ட்ரெண்டாகி வருகிறது ரெப்ளிகா பொம்மைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 23 Second

உங்க போட்டோ மட்டும் குடுங்க அத அப்படியே காபி பண்ணி செய்து தருகிறேன். கியூட் ரெப்ளிகா மற்றும் கொலு பொம்மைகளுடன் கண்ணடிக்கிறார் நங்கநல்லூர் வனமாலா. ‘‘நான் வனமாலா ராகவன். சென்னைதான் எனக்கு சொந்த ஊர். அப்பா ராகவன் அரசுப் பணியாளர், அம்மா பூமா ஹோம் மேக்கர். பி.காம் ஹானர்ஸ் முடிச்சிருக்கேன் மேலும் ஒரு வருடம் ஹியூமன் ரிசோர்ஸ்மென்ட் படிச்சிருக்கேன். படிச்சு முடிச்சு வேலைக்காக காத்திருந்தேன். அந்த ஒரு வருடம் எனக்கு ஆரோக்கியம் சார்ந்த சில பிரச்சினைகள் வரவே தினமும் ஆபீஸ் போயி வேலை பார்க்குற சூழல் சரிப்பட்டு வரல. இந்த நேரத்தில்தான் ஏதேனும் ஒரு பிசினஸ் வீட்டில் துவங்கலாம்னு முடிவெடுத்தேன்’’ என்னும் வனமாலா கைவினை வேலைப்பாடுகளில் ஆர்வமுடையவர். அப்போதுதான் சாதாரண பொம்மை டூ கொலு பொம்மைகள் என்னும் கான்செப்டை கையில் எடுத்திருக்கிறார்.

‘‘சின்ன வயசுலேயே பொம்மைகளுக்கு அலங்காரம் செய்யறது, சீவி அழகுபடுத்துறதெல்லாம் பிடிக்கும். அந்த விளையாட்டுதான் இந்த பிஸினஸுக்கு எனக்கு கை கொடுத்துச்சு. ஆமா!… வெறும் சின்ன குழந்தைகள் விளையாடும் பொம்மையை அடிப்படையா வெச்சுதான் இந்த பொம்மைகள் கான்செப்ட் செய்ய தொடங்கினேன். இந்த பொம்மைகளின் ஸ்பெஷல் அதன் நீளமான கருமையான முடிதான். முடிகளுக்கு சவுரி முடிகளை பொம்மைகளின் நீளம், அகலத்திற்கு ஏத்த மாதிரி வெட்டி இணைச்சுடுவேன்.

பின்னர் புடவை, உடைகள் இப்படி அத்தனையும் நானே கைகளால் செய்யறதுதான். ஆரம்பத்திலே என் வீட்டு கொலு, அலமாரி இப்படி அலங்கரிக்க இந்த பொம்மைகள் செய்ய தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமா நண்பர்கள், சொந்தங்கள் இப்படி என் பொம்மை ஒவ்வொருத்தருக்கும் அன்பளிப்பா போக ஆரம்பிச்சு அதன் மூலமா சிலர் விலைக்கும் கேட்க ஆரம்பிச்சாங்க. இதுதான் அப்படியே பிசினஸாக உருவாச்சு. கொலு வருடத்திற்கு ஒரு முறை சீசன், இந்த பிசினஸை எப்படி வருடம் தோறும் செய்யலாம் என யோசித்தேன்’’ என்ற வனமாலா புகைப்படம் பார்த்து அச்சு அசலாக ஒருவரைப்போல் பொம்மைகள் வடிவமைக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘ரெப்ளிகா… ஒரு புகைப்படம் கொடுத்தால் போதும் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் சாயலில் 70% முதல் 90% வரை மேட்சிங்கான பொம்மை செய்துகொடுக்கறது. ஒரு நபருடைய முகத்துக்கு ஓரளவு மேட்ச் ஆகுற பொம்மையை தேர்வு செய்து, அதே ஸ்டைல் உடை, ஆக்ஸசரிஸ்கள் சேர்த்து பொம்மைகள் கொடுக்க ஆரம்பிச்சேன். எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போனது. கஸ்டமர்களும் அதிகரிக்க ஆரம்பிச்சாங்க. குறிப்பா கல்யாண ஸ்பெஷல் ஆர்டர்கள் எனக்கு அதிகமாகவே வர ஆரம்பிச்சது. அதாவது மணப்பெண் மாதிரியே பொம்மைகள், மச்சான், மாமன், தங்கை உறவுகள், மேலும் திருமணத்தில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் உட்பட பொம்மைகளை கேட்க ஆரம்பிச்சாங்க’’ என்னும் வனமாலா சமீபத்தில் ஐயங்கார் முறையில் தலையில் அப்பளம் உடைக்கும் சடங்கு உட்பட ரெப்ளிகா பொம்மை களாக ஒரு கஸ்டமருக்கு செய்து கொடுத்திருக்கிறார்.

‘‘ஆரம்பத்தில் நம்ம ஊர்ல கிடைச்ச பொம்மைகளை வைத்துதான் இந்த பொம்மைகளை உருவாக்கினேன். ஆனாலும் எனக்கான பெரிய அளவிலான கலெக்‌ஷன்கள் இங்க கிடைக்கலை. மேலும் விலையும் ரொம்ப அதிகமா இருந்ததால ஒரு பொம்மையே குறைந்தது ரூ.1000 முதல் ரூ.2000 வரையிலும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்புறம் நான் டெல்லியில் இருந்த சப்ளையர் மூலம் இங்கே கிடைக்கிற பொம்மைகளை விட நேரடியாகவே உற்பத்தி விலைக்கு அங்கே இருந்து வாங்க ஆரம்பிச்சேன். இதனால் எனக்கு பொம்மைகள் விலையும் குறைஞ்சது. மேலும் ரூ.500 துவங்கி ஆயிரம் ரூபாய்க்குள்ள பொம்மைகள் விற்க முடியுது.

ஒரு ஸ்டைல் பொம்மைகள் டெல்லியில் இருந்தும் இன்னொரு ஸ்டைல் பொம்மைகள் பெங்களூரில் இருந்தும் என இரண்டு விதமான பொம்மை களை வாங்கி செய்றேன். அதேபோல் இந்த பொம்மைகள் தலைமுடிக்கு அப்புறம் அதிகம் மெனக்கெடுறது நகைகளுக்குதான். நகைகள் அத்தனையும் கையாலேயே செய்தது’’ எனப் பெருமையாக சொல்லும் வனமாலாவிற்கு இந்த பொம்மை பிஸினஸை தன்னைப் போலவே நிறைய பெண்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களுக்கும் சிறுதொழில் துவங்க உதவ வேண்டும் என்பதே எதிர்கால நோக்கமாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெளிநாட்டுக்குப் பறக்கும் கோலப்படிகள்!(மகளிர் பக்கம்)
Next post ஒரு டாக்டர் ஆக்டரான கதை!(மருத்துவம்)