நவக்கிரகங்களுக்குரிய நவதானிய சமையல்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 38 Second

ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி நவக்கிரகங்கள் வழி நடத்தி செல்கிறதோ? அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்குறிய தானியங்கள் அந்தந்த கிழமையில் பூஜைகளின் பொழுது நைவேத்யமாக படைக்கப்படுகிறது. எந்த நாளில், எந்த நவதானியத்தைக் கொண்டு என்ன உணவு சமைத்து, எந்த கிரகத்திற்கு படைத்து வழிபடலாம் என கூறுகிறார் சமையல் கலைஞர் மீனாட்சி.

கோதுமை மாவு அல்வா

தேவையானவை:

கோதுமை மாவு – 100 கிராம்,
நெய் – 100 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
முந்திரி – 20 கிராம்,
ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்,
பால் – 200 மிலி.

செய்முறை:

கனமான கடாய் (அ) குக்கரில் கோதுமை மாவு, பால், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அடுப்பை குறைந்த தீயில் பற்ற வைத்து கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு அதில் உருக்கிய நெய் சேர்த்து அடி பிடிக்காமல் நன்கு கிளறி, திரண்டு வந்தவுடன் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்தால் சுவையான கோதுமை அல்வா தயார். இது திடீர் என்று செய்வதற்கு உகந்தது. இதில் நிறம் சேர்க்க விரும்புபவர்கள் கேசரி பவுடரை சேர்த்துக் கொள்ளலாம். இதே முறையில் கோதுமையை ஆறு மணி நேரம் ஊற வைத்து  அரைத்து பால் எடுத்தும் செய்யலாம். கோதுமை சூரிய பகவானுக்கு உகந்த தானியம் என்பதால், ஞாயிற்றுக் கிழமைகளில் படைத்து வழிபடலாம்.

நெல் பொரி உருண்டை

தேவையானவை:

நெல் பொரி – 2 டம்ளர்,
வறுத்த வேர்க்கடலை – ½ டம்ளர்,
நறுக்கிய தேங்காய் துண்டு – 4 ஸ்பூன்,
வெல்லம் – ½ கிலோ,
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்,
நெய் – 4 ஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் பொடித்த வெல்லம் போட்டு ½ டம்ளர் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் வடித்து பின்பு கெட்டி பாகு காய்ச்சவும். அதில் நெய் சேர்த்து நெல் பொறி, வேர்க்கடலை, தேங்காய் துண்டு, ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறி, கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடிக்கவும். சுவையான பொரி உருண்டை தயார். இது கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கும். நெல் சந்திர பகவானின் தானியம். திங்கட்கிழமைகளில் படைத்து வழிபடலாம்.

துவரை வடை

தேவையானவை:

ஊறவைத்த துவரை – ¼ கிலோ,
காய்ந்த மிளகாய் – 6,
தனியா – 2 ஸ்பூன்,
தேங்காய் துருவல் – ½ கப்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
பெருங்காயம் – 1 ஸ்பூன்,
உப்பு – சுவைக்கு,
இஞ்சி – 1 துண்டு,
எண்ணெய் – 200 மிலி,
அரிசிமாவு – 2 ஸ்பூன்.

செய்முறை:

ஊறவைத்த துவரையுடன் காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், இஞ்சி சேர்த்து கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். அதில்நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, அரிசி மாவு சேர்த்து கலந்து வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் சிறு சிறு வடைகளாய் தட்டி எடுக்கவும். சுவையான துவரை வடை தயார். இதனையே மசால் வடையாய் செய்ய சோம்பு, பூண்டு, லவங்கம் சேர்த்து அரைத்து நறுக்கிய வெங்காயம், புதினா சேர்த்து வடைகளாய் தட்டினால் சுவையான மசால் வடை தயார். செவ்வாய் பகவானின் உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று அவருக்கு பிடித்த துவரை தானியத்தை படைத்து வழிபடலாம்.

பச்சை பயறு பாயசம்

தேவையானவை:

பச்சை பயறு – 100 கிராம் (வறுத்தது),
வெல்லம் – ¼ கிலோ,
தேங்காய்ப்பால் 1 டம்ளர் (அ) பால் – 250 மிலி,
ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்,
தேங்காய் துறுவல் – ½ கப்,
வறுத்த முந்திரி – 10,
நெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:  

வறுத்த பச்சை பயறுடன் முந்திரி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும். பாதி வெந்தவுடன் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து கொதித்தவுடன் தேங்காய் துறுவல் சேர்க்கவும். பின்பு இறக்கி வைத்து தேங்காய்ப்பால் (அ) பால், நெய், ஏலப்பொடி சேர்த்து கலந்து மூடவும். சுவையான பாயசம் தயார். புதனின் தானியமான பச்சைபயறல் உணவுகள் செய்து புதன் கிழமைகளில் படைத்து வழிபட நன்மை அளிக்கும்.

