தோல்பாவை கூத்து!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 14 Second

எனக்கு இப்போது வயது 47. 2006ல் கலை வளர்மணி விருதும், 2018ல் சென்னை இயல் இசை மன்றம் மூலம் கலைமாமணி விருதும் எனக்கு கிடைத்தது என நம்மிடத்தில் பேச ஆரம்பித்தவர் தோல்பாவை கூத்துக் கலைஞர் முத்துசந்திரன். என் மனைவி ராதாவும் என்னோடு இந்தக் கலைக்குள்தான் இருக்கிறார் என்றவர் தொடர்ந்து மேலே பேச ஆரம்பித்தார். தசாவதாரம் படத்தில் “முகுந்தா முகுந்தா’ பாடலில் நடிகை அஸின் செய்வாறே அதுதான் தோல்பாவை கூத்து. ஒரு சில தமிழ் படங்களில் தோல்பாவை கூத்தை நடிகர்களுக்குப் பதில் நானே செய்திருக்கிறேன் என்ற முத்து சந்திரன், இதில் எங்கள் வீட்டுப் பெண்களும் என்னோடு இணைந்து செயல்படுகிறார்கள் என்கிறார்.  

பின்னணி படிப்பது.. பொம்மைகளை அடுத்தடுத்து காட்சிகளுக்கு வரிசைப்படுத்தி எடுத்துக் கொடுப்பது.. ஹார்மோனியம் வாசிப்பது, பக்க பாட்டு பாடுவது.. பின்னணி குரல் கொடுப்பது.. நிகழ்ச்சிக்கு இடையே ஆமாம் போடுவது.. பாடல்களைப் படிப்பதென பெண்களும் தங்கள் பங்களிப்பை முழுமையாகக் கொடுக்கிறார்கள் என்றவர் தொடர்ந்தார். இது ஒரு இனம் செய்யும் தனிக் கலை. நாங்கள் ஐந்து தலைமுறையாகவே நாடோடிகள். நான் இதில் ஆறாவது தலைமுறை.  மேலும் இது ஒரு குடும்பக் கலை. குடும்பம் குடும்பமாகத்தான் இதைச் செய்ய முடியும். 19 வயதுவரை அப்பாவோடு சேர்ந்து கிராமம் கிராமமாக நாடோடியாக சென்றிருக்கிறேன்.

கஷ்டம் நிறைந்த வாழ்க்கை எங்களுடையது. நாடோடிகள் என்பதால் பள்ளிக்கூடம் சென்றும் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒற்றை காளை பூட்டிய கூட்டு வண்டிதான் எங்களுக்கு வீடு. வெயில், மழை எல்லாம் வண்டிக்குள்தான். இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் வண்டிக்குள்ளும், ஆண்கள் வண்டிக்கு கீழேயுமாக படுத்திருப்போம். வீடு வீடாகச் சென்று சட்டியில் கஞ்சி வாங்கி வந்து சாப்பிடுவோம். வருமானம் கிடைக்காத நாட்களில் பிச்சைகூட எடுத்திருக்கிறோம்.

‘எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, சொத்தை பிரித்துக்கொடு’ என அப்பாவிடம் கேட்டால் தோல்பாவையில் 4 படத்தை எடுத்துக் கொடுத்து ‘உன் மனைவியோடு போய் பொழைச்சுக்க’ என்பார் எனச் சிரித்தவர், இந்தக் கலைதான் இன்றுவரை எங்கள் சொத்து. 126 வயதுள்ள தோல்பாவை பொம்மைகூட என்னிடத்தில் இப்போதும் பத்திரமாக இருக்கிறது. அவை நான்கு தலைமுறை கண்டவை என்கிறார் புன்னகைத்து.

