கொலு படிகளை அலங்கரிக்கும் ரப்பர் பொம்மைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 29 Second

பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழாவே நவராத்திரி. இந்த பண்டிகையின்போது வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை அன்புடன் உபசரிப்பது வழக்கம். இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக இருப்பது கொலு. அந்த கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொரு படிகளிலும் பொம்மைகள் கதைச் சொல்வது போல் கலைநயத்துடன் அடுக்கி வைப்பார்கள்.

அவ்வாறு வைக்கப்படும் பொம்மைகள், கடவுள் சிலைகள், பெருமாள் கல்யாணம் சித்தரிக்கும் பொம்மைகள், அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், இந்து சமய புராணங்களை சித்தரிக்கும் பொம்மைகள், தேரோட்டம், கடவுள் சாலையில் ஊர்வலமாக செல்லும் பொம்மைகள், திருமண நிகழ்ச்சிகளை குறிக்கும் பொம்மைகள், சமையல் சொப்பு சாமான்கள்… என பல வகை பொம்மைகளை ஒவ்வொரு படிகளிலும் ஒரு தீம் என்று அமைப்பது வழக்கம்.

“பொதுவாக களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும் பொம்மைகள் அவ்வளவு பாதுகாப்பு இல்லாமல் சில நேரங்களில் சேதாரமாகும் சூழல் இருக்கிறது. அதற்கு மாற்றாக அதே கலைநயத்துடன், குழந்தைகளும் எடுத்து விளையாடும் பொருளாக, ஏற்கனவே இருக்கும் மாடர்ன் பொம்மைகளை நம் கலாச்சாரத்திற்கு தகுந்தாற் போல் வடிவமைத்து கொடுக்கிறோம்” என்கிறார் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டு, இப்போது சென்னையில் வசித்து வரும் சரண்யா.

‘‘திருமணம் ஆன பின் என்னுடைய வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்த பின் சும்மா இருக்கும் நேரங்களில், புத்தகம் படிப்பதை வழக்கமா கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இதையும் தாண்டி, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டு இருந்தது. ஆனால் என்ன செய்வதுன்னு அப்போது புரியவில்லை. அந்த சமயத்தில் என் குழந்தைக்கு வாங்கிய பொம்மைகளை பார்த்தவுடன் எனக்குள் ஓர் பூரிப்பு ஏற்பட்டது. சிறு வயதில் நாமும் அந்த பொம்மைகள் வைத்து விளையாடி இருப்போம். அந்த நினைவுகள் மீண்டும் அசை போட…. இந்த பொம்மைகள் வைத்து ஏதாவது செய்யலாமே என்கிற யோசனை ஏற்பட்டது.

பொதுவாக குழந்தைகளுக்கு இப்போது கொடுக்கப்படும் பொம்மைகள் மேற்கத்திய கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதை நம் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறும் தெய்வீக கடாட்சம் பொருந்தியதாக மாற்றலாம்ன்னு நினைத்தேன். அடிப்படையிலேயே நான் ஓவியம் வரைபவளாக இருந்ததால் இன்னும் கூடுதலாக செய்ய முடிந்தது. அந்த பொம்மைகளை வாங்கி அதை நன்கு சுத்தம் செய்து நானே அவற்றுக்கு கண்கள், புருவங்கள் எல்லாம் வரைந்தேன். ஒவ்வொரு கடவுளுக்கு ஏற்றார் போல் உடைகள் மற்றும் தலைமுடியினை வடிவமைப்பது என அந்த பொம்மைகளை நான் முற்றிலுமாக ரீ கிரியேட் செய்தேன்.

இவ்வாறு செய்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் போது, அதற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. அதை பார்த்தவர்கள் பலர், ‘எங்களுக்கும் செய்து கொடுக்க முடியுமா?’ என்று கேட்டனர். வீட்டில் இருக்கும் போது சும்மா செய்து பார்க்கலாமா என்று ஆரம்பித்தது, எனக்கான வேலையாக மாறியது. அதை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் செய்து, இன்று வெளிநாடுகளுக்கும் கொடுத்து வருகிறோம். நம் நாட்டில் பல பகுதிகளுக்கு கொடுத்தாலும், ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்கிற சரண்யா, இதனை எட்டு வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறார்.

‘‘இந்த பொம்மைகள் மூலமாக குழந்தைகளுக்கு புராண கதைகள் சொல்வதற்காகவும் வடிவமைக்கிறேன். பொம்மைகள் வைத்து சொல்லும் போது எளிமையாகவும், விளையாட்டாகவும் உள் வாங்கி கொள்கிறார்கள். இது போக பல திருமண நிகழ்வுகளில் ஆரத்தி தாம்பூலத்திலும் சில பொம்மைகள் வைக்கப்படுகின்றன. அவர்கள் சொல்லும் கான்செப்ட்டிற்கு ஏற்ப அதையும் செய்து கொடுக்கிறேன். இப்போது நவராத்திரி சீசன் என்பதால், பலர் தங்களின் ெகாலுவில் அலங்கரிக்க கேட்கிறார்கள். அதை மேலும் மெருகேற்ற புதுப்புது முயற்சிகள் மேற்கொள்கிறேன். இதன் மூலம் தெரிந்து கொண்ட ஒரே விஷயம் நமக்கு பிடித்த விஷயங்கள் செய்யும் போது என்றுமே தொய்வில்லாமல் ஓடலாம் என்பது தான்” என்கிறார் சரண்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..? (அவ்வப்போது கிளாமர்)