அன்பானவர்களை இணைக்கும் ரெஸ்டரேஷன் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 13 Second

காதலர் தினம் என்றாலே மனசுக்கு பிடித்தவர்களுக்கு சாக்லெட், பூங்கொத்து, வாழ்த்து அட்டைகள், டெட்டி பொம்மைகள் என கொடுப்பது வழக்கம். அதையே கொஞ்சம் மாற்றி அமைத்து அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தருகிறார் கோவையை சேர்ந்த ஜமுனா வர்ஷினி. ‘‘பிறந்தது படிச்சது எல்லாம் கோவை தான். டிகிரி முடிச்சிட்டு இப்ப எம்.பி.ஏ படிச்சிட்டு இருக்கேன். அப்பா னிவாசன், சின்னதா ஒரு பெட்டிக்கடை வச்சிருக்கார். அம்மா காந்திமதி, வீட்டிலேயே மாவு அரைச்சு விற்பனை செய்து வராங்க. நான், அப்பா, அம்மா, தம்பி என ரொம்ப சாதாரணமான நடுத்தர குடும்பம் தான். வீடும் பெரிய அளவு எல்லாம் கிடையாது. இதில் என்னுடைய பரிசுப் பொருட்கள் செய்ய தேவையான மெஷின் எல்லாம் இங்க வைக்க இடம் கிடையாது என்பதால் பக்கத்தில் ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுத்திருக்கேன்.

எனக்கு சின்ன வயசில் இருந்தே கலை சார்ந்த விஷயம் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. சின்னதா பேப்பர் கிடைச்சா போதும், அதை சுருட்டி மடித்து ஏதாவது செய்வேன். அது ஒரு கலைப் பொருளா மாறும். ஆனால் பொழுதுபோக்காக இருந்தது எனக்கான ஒரு தொழிலா மாறும்ன்னு அப்ப நான் நினைக்கல. இதை முழுமையா 2019ம் ஆண்டு டிசம்பர் மாசம் தான் செய்ய ஆரம்பிச்சேன். பிகாம் முடிக்க போறோம். அடுத்த என்ன செய்யலாம்ன்னு யோசிச்ச போது நமக்கு தெரிந்த கலை சார்ந்த விஷயங்களை செய்யலாம்ன்னு திட்டமிட்டேன். செய்து வீட்டில் வச்சு அழகு பார்க்க முடியாது. மார்க்கெட்டிங் செய்யணும். மக்களிடம் கொண்டு போய் சேர்க்கணும். அதே சமயம் என்னால் ஒவ்வொருத்தர் வீடுகளுக்கு போய் விற்க முடியாது.

எப்படி சேர்ப்பதுன்னு யோசிச்ச போது, சமூக வலைத்தளம் கைகொடுத்தது. அதற்கு முன் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்திற்கு ஒரு பெயர் வைக்கணும்ன்னு யோசிச்சேன். @ajsmilesformiles என்ற பெயரில் இன்ஸ்டாவில் பக்கத்தினை ஆரம்பித்தேன். யாராக இருந்தாலும் ஒரு அழகான பரிசுப் பொருட்களைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் நம்முடைய முகத்தில் ஒரு புன்னகை ஏற்படும். அந்த புன்னகை அந்த பரிசுப் பொருட்களை எப்போது பார்த்தாலும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இந்த பெயரை தேர்வு செய்தேன்.

நான் முதன்முதலில் ‘நேம் பிளிப்’ என்ற பரிசுப் பொருளை தான் அதில் பதிவு செய்தேன். அதாவது உங்களின் கணவர் அல்லது காதலர் ஏன் அண்ணன், தங்கை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்த இது ஒரு அழகான பரிசு. ஒரு பக்கம் உங்களின் பெயரும் மறுபக்கம் உங்கள் அன்புக்குரியவர் பெயரும் பதியப்பட்டு இருக்கும். அதை சுற்றினால் இருவரின் பெயரும் அழகாக தெரியும். இதை 3டி கிரியேஷன் மூலம் வடிவமைத்தேன். அந்த சமயத்தில் என்னிடம் இதை வடிவமைப்பதற்காகவும், உருவாக்குவதற்காகவும் உரிய சாதனங்கள் மற்றும் லேப்டாப் வசதி எல்லாம் கிடையாது.