தோல்பாவை கூத்தில் மிக முக்கியமானது குரல்களை மாற்றி மாற்றி பேசுவது. ஒரே நபர் 20 முதல் 30 குரல்கள்வரை மாற்றுவோம். இராமாயணக் கதைகளை கூத்தாக போடும்போது, 50 க்கும் மேற்பட்ட குரல்களை மாற்றிப் பேசவேண்டியது இருக்கும். குறிப்பாக பெண்களின் குரல்கள், வயதான ஆண், வயதான பெண் குரல்கள், குழந்தைகளின் குரல்களும் அடக்கம் என்றவாறு குரலை மாற்றி பேசிக் காட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார் முத்துசந்திரன்.

தோல்பாவை கூத்து 2000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு முன்பு தமிழ்நாட்டில் இந்தக் கலை இருந்ததா என்றால்? ஆம் இருந்தது. மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் இங்கு வந்து அதே கலையினை தமிழிலே பாடியுள்ளனர். அப்படித்தான் நானும் இதைத் தமிழில் செய்கிறேன். ஆனால் எனது குடும்பத்திற்குள் நான் மராட்டி மொழி பேசுகிறேன் என்றவர், நாங்கள் மராட்டிய ராவ் சமுதாயம். இதில் 12 உள்பிரிவுகள் உள்ளது. இதில் மண்டிகர் இனம் மட்டுமே தோல்பாவை கூத்து செய்பவர்கள். குழந்தைகளின் படிப்புக்காக தமிழகத்தில் எங்களுக்கு இந்து தொம்பன் எஸ்ஸி(SC)  என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்கிறார்.

மராட்டிய மாநிலத்திலிருந்து 16 தலைமுறைக்கு முன்பு சரபோஜி மன்னர் காலத்தில் தஞ்சாவூரில் தஞ்சம் அடைந்தவர்கள் எங்கள் மூதாதையர். மன்னர்கள் காலத்தில்  அவர்கள் செழிப்போடு இருந்திருக்கிறார்கள். என்னுடைய பத்துபனிரெண்டு வயதில், அதாவது 37 ஆண்டுக்கு முன்பு தோல்பாவை கூத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு கிராமத்திற்கு சென்றால் 30 நாளும் அங்கேயே தங்கி நிகழ்ச்சி நடத்துவோம். இராமாயணத்தில் உள்ள ஆறு காண்டங்களையும் பத்தாகப் பிரித்து 10 நாளும் கூத்து நடக்கும். தவிர, நல்லதங்காள், அரிச்சந்திரா கதைகளையும் விடிய விடிய கூத்தாக நடத்துவோம். கூட்டம் கலையாமல் அப்படியே உட்கார்ந்திருக்கும். ஒரு கிராமம் முடிந்ததும் அடுத்த கிராமத்தை நோக்கி நகர்வோம்.

அது ஒரு காலம். சினிமா வந்த பிறகு எனக்குப் பிறகான தலைமுறையிடம் நாகரீகம் வளர்ந்துள்ளது. விளைவு மக்கள் கூட்டத்தையும் வருமானத்தையும் நாங்கள் இழந்தோம். வெள்ளிக்கிழமை ஒலி ஒளியும். ஞாயிற்றுக்கிழமை பழைய படம் மட்டுமே டிவியில் ஒளிபரப்பாகும். அதுவும் ஆன்டெனா டிவி வழியாகவே பார்க்க முடியும். அதன் பிறகே கேபிள் டிவி வந்தது. சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, எல்லோர் வீடுகளிலும் டி.வி என்றான நிலையில், கலைகள் அழிவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியது.

21 வயதில் எனக்குத் திருமணம் நடந்தபோது, எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்துவிட்டோமே, நமது குழந்தைகளையாவது நன்றாகப் படிக்க வைப்போம் என நினைத்து நாடோடியாகச் சுற்றுவதை நிறுத்தினேன்.  கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிராமம் திருமலைபுரம் குளத்தங்கரை அருகே நான் நிகழ்ச்சி நடத்தியபோது, ஊர் மக்கள் அங்கேயே தங்குவதற்கு கொஞ்சமாக இடம் கொடுத்தார்கள். அதில் குடிசை போட்டு நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினோம். எனக்கு அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள். என் அம்மா, என் மனைவி ராதா, என் தம்பி, என் தம்பியின் மனைவி, என் பிள்ளைகள், என் தம்பியின் பிள்ளைகள் என 12பேர் ஒரே குடும்பமாக இருக்கிறோம். என் குழந்தைகளும், என்னுடைய தம்பி குழந்தைகளும் இப்போது கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

