கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 46 Second

வாழ்க்கையில் நாம் பிறருக்கு உதவுகிறோமோ, உற்சாகப்படுத்துகிறோமோ, ஊக்குவிக்கிறோமோ இல்லையோ, யார் மனதையும் புண்படுத்தாமல், யாரையும் மட்டம் தட்டாமல் இருப்பதே மிகப் பெரிய உதவி. அதிலும் பிள்ளைகள் வாழ்க்கையில் மிகவும் பொறுப்புள்ளவராக நடந்து கொள்வது மிக முக்கியம். ஒரு சிறு மனக் காயம், அவர்கள் முன்னேற்றப் பாதையிலிருந்து சறுக்கி விழுவதற்கு சமம். இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் நமக்கு சொல்லி விட்டார். தீயினாற் சுட்ட புண் கூட சில நாட்களில் சரியாகி தழும்புகூட மறையலாம். ஆனால் நம் நாவினால் கூறும் கடினமான, சூடான வார்த்தைகள் என்றும் மனதிலிருந்து அழியாது.

ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு மாணவன் ஆர்வக் கோளாறால் செய்ய முயற்சிக்கிறான். அது முழு திருப்தியளிக்கவில்லை யெனில், ‘இன்னும் சிறிது முயற்சி செய்’ என்று கூறலாம். அந்த மனம் இல்லையெனில் பேசாமல் கூட இருக்கலாம். மாறாக, ‘நீ எதற்கு இதெல்லாம் செய்ய நினைக்கிறாய் என்று’ கேட்கும் பொழுது, குறிப்பிட்ட மாணவனுக்கு தன்னிடமே நம்பிக்கை வருவதில்லை. இத்தகைய செயல் ஆற்ற நமக்கு தகுதியில்லை போலும் என்றெல்லாம் சில அபிப்ராய எண்ண அலைகள் மனதில் ஓட ஆரம்பிக்கிறது.

அவன் தன்னையே தாழ்வு மனப்பான்மைக்கு மாற்றிக் கொண்டு விடுகிறான். மற்றொரு முறை ஒரு ‘கார்ட்டூன்’ வரையும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, அவனுக்கு முந்தைய நினைவுகள் வந்து மனதில் நிற்கும். ‘ஓ, நாம் இதற்கு அருகதையற்றவன்’ என்ற எண்ணம் மேலோங்க சிறு முயற்சி எடுப்பதைக் கூட விட்டு விடுவான். மாணவப் பருவத்தில் சில விஷயங்கள் ‘பசுமரத்தாணி’யாக பதிந்து விடுகிறது.பிஞ்சு மனங்கள், தன்னை பாராட்டியவரை நேசிக்க நினைக்கிறது.

மட்டம் தட்டியவரிடம் இருந்து அன்பை பறிக்கச் செய்கிறது. தன்னையும் தாழ்வு மனப்பான்மையில் ஆழ்த்திக் கொள்கிறது. ஒரு முறை அவன் சிறுமை படுத்தப்பட்டு விட்டால், குறிப்பிட்ட செயலில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் அடியோடு அறுக்கப்படுகிறது. வளர்ந்து பெரியவர்களான பின்னும் நாம் செய்யும் சிறு சாப்பாடு கூட மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும், விரும்பப்பட வேண்டும் என்றெல்லாம் நாம் நினைக்கும் போது, பிள்ளைகள் படிகளை ஏற நினைக்கும் பொழுது, நாம் தூக்கிவிட்டு உதவிபுரியலாம், அல்லது அவர்கள் வழியை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று அமைதியாக இருக்கலாம்.

ஒரு சிறுவன் பள்ளியில் தன்னை எல்லாவற்றிலும் முதன்மைபடுத்திக் கொள்ள நினைப்பான். அவன் ஒரு பெரிய இடத்துப்பையன், திறமைசாலி என்றெல்லாம் உடன் படித்த பிள்ளைகள் நினைத்தனர். அவன் எங்கு சென்றாலும் அவனுடன் ஒரு கூட்டம் காணப்படும். அவன் வீட்டிற்குச் செல்லும் வரை நண்பர்களும் அவனைவிட்டுப் பிரிய மாட்டார்கள். ஒரு நாள் அவன் நண்பனின் தந்தை தன் மகனை அழைத்துச் செல்ல வந்தார். தன் மகன் அந்த சிறுவனை விட்டு வராமல் பேசிக் கொண்டேயிருந்திருக்கிறான். ஆத்திரமடைந்த நண்பனின் தந்தை சிறுவனை கோபத்தில் பேசியிருக்கிறார். “உன் அப்பா துபாய் பிளாட்பார்மில் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டிருக்கிறார்.

