வெளிநாட்டிற்கு பறக்கும் வாழைநார் கூடைகள்!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 54 Second

வாழைநார் புடவை, வாழைநாரில் நகைகள் தொடர்ந்து வாழைநாரில் அழகான கூடைகளை புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள பெண்கள் பின்னி வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் இதனை சுய தொழிலாகவே செய்து வருகிறார்கள். அதற்கு முக்கிய பக்கபலமாக இருப்பவர் டிரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரவிச்சந்திரன்.

‘‘நான் கொடைக்கானலில் படிச்சிட்டு 1989ம் ஆண்டு புதுக்கோட்டையில் வந்து செட்டில் ஆயிட்டேன். இங்கு மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு கடன் உதவி வாங்கித் தருவது, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவது என சின்ன சின்ன வேலைகளை செய்திட்டு இருந்தேன். இந்தக் குழு மூலம் அவர்கள் மெழுகுவர்த்தி செய்வது, கயிறு திரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். அவர்கள் தயாரித்த பொருட்களை விற்பனையும் செய்து வந்தோம். ஆனால் அந்த பொருட்களை நாங்க நினைத்தபடி விற்பனை செய்ய முடியவில்லை.

எங்களால் அதற்கு மார்க்கெட்டிங்கும் செய்ய முடியவில்லை. இதனால் வருமானம் கிடைக்காததால், மறுபடியும் பெண்கள் கூலி வேலை மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள். எனக்கும் மகளிர் சுய உதவிக்குழுவில் பெரிய அளவில் வேலை இல்லை என்பதால், சொந்தமாக ஏதாவது செய்யலாம்ன்னு நினைச்சேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் டிரீஸ் நிறுவனம். இதன் மூலம் இயற்கை விவசாயம் இயற்கை சார்ந்த பொருட்கள் செய்வது, கயிறு திரிப்பது, கீற்று முடைவதுன்னு பல வேலைகளை செய்திட்டு இருந்தேன். அந்த நேரத்தில் தான், பெங்களூரில் இருக்கும் நிறுவனம் மூலமா வாழைநாரில் செய்யக்கூடிய பொருட்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது.

அது நாள் வரை வாழைநாரில் பூ மட்டும் தான் கட்ட முடியும்னு நினைச்சுட்டு இருந்தேன். கூடையும் பின்ன முடியும்ன்னு அந்த நிறுவனம் அளித்த பயிற்சி மூலமா தெரிஞ்சிக்கிட்டேன். முதல்ல ஐந்து பேர் மட்டும் பெங்களூரூக்கு சென்று பயிற்சியை எடுத்துக் கொண்டோம். அவங்க இப்ப 150 பேருக்கு அதைக் கத்துக் கொடுத்து இப்ப அந்த கிராமத்தில் உள்ள பெண்களுக்கு இது ஒரு வாழ்வாதாரமா மாறிவிட்டது. மேலும் எங்களின் கூடைகளை அந்த நிறுவனமே வெளிநாடுகளில் இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தாங்க.

இப்ப நாங்க தயார் செய்யும் பொருட்கள் அனைத்தும் ெவளிநாட்டிற்கு எக்ஸ்போர்ட் செய்றோம். எங்களின் கூடைகள் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஒரு கூடை இந்திய ரூபாயில் 115 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. முதலில் ஆயிரம் கூடைகள் ஆர்டர் செய்தாங்க. இப்ப ஒரு வாரத்திற்கு மட்டுமே ஆயிரம் கூடைகளை தயாரித்து அனுப்பி வைக்கிறோம். பக்கத்து கிராமத்தில் உள்ள பெண்களும் காசு கொடுத்து பயிற்சி எடுக்க முன் வருகிறார்கள். கூடிய சீக்கிரம் வெளி மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு இதற்கான பயிற்சி அளித்து அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது தான் டிரீஸ் நிறுவனத்தின் நோக்கம்’’ என்றார் ரவிச்சந்திரன்.

வாழை நார் கூடைகள் செய்வதை பழகி இன்று பல ஊர் மக்களுக்கு அதனை சொல்லிக் கொடுத்து வருகிறார் உமா. ‘‘எனக்கு கல்யாணமாகி ஒரு பையன், ஒரு பொண்ணு. கணவர் 12 வருடங்களுக்கு முன் இறந்துட்டார். விவசாய கூலி வேலை தான் செஞ்சிட்டு இருந்தேன். அதில் ஒரு நாளைக்கு 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தான் கிடைக்கும். நாள் முழுக்க உழைத்தும் கைகளுக்கு கிடைப்பதென்னவோ சொற்ப கூலி தான். என்னோட ஒருத்தி சம்பளம் வீட்டை சமாளிக்க பத்தல. வேற வேலையை தேடுற சமயத்துலதான் மகளிர் சுய உதவி குழுக்களில் இணைந்து சின்ன சின்ன வேலைகள் செய்து வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். நாங்க தயாரிக்கும் பொருட்களை எங்களால் சரியாக விற்க முடியல.

அதனால தொடர்ந்து அந்த வேலையில் ஈடுபட முடியல. அந்த சமயத்தில் தான் ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரவிச்சந்திரன் அவர்கள் வாழை நாரில் கூடைகள் பின்னும் வேலை இருப்பதாக சொன்னார். வாழை நாரில் கூடைகளா? முதலில் யார் வாங்குவார்கள்? எப்படி விற்பனை செய்வதுன்னு குழப்பமா இருந்தது. மக்களுடைய அத்தியாவசியத் தேவைகளான மெழுகுவர்த்தி, கயிறு, சோப்புகள் செஞ்சும் யாரும் வாங்கல.

இந்த நிலைமையில வாழை நார் கூடைகளை எப்படி விற்பதுன்னு யோசனையா இருந்தது. குடும்பத்தோட பொருளாதார நிலைமைகளை சரி செய்ய வேண்டி இருந்ததால பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். பெங்களூரில் இருக்கிற தனியார் தொண்டு நிறுவனம்தான் எங்களுக்கு பயிற்சி வழங்கினார்கள். அதன் பிறகு ரவிச்சந்திரன் அவர்களின் நிறுவனம் சார்பா, 2015ல் வடகாடு ஆதனக்கோட்டையில் சென்டர் போட்டு கூடைகள் தயாரிக்க ஆரம்பிச்சோம். இன்று அதே பகுதியில் 15 சென்டர்கள் இயங்கி வருகிறது. என்னை மாதிரியான ஏழ்மையான நிலையில் இருக்கும் பல பெண்களுக்கு வாழைநார் தொழில்தான் வாழ்க்கை கொடுத்துள்ளது. என் இரண்டு பிள்ளைகளையும் இந்த தொழிலால் தான் படிக்க வைக்க முடிகிறது’’ என்றவர் வாழைநார் கூடைகள்
தயாரிப்பு பற்றி விவரித்தார்.

‘‘மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் இருக்கிற வாழை தோட்டங்களில் இருந்து வாழைநார்களை வாங்கி வந்து அதை நார் நாரா பிரிச்சி எடுத்துக்குவோம். கூடைக்கு ஏற்ப தகரத்தில் பல சைஸ்களை தயார் செய்து வைத்துள்ளோம். அந்த தகரத்தை சுற்றி வாழைநார்களை வைத்து பின்னுவோம். இதில் இரண்டு விதத்தின் பின்னல் செய்யலாம். ஒன்னு வாழைநார்களை பின்னுவது, அடுத்து வாழைநார்களை அப்படியே அடுக்கி வைப்பது. இரண்டுமே பார்க்க அழகாக இருக்கும்.

பிளாஸ்டிக் வயர் கூடை எடை அதிகமா இருக்கும் வளைந்து கொடுக்காது. வாழைநார் பைகள் கூடைகள் எடை குறைவானது, வளைஞ்சும் கொடுக்கும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது, நீண்ட நாள் உழைக்கும். கூடைகள் அழுக்கானால், சோப்புத்தண்ணீரில் ஊற வச்ச அலசினால் போதும். பெங்களூரில் இருந்து வந்தவங்க 16 வகையான பொருள்களைதான் வாழை நாரில் செய்ய சொல்லிக் கொடுத்தாங்க. இப்போ நாங்க ஆறு வகையான பொருட்களை புதுசா கண்டுபிடிச்சு தயார் செய்கிறோம்.

இந்த வாழைநார்க் கூடைகள் இங்கு எளிமையா கிடைக்கக்கூடியது என்பதால், இதை விலை கொடுத்து வாங்க யாரும் தயாரா இல்லை. அதனால் இதனை நாங்க வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு ஆளால் 5 கூடை வரை பின்ன முடியும். அதில் ரூபாய் 600 வரை சம்பாதிக்கலாம். காலையில் 9 மணிக்கு வேலைக்கு வந்தால் நான்கு மணி வரை தான் செய்வோம்’’ என்கிறார் உமா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தொழிலுக்கு பாலமாக அமைந்த இரண்டு தலைமுறை நட்பு!(மகளிர் பக்கம்)
Next post திருமண உறவு அவசியமா?(அவ்வப்போது கிளாமர்)