நாங்கள் குடும்பமாக இந்தக் கலையை நம்பியே காலம் காலமாக இருந்துவிட்டோம். கல்வி அறிவும் என் தலைமுறைவரை சுத்தமாக இல்லை. எங்களுக்கு வேறு வேலைகளும் தெரியாது. வேறுவழியின்றி கூலி வேலைக்காவது செல்வோம் என்கிற மன நிலையில் எந்த வேலை கிடைத்தாலும் செய்ய ஆரம்பித்தோம் என்றவரைத் தொடர்ந்து, முத்துசந்திரன் மனைவி ராதா, அவரது அம்மா, சகோதரி ஆகியோரிடம் பேசியபோது, மிருதங்கம் வாசிப்பது, ஜால்ரா அடிப்பது, ஹார்மோனியம் வாசிப்பது, அடுத்தடுத்த படங்களை வேகமாக எடுத்துக் கொடுப்பது, கூட இணைந்து பாடுவது, ஆமாம் போடுவது என பெண்கள் நாங்கள் ஆண்களோடு இணைந்து இந்தக் கலையை கொண்டு செல்கிறோம்.

ஒரு தலைமுறைக்கு முன்பு காட்சிகள் மாறும்போது இடைவெளி நிறைய இக்கும். இப்போது காலம் மாறிவிட்டது. இடைவெளி அதிகம் விழுந்தால் மக்கள் பொறுமை இழந்து எழுந்து சென்றுவிடுவார்கள். எனவே அடுத்தடுத்து கேரக்டர்களை எடுத்து விறுவிறுப்பாக காட்சிகளை ஓட்ட வேண்டும் என்கின்றனர் இவர்கள்.

மீண்டும் நம்மிடத்தில் பேசிய முத்துசந்திரன் பள்ளி, கல்லூரி, அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, அரசு விழாக்கள் என எந்த இடத்தில் இருந்து எங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்தாலும் குடும்பமாகச் சென்று நிகழ்ச்சி நடத்துகிறோம். இந்தக் கலையினை கற்க விரும்பி பெண்கள் கல்லூரிகளில் இருந்து 68 மாணவிகள் வந்து தோல்பாவை கூத்தைக் கற்றுச் சென்றார்கள். அவர்களுக்கு  ஆட்டுத் தோலில் படங்களை எப்படி வரைந்து வெட்டுவது, வர்ணங்களை எப்படி அவற்றுக்கு கொடுப்பது… படங்களுக்கு இடையில் குச்சிகளை சொறுகி எப்படி அசைப்பது… எப்படி குரல்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது  போன்ற பயிற்சிகளை வழங்கினேன்.

அவர்களும் ஆர்வத்தோடு கற்று, அவர்கள் பாணியில் பறவைகளையும்…

பட்டாம்பூச்சிகளையும்.. டோரா புஜ்ஜிகளையும் வரைந்து தோல்பாவை கூத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். என்னிடம் கற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மாநில  அளவில் இரண்டாம் இடம் பெற்றார். என் தலைமுறைக்குப் பிறகு கண்டிப்பாக நான்கு பேராவது இந்தக் கலையை விடாமல் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்தக் கலையின் உண்மைத் தன்மை கிடைக்குமா என்பதே இங்கு கேள்வி..? விடைபெற்றார் முத்து சந்திரன் தன் மனைவி ராதா மற்றும் குடும்பத்தினருடன்.