நீ இங்கே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாய்! உன்னால் மற்ற பிள்ளைகளும் வீட்டிற்கு நேரத்திற்கு வர மறுக்கிறார்கள்! உன்னை கண்டித்தால் போதும்! எல்லாம் சரியாகி விடும். நாளை தலைமை ஆசிரியரிடம் வந்து பேசுகிறேன்” என வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார். கேட்ட சிறுவன் கண்களில் கண்ணீர் அருவிபோல் கொட்டியது. அவன் நண்பனை உடனே அவன் தந்தையுடன் போகச் சொன்னான்.

இதை கேட்கும் நமக்கே மனது பதைக்கிறது என்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் மனம் என்ன பாடுபடும்? பேசாமல் வீட்டிற்குச் சென்ற சிறுவன் சாப்பிடவில்லை, தூங்கவில்லை. நண்பனின் தந்தை சொன்னது உண்மைதானா என்று தாயிடம் அவனால் கேட்கக்கூட முடியவில்லை. அவனின் சுறுசுறுப்பற்ற முகத்தையும், சோர்வையும் கண்ட தாய் பரிதவித்தார். இரண்டு நாட்கள் அவன் பள்ளிக்குச் செல்லவேயில்லை. ஞாயிறு விடுமுறையன்று அவன் அப்பா தொலைபேசியில் அழைத்தார்.

எப்பொழுதும் அம்மா பேசிவிட்டு, அவனிடம் தருவார். அன்று அவனே முதலில் தந்தையிடம் பேசினான். முதல் கேள்வி ‘அப்பா, நீங்கள் அங்கு என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்றான். அப்பாவுக்கு ஒரே ஆச்சரியம்! இவன் ஏன் திடீரென இப்படியெல்லாம் கேட்கிறான் என்று ஆச்சரியப் பட்டிருப்பார் போலும்! நிதானித்து கனிவுடன் மகனிடம் பேசினார். “இல்லை கண்ணா, நான் நல்ல வேலைதான் செய்றேன். நீயும் அம்மாவும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத்தான் நிறைய சம்பாதிக்க நினைத்தேன். உனக்கு என்ன தேவையோ- அம்மாவிடம் கேள், வாங்கித் தருவார். சந்தோஷமாக இரு” என்றார். அவன் மனம் அமைதியடையவேயில்லை.

இப்பவும் அப்பா ‘தான் என்ன வேலை செய்கிறார்’ என்பதை சொல்லவேயில்லை. நிஜமாகவே ‘ஐஸ்க்ரீம்’ விற்கிறாரா? பிஞ்சு மனதிற்குள் எத்தனை போராட்டங்கள்? அழுது புரண்டு அனைத்தையும் அம்மாவிடம் கூறி, தான் இனி பள்ளிக்குப் போவதில்லை என்ற முடிவையும் கூறி முடித்தான். மறு நாளே அம்மா அவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று நடந்த அனைத்தையும் தலைமை ஆசிரியரிடம் கூற, நண்பனின் தந்தை வாய்தவறி பேசி விட்டதாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டார். பேசுவது என்பது சுலபம், அதன் கஷ்டத்தை பாதிக்கப்பட்டவர் மட்டுமே உணர முடியும்.

உண்மையில் சிறுவனின் தந்தை ‘ஐஸ்க்ரீம்’ பார்லர்தான் நடத்தி வந்தாராம். அவருக்கேற்ற வேலையை அவர் செய்திருக்கிறார். இதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியமேயில்லை. அந்தப் பையனின் தந்தை உணர்ச்சிவசப்பட்டு பேசியது பிறர் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்துள்ளது. எப்ெபாழுதும் பிள்ளைகள் தங்களை யாரேனும் மட்டமாகப் பேசினால் கூட சில நாட்களில் விட்டு விடுவார்கள். தன் தாய்-தந்தையை யார் இழிவாகப் பேசினாலும் அவர்களால் தாங்க முடியாது. அதுதான் சிறுவனை பாதிக்க வைத்தது. வார்த்தைகளை எப்பொழுதுமே யோசித்துப் பேச வேண்டும். ஒரு முறை பேசிவிட்டால் அது அவர்கள் மனதை பாதித்தபின், பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற இயலாது.

