ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது: மங்கு மறையுமா?(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 31 Second

அழகுப் பெட்டகம் 15

அகத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி நம் முகம். அந்த முகத்திற்கு சிறு பாதிப்பென்றாலும் மனம் அதையே நினைத்து வருந்தும். சிறிதாய் பரு வந்தாலே மனம் படாதபாடு படும். அதுவே முகத்தின் மொத்த அழகையும் கெடுக்கும் மங்குவாக இருந்தால், அவ்வளவுதான். ‘மங்கு’ என்பது என்ன? அது ஏன் முகத்திலும் வருகிறது? யார் யாருக்கெல்லாம் மங்கு வரும்? மங்கு வந்தால் செய்ய வேண்டியவை என்ன என்பதை இதில் விரிவாக விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா.

மங்கு என்றால் என்ன?

ஹை பவர் பிக்மென்டேஷனே மங்கு என அழைக்கப்படுகிறது. பிக்மென்ட் என்பது கரும் புள்ளியாகும். பார்த்தவுடன் முகத்தில் தெரியும் நோயல்ல. சருமத்திற்கு வரும் ஒருவித தோல் பிரச்சனை. மங்குவை ஆங்கிலத்தில் மெலாஸ்மா(Melasma) என்கின்றனர். இது 80% பெண்களுக்கே அதிகமாக வருகிறது.
புள்ளி புள்ளியாய் தோன்றும் இதன் வடிவம் வெவ்வேறு விதத்தில் இருந்தாலும், சின்ன சின்ன புள்ளியில் ஆரம்பித்து, பல புள்ளிகள் இணைந்து, மிகப் பெரிய தளும்பை முகத்தில் உருவாக்கிவிடும். சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாக இருந்தால், அடுக்கு அடுக்காக தென்படும். சிலருக்கு ப்ரௌன் நிறத்தில் தோற்றமளிக்கும். பெரும்பாலும் நெற்றி, இரண்டு கன்னங்கள், புருவத்திற்கு இடைப்பட்ட பகுதி, மூக்கு மற்றும் தாடையில் வர வாய்ப்புகள் அதிகம். இது, குறிப்பிட்ட காலத்துக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்னை என்றாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளது.

காரணங்கள்

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை, இர்ரெகுலர் பீரியட்ஸ், மெனோபாஸ் தோன்றும் காலங்களில் மங்கு வரும் வாய்ப்பு உள்ளது. சூரிய ஓளி அதிகப்படியாக நம் சருமத்தைத் தாக்கும் போது மங்கு தோன்றலாம். வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள், வெயில் அதிகம் தாக்கக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மங்கு வரும். தைராய்ட் பிரச்சனை உள்ளவர்கள், ரசாயனம் அதிகமுள்ள ஹேர் டை பயன்படுத்துபவர்கள், அழகு சாதனப் பொருட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருப்பவர்கள், மன அழுத்தம், குழந்தை பேற்றைத் தடுக்கும் மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கு மங்கு ஏற்படும். மங்குவில் இருந்து தப்பிக்க விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, கடைகளில் மங்குவை நீக்குவதாக விற்கும் முக க்ரீம்களை முயற்சிக்க வேண்டாம். பயன்படுத்தும்போது முகம் பளபளப்பாய் தோன்றினாலும், நிறுத்தியபின் முகம் கறுக்கத் துவங்கும்.

தோல் மருத்துவர்களை அணுகுவதே நல்லது. வெளியே செல்லும் போது சன் க்ரீம், ஸ்கார்ஃப் போன்றவற்றால் முகம், கை, கால்களை மறைத்து கொள்ள வேண்டும். முறையாகப் பயிற்சி பெற்ற அழகு நிலையங் களில் மங்குவை நீக்க  சூப்பர் ஃபேஷியல், டீப் என இரண்டு வகை ஃபேசியல் உள்ளது. அழகுக் கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த ஃபேஷியலை தொடர்ந்து எடுக்கும்போது நூறு சதவிகிதம் மங்கும் கட்டாயம் மறைந்து முகம் பொலிவுறும். நமது வீடுகளில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மங்குவை நீக்கலாம்.

வீட்டிலே நீக்கும் முறை

* இரண்டு சிறிய வெங்காயத்தின் சாற்றை எடுத்து, பஞ்சில் நனைத்து மங்கு இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் ஆசிட் நிறைந்திருப்பதால் அதன் சாற்றையும் பஞ்சு மூலமாக மங்கு இருக்கும் பகுதிகளில் வைக்கலாம். (லெமனில் ப்ளீசிங் கன்டன்ட் நிறைந்திருப்பதால் கண்களை பாதுகாத்து கவர் செய்தபின் தடவவும்)

* கலப்படமற்ற மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சளை பசும்பாலோடு சேர்த்து முகத்திற்கு பேக் போட்டு, 20 நிமிடம் கழித்து சுத்தம் செய்யலாம். இதனை தொடர்வதால் மங்கு கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறும்.

* கற்றாழை ஜெல்லை நன்கு சுத்தம் செய்து முகத்தில் தடவி, அதன் மேல் டிஸ்யூ பேப்பர் வைக்க, முகத்தில் இருக்கும் ஜெல் கீழே நழுவாமல் பேப்பர் திக்காக முகத்தைப் பிடித்துக்கொள்ளும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தம் செய்யலாம்.

* சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் தன்மை ஓட்ஸில் இயல்பாக உள்ளது. 2 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் எடுத்து அது நனையும் அளவிற்கு பசும் பால் மற்றும் தேன் சேர்த்து பேஸ்டாக்கி பேக்காக முகத்தில் போட்டு 10 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் விரல்களால் ஸ்ஃக்ரப் செய்யவும்.தொடக்க நிலை பாதிப்பில் இருப்பவர்கள் எனில் மேலே குறிப்பிட்டுள்ள வழி முறைகளில் ஏதாவது ஒன்றைத் தைரியமாகப் பின்பற்றலாம். ஒரு செயலையும் தொடர்ந்து செய்யும்போதுதான் அதற்கான பலனை அடைய முடியும். எந்த மாற்றமும் ஒரே நாளில் வந்துவிடாது. நீண்டகாலம் சருமத்தில் பதிந்த மங்குவைப் போக்க முயற்சிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது மறையத் தொடங்கும். எனவே சோர்வின்றி பின்பற்ற வேண்டும்.

டிப்ஸ்..

* தடிமனான சருமம் உள்ளவர்கள் ஓட்ஸ் பயன்படுத்தலாம்.

* மென்மையான சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை, மஞ்சள், கற்றாழை இவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடாமுயற்சிக்கு கிடைத்த அழகி கிரீடம்!! (மகளிர் பக்கம்)
Next post கொரோனாவை வெல்ல கொய்யாவே போதும்! (மருத்துவம்)