கொண்டைக் கடலை குழம்பு

தேவையானவை:  

ஊறவைத்த கொண்டைக் கடலை – 200 கிராம்,
உருளைக்கிழங்கு – 200 கிராம்,
தக்காளி – 200 கிராம்,
பச்சை மிளகாய் – 4,
தேங்காய் துருவல் – ½ கப்,
புளி கரைசல் – 100 மிலி,
முந்திரி – 6,
தாளிக்க எண்ணெய் – 4 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் கொண்டைக் கடலை, உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ½ டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த தக்காளி, புளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனவுடன் உரித்த உருளைக் கிழங்கு துண்டு, கொண்டைக் கடலை சேர்த்து அரைத்த தேங்காய் விழுது கொட்டி, கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான குழம்பு தயார். குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் கொண்டைக் கடலையை படைத்து அவரின் அருள் பெறலாம்.

மொச்சை கோஸ் வடை

தேவையானவை:

ஊறவைத்த மொச்சை கொட்டை – ¼ கிலோ,
கோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது),
கறிவேப்பிலை,
கொத்தமல்லி – ½ கப் (நறுக்கியது),
இஞ்சி – 1 துண்டு,
காய்ந்த மிளகாய் – 4,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – சுவைக்கு,
எண்ணெய் – 300 மிலி.
அரிசி மாவு – 4 ஸ்பூன்.

செய்முறை:

ஊறவைத்த மொச்சையுடன் இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். கலவையில் பொடியாய் நறுக்கிய கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அரிசிமாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு சிறு வடைகளாய் தட்டி வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாய் பொரித்து எடுக்கவும். சுவையான வடை தயார். இது சுக்கிர பகவானின் தானியமாகும்.

எள் ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு  ஒரு கப்,
தக்காளி – ஒன்று,
புளி – நெல்லிக்காய் அளவு,
பச்சை மிளகாய்,
காய்ந்த மிளகாய் – தலா 2,
எள்,
தேங்காய்துருவல்,
மிளகு,
சீரகம்,
மஞ்சள்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
நெய்,
கடுகு,
கறிவேப்பிலை  – தாளிக்க தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து எடுக்கவும். துவரம்பருப்பை வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் புளி கரைசல், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்து வைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.  ‘கமகம’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார். எள் சனி பகவானுக்கு உகந்த தானியம். அன்று எள் விளக்கு ஏற்றி தரிசிக்க சங்கடங்களை நீக்கி அருள் புரிவார்.

உளுந்து சாதம்

தேவையானவை :

அரிசி – 2 கப்,
கருப்பு உளுந்து – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
பூண்டு – 15 பல்,
உப்பு – தேவையான அளவு,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் உளுத்தம்பருப்பினை கொட்டி அத்தனையும் நன்றாக வறுக்கவேண்டும். ஒரு குக்கரில் கழுவிய அரிசி அதனுடன் வறுத்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து துருவிய தேங்காய், வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை விடவும். இதனை ஒருமுறை நன்றாக கிளறி நீங்கள் சாப்பிட பரிமாறலாம். ராகு பகவானுக்கு உகந்த தானியமான உளுந்தில் சாதம் செய்து சனிக்கிழமைகளில் தானமாக அளிக்க நன்மைகள் பெறலாம்.

கொள்ளு குழம்பு

தேவையானவை :

கொள்ளு – 200 கிராம்,
பெரிய வெங்காயம் – 200 கிராம்,
தக்காளி – 200 கிராம்,
பச்சைமிளகாய் – 5,
இஞ்சி – 25 கிராம்,
பூண்டு – 25 கிராம்,
கடுகு – 15 கிராம்,
மிளகு – 15 கிராம்,
சீரகம் – 15 கிராம்,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
காய்ந்தமிளகாய் – 5,
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
புளி – 50 கிராம்,
நல்லெண்ணெய் – 200 மி.லி.
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் கொள்ளை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து, குக்கரில் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு, வெந்த கொள்ளு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை போட்டு இறக்கினால் கொள்ளு குழம்பு ரெடி. கேது பகவானின் தானியமான கொள்ளில் உணவுகள் சமைத்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் படைத்து வழிபடலாம்.

நவதானிய அடை

தேவையானவை:

கோதுமை,
அரிசி,
துவரம் பருப்பு,
பச்சைப்பயறு,
கொண்டைக்கடலை,  
மொச்சை,
எள்ளு,
கறுப்பு உளுந்து,
கொள்ளு – தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய்-3 அல்லது 5,
இஞ்சி ஒரு பெரிய துண்டு,
மிளகு,
சீரகம்  தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை  2 ஆர்க்கு,
உப்பு,
நல்லெண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

முந்தைய நாள் இரவே தானியங்களை ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில்  அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…?(அவ்வப்போது கிளாமர்)
Next post கர்ப்ப காலத்தில் இதை நினைவில் கொள்ளுங்கள்! (மகளிர் பக்கம்)