மேலும் சிறுவனின் தந்தை என்ன வேலை செய்தால், அவருக்கென்ன வந்தது? அவரின் கர்வம் கூட அப்படிப் பேச வைத்திருக்கலாம். நேர்மையான முறையில், உழைத்து சம்பாதிப்பதுதான் முக்கியமே தவிர, என்ன வேலை செய்தால் என்ன? பிள்ளைகள் மன நலம் பற்றி அறியாமல், தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாமல், மற்றொருவரை இகழ்பவரிடம் எவ்வளவு வசதிகள் இருந்தால்தான் என்ன? முதலில் மனிதத்துவத்தை நாம் புரிந்து ெகாண்டு செயல்படுவோமானால், பணமும் வசதிகளும் தானே வந்தடையும்.

நேர்மை, உழைப்பு என்பதெல்லாம் நம் செயலில் இருந்தால் போதும். குழந்தைகளுக்கு, நம் பிள்ளைகளுக்கு, மாணவச் செல்வங்களுக்கு இவற்றை அறிவுறுத்தி, நல்ல மனிதர்களாக வாழ்வதற்கான வழிகளை நீதி போதனைகளாக எடுத்துரைத்தாலே போதும். வகுப்பறை எனப்படுவது பல்வேறு சான்றோர்களை, மருத்துவர்களை, பொறியாளர்களை, விஞ்ஞானிகளை, நாளைய தலைவர்களை உருவாக்கும் புனிதமான இடமாகும். அதனால்தான் மாதா பிதாவிற்கு அடுத்தது குரு வருகிறார்.

நம் நாட்டு பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் இடங்களில் கிடைக்கும் பகுதி நேர வேலைகளை எடுத்துக் கொண்டு தங்கள் செலவை பார்த்துக் கொள்கிறார்கள். மிகப்பெரிய கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்து விட்டால், வங்கிக் கடன் பெற்றுச் செல்கிறார்கள். ஆனால் தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் கையிலிருந்து செலவு செய்ய வேண்டும். அங்குள்ள பணமதிப்பிற்கு நம்மால் கையிலிருந்து செலவு செய்வது மிகவும் சிரமம்.

மாலை நேரங்களில், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் கிடைக்கும் பணியை ஏற்றுக் கொண்டு சம்பாதித்துக் கொள்கிறார்கள். சிலர் தங்கள் கல்லூரிகளிலேயே கற்பித்தல், ஆசிரியருக்கு உதவி புரிதல் போன்றவற்றில் கூட தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக் கொள்கிறார்கள். சம்பந்தமில்லாத செயல்களில் ஈடுபடுவதும் கிடையாது. நேரத்தை வீணடிக்காமல் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி சரியாக திட்டமிட்டு தனக்கு வேண்டிய செலவிற்கு பார்த்துக் கொண்டு பொறுப்பானவர்களாகவும் நடந்து கொள்கிறார்கள்.

இந்த மாதிரி நடைமுறை வாழ்க்கையில், நாம் எப்படிப் பிறரை குறை கூற முடியும் அல்லது இகழ முடியும்? அந்தக் காலத்தில் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தினர். “படிக்கா விட்டால் மாடு மேய்க்க வேண்டும்” என்று படிக்காதப் பிள்ளைகளைப் பார்த்துக் கூறினார்கள். இன்று அது பற்றி பேசக் கூட முடியாது. மாடுகள் வைத்துக் கொள்ளும் நிலையும் நகரங்களில் இல்லை. பராமரிப்பதும் மிகப் பெரிய கலை. எந்தத் தொழிலும் ஏற்றுக் கொள்ளும் தொழில்தான். அதுவும் கடின உழைப்பினால் கிடைக்கும் ஊதியம் மிகவும் போற்றப்பட வேண்டியதுதான்.

ஒரு மாணவச் சிறுவன் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருந்தான். ஒரு மாறுவேடப் போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்ததாம். செறுப்பு தைக்கும் தொழிலாளியாக வேடமிட்டு, செறுப்புகளை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு, கையில் சரக்குப் பையுடன் சென்றானாம். பின்னால் யாரோ முணுமுணுப்பது அவன் காதில் விழுந்ததாம். “ஒரு போட்டி விட்டு வைக்கவில்லை.