தோல்பாவைகளை உருவாக்கும் முறை…

ஆட்டுத்தோலின் ஜவ்வினை நீக்கியபின், முடிகள் உள்ள பகுதியினை உள் பக்கமாக வைத்து தோல் வெளியில் தெரியுமாறு சணல் சாக்கு ஒன்றில் சுருட்டி அதை தண்ணீரால் நனைத்து, ஒன்றரை நாட்கள் அப்படியே வைத்துவிடுவோம்.பிறகு தோலை வெளியில் எடுத்து  அதற்குள் முப்பதுக்கு மேற்பட்ட குச்சிகளை சொருகி இழுத்து அடிப்போம். அப்போது முடிகள் கொத்துக் கொத்தாக வெளியில் வந்துவிடும். பிறகு வெயிலில் ஒரு நாள் முழுவதும் நான்றாகக் காய வைப்போம்.

காய்ந்தபின் ஆட்டுத்தோல் பார்க்க மெல்லிய பேப்பர் போன்றே தோற்றம் தரும். காய்ந்த தோலின் மேல் கரிகட்டை கொண்டு இராமன், லட்சுமணன், சீதை, இராவணன், சூர்ப்பனகை, அனுமன் என தேவைப்படும் உருவங்களை வரைவோம். பிறகு உடைகளுக்கும், அணிகலன்களுக்கும் வர்ணங்களைத் தீட்டி, அந்தந்த உருவத்துக்கு உயிர் கொடுப்போம். தோலின் ஒரு பக்கத்தில் தீட்டும் வர்ணம் மறு பக்கத்தில் பார்த்தாலும் அப்படியே தெரியும்.

இதில் உள்ள சிறப்பே இதுதான். பிறகு உருவங்களை வெட்டி தனியாக எடுத்து, அதன் கை, கால், கழுத்துப் பகுதிகளில் மூங்கில் குச்சிகளை சொருகிவிடுவோம். மூங்கில் குச்சிதான் எங்களுக்கு படங்களை அசைப்பதற்கான கைப்பிடி. தோலில் உள்ள உருவங்களுக்கு இடையில் உள்ள சிறுசிறு துளைகள் வழியே ஒளிக்கற்றைகள் புகுந்து வெள்ளை திரையில் உருவம் நன்றாக பளிச்செனத் தெரியும். இதுதான் தோல்பாவையில் சூசகம்.திரைக்கு பின்னிருந்து தொடர்ச்சியாக அசைக்கும்போது, பாவைகள் குரலுக்கு ஏற்ப திரையில் கைகளையும், கால்களையும், கழுத்தையும் தொடர்ச்சியாக அசைக்கும். புராணக் கதைகளில் வரும் சில பாத்திரங்கள் நேரடியாக மோதிக்கொள்ளும் காட்சிகளில் காலால் கட்டைகளை அடித்து சத்தம் எழுப்புகிறார்கள்.

நவீன சினிமாவின் அடித்தளம்…

சினிமாவிற்கு முன்னோடி இந்த கலை. அனிமேஷன் சினிமாவிற்கும் இதுவே முன்னோடி.சினிமாவில் 24/ பிரேம் sec, டெலிவிஷன் 25/ பிரேம் sec. ஆனால் இந்தக் கலை 17/ பிரேம் sec இருக்கிறது. இந்தியாவில் உள்ள நான்கு, ஐந்து மாநிலங்களில் அதாவது, தமிழ்நாடு தவிர்த்து, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலும் இப்போதும் தோல்பாவை கூத்து இருக்கிறது. கூத்தை நிகழ்த்துவதில் மாநிலங்களுக்கு இடையே சின்னச்சின்ன மாற்றங்கள் உண்டு.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரே ஆள் தோல் பாவைகளை அசைப்பது.. குரலை மாற்றிப் பேசுவது.. காலால் கட்டை அடிப்பதென எல்லாவற்றையும் செய்கிறார்கள். அதுவும் ஒரே ஆள் இடைவெளி கொடுக்காமல் விறுவிறுவெனப் படத்தினை அடுத்தடுத்து ஓட்டுவார். மற்ற மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் திரைக்குப் பின்னால் நின்று கதாப்பாத்திரங்களை அசைக்கிறார்கள். குரல் கொடுக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செர்ரி… நினைத்தாலே இனிக்கும்!(மருத்துவம்)
Next post வருமானத்திற்கு வழிவகுக்கும் கைத்தொழில்! (மகளிர் பக்கம்)