பெண்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 50 Second

ஓவியம் வரைதல், விழாக்களுக்கு போர்டு எழுதுவது, சுவர் ஓவியம், அச்சுக்கோர்த்த எழுத்துக்கள் என ஒவ்வொரு கலைகளுக்கும் தனித்துவமான அழகு உண்டு. அதேபோல், எம்பிராய்டரி. எவ்வளவு டிசைன்கள் வந்தாலும் நூலால் இழையப்படும் இந்தக் கலையின் அழகு வண்ணமயமானது. இந்தக் கலையினை திறம்பட செய்வது மட்டுமில்லாமல், ஆதரவற்ற பெண்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு என ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த லட்சுமி சுந்தரம்.

‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு கைவேலைப்பாடுகளின் மேல் ஆர்வம் அதிகம். ஓவியம் வரைவது, கோலம் போடுதல், குரோஷி, கூடை பின்னுதல், எம்பிராய்டரி என ஏதாவது செய்து கொண்டு இருப்பேன். அதற்கான பயிற்சியும் எடுத்தேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த என் பெரியம்மா, எனக்கு ஒரு ைதயல் மெஷின் வாங்கிக் கொடுத்தார். அப்ப எனக்கு வயசு 12. அதை வைத்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், உறவினர்கள் மற்றும் என் தோழிகளின் ஆடை தைப்பது, எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைப்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்தேன். நாட்களும் நகர்ந்தது. படிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் என் கலைக்கான பயிற்சி என எடுத்துக் கொண்டேன். படிப்பு முடிந்து எங்க வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு செய்தார்கள்.

அவருக்கு துபாயில் வேலை என்பதால், அங்கு சென்று விட்டேன். அங்கு 20 ஆண்டுகள் இருந்தேன். அங்கு என்னால் வெளியே எங்கும் வேலைக்கு செல்ல முடியாது என்பதால், வீட்டில் இருந்தபடியே என்னுடைய கலைப் பயணத்தை தொடர்ந்தேன். மேலும் எம்பிராய்டரி மற்றும் பல்வேறு தையல் கலை குறித்த பயிற்சிகள் மற்றும் அதன் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். அதில் மராசா கட்ச், கந்தா காஷ்மீரி, சிக்கன்காரி போன்ற பல்வேறு எம்பிராய்டரிகளை கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைச்சது. அதைக் கொண்டு தனிப்பட்ட டிசைன்களை உருவாக்கினேன். என் மகள்களுக்கு நான் தான் ஆடையினை வடிவமைப்பேன்.

என் குழந்தைகளின் ஆடை டிசைன்கள் தனிப்பட்டு இருப்பதால், அதைப் பார்த்த அவர்களின் தோழிகளின் அம்மாக்களும் தங்களின் குழந்தைகளுக்கும் தைத்து கொடுக்க சொன்னாங்க. மெல்ல மெல்ல என்னுடைய ஆர்வம் வியாபாரமாக மாறியது. ஒருவர் மூலம் ஒருவர் என வாய்வார்த்தையாக பல வாடிக்கையாளர்கள் எனக்கு கிடைத்தனர். காரணம், அங்கு கடைகளில் இது போன்ற எம்பிராய்டரி ஆடைகளின் விலை அதிகம். நான் அதிக விலை வைக்காமல் என்னுடைய லாபத்தை மட்டுமே பார்த்தேன். இதனால் பலர் என்னிடம் ஆடையை வடிவமைத்து கொடுக்க சொல்லி கேட்டனர்’’ என்றவர் 2012ல் ‘ஆரபி குடூர்’ என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி அவரின் தனித்துவமான ஆடைகளை பதிவிட்டுள்ளார்.

‘‘அங்கு எனக்கென்று ஒரு தனிப்பட்ட பிசினஸ் இருந்தது. பெரிய அளவில் இல்லை என்றாலும், வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் கொடுத்து வந்தேன். இதற்கிடையில் 2017ல் நாங்க சென்னைக்கு வந்து செட்டிலாயிட்டோம். கலைத் தொழில் பொறுத்தவரை எங்கிருந்தாலும் அதனை தொடரலாம். திறமை இருந்தால் கண்டிப்பாக நமக்கான பாதை நம் கண் முன் தானாகவே விரிவடையும்.

இங்க வந்த பிறகும் நான் என் பணியை தொடர ஆரம்பித்தேன். சாலையில் நடந்து செல்பவர்களின் செருப்பையே பார்ப்பான் செருப்பு தைக்கும் தொழிலாளி. அதுபோல் நான் சாலையில் நடந்து செல்லும்போது, திருமணம் மற்றும் புதுமனைப் புகுவிழா போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது பெண்கள் அணிந்துவரும் ஆடைகளில் உள்ள வேலைப்பாடுகளை கவனிப்பேன். அதைக் கொண்டு நான் புதிதாக ஒரு டிசைன்களை உருவாக்குவேன்.

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் அவர்களின் பாரம்பரிய தையல் வேலைப்பாடுகளான காந்தா எம்பிராய்டரி, சிகன் காரி, கட்ச் எம்பிராய்டரி இன்றும் குடிசை தொழிலாகவே உள்ளது. வீட்டுக்கு வீடு பெண்கள் அழகான டிசைன்களை உருவாக்குவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை தனித்துவமான எம்பிராய்டரி டிசைன்கள் எல்லாம் கிடையாது. ஆனால் இங்கு பெண்கள் கூடை பின்னுவது, தையல், எம்பிராய்டரி, கோலம், மெகந்தி போன்ற கலைகள் மேல் ஆர்வம் கொண்டவர்கள். அதனை தனிப்பட்ட முறையில் கற்று வைத்திருப்பார்கள். எதிர்காலத்தில் ஒரு சிலருக்கு அது ஒரு தொழிலாகவே அமைந்துவிடும்.

ஆனால் இப்பொழுது அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இது போன்ற கலைகள் மேல் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. அப்படி இல்லாமல் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான தனித்துவமான திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதனால் எனக்கு தெரிந்த கலையினை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிவு செய்தேன். அதற்கு காரணம் நங்கநல்லூரில் அரசு துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒரு பெண்மணி.

கணவரை இழந்தவர், மகனுடன் வாழ்ந்து வந்தார். ஒரு விபத்தில் மகனையும் பறி கொடுத்தார். இதனால் மனமுடைந்தவர் தன் கவனத்தை திசைத் திருப்ப தனக்கு பிடித்த எம்பிராய்டரி வேலைப்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். இந்த பணி செய்துதான் அவர் பணம் ஈட்ட வேண்டும் என்றில்லை. தன் மன மாற்றத்திற்காகவே இந்த பணியை செய்கிறார். என்னிடம் தொடர்ந்து வேலை வாங்கி செய்து வருகிறார்.

அவரைப் பார்த்த பிறகு தான், நான் கற்றுக்கொண்ட எம்பிராய்டரி கலையை பல பெண்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இதுவரை 600க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கேன். வறுமைக்கோட்டில் வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் போன்ற பெண்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்கிறேன். மேலும் எனக்கு வரும் ஆர்டர்களை அவர்களுக்கு கொடுத்து ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருகிறேன்.

பெண்களுக்கு எம்பிராய்டரி மிகவும் சுலபமாக வரும். இந்த கலையை கற்றுக் கொண்டால் அவர்களின் வாழ்நாளுக்கு பெரும் உதவியாக இருக்கும்’’ என்ற லட்சுமி சுந்தரம்
முகநூல், யுடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்திலும் தன் கலை குறித்து பதிவு செய்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா?(அவ்வப்போது கிளாமர்)
Next post 11 வயது சிறு தொழிலதிபர்! (மகளிர் பக்கம்)