இதற்கும் வந்து விட்டான்” என்றார்களாம். அவன் மனம் மேடைக்குச் செல்லும் முன்பே வேதனையாகி விட்டதாம். இருப்பினும், பேசுவதைக் கேட்டு மனம் தளரக் கூடாது என்கிற நினைப்பில், தயார் செய்திருந்த வசனத்தை விட அதிகமாகவே நடித்துக் காட்டி அசத்தினானாம். முதல் பரிசு கிடைத்ததாம். மேடைக்குச் செல்லுமுன், யார் முணு முணுத்தார்களோ, அவர்களிடம் முதலில் சென்று பரிசு பெற்ற விபரத்தைக் கூறினானாம்.

பிறர் கூறுவதைக் கேட்டு தளர்ந்து விடாமல், போராடி ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனிடம் இருந்த சிறப்பு விஷயம் என்று கூறலாம். ஆனால் எல்லாப் பிள்ளைகளும் அப்படி இருக்க முடியாது. மிகச் சிறிய அவமதிப்பு அல்லது தோல்வியைக் கூட தாங்க முடியாத பிள்ளைகள் இருக்கிறார்கள். பிள்ளைகளின் மனநிலைப் பற்றி அறிந்த ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒரு பொழுதும் பிறரை மட்டப்படுத்தி பேசமாட்டார்கள்.

சிலர் அப்படிப் பேசிவிட்டால், அதையே ஒரு முயற்சிக்கு அடித்தளமாக எடுத்துக் கொண்டு மேலே முன்னேறுவதற்கான வழியை மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் மேலே கூறப்பட்ட பையன் கடைபிடித்திருக்கிறான். அதனால் நாம் பிள்ளைகளுக்கு சாப்பாட்டுடன், தைரியத்தையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்க முயற்சிக்க வேண்டும். ஓரளவு வளரும் வரைதான் நாம் சொல்லித் தர வேண்டும். பின் அவர்களுக்கே நல்லது கெட்டது தெரிய வரும்.

பெரிய தொழிற்படிப்பு படித்த மாணவி ஒருத்திக்கு உயர்ந்த உத்யோகம் கிடைத்தது. இரண்டு மாதங்கள் கழித்துதான் வேலையில் சேர வேண்டும். அந்த இரண்டு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலையில் சேர்ந்தாள். இதற்கிடையில் அவளுக்கு திருமணம் நிச்சயமானது. எல்லோரும் அவளிடம் “இவ்வளவு படித்து விட்டு நல்ல வேலை கிடைத்த பின்னும் ஏன் ஹோட்டலில் வேலைக்குச் செல்கிறாய்? இரண்டு மாதம் வீட்டில் திருமணம் வரையாவது ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே?” என்று பல்வேறு வினாக்களை எழுப்பினர்.

அவள் சொன்ன பதில், “படிப்பிற்கும் வேலைக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இரண்டு மாதம் யார் சும்மா உட்காரவைத்து பணம் தருவார்கள்? நாம் உழைத்து சம்பாதிக்க வேண்டுமே தவிர, எந்த வேலை செய்கிறோம் என்பது முக்கியமில்லை.

நேர்மையாக சம்பாதிக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. பிறர் பணத்திற்கு ஆசைப்படக் கூடாது. உழைத்து இரண்டு மாதம் சம்பளம் கிடைத்தால், ஏன் திருமண செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாமே!”கேட்ட யாரும் வாய் திறக்கவில்லை. உண்மையில் மேலை நாட்டுக்காரர்கள் என்றால் எல்லோரும் பணக்காரர்கள் என்று சொல்ல முடியாது. குப்பை எடுத்துச் செல்பவர் கூட, நேர்த்தியான உடை அணிந்து, ஆரோக்கியமாக செயல்படுவதுதான் பெருமைக் குரியது.

எனவே, அந்தஸ்தோ, உத்தியோகமோ, வசதிகளோ நிறைந்து காணப்பட்டாலும் பிறரை மட்டம் தட்டாமல், இகழாமல் நடந்து கொள்வதுதான் பெருந்தன்மை, நல்ல மனிதத்துவம் எனப்படும். குறிப்பாக மாணவர்களை இகழ்வதோ, கிண்டலாக பேசுவதோ, மட்டம் தட்டுவதோ நல்ல குணங்களாக கருதப்படாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கட்டாய உடலுறவு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இப்பொழுதுள்ள பிள்ளைகள் எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்!! (மகளிர் பக்கம்)