வீட்டிலேயும் அப்பா, அம்மாவை தொந்தரவு செய்ய முடியாது. அதனால் என்னுடைய செல்போனிலேயே இதை 3டி கிரியேஷன் மூலமாக வடிவமைத்தேன். அதன் பிறகு அதை எனக்கு தெரிந்தவர் மூலமாக உருவாக்கினேன். பொதுவாக இது போன்ற பரிசுப்பொருட்களை பிளாஸ்டிக்கில் தான் செய்வாங்க. நான் மரம் மற்றும் பிளாஸ்டிக் இரண்டும் கலந்த ஒரு பொருளில் இதற்காகவே பிரத்யேகமாக தேடிப்பிடித்தேன்.

அது கீழே விழுந்தாலும் உடையாது. நான் முதலில் இதை பதிவு செய்து அதில் சம்பாரிச்ச முதல் பணம் ரூ.200. அதன் பிறகு நானும் பல பெருட்களை பதிவு செய்ய ஆரம்பிச்சேன். ஏழே மாசத்தில் என்னுடைய பரிசுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சது. கணிசமாக சம்பாதிக்கவும் முடிந்தது. அதைக் கொண்டு எனக்கு தேவையான மெஷின் மற்றும் பொருட்கள் எல்லாம் வாங்கினேன்.

என்னுடைய வலைத்தள பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு பரிசுப் பொருளும் தனிநபரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்யப்பட்டது. அதே போல் சிலர் உங்களிடம் ஸ்டாக் இருக்கான்னு கேட்பாங்க. என்னிடம் ஸ்டாக் எல்லாம் இருக்காது. ஆனால் அவர்கள் கேட்கும் பரிசுப் பொருட்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து தரமுடியும். தற்போது சென்னை, கோவை மட்டுமில்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் என்னிடம் பரிசுப்பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள்’’ என்று கூறும் ஜமுனா இந்த காதலர் தினத்திற்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று குறிப்பிட்டார்.

‘‘காதலர் தினம் அன்பை பரிமாறிக் கொள்ளும் நாள். அன்று காதலன் காதலிக்கு தான் பரிசு தரவேண்டும் என்றில்லை. அன்பை வெளிப்படுத்த விரும்பும் யாருக்கு வேண்டும் என்றாலும் பரிசளிக்கலாம். அப்படி பரிசளிக்க விரும்புபவர்களுக்கு மேஜிக்கல் மிரர் நல்ல சாய்ஸ். ஒரு கண்ணாடி குடுவையில் அவங்க படங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அதில் சின்னதாக லைட் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஸ்விட்ச் போட்டால் கண்ணாடிக்குள் அவர்களின் புகைப்படம் அழகாக மிளிரும். இதை இரவு நேர லைட் லேம்பாகவும் பயன்படுத்தலாம். அடுத்து ஆண், பெண் இருவரின் பெயர் லேசர் மூலம் பொரிக்கப்பட்ட லெதர் வாலெட்.

வாலண்டைன்ஸ் டே என்றால் பூங்கொத்து சாக்லெட் கண்டிப்பா இருக்கும். சிலர் தங்களின் காதலை வெளிப்படுத்த இதைக் கொடுப்பார்கள். இப்போது சாக்லெட்டில் ‘ஐ லவ் யு’ என்ற வாசகம் பொரிக்கப்பட்டே வருகிறது. அதை பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்த சாக்லெட்டுகளை அழகாக பூங்கொத்துடன் இணைத்து தருகிறேன். எந்த ஒரு கிஃப்டாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் விரும்புவது கீசெயின். எப்போதும் ஒருவரின் கையில் தவழும் பொருள். இதையே அவர்களுக்கு பிடித்த பொருளாகவும் வடிவமைத்து தரலாம். அதாவது ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வகை கார் என்றால் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அந்த கார் போலவே மினி வடிவத்தில் அமைத்து அதை கீசெயினாக கொடுக்கலாம்.

இதுவே கொஞ்சம் காஸ்ட்லியான பரிசாக கொடுக்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் வாட்ச், இயர் பாட் போன்றவையும் அவர்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து தரேன். இதில் ஐஃபோன் போல் பேசலாம், குறுஞ்செய்தியினை பார்த்துக் கொள்ளலாம், ஹார்ட்பீட் போன்ற பொதுவான விஷயங்களுடன் வந்தாலும், அதில் அவர்களின் புகைப்படத்தினை வால் பேப்பராக வைத்து நாங்க ஸ்பெஷலாக தருகிறோம். இதை தவிர காபி மக், போட்டோ பிரேம்… என பல பரிசுகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கலாம்’’ என்றவர் ஃபேமலி ரெஸ்டரேஷன் ஆர்ட்டினை பெரும்பாலானோர் விரும்புவதாக கூறினார்.

‘‘திருமணம் அல்லது பிறந்த நாள் என எந்த ஒரு விழாக்காலமாக இருந்தாலும், அதில் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டாடும் போது அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை கிடையாது. சில சமயம் வீட்டில் முக்கிய நபர்களான அப்பாவோ, அம்மாவோ அல்லது பாட்டி தாத்தா என யாராவது தவறியிருக்கலாம். அவர்கள் இல்லாத அந்த இடத்தில் அவர்களின் புகைப்படம் கொண்டு முழுமை அடைய செய்கிறேன். சீரியல் ஆர்டிஸ்ட் நட்ஷத்திரா அவரின் பாட்டி புகைப்படத்தை அவரின் திருமண படத்துடன் இணைத்து பிரேம் போட்டு கொடுத்தேன். நெகிழ்ந்துவிட்டார். சிலருக்கு புகைப்படங்களைப் பார்த்து கண்ணீர் ததும்பும்.

அந்த தருணத்தை பார்க்கும் போது, நம்மால் ஒருவரின் முகத்தில் சந்தோஷத்தை கொடுக்க முடிகிறதே என்று நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவே நிறைவா இருக்கும். ஒவ்வொரு பரிசுப்பொருட்களையும் அழகான கிஃப்ட் பேப்பரில் சுற்றி அவர்கள் குறிப்பிடும் நாட்களில் தவறாமல் கொடுத்திடுவேன். அதேப்போல் திருமணம் மற்றும் கிரஹப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிக்கு ரிட்டர்ன் கிஃப்டும் செய்து கொடுக்கிறேன். நேரம் தவறாமல் கொடுக்க வேண்டும் என்பதில் நான் ரொம்பவே கவனமா இருக்கேன். அந்த ஒரு நொடி சந்தோஷ தருணத்தை அவர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பது தான் என் நோக்கம். எல்லாவற்றையும் விட ஒருவரின் பட்ஜெட்டுக்கு ஏற்பவும் பரிசு பொருட்களை வடிவமைத்து தருவது தான் என்னுடைய சக்சஸிற்கு காரணம்’’ என்றவர் இவை அனைத்தையும் தனித்து செயல்படுத்தி வருகிறார்.

‘‘நான் இப்பதான் வளர்ந்து வருகிறேன். ஒரு ஆள் வைத்து அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவு என்னிடம் வசதி இல்லை. இருந்தாலும் என் குடும்பத்தினர் ரொம்பவே சப்போர்டிவ்வா இருக்காங்க. அப்பாக்கு நான் அரசு சார்ந்த வேலையில் சேரணும்ன்னு விருப்பம். அவருக்கு பெண் பிள்ளையாக இருந்தாலும், தனக்கென்று ஒரு வருமானம் அவசியம் என்று சொல்வார். எனக்ேகா அரசு சார்ந்த வேலையில் பெரிய ஈடுபாடு இல்லை. அவரோட திருப்திக்காக அதற்கான பயிற்சியும் எடுத்தேன். ஆனால் என் மனம் இதில் தான் லயித்து இருப்பதை எங்க வீட்டில் புரிந்து கொண்டாங்க. இப்ப அவங்கதான் என்னை ஒவ்வொரு விஷயத்திற்கும் ஊக்குவிக்கிறாங்க’’ என்றார் ஜமுனா வர்ஷினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகுபாடுகளை உரக்கச் சொல்லும் டிஸ்னி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்!! (அவ்வப்போது கிளாமர்)