சண்டை போட்டாலும் தம்பிதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்!(மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 46 Second

‘ஃப்ரெண்ட்ஷிப் என்றால் என்னைப் பொறுத்தவரை உண்மையா இருக்கணும். நமக்கு ஒரு கஷ்டம்னு வந்தா அப்ப கைகொடுக்கணும். இதை நான் நட்பில் எதிர்பார்ப்பேன்’’ என்று தன்னுடைய நட்பு வட்டாரம் பற்றி மனம் திறக்கிறார் ‘திருமகள்’ மெகா தொடரின் நாயகி ஹரிகா சாது.

‘‘நான் சின்ன வயசில் இருந்தே ரொம்ப சுட்டி. அதே சமயம் எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. ரொம்பவே யோசிச்சு தான் நண்பர்களை தேர்வு செய்வேன். சொல்லப்போனால், என்னுடைய வாழ்க்கை துணையினை எவ்வளவு ஜாக்கிரதையாக தேர்வு செய்வேனோ அதே கவனத்துடன் தான் நண்பர்களை தேர்வு செய்வதில் கவனமா இருப்பேன். எனக்கும் என் நட்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். அப்படி கொடுப்பவர்கள் தான் எனக்கு நண்பர்களாகவோ தோழிகளாகவோ இருக்க முடியும். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து இப்ப வரை என்னுடைய ரொம்ப நெருங்கிய தோழி சந்தியா. நாங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் சிந்திப்போம். நான் என்ன கிறுக்குத்தனம் எல்லாம் செய்றேனோ… அதெல்லாம் அவ செய்வா.

+2 வரை நானும் அவளும் ஒரே பள்ளியில் தான் படிச்சோம். இருவருமே நல்லா படிப்போம். இருந்தாலும் எப்பவும் புத்தகம் கையோடு இருக்கமாட்டோம். வகுப்பில் ஒன்னா இருந்தா சிரிச்சிட்டே இருப்போம். அதனால எங்க ஆசிரியர் எங்களை தனித் தனியா தான் உட்கார வைப்பாங்க. சில சமயம் குறிப்பிட்ட வகுப்பு முடித்தவுடன் அந்த பாடம் குறித்து கேள்வி கேட்பாங்க. எங்களுக்கு விடை தெரிந்தாலும், தப்பான விடையை சொல்வது போல செய்வோம்.

உடனே எங்களுக்கு முன் இருக்கும் மற்ற மாணவி அது தப்புன்னு சொல்லி சரியான விடை சொல்லிடுவா. இப்படி சில சேட்டைகளை செய்திருக்கோம். என்னதான் நல்லா படிச்சாலும் எங்களுக்கு தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிக்கு வந்தா, ஒரு நாள் பிரேக் வேண்டும். ஆனால் பள்ளியில் இருந்து எங்க ஆசிரியரின் அனுமதி இல்லாமல் வெளியே வர முடியாது. அந்த சமயத்தில் இருவரும், தலைவலி, வயித்துவலின்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியே வந்திடுவோம். சந்தியா வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

எங்கேயும் வெளியே அனுப்பமாட்டாங்க. இப்படி நாங்க பள்ளியை கட்டடிச்சிட்டு வரும் அந்த நேரம் மட்டும் தான் வெளியே சுத்த முடியும். +2 முடிச்சிட்டு நான் பி.டெக்கில் சேர்ந்தேன். அவ வேற கல்லூரியில் சேர்ந்தா. இருந்தாலும் இன்று வரை எங்களின் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்னுடைய எல்லா விஷயத்தையும் அவளிடம் சொல்லலைன்னா எனக்கு தூக்கமே வராது. அவளுக்கு இப்ப கல்யாணமாயிடுச்சு. அவளின் கணவருக்கு சென்னையில் இப்ப வேலை என்பதால், சென்னைக்கு வரப்போறா… நாங்க சேர்ந்து சுத்த போறோம்ன்னு நினைக்கும் போது மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருக்கு.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைன்னு சொல்வாங்க. பள்ளியில் ஆரம்பித்த இந்த பழக்கம் எனக்கு கல்லூரியிலும் தொடர்ந்தது. பள்ளியை விட கல்லூரி நாட்கள் ரொம்பவே ஜாலியா இருந்தது. இங்கு நாங்க மொத்தம் ஐந்து பேர். மமதா, செஃப்ரின், நிகிதா, சஹசியா. இவங்கள கல்லூரியின் முதல் நாள் தான் சந்தித்தேன். அப்படியே மனசில் பதிஞ்சிட்டாங்க. சந்தியா மாதிரி தான் இவங்களும். எங்க நால்வரின் எண்ணம், சிந்தனை ஒரே மாதிரி இருந்தது. எங்களுக்கு கணக்கு பாடம் ரொம்ப பிடிக்கும். கணினி பாடம் என்றாலே போர் அடிக்கும். அந்த பாடத்தை கவனிக்காமல், பேராசிரியரை வரைந்து கொண்டு இருப்போம். அவரை நல்லா யார் வரைந்துள்ளார்களோ அவங்க மத்தவங்களுக்கு கேன்டீனில் டிரீட் கொடுக்கணும்.

சிலருக்கு செல்லப் பெயர் கூட வைத்திருக்கிறோம். ஒரு முறை அவரின் செல்லப் பெயரை கூப்பிட்டு அவர் எங்களை திரும்பி பார்த்தார். நாங்க ஏதோ சொல்லி சமாளிச்சோம். கல்லூரியில் படிக்கும் போது நாங்க ஒரு புராஜக்ட் வேலையா பெங்களூர் போனோம். ஐந்து பேரும் ஒரு அறையில் தங்கி இருந்தது இன்னுமே மறக்க முடியாது. இதற்கிடையில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது எனக்கு ஜெமினி தொலைக்காட்சியில் தெலுங்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஷூட்டிங் இருந்ததால் என்னால் தொடர்ந்து கல்லூரிக்கு போக முடியல. தேர்வு மட்டும் எழுத கல்லூரிக்கு போவேன். அதனைத் ெதாடர்ந்து இப்ப திருமகளில் நடிக்கிறேன். இன்னொரு தெலுங்கு சீரியலிலும் கமிட்டாகி இருக்கேன்’’ என்றார்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே ஏதாவது வித்தியாசமா செய்யணும்ன்னு ஆசை இருந்தது. குறிப்பா நடிப்பு துறையில் இருக்கணும்ன்னு விரும்பினேன். ஆனால் எனக்கு அதில் யாரை அணுகுறதுன்னு தெரியல. அதனால டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்தேன். அதன் மூலமாக எனக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்பா கிளாசிக்கல் டான்சர் என்பதால் அவருக்கு கலைத் துறை மேல் தனி ஈடுபாடு உண்டு. எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பற்றி சொன்னதும், அவர் டிரை செய்து பார்ன்னு சொன்னார். அதனால் ஆடிஷனுக்கு போனேன். டிக்டாக் வேறு, நடிப்பு வேறு. டைரக்டர் சொன்னது போல நடிச்சேன். இரண்டு மாசம் கழிச்சு அழைப்பு வந்தது.

திருமகள் என்னுடைய இரண்டாவது சீரியல். இதில் இருக்கும் ஒவ்வொருவரும் எனக்கு மனசுக்கு நெருக்கமானவங்க. மனசுக்குள்ள ஒன்னு வச்சுக்கிட்டு வெளியே ஒன்னு பேசமாட்டாங்க. நான் இங்க வந்த போது எனக்கு தமிழில் வணக்கம் தவிர வேறு எந்த வார்த்தையும் தெரியாது. தெலுங்கு, ஆங்கிலம் இரண்டும் நான் பேசுறதை புரிஞ்சிக்கிட்டு என்னை ரொம்பவே மோல்ட் செய்தாங்க. இப்ப நான் இவ்வளவு நல்லா தமிழ் பேசக் காரணம் திருமகள் டீம் தான்னு சொல்லணும். இந்த சீரியலின் தயாரிப்பாளர் செல்வி மேம் தான் என்னை ரொம்ப என்கரேஜ் செய்தாங்க. சீரியலின் முதல் இயக்குனர் தேவேந்திரன் சார் எனக்கு ஒவ்வொரு டயலாக்கும் புரியற மாதிரி சொல்லிக் கொடுத்தார்.

அப்புறம் ஷமிதா மேம். என்னுடைய மாமியார் ரோல். அவங்களுக்கு தெலுங்கு தெரியும். அவங்க எனக்கு தெலுங்கில் டிரான்ஸ்லேட் செய்து அதுக்கான அர்த்தம் சொன்னாங்க. ஆனால் அவங்கள நாம எப்போதுமே தொல்லை செய்யக்கூடாதுன்னு நான் செல்வி மேமிடம் சொன்னேன். அவங்க டிராஸ்லேட்டர் ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. ஆறு மாசத்தில் தமிழ் பேசவும் புரிந்து கொள்ளவும் கற்றுக் கொண்டேன். அப்புறம் என்னுடைய சக நடிகரான ராஜா… அவருடைய நிஜப்பெயர் சுரேந்தர்.

நானும் அவரும் டாம் அண்ட் ஜெரி மாதிரி. எப்போதும் செட்டில் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்போம். ஆனா ஷாட் ஆரம்பிச்சதும்… அப்படியே மாறிடுவோம். எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்கும். கேமரா ஆஃப்ன்னு சொன்னதும் ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்ய ஆரம்பிச்சிடுவோம். அப்புறம் கிரேஸ், வில்லி ரோலில் நடிக்கிறாங்க. அவங்களும் எனக்கு க்ளோஸ். அப்புறம் என் மாமனார் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி சார்.

அவர் ரொம்ப பாசிடிவ்வா பேசுவார். ஒரு சீன்ல நான் நல்லா நடிச்சிருந்தா, உடனே வந்து பாராட்டுவார். இயக்குனர் அவர்கள். எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருந்தாலும், அதை மறக்க செய்ய எப்போதுமே செட்டை கலகலன்னு வச்சிப்பார். நான் சென்ைனயில் இருப்பதால் என் குடும்பத்தை ரொம்பவே மிஸ் செய்வேன்’’ என்றவருக்கு அம்மா தான் பெஸ்ட் தோழியாம்.

‘‘என்னுடைய ஊர் ஆந்திராவில் உள்ள அனந்தபூர். அங்க தான் அம்மா, அப்பா இருக்காங்க. எனக்கு ஒரு தம்பி இருக்கான். லஹரி கிருஷ்ணா அவன் பெயர். சென்னையில் என் கூடத்தான் இருக்கான். படிச்சி முடிச்சிட்டு வேலைக்காக பார்த்துக் கொண்டு இருக்கான். என் குடும்பத்தில் எனக்கு தோழி அம்மா என்றால் தோழன் என் தம்பி. அம்மாவிடம் நான் எதுவுமே மறைக்கமாட்டேன். அவங்க ஸ்ட்ரிக்ட் எல்லாம் கிடையாது. ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அப்பா, அம்மா இரண்டு பேருமே அரசு வேலை. அம்மா வேலைக்கு போயிட்டு வந்து வீட்டையும் பார்ப்பாங்க. நான் வீட்டில் இருந்தா அம்மா தான் எல்லாமே பார்த்துப்பாங்க. நான் அப்ப எதுவுமே செய்ய மாட்டேன்.

இங்க சென்னையில் நான் தனியா பிளாட் எடுத்து இருக்கேன். அப்ப அம்மா வீட்டை எப்படி அழகா வச்சிருப்பாங்கன்னு நினைவுக்கு வரும். அதனால நானும் என்னுடைய வீட்டை சுத்தமா வச்சிருப்பேன். அம்மா தான் என்னுடைய ரோல் மாடல். அப்புறம் என் தம்பி. அவன் இது நாள் வரை என்னை அக்கான்னு கூப்பிட்டதே இல்லை. இரண்டு பேரும் வீட்டில் இருந்தா அந்த டி.வி. ரிமோட்டுக்கு சண்டை போடுவோம். நான் சென்னைக்கு வந்த பிறகு அவன் மேல பாசம் அதிகமாயிடுச்சு. அம்மா அப்பா ஊரில் இருப்பதால் இப்ப எனக்கு எல்லாமுமா அவன் இருக்கான்’’ என்றார் ஹரிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பலே பனங்கற்கண்டு!! (மருத்துவம்)
Next post எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் டிசைன்களை மட்டுமே வடிவமைக்கிறேன்! (மகளிர் பக்கம்)