பண்ணோம். நான் 11 போட்டியில விளையாடினேன். எங்க டீம் கடைசி ரவுண்டுல தோத்ததால கோல்டு மெடல் மிஸ் ஆயிருச்சு. வெண்கல பதக்கம் எங்களோட டீம் வின் பண்ணோம். ஆனாலும் முக்கியமா சொல்லனும்னா செஸ் ஒலிம்பியாட் இங்க நடந்ததால இளைஞர்கள் நிறைய பேர் செஸ் போட்டிகள்ல கலந்துக்க ஆசை வந்திருக்கு. குறிப்பாக பெண்களும் செஸ் போட்டிகள்ல கலந்துக்கிறதுல்ல ஆர்வம் காட்ட வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையே ஒரு வகையான செஸ் விளையாட்டு தான். விளையாடும் போது அந்த குறிப்பிட்ட நேரத்தில் தெளிவான முடிவு எடுக்கனும். இது நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் மிகவும் அவசியம். செஸ் விளையாடுவதால நிறைய சிந்திப்போம். அதிக மனச்சோர்வு ஏற்படாது. இப்போது செஸ் தான் என்னுடைய வாழ்க்கை. மேலும் பல போட்டிகளில் பங்கு பெறணும். ஜெயிக்கணும்.

அதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருக்கு. அதை நான் திறமையுடன் பயன்படுத்திக் கொள்வேன். மேலும் இந்த போட்டியில் பொறுமை மற்றும் அமைதி மிகவும் முக்கியம். அப்போது தான் எதிரில் ஆடுபவரின் நகர்வையும் ஆட்டத்தின் போக்கையும் மிகவும் கவனத்துடன் கண்காணிக்க முடியும். இது தான் என்னுடைய வெற்றிக்கு காரணம்’’ என்கிறார் வைஷாலி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post சட்டங்கள் அறிவாய் பெண்ணே!(மகளிர் பக